அந்த பாக்கியமுள்ள நிக்கிலேச புத்த பகவானுக்கு எனது நமஸ்காரமாகட்டும்!

 

அம்பலட்டிக ராஹுலோவாத சூத்திரம்

(அம்பலட்டிகா சோலையின் போது ராஹுல தேரருக்காக மொழிந்த போதனை)

என்னால் செவிமடுக்கப்பட்டது இவ்வாறே. அச்சமயத்தில் பாக்கியமுள்ள புத்த பகவான் அணில்களின் அபயபூமியான வேலுவனராமத்திலே தரித்திருந்தார். ராஹுல தேரர் அம்பலட்டிகா சோலையில் வசித்திருந்தார். அன்று சாயங்காலத்தில் தியானத்தில் இருந்து எழுந்திருந்த புத்த பகவான் அம்பலட்டிக சோலையில் வசித்திருந்த ராஹுல தேரரிடம் வருகை தந்தார்.

இராஹுல தேரர், பகவான் தூரத்தே வருகை தருவதனை கண்ணுற்றார். கண்ணுற்று பகவானுக்காக ஆசனம் ஒன்றை தயார் செய்தார். திருப்பாதங்களை கழுவுவதற்காக நீர் பாத்திரம் ஒன்றை தயார் செய்தார். பாக்கியமுள்ள பகவான் ஆராமத்திற்கு வருகைதந்து பூஜிக்கப்பட்ட ஆசனத்திலே அமர்ந்தார். அமர்ந்து தன் திருப்பாதங்களை கழுவிக்கொண்டார். இராகுல பத்ர தேரரும் பகவானை அன்புடன் வணங்கி ஒருபுறத்தில் அமர்ந்தார்.

அப்போது பகவான் நீர் பாத்திரத்தில் சிறிது நீரை மீதப்படுத்தி வைத்து இராகுல தேரரிடம் பின்வருமாறு வினவினார்.

‘புண்ணியமிகு ராகுல, மீதமிருக்கும் இந்த சிறிதளவு நீரை நீங்கள் காண்கிறீர்களா?’

‘ஆம், பகவானே’

‘புண்ணியமிகு ராஹுல ஒருவர், அறிந்தே பொய் உரைப்பதற்கு வெட்கம் கொள்ளாவிடில் இங்கு மீதமிருக்கும் நீரின் அளவினைப்போன்று அவரது துறவின் பயனும் சிறிதளவே’

பின்னர் பகவான் அந்த மீதமிருக்கும் நீரை பாத்திரத்தில் இருந்து அகற்றிவிட்டு இராகுல தேரரை அழைத்து பின்வருமாறு வினவினார்.

‘புண்ணியமிகு இராகுல, மீதமிருந்த சிறிதளவு நீரினை வீசி அகற்றிய இந்த பாத்திரத்தை நீங்கள் காணுகிறீர்கள் அல்லவா?’

‘ஆம், பகவானே’

‘புண்ணியமிகு இராகுல, ஒருவர் அறிந்தே பொய் உரைப்பதற்கு வெட்கம் கொள்ளாவிடில் அவர் தன்னுள் இருந்த அனைத்து துறவு தர்மங்களையும் தூரத்தே வீசியெறிந்தவராவார்’

அதன் பின் புத்த பகவான் அந்த நீர்ப்பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்து, இராகுல தேரரிடம் பின்வருமாறு வினவினார்.

‘புண்ணியமிகு இராகுல, தலைகீழாக கவிழ்த்து வைத்திருக்கும் இந்த பாத்திரத்தை நீங்கள் காணுகிறீர்களா?’

‘ஆம், பகவானே’

‘புண்ணியமிகு இராகுல, அதேபோன்றுதான் ஒருவர் அறிந்தே பொய் உரைப்பதற்கு வெட்கம் கொள்ளாவிடில் அவர் தன்னுள் இருந்த அனைத்து துறவு தர்மங்களையும் தலை கீழ் கவிழ்த்து வைத்தவராவார்’

அதன் பின்னர் பகவான் கவிழ்த்து வைத்த அந்த பாத்திரத்தை மீண்டும் சரிசெய்து வைத்து இராகுல தேரரிடம் பின்வருமாறு வினவினார்.

