எதற்காக சமயம் வேண்டும்?

ஒரு மனிதனுக்கு ஆன்மீக தலைவர் ஒருவர் எதற்காக வேண்டும் என்பதனை பற்றியே நாம் இன்று கலந்துரையாடவுள்ளோம். நாம் வாழும் இவ்வுலகத்தில் பல்வேறுபட்ட சமயங்கள் உள்ளன. இந்த எல்லா சமயங்களின் ஆன்மீக தலைவர்களுள் புத்த பகவானே தான் ஒருவர் எதற்காக சமயத்தினை பின்பற்ற வேண்டும்? என மொழிந்தார். பெரும்பாலான மக்கள் தனக்கு நோய்களோ அல்லது வேறு பிரச்சினைகளோ ஏற்படும் பட்சத்தில்தான்  சமயத்தினை தேடுகின்றனர்.

சுருக்கமாக கூறினால், தனது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி கொள்வதற்காகத்தான் ஒருவர் சமயத்தினை தேடவும் அதனை பின்பற்றவும் செய்கிறார். ஒருவர் இம்மாதிரியாக சமயத்தினை தேடுவதை புத்த பகவான் ஆதரிக்கவில்லை. ஒருவர் இவ்வாறான சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சமயத்தினை தேடுவதானது மேன்மையற்றது எனவும் உசிதமற்றது எனவும் புத்த பகவான் மொழிந்துள்ளார். ஒருவர் பிறப்பு, முதுமை, மரணம் மற்றும் சகல துன்பங்களிலிருந்தும் நீங்குவதற்காகவே சமயத்தினை தெரிவு செய்ய வேண்டும்.  தெளிவான இலக்கொன்று இல்லாத ஒரு சமயத்தினை ஒருவர் பின்பற்றுவதால் அவர் மென்மேலும் அறியாமைக்கே இழுத்து செல்லப்படுவார். தெளிவான ஒரு நோக்கம் இல்லாத சமயத்தினால் எவ்விதமான புகலிடத்தையும் அடைய முடியாது.

பிறப்பு இறப்பு சுழற்சி இருக்கிறதா?

ஒரு ஆன்மீக தலைவரான புத்த பகவான் மக்களை அறிவாளிகளாக்கினார். புத்த பகவானது ஸ்ரீ சத்தர்மத்தில்தான் இந்த உயிர்கள் ஒரு சன்சார பயணத்தில் அதாவது பிறப்பு, இறப்பு எனும் சுழற்சியில் சிக்கியிருப்பதாக குறிப்பிடப்படுகிறது, இந்து சமயத்தில் மாத்திரம் அது தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறதேயன்றி உலகில் வேறு எந்த வொரு சமயத்திலுமே இது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

சிந்திக்கும் முறையில் மாற்றம்

நாம் சிந்திக்கும் முறையில் தவறு இருப்பதால் தான் நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம், என்றாவது ஒருநாள் நாம் சிந்திக்கும் முறையினை மாற்றிக்கொள்ளும் போது இந்த பிறவிப்பெருங்கடலிலிருந்து மீளலாம் எனவும் புத்த பகவான் மாத்திரமே மொழிந்தார். இந்த கொடிய பிறவிப்பெருங்கடலில் இருந்து மீள்வதானது புத்த பகவானது தர்மத்தினை பின்பற்றுவதால் மாத்திரமே முடியும். புத்த பகவானது தர்மத்தினை செவிமடுத்து எமது சிந்தனைகளை மாற்றிக்கொள்ளும் போது ஏழு பிறவிகளிலே இந்த கொடூரமான சன்சாரப்பாதையை முடிவுக்கு கொண்டுவர முடியும். இதற்கு தேவையானது ஒன்றுதான் அதுதான் புத்த பகவானது ஸ்ரீ சத்தர்மம்.