‘புண்ணியமிகு இராகுல, நேராக இருக்கும் வெறுமையான பாத்திரத்தை நீங்கள் காணுகிறீர்களா?’

‘ஆம், பகவானே’

‘புண்ணியமிகு இராகுல, அதேபோன்றுதான் ஒருவர் அறிந்தே பொய் உரைப்பதற்கு வெட்கம் கொள்ளாவிடில் அவர் தன்னுள் இருந்த அனைத்து துறவு தர்மங்களும் துறந்தவராவார். அவரது வாழ்க்கை எவ்வித பயனும் இல்லாத வெறுமையானதாகும்’

‘புண்ணியமிகு இராகுல, ஒரு அரசனிடம் பெரிய தந்தங்களையுடைய, பெரிய உருவம் கொண்ட பெரும் பலசாலியானதொரு யானை இருக்கிறது. அரசன் இந்த யானையை போருக்கு கொண்டு செல்கிறான். போரில் இந்த யானை தன் முன் கால்களினாலும் போர் செய்கிறது. பின் கால்களினாலும் போரிடுகிறது. தலை, காதுகள், தந்தங்கள் மற்றும் வாலினாலும் போரிடுகிறது. ஆனால் தும்பிக்கையை பாதுகாத்துக்கொள்கிறது. அச்சமயம் யானைப்பாகன் பின்வருமாறு சிந்திப்பான். ‘பெரிய தந்தங்களையுடைய, பெரிய உருவம் கொண்ட பெரும் பலசாலியான இந்த யானை தன் அனைத்து உறுப்புக்களினாலும் போரிடுகிறது. ஆனால் தும்பிக்கையை பாதுகாத்துக்கொள்கிறது. இந்த யானை தன் வாழ்வினை அரசனுக்காக தியாகம் செய்யவில்லை’ என்று.

புண்ணியமிகு இராகுல, எப்போதாவது இந்த யானை முன் கால்கள். பின் கால்கள், தலை, காதுகள், வால் எனும் அனைத்து உறுப்புக்களுடன் தன் துதிக்கையும் பயன்படுத்தி யுத்தம் செய்கிறதோ அவ்வேளை யானைப்பாகன் பின்வருமாறு நினைப்பான். ‘பெரிய தந்தங்களையுடைய, பெரிய உருவம் கொண்ட பெரும் பலசாலியான இந்த யானை தன் அனைத்து உறுப்புக்களினாலும் போரிடுகிறது. தான் வழமையாக பாதுகாத்துக்கொள்ளும் துதிக்கையினாலும் போரிடுகிறது. இந்த மகா யானை தன் உயிரினை அரசனுக்காக தியாகம் செய்துள்ளது. எனவே இந்த யானையால் தன் அரசனுக்காக மேலும் தியாகம் செய்வதற்கு எதுவுமில்லை’ என்று.

அதேபோல் தான் புண்ணியமிகு இராகுல, எவரேனும் ஒருவர் பொய் என்று அறிந்திருந்தும் கூட அந்த பொய்யை உரைப்பதற்கு வெட்கம் கொள்ளாவிடில், அவரால் செய்ய முடியாத பாவம் எதுவுமே இல்லை என்றே நான் கூறுவேன். ஆகையால் புண்ணியமிகு இராகுல, கேலிக்குக்கூட பொய் உரைக்க மாட்டேன், என்று நீங்கள் உங்களை பயிற்றுவித்துக்கொள்ளுங்கள்.

‘புண்ணியமிகு இராகுல, கண்ணாடி எதற்காக பயன்படுத்தப்படுகிறது?’

‘பகவானே, தன் பிரதிவிம்பத்தினை தெளிவாக ஆராய்ந்து  பார்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது’

‘புண்ணியமிகு இராகுல, அதேபோன்றுதான், நன்கு ஆராய்ந்த பிறகுதான் உடலினால் கருமங்கள் செய்ய வேண்டும். நன்கு ஆராய்ந்த பிறகுதான் வர்த்தைகளை வெளியிட வேண்டும். நன்கு ஆராய்ந்த பின்னர் தான் மனதினால் செயற்பட வேண்டும்.

புண்ணியமிகு இராகுல, நீங்கள் ஏதேனும் உடலினால் செய்வதற்கு விரும்பினால் அந்த செயற்பாட்டினை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது ‘நான் இந்த செயற்பாட்டினை செய்ய விரும்புகிறேன். நான் இவ்வாறாக செய்யும் செயற்பாடு எனக்கு தீமையை விளைவிக்குமா? ஏனையோருக்கு தீமையை விளைவிக்குமா? எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினர்க்கும் தீமையை விளைவிக்குமா? என ஆராய வேண்டும். இவ்வாறாக சிந்திக்கும் போது ‘இப்போது நான் செய்யும் இந்த உடற்செயற்பாடு அகுசல கர்மமாகும். தீமையை விளைவிப்பதாகும். துக்கத்தினை ஏற்படுத்துவதாகும்’ என உணர்வீராயின் ‘உடலினை பயன்படுத்தி செய்யும் இந்த செய்றபாடு எனக்கு இஷ்டமானதுதான். ஆனால் நான் இவ்வாறாக செய்யும் இந்த செயற்பாட்டின் விளைவுகள் எனக்கு துன்பத்தினையே ஏற்படுத்தும். ஏனையோருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். இந்த உடற் செயற்பாடு ஒரு அகுசலமாகும். துன்பத்தினை விளைவிப்பதாகும். துர் விளைவுகளை ஏற்படுத்துவதாகும், என்று உணர்வீராயின், அவ்வாறான செய்றபாடுகளை ஒருபோதும் செய்யக்கூடாது.

‘புண்ணியமிகு இராகுல, நீங்கள் இவ்வாறாக நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது பின்வருமாறு உணர்ந்து கொண்டீராயின், ‘நான் இந்த செயற்பாட்டினை செய்ய விரும்புகிறேன். நான் இவ்வாறாக செய்யும் செயற்பாடு எனக்கு தீமையை விளைவிக்காது. ஏனையோருக்கும் தீமையை விளைவிக்காது. எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினர்க்கும் தீமையை விளைவிக்காது. இந்த செயல் குசலமாகும். சுகத்தினை அளிப்பதாகும்.  சுக விளைவுகளை தருவதாகும். என நீங்கள் உணர்வீர்களாயின், நீங்கள் அவ்வாறான காரியங்களையே செய்ய வேண்டும்’.

‘புண்ணியமிகு  இராகுல, நீங்கள் உங்கள் உடலினால் ஏதேனும் ஒரு காரியத்தினை செய்யும் போது, செய்யும் அந்த காரியத்தினை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது ‘நான் இப்போது இந்த காரியத்தினை செய்துகொண்டிருக்கிறேன். நான் செய்யும் இந்த காரியத்தினால் எனக்கு ஏதேனும் தீங்கு விளையுமா? ஏனையோருக்கு ஏதேனும் தீங்கு விளையுமா? எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் தீங்கு விளையுமா? இந்த உடற்செயற்பாடு அகுசலமா? துக்கத்தினை தோற்றுவிப்பதா? துன்ப விளைவுகளை ஏற்படுத்துவதா? என நன்கு ஆராய்ந்து  பாருங்கள். இவ்வாறு ஆராயும் போது நீங்கள் பின்வருமாறு ‘நான் இப்போது உடலினால் இந்த காரியத்தினை செய்து கொண்டிருக்கிறேன். உடலினை பயன்படுத்தி செய்துகொண்டிருக்கும் இந்த செய்றபாடு எனக்கு இஷ்டமானதுதான். ஆனால் நான் இவ்வாறாக செய்யும் இந்த செயற்பாட்டின் விளைவுகள் எனக்கு துன்பத்தினையே ஏற்படுத்தும். ஏனையோருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். இந்த உடற் செயற்பாடு ஒரு அகுசலமாகும். துன்பத்தினை விளைவிப்பதாகும். துர் விளைவுகளை ஏற்படுத்துவதாகும். என்று உணர்வீராயின், அவ்வாறான செய்றபாடுகளை ஒருபோதும் செய்யக்கூடாது.