சிந்தனையை மாற்றும் வல்லமை

நாம் இவ்வாறு நினைத்து பார்ப்போம். இவ்வுலகிலுள்ள விலை மதிப்புமிக்க அனைத்து பொருட்களையும் ஒரு குவியலில் இடுகிறோம் என்று. இவ்வுலகிலுள்ள விலை மதிப்புமிக்கவை எவை? ஆம்.. பொன், வெள்ளி, முத்து, மாணிக்கம், பணம், என்பவற்றை ஒரு குவியலாக்கி ஒருவருக்கு கொடுத்து ‘இங்கிருக்கும் அனைத்து செல்வத்தினையும் பயன்படுத்தி இந்த பிறவிப்பயணத்தினை ஏழு பிறவிகளாக குறைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுகிறோம்.அவரால் அதனை செய்ய முடியுமா? அவரால் மட்டுமல்ல. இவ்வுலகிலுள்ள யாராலும் அதனை செய்ய முடியாது. இதிலிருந்து எம்மால் ஒரு விடயத்தினை நன்கு உணர முடியும். அதுதான் இவ்வுலகிலுள்ள அனைத்து செல்வத்தினையும் விட புத்த பகவானது தர்மமே பெறுமதிமிக்கதாகும் என்பதே அதுவாகும். இவ்வுலகிலுள்ள அனைத்து செல்வத்தினையும் செலவழித்தாலும் சன்சார பயணத்தினை நிறுத்த முடியாது.  நாம் சிந்திக்கும் முறையை மாற்றினாலன்றி அதனை ஒருபோதும் வேறு வழிகளில் செய்ய முடியாது. தனது சிந்தையை மாற்றியமைக்க வேண்டும் எனும் தேவை அனைவருக்கும் இருக்க வேண்டியதாகும். சிந்தனையை மாற்றி சீர்த்திருத்தும் வல்லமை புத்த பகவானது தர்மத்திற்கு மாத்திரமே முடியும். வேறு யாராலுமே அதனை செய்ய முடியாது.

நவீன விஞ்ஞானம்.

எமது எண்ணங்களில் நிரம்பியிருப்பது அஞ்ஞானமாகும். அஞ்ஞானம் என்றால் எமது வாழ்வின் உண்மை நிலையினை அறியாமையாகும். இவ்வாறான அறியாமையை கொண்டவர்கள் என்ன செய்வார்கள்? நால்வகை தாதுக்களால் உருவாகிய விடயங்களை மாற்றத்திற்குள்ளாக்குவார்கள். நிலத்தில் செல்லக்கூடிய, வானில் செல்லக்கூடிய, நீரில் செல்லக்கூடிய வாகனங்களை உருவாக்குவார்கள். இயந்திர மனிதர்களை, கணணிகளை உருவாக்குவார்கள். இன்னும் எத்தனையோ உருவாக்குவார்கள். இவற்றினால் நன்மைகளும் இருக்கின்றன. ஆனால் உயிர்களது மிகப்பெரும் பிரச்சினையான சன்சார விடுதலைக்கு அது உதவாது. அதற்கு காரணம் என்ன? இவற்றை உருவாக்கும் போது அதற்கு துணையாக அஞ்ஞானமிகுந்த மனமே அடிப்படையாக இருந்தது

அஞ்ஞானத்தினால் தோற்றம் பெருவது?

ஆசை தோன்றுவது  அஞ்ஞானத்திலாகும். கோபம் தோன்றுவது  அஞ்ஞானத்திலாகும். அறியாமை, ஆணவம், பொறாமை, உலோபித்தனம், மூட நம்பிக்கை என்பன தோன்றுவதற்கு அடிப்படையாக இருப்பது அஞ்ஞானமாகும். அப்படியாயின் உயிர்களிடம் பொதுவாக இருப்பது அஞ்ஞானமிகுந்த சிந்தனைகளாகும் என்பது புலனாகும். இவ்வாறான அஞ்ஞானமிகுந்த சிந்தனையிருக்கும் ஒருவருக்கு இவ்வுலகிலுள்ள அனைத்து செல்வத்தினை கொண்டேனும் மெய்ஞானத்தை தோற்றுவிக்க முடியாது.

மெய்ஞானத்தை தோற்றுவித்த ஒருவரது துணை வேண்டும்.