அதேபோல் புண்ணியமிகு இராகுல நீங்கள் பின்வருமாறு உணர்ந்து கொள்வீராயின் அதாவது ‘நான் இப்போது உடலினால் இந்த காரியத்தினை செய்துகொண்டிருக்கிறேன். நான் செய்யும் இந்த செயற்பாடு எனக்கு தீமையை விளைவிக்காது. ஏனையோருக்கும் தீமையை விளைவிக்காது. எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினருக்கும் தீமையை விளைவிக்காது. இந்த செயல் குசலமாகும். சுகத்தினை அளிப்பதாகும்.  சுக விளைவுகளை தருவதாகும். என நீங்கள் உணர்வீர்களாயின், நீங்கள் அவ்வாறான காரியங்களையே மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

‘புண்ணியமிகு இராகுல, நீங்கள் உடலினால் ஒரு காரியத்தினை செய்த பின்னர் செய்த அந்த செயல் தொடர்பாக நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது ‘நான் உடலினால் ஒரு செயலினை செய்தேன். நான் செய்த இக்காரியம் எனக்கு தீமையாக அமைந்ததா? ஏனையோருக்கு தீமையாக அமைந்தா? எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினருக்கும் தீமையாக அமைந்ததா? இந்த செயல் அகுசலமா, துன்பத்தினை அளித்தா? துர் விளைவுகள் ஏற்படுமா? என ஆராய வேண்டும். இவ்வாறு ஆராயும் போது ‘நான் உடம்பினால் செய்த இக்காரியம் எனக்கு துன்பத்தினையே ஏற்படுத்தும். ஏனையோருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். இந்த உடற் செயற்பாடு ஒரு அகுசலமாகும். துன்பத்தினை விளைவிப்பதாகும். துர் விளைவுகளை ஏற்படுத்துவமதாகும்.என உணர்ந்தீர்களாயின் புண்ணியமிகு இராகுல நீங்கள் இவ்வாறு செய்த செயற்பாட்டினை பகவானிடமோ அல்லது சக பிரிம்மச்சரியர்களிடமோ கூற வேண்டும். அந்த தவறினை வெளிப்படுத்த வேண்டும். தெரிவிக்க வேண்டும். அவ்வாறாக அந்த தவறினை கூறிய பின்னர், வெளிப்படுத்திய பின்னர், தெரிவித்த பின்னர் மீண்டும் அந்த தவறினை செய்யாதபடி தன்னை அடக்கிக்கொள்ள வேண்டும்.

புண்ணியமிகு இராகுல, நீங்கள் இவ்வாறாக நன்கு ஆராய்ந்த பின்னர் ‘நான் உடலினால் செய்த இக்காரியம் எனக்கு தீமையை விளைவிக்காது. ஏனையோருக்கும் தீமையை விளைவிக்காது. எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினர்க்கும் தீமையை விளைவிக்காது. இந்த செயல் குசலமாகும். சுகத்தினை அளிப்பதாகும்.  சுக விளைவுகளை தருவதாகும் என்று, நீங்கள் நல்ல உற்சாகத்ததுடன் இரவு பகல் எனும் இருவேளையும் அவ்வாறான குசலங்களை விருத்தி செய்து கொண்டு வாழுங்கள்.

புண்ணியமிகு இராகுல, நீங்கள் ஏதேனும் வார்த்தையினால் வெளிப்படுத்த விரும்பினால் பேசப்போகும் அந்த பேச்சினை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது ‘நான் இப்போது பேசும் செயற்பாட்டினை செய்ய விரும்புகிறேன். நான் இவ்வாறாக பேசும் இந்த வார்த்தைகள் எனக்கு தீமையை விளைவிக்குமா? ஏனையோருக்கு தீமையை விளைவிக்குமா? எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினர்க்கும் தீமையை விளைவிக்குமா? என ஆராய வேண்டும். இவ்வாறாக சிந்திக்கும் போது ‘இப்போது நான் செய்யும் இந்த செயற்பாடு அகுசல கர்மமாகும். தீமையை விளைவிப்பதாகும். துக்கத்தினை ஏற்படுத்துவதாகும்’ என உணர்வீராயின் ‘வார்த்தையை  பயன்படுத்தி செய்யும் இந்த செய்றபாடு எனக்கு இஷ்டமானதுதான். ஆனால் நான் இவ்வாறாக செய்யும் இந்த செயற்பாட்டின் விளைவுகள் எனக்கு துன்பத்தினையே ஏற்படுத்தும். ஏனையோருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். இந்த உடற் செயற்பாடு ஒரு அகுசலமாகும். துன்பத்தினை விளைவிப்பதாகும். துர் விளைவுகளை ஏற்படுத்துவமதாகும். என்று உணர்வீராயின், அவ்வாறான பேச்சுக்களை  ஒருபோதும் பேசக்க்கூடாது.

புண்ணியமிகு இராகுல, நீங்கள் நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது பின்வருமாறு உணர்ந்துகொண்டீராயின், ‘நான் பேச விரும்புகிறேன். நான் இவ்வாறாக செய்யும் இந்த பேச்சு  எனக்கு தீமையை விளைவிக்காது. ஏனையோருக்கும் தீமையை விளைவிக்காது. எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினர்க்கும் தீமையை விளைவிக்காது. இந்த செயல் குசலமாகும். சுகத்தினை அளிப்பதாகும்.  சுக விளைவுகளை தருவதாகும். என நீங்கள் உணர்வீர்களாயின், நீங்கள் அவ்வாறான பேச்சினையே பேச வேண்டும்.

புண்ணியமிகு  இராகுல, நீங்கள் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும் போது, பேசும் அந்த பேச்சினை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது ‘நான் இப்போது இந்த பேச்சினை பேசிக்கொண்டிருக்கிறேன். நான் பேசும் இந்த பேச்சினால் எனக்கு ஏதேனும் தீங்கு விளையுமா? ஏனையோருக்கு ஏதேனும் தீங்கு விளையுமா? எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் தீமை விளைவிக்குமா? இந்த உடற்செய்றபாடு அகுசலம். துக்கத்தினை தோற்றுவிப்பதா? துன்ப விளைவுகளை ஏற்படுத்துவதா? என ஆராய்ந்து  பாருங்கள். இவ்வாறு ஆராயும் போது நீங்கள் பின்வருமாறு ‘நான் இப்போது வார்த்தைகளை பயன்படுத்தி பேசிக்கொண்டிருக்கிறேன். ‘வார்த்தைகளை பயன்படுத்தி பேசிக்கொண்டிருக்கும் இந்த செயற்பாடு எனக்கு இஷ்டமானதுதான். ஆனால் நான் இவ்வாறாக பேசும் இந்த பேச்சின் விளைவுகள் எனக்கு துன்பத்தினையே ஏற்படுத்தும். ஏனையோருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். இவ்வாறான பேச்சு அகுசலமாகும். துன்பத்தினை விளைவிப்பதாகும். துர் விளைவுகளை ஏற்படுத்துவமதாகும். என்று உணர்வீராயின், அவ்வாறான பேச்சுக்களை ஒருபோதும் செய்யக்கூடாது.

புண்ணியமிகு இராகுல, நீங்கள் பேசி முடித்த பின்னர் செய்த அந்த பேச்சு தொடர்பாக நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது ‘நான் பேசினேன்; நான் பேசிய இப் பேச்சு  எனக்கு தீமையாக அமைந்ததா? ஏனையோருக்கு தீமையாக அமைந்தா? எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினருக்கும் தீமையாக அமைந்ததா? இந்த செயல் அகுசலமா, துன்பத்தினை அளித்ததா? துர் விளைவுகள் ஏற்படுமா? என ஆராய வேண்டும். இவ்வாறு ஆராயும் போது ‘நான் பேசிய இப் பேச்சுக்கள் எனக்கு துன்பத்தினையே ஏற்படுத்தும். ஏனையோருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். இந்த உடற் செயற்பாடு ஒரு அகுசலமாகும். துன்பத்தினை விளைவிப்பதாகும். துர் விளைவுகளை ஏற்படுத்துவமதாகும்.என உணர்ந்தீர்களாயின் புண்ணியமிகு இராகுல, நீங்கள் இவ்வாறு பேசிய பேச்சினை பகவானிடமோ அல்லது சக பிரிம்மச்சரியர்களிடமோ கூற வேண்டும். அந்த தவறினை வெளிப்படுத்த வேண்டும். தெரிவிக்க வேண்டும். அவ்வாறாக அந்த தவறினை கூறிய பின்னர், வெளிப்படுத்திய பின்னர், தெரிவித்த பின்னர் மீண்டும் அந்த தவறினை செய்யாதபடி தன்னை அடக்கிக்கொள்ள வேண்டும்.