எவராயினும் ஒருவரது அகத்தே மெய்ஞானத்தை தோற்றுவிக்க வேண்டுமாயின் அவருக்கு மெய்ஞானத்தை தோற்றுவித்த ஒருவரது வழிகாட்டல் அவசியமாகும். ‘புத்தங் சரணங் கச்சாமி’ என நாம் அதனையே செய்கிறோம். இவ்வாறாக நாம் மும்மணிகளையும் சரணடைந்த பின்பு தான் எமது சிந்தனை போராட்டத்தில் பரிபூரணமாக ஈடுபட முடியும்.

நிலம், நீர், சமுத்திரம், தர்மம்.

புத்த பகவானது தர்மமானது நீரினால் சூழப்பட்ட ஒரு தீவினை போன்றதாகும். பிறவிப்பயணத்தினை புத்த பகவான் பெருங்கடலுக்கே உவமித்துள்ளார். ஒருவர் கடலில் விழுந்தால் கடலில் வாழும் ஆபத்து மிகுந்த உயிரினங்களினால் பாதிக்கப்படலாம். கடலுக்குள் விழுந்தவர் இந்த ஆபத்தினை உணர்வாராயின் என்ன செய்வார்? அவர் சுற்றும் முற்றும் நிலம் தென்படுகிறதா என பார்ப்பார். இவ்வாறாக நீந்தி நீந்தி பார்க்கும் போது அவருக்கு நிலமேதும் தென்பட்டால் அவர் அத்திசையை நோக்கி நீந்துவார் அல்லவா? அதற்கு காரணம் என்ன? ஆம் நிலம் அவருக்கு பாதுகாப்பளிக்கிறது என்பதனை அவர் உணர்ந்தார். அதுவே காரணம். புத்த பகவானது வாழ்க்கையும் அவரது சீடர்களுக்கு ஒரு தீவினை போன்றதாகும். நாம் அதனை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த தர்மத்தினை நோக்கி பயணிக்க முடியும். நாம் வேறு வேறு திசையில் பயணித்தால் ஒருபோதும் சரியான புகலிடத்தினை அடைய முடியாது. எவரேனும் ஒருவர் தீவினை அடைய முயற்சிக்காது வேறு வேறு திசைகளில் பயணிப்பாராயின் அவரது கண்களின் எல்லைக்கு மகா சமுத்திரமே இருக்கும். அப்படியாயின் அவரது வாழ்வு பாதுகாப்பற்றதல்லவா? புகலிடம்  தேவையாயின் தீவை நோக்கியே பயணிக்க வேண்டும். ஒருவர் இவ்வாறே தான் பின்பற்றுவதற்கான சமயத்தினையும் தெரிவு செய்ய வேண்டும்.

உங்களுக்கும் ஒரு இலக்கு இருக்க வேண்டும்.

ஒருவர் பிறப்பு, முதிர்ச்சி, மரணம் மற்றும் சகல துன்பங்களிலிருந்தும் நீங்குவதற்காகவே சமயத்தினையோ அல்லது ஒரு ஆன்மீக தலைவரையோ தெரிவு செய்ய வேண்டும். இக்காரணங்களுக்காகத்தான் ஒருவர் சமயத்தினை தெரிவு செய்ய வேண்டும் என புத்த பகவான் கூறியது மிகவும் அற்புதமான விடயமாகும். இவ்வுலகில் வேறு ஒருவரும் இதனை கூறவில்லை என்றால் அது பிழையாகாது. நாம் அனைவருமே புத்த பகவானை சரணடைவதற்கான ஒரே நோக்கமும் அதுவேயாகும். எவரேனும் ஒருவருக்கு இந்த இலக்கு இருந்தால் அவர் புத்த பகவானை நோக்கி வருவார். தர்மத்தினை நோக்கி வருவார்.