புண்ணியமிகு இராகுல, நீங்கள் இவ்வாறாக நன்கு ஆராய்ந்த பின்னர் ‘நான் பேச்சினால் செய்த இக்காரியம் எனக்கு தீமையை விளைவிக்காது. ஏனையோருக்கும் தீமையை விளைவிக்காது. எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினர்க்கும் தீமையை விளைவிக்காது. இந்த செயல் குசலமாகும். சுகத்தினை அளிப்பதாகும்.  சுக விளைவுகளை தருவதாகும். என நீங்கள் உணர்வீர்களாயின், நீங்கள் நல்ல உற்சாகத்ததுடன் இரவு பகல் எனும் இருவேளையும் குசலங்களை விருத்தி செய்து கொண்டு வாழுங்கள்.

புண்ணியமிகு இராகுல, நீங்கள் ஏதேனும் மனதினால் நினைப்பதற்கு விரும்பினால் அந்த சிந்தனையை சிந்திப்பதற்கு முன் அது தொடர்பாக நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது ‘நான் இந்த எண்ணத்தினை நினைக்க விரும்புகிறேன். நான் இவ்வாறாக நினைக்கும் இந்த சிந்தனை  எனக்கு தீமையை விளைவிக்குமா? ஏனையோருக்கு தீமையை விளைவிக்குமா? எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினர்க்கும் தீமையை விளைவிக்குமா? என ஆராய வேண்டும். இவ்வாறாக சிந்திக்கும் போது ‘இப்போது நான் நினைக்கும் இந்த சிந்தனை அகுசல கர்மமாகும். தீமையை விளைவிப்பதாகும். துக்கத்தினை ஏற்படுத்துவதாகும்’ என உணர்வீராயின் ‘நான் இப்போது மனதினால் நினைக்கும் இந்த எண்ணம் எனக்கு இஷ்டமானதுதான். ஆனால் நான் இவ்வாறாக நினைக்கும் எண்ணங்களின் விளைவுகள் எனக்கு துன்பத்தினையே ஏற்படுத்தும். ஏனையோருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். இந்த உடற் செயற்பாடு ஒரு அகுசலமாகும். துன்பத்தினை விளைவிப்பதாகும். துர் விளைவுகளை ஏற்படுத்துவமதாகும். என்று உணர்வீராயின், அவ்வாறான எண்ணங்களை ஒருபோதும் நினைக்கக்கூடாது.

புண்ணியமிகு இராகுல, நீங்கள் நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது பின்வருமாறு உணர்ந்துகொண்வீராயின், ‘நான் இந்த எண்ணத்தினை நினைக்க  விரும்புகிறேன். நான் இவ்வாறாக சிந்திக்கும் இந்த சிந்தனை எனக்கு தீமையை விளைவிக்காது. ஏனையோருக்கும் தீமையை விளைவிக்காது. எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினர்க்கும் தீமையை விளைவிக்காது. இந்த செயல் குசலமாகும். சுகத்தினை அளிப்பதாகும்.  சுக விளைவுகளை தருவதாகும். என நீங்கள் உணர்வீர்களாயின், நீங்கள் அவ்வாறான காரியங்களையே செய்ய வேண்டும்.