பிரார்த்தனையினால்…

எம்மில் பெரும்பாலான மக்கள் ‘வயது முதிர்ந்தவுடன் மோட்சமடைவதையோ அல்லது தியானம் செய்வதை பற்றியோ யோசிக்கலாம். வாழும் வாழ்வினை நன்றாக உண்டு குடித்து கொண்டு வாழ வேண்டும்.’ என்றே சிந்திக்கிறார்கள். இதுவரை தோன்றாத எதிர்காலத்தினுள் மோட்சமடையும் இலக்கினை விட்டு வேறு வேறு விடயங்களில் உழன்று கொண்டிருப்பதானது அஞ்ஞானமிகுதியாலேயே!. நாம் இவ்விடயங்களை நன்கு உணர்ந்து கொள்ள வெண்டும். இன்னும் எத்தனையோ கோடிக்கணக்கான பிறப்புகள் நாம் பிறக்க வேண்டிய பயணத்திலேயே பயணித்து கொண்டிருக்கிறோம் கோடிக்கணக்கான பிறப்புகள் பிறந்து அனுபவிக்க வேண்டிய துக்கத்தினை நிறுத்தும் ஒரு செயற்பாடே தர்மமாகும். தர்மத்தினை பின்பற்றுவதற்கு காலதாமதம் செய்வதென்றால் அது எமக்கே நாம் செய்துகொள்ளும் மிகப்பெரிய துரோகமாகும்.

கௌதம புத்த பகவானது தர்மம் இன்னும் உயிரோடுள்ளது.

அறிவுள்ளவர் தமது வாழ்வில் உள்ள பிரச்சினையை இனங்காண திறமையுள்ளவராக வேண்டும். அதற்காக முயற்சி செய்ய வேண்டும். தனது வாழ்விலுள்ள பிரச்சினையை தன்னால் இனங்காண முடியாவிடில். அதனை உணர முடியாவிடில் ஒருபோதும் அதனை தீர்க்க முடியாது. எமது பெரும் பாக்கியத்தின் விளைவாக புத்த பகவானது தர்மத்தினை நாம் சந்தித்துள்ளோம். எனக்கிருக்கும் பிரச்சினைதான் இந்த உன்னதமான தர்மத்தினை பின்பற்றி முடிவிலாத இந்த சன்சாரப்பயணத்தினை நிறுத்துவதற்காக முயற்சி செய்யுவோர்கள் இல்லையே என்பதாகும்.

அஞ்ஞானம் என்றால் என்ன?

துக்கத்திலிருந்து விடுதலை பெறுவதனை எதிர்காலத்திற்கு தள்ளிவைப்பது இந்த அஞ்ஞானத்தினாலேயே ஆகும். அறியாமையுடன் கூடிய மனம் உள்ளதாலேயே ஆகும்.

  1. பொதுவான கண்ணோட்டத்தோடு இவ்வுலகை பார்க்கும் போது நித்தியமானதாகவே தோன்றுகிறது. நாம் இனங்காணம் அனைத்தும் அநித்தியமாக எமக்கு தென்படுவதில்லை. நித்தியமானதாகவே தோற்றமளிக்கிறது. நிரந்தரமானவையாகவும் உறுதியானவையாகவுமாகவே தென்படுகிறது. எமது வாழ்வு தொடர்பாக சிந்திக்கும் போதும் நாம் நித்தியமானதாகவே சிந்திக்கிறோம். இவ்வனைத்துமே அறியாமை எனும் அஞ்ஞானத்தினாலேயே உருவாகியுள்ளது.
  1. நாற்புறமும் இன்பத்தினையே நாம் காணுகிறோம். இன்பத்தினை உருவாக்க முடியும் என்பதை நம்புகிறோம். அந்த சுகத்தினை தொடர்ந்தும் நிலைத்து வைத்துக்கொள்ள முடியும் எனவும் நாம் நினைக்கிறோம். நாம் நித்தியமான சுகத்தினையே விரும்புகிறோம். இதுவும் அறியாமை கொண்ட ஒரு மனதின் இயல்பாகும்.
  1. நாம் இருக்கும் எல்லா இடங்களிலும் சுபமான விடயங்களையே எதிர்பார்க்கிறோம். அழகான விடயங்களை எதிர்பார்க்கிறோம். அதுவும் அஞ்ஞானத்தினாலேயே தோற்றம் பெற்றதாகும்.
  1. நான் என்று ஒருவர் இருக்கிறார். நான் என்று நித்தியமான ஒருவர் இருக்கிறார் என்றே நாம் உணருகிறோம். இதுவும் அஞ்ஞானத்தினால் தோற்றம் பெற்றதொரு எண்ணமே.

அன்றாட வாழ்வில் நாம் காணும் அனைத்து விடயங்களுமே நித்தியமானவை, அழகானவை, சுகமானவையே. அவை மாற்றமுறாது, நான் என்று ஒருவர் உள்ளார் என்றே நாம் நினைக்கிறோம். இதுதான் அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்தினால் எமது மனம் மறைக்கப்பட்ட பின்னர் உண்மை எமக்கு புலப்படாது. அதனை காணவும் விரும்ப மாட்டோம். இந்த சத்தியத்தினை விரும்பவும் மாட்டோம். இந்த உண்மையை விரும்பாததால் பொய்மையை நிலைநிறுத்த முயற்சி செய்வோமே தவிர உண்மையை உணர முயற்சிக்க மாட்டோம்.

இந்த பயணத்தினை முடிக்க முடியுமா? நாம் காணும் அனைத்து விடயங்களுமே நித்தியமானவை, அழகானவை, சுகமானவையே. அவை மாற்றமுறாது, நான் என்று ஒருவர் உள்ளார், என்பது உண்மையல்ல என ஏற்றுக்கொள்ளாததாலயே நாம் இவ்வளவு காலமும் பிறந்து கொண்டும் மடிந்து கொண்டும் இந்த சன்சார பயணத்தில் பயணித்தோம். இதே கண்ணோட்டத்தில் நாம் தொடர்ந்தும் இருப்போமேயானால் எமது இந்த பயணம் இன்னும் நீளமாகுமே தவிர குறையாது. என்றோ ஒருநாள் இந்த பொய்யான பார்வையை விடுத்து மெய்யொளியை எம்முள் தோற்றுவித்து கொள்ளும் போது எமது பயணம் அன்றோடு முடிந்துவிடும். அநித்தியமானது, துக்கமானது, நான் என்ற ஒருவர் இல்லை என்பதனை காணும் போது, நாம் இந்த சன்சார பயணத்திற்கு முற்றுப்புள்ளியிட்டு விடலாம் மெய்ஞ்ஞான சிந்தனை எனக்கூறுவது அதனையே. இந்த மெய்ஞானத்தை தோற்றுவித்து கொள்ளும் வரை இதனை நிறுத்த முடியாது. இந்த சன்சாரப்பயணத்தினை நிறுத்த வேண்டுமாயின் நாம் புத்த பகவான் கூறிய தர்மத்தினையே பின்பற்ற வேண்டும்.

மெய்ஞான சிந்தனை

மீண்டும் பிறப்பதற்கான கர்ம ஒழுங்கமைப்பை நாம் நிறுத்த வேண்டுமாயின் எம் சிந்தனையானது எமக்கு புலனாகும் இவ்வனைத்தையும் ஊடுருவிச்செல்வதாக அமைய வேண்டும். சாதாரண ஒரு மனிதரால் இதனை செய்ய முடியாது. அதற்காகத்தான் ஒரு ஆன்மீக தலைவர் எமக்கு தேவைப்படுகிறார். இந்த தேவை ஏற்படும் போதுதான் புத்த பகவானது தர்மம் எமக்கு தேவைப்படுகிறது. பொதுவான உலகினை மீறியதாக எழுந்து வரும் சிந்தனை சக்தி புத்த பகவான் மொழிந்த தர்மத்திலன்றி வேறு எதிலுமே கிடைப்பதில்லை. இவ்வாறான தர்மத்தினை போதித்தருளிவர் ஒருவரே அவரே பாக்கியமுள்ள புத்த பகவானாவார். குறுகிய சிந்தனை வட்டத்தின் வரையறையை தகர்தெறிந்ததாகவே புத்த பகவானது தர்மம் திகழ்கிறது.

இந்த தர்மத்தினை பயிற்சி செய்வதால் அதற்கான பெறபேறுகளை இவ்வாழ்விலேயே காண முடியும். அப்படியிருக்க அதனை தள்ளிவைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமாகும்? ‘நான் இந்த தர்மத்தினை முதிர்ச்சியடையும் போது பயிற்சி செய்வேன்’ என தோன்றியிராத எதிர்காலத்தில் தள்ளி வைத்துவிட்டு ஏன் நாம் துன்புற வேண்டும்? அதனால் அறிவினை பயன்படுத்துங்கள்.

புத்த பகவானது தர்மத்தினை தூய்மையாக கேட்பது மிகவும் அரிதானதாகும். புத்த பகவானது தர்மம் எல்லாக்காலங்களிலும் கேட்கக்கூடிதொன்றல்ல. மிக மிக அரிதாகவே இந்த தர்மத்தினை செவிமடுக்க முடியும். அதனால் இந்த தர்மத்தினை கொண்டு எமது உள்ளக வாழ்விற்கு நல்லதோர் அடித்தளத்தினை நாம் இட வேண்டும். மிக அரிதாக கிடைக்க வேண்டிய அனைத்துவிடயங்களுமே எமக்கு கிடைத்திருக்கிறது. புத்த பகவானை சந்திக்கவோ அல்லது அவர் மொழிந்த தர்மத்தினையோ ஒருவருக்கு சந்திக்க கிடைத்தால் அது மிகவும் அரிதாக நிகழும் ஒரு நிகழ்வாகும் அதேபோல் மனித பிறவி என்பதுவும் மிகவும் அரிதான விடயமே. இவ்வனைத்தும் எமக்கு கிடைத்திருக்கிறது. கிடைத்து கொண்டிருக்கிறது. இந்த அரிதான சந்தர்ப்பத்தினை நழுவ விடாதீர்கள். அப்படி நீங்கள் செய்து கொண்டீர்களாயின் அது உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் மிகப்பெரிய தீங்காகும்.

தெளிவானதொரு இலட்சியம் வேண்டும்.

நான் இவ்வாழ்விலேயே எவ்வாறாவது அனைத்து துன்பங்களிலிருந்தும் நீங்க வேண்டும் எனும் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். இவ்வாறானதொரு இலட்சியத்தினை உருவாக்கிகொள்ளாமல் துக்கத்திலிருந்து நீங்க முடியாது. எமது வாழ்வினை நாம் இனங்காண வேண்டும். அதேபோல் துக்கம் என்பது என்ன? என்பதனையும் இனங்காண வேண்டும். இந்த வாழ்வினை உய்த்துணர வேண்டும்.

பிரார்த்தனை செய்வதால் துக்கத்திலிருந்து மீள முடியாது.

நாம் இவ்வாறு நினைத்து பார்ப்போம். ஒருவர் ஆழமானதொரு குளத்தில் தவறி விழுந்துவிட்டார். அவருக்கு நீந்தவும் தெரியும். ஆனால் அவர் நீந்தி கரையேற முயற்சிக்காமல் ‘ஐயோ எனக்கு கரையேறும் பாக்கியம் கிடைக்க வேண்டும்’ என பிரார்த்தனை செய்துகொண்டிருந்தால் அவரால் கரையேற முடியமா? முடியாது.

அதேபோல் சன்சாரம் எனும் பிறவிப்பெருங்கடலில் விழுந்த உயிர்களும் ‘இந்த சன்சாரத்திலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும்’,  என வாய்ப்பேச்சில் மாத்திரம் கூறிக்கொண்டிருந்தால் அவர் தாமாகவே மோட்சத்தினை நோக்கி செல்வாரா? இல்லை. அவர் அதற்காக முயற்சி செய்தேயாக வேண்டும்.

இன்னும் தாமதமில்லை.

புத்த பகவான் தரித்திருந்த காலத்தில் நாம் இருந்திருந்தால் எமது இந்த சன்சார பிரச்சினை முற்றுப்பெற்றிருக்கும். புத்த பகவான் இப்போது இல்லை என்றாலும் எமக்கு அது மிகப்பெரிய நஷ்டமில்லை. புத்த பகவான் எம்மை தனிமைபடுத்தி பரினிர்வாணம் எய்துவிடவில்லை. எமக்கு ஒரு புகலிடத