புண்ணியமிகு  இராகுல, நீங்கள் உங்கள் மனதினால் ஏதேனும் நினைக்கும்போது, மனதினால் நினைக்கும் அந்த சிந்தனையை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது ‘நான் இப்போது இந்த எண்ணத்தினை இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் செய்யும் இந்த காரியத்தினால் எனக்கு ஏதேனும் தீங்கு விளையுமா? ஏனையோருக்கு ஏதேனும் தீங்கு விளையுமா? எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் தீமை விளைவிக்குமா? இந்த செயற்பாடு அகுசலமா? துக்கத்தினை தோற்றுவிப்பதா? துன்ப விளைவுகளை ஏற்படுத்துவதா? என ஆராய்ந்து  பாருங்கள். இவ்வாறு ஆராயும் போது நீங்கள் பின்வருமாறு ‘நான் இப்போது மனதினால் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ‘மனதினை பயன்படுத்தி நினைத்துக் கொண்டிருக்கும் இந்த எண்ணம் எனக்கு இஷ்டமானதுதான். ஆனால் நான் இவ்வாறாக நினைக்கும் எண்ணங்களின் விளைவுகள் எனக்கு துன்பத்தினையே ஏற்படுத்தும். ஏனையோருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். இந்த  செயற்பாடு ஒரு அகுசலமாகும். துன்பத்தினை விளைவிப்பதாகும். துர் விளைவுகளை ஏற்படுத்துவமதாகும். என்று உணர்வீராயின், அவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் செய்யக்கூடாது.

அதேபோல் புண்ணியமிகு இராகுல நீங்கள் பின்வருமாறு உணர்ந்து கொள்வீராயின் அதாவது ‘நான் இப்போது மனதினால் இவ் எண்ணத்தினை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் நினைக்கும் இவ் எண்ணம் எனக்கு தீமையை விளைவிக்காது. ஏனையோருக்கும் தீமையை விளைவிக்காது. எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினருக்கும் தீமையை விளைவிக்காது. இந்த செயல் குசலமாகும். சுகத்தினை அளிப்பதாகும்.  சுக விளைவுகளை தருவதாகும். என நீங்கள் உணர்வீர்களாயின், நீங்கள் அவ்வாறான மனதின் செயற்பாடுகளையே மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

புண்ணியமிகு இராகுல, நீங்கள் மனதினால் ஏதேனும் சிந்தித்த பின்னர் நினைத்த அந்த சிந்தனையை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது ‘நான் மனதினால் இவ் எண்ணத்தினை நினைத்தேன். நான் நினைத்த இவ் செயற்பாடு  எனக்கு தீமையாக அமைந்ததா? ஏனையோருக்கு தீமையாக அமைந்தா? எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினருக்கும் தீமையாக அமைந்ததா? இந்த செயல் அகுசலமா, துன்பத்தினை அளித்தா? துர் விளைவுகள் ஏற்படுமா? என ஆராய வேண்டும். இவ்வாறு ஆராயும் போது ‘நான் மனதினால் நினைத்த இந்த எண்ணம் எனக்கு துன்பத்தினையே ஏற்படுத்தும். ஏனையோருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். எனக்கும் ஏனையோருக்கும் எனும் இருபிரிவினருக்கும் துன்பத்தினையே விளைவிக்கும். இந்த மனதின் செயற்பாடு ஒரு அகுசலமாகும். துன்பத்தினை விளைவிப்பதாகும். துர் விளைவுகளை ஏற்படுத்துவமதாகும். என உணர்ந்தீர்களாயின் புண்ணியமிகு இராகுல நீங்கள் இவ்வாறு செய்த மனதின் செயற்பாட்டினை நினைத்து கவலைக்குள்ளாக வேண்டும். வெட்கம் அடைய வேண்டும். அருவருப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் அவ்வாறு தவறு செய்யாதபடி தன்னை அடக்கிக்கொள்ள வேண்டும்.

புண்ணியமிகு இராகுல, நீங்கள் இவ்வாறாக நன்கு ஆராய்ந்த பின்னர் ‘நான் மனதினால் நினைத்த இச்செயற்பாடு எனக்கு தீமையை விளைவிக்காது. ஏனையோருக்கும் தீமையை விளைவிக்காது. எனக்கும் ஏனையோருக்கும் எனும் இரு பிரிவினர்க்கும் தீமையை விளைவிக்காது. இந்த செயல் குசலமாகும். சுகத்தினை அளிப்பதாகும்.  சுக விளைவுகளை தருவதாகும். என நீங்கள் உணர்வீர்களாயின், நீங்கள் நல்ல உற்சாகத்ததுடன் இரவு பகல் எனும் இருவேளையும் குசலங்களை விருத்தி செய்து கொண்டு வாழுங்கள்.

புண்ணியமிகு இராகுல முன்னர் வாழ்ந்த சிரமண அந்தணர்கள் உடற் கருமங்களை தூய்மைப்படுத்திக் கொண்டார்களாயின், பேச்சினை தூய்மைப்படுத்திக் கொண்டார்களாயின், மனதின் நினைக்கும் எண்ணப்பாடுகளை தூய்மைப்படுத்திக் கொண்டார்களாயின், அவற்றிற்கு காரணம் அவ் அனைவருமே இவ்வாறாக நன்கு ஆராய்ந்து தெளிவடைந்த பின்னரே தன் உடற்செயற்பாடுகளை செய்தாகும். நன்கு ஆராய்ந்து தெளிவடைந்த பின்னரே தன் வார்த்தைகளை வெளியிட்டதாகும். அவ் அனைவருமே இவ்வாறாக நன்கு ஆராய்ந்து தெளிவடைந்த பின்னர் தன் மனதினால் காரியங்கள் செய்தாகும்.

புண்ணியமிகு இராகுல எதிர்காலத்தின் தோன்றும் சிரமண அந்தணர்கள் உடற் கருமங்களை தூய்மைப்படுத்திக் கொள்வார்களாயின், பேச்சின் செயற்பாடுகளை தூய்மைப்படுத்திக் கொள்வார்களாயின், மனதின் நினைக்கும் எண்ணப்பாடுகளை தூய்மைப்படுத்திக் கொள்வார்களாயின், அவற்றிற்கு காரணம் அவ் அனைவருமே இவ்வாறாக நன்கு ஆராய்ந்து தெளிவடைந்த பின்னரே தன் உடற்செயற்பாடுகளை செய்வதாகும். அவ் அனைவருமே இவ்வாறாக நன்கு ஆராய்ந்து தெளிவடைந்த பின்னரே தன் வார்த்தைகளை வெளியிடுவதாகும். அவ் அனைவருமே இவ்வாறாக நன்கு ஆராய்ந்து தெளிவடைந்த பின்னர் தன் மனதினால் எண்ணங்களை நினைப்பதாகும்.

புண்ணியமிகு இராகுல தற்காலத்தின் தோன்றும் சிரமண அந்தணர்கள் உடற் கருமங்களை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்களாயின், பேச்சின் செயற்பாடுகளை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்களாயின், மனதின் நினைக்கும் எண்ணப்பாடுகளை தூய்மைப்படுத்திக் கொள்கிறர்களாயின், அவற்றிற்கு காரணம் அவ் அனைவருமே இவ்வாறாக நன்கு ஆராய்ந்து தெளிவடைந்த பின்னரே தன் உடற்செயற்பாடுகளை செய்வதாகும். அவ் அனைவருமே இவ்வாறாக நன்கு ஆராய்ந்து தெளிவடைந்த பின்னரே தன் வார்த்தைகளை வெளியிடுவதாகும். அவ் அனைவருமே இவ்வாறாக நன்கு ஆராய்ந்து தெளிவடைந்த பின்னர் தன் மனதினால் எண்ணங்களை நினைப்பதாகும்.

எனவே புண்ணியமிகு இராகுல, நீங்கள் இவ்வாறாகத்தான் உங்களை பயிற்றுவித்துக்கொள்ள வேண்டும். அதாவது ‘நன்கு ஆராய்ந்து, ஆராய்ந்து தெளிவடைந்த பின்னரே உடலினால் செயற்படுவேன். இவ்வாறாக என் உடற்கருமங்களை தூய்மைப்படுத்திக்கொள்வேன். நன்கு ஆராய்ந்து, ஆராய்ந்து தெளிவடைந்த பின்னரே பேச்சினால் செயற்படுவேன். இவ்வாறாக என் பேச்சினை தூய்மைப்படுத்திக்கொள்வேன். நன்கு ஆராய்ந்து, ஆராய்ந்து தெளிவடைந்த பின்னரே மனதினால் செயற்படுவேன். இவ்வாறாக என் மனதின் செயற்பாடுகளை தூய்மைப்படுத்திக்கொள்வேன்’ என்று.

பாக்கியமுள்ள புத்த பகவான் இந்த போதனையை மொழிந்தருளினார். இராகுல பத்ர சிறிய சுவாமியும் மன உவகையுடன் இந்த போதனையை ஏற்றுக்கொண்டார்.

சாது! சாது! சாது!!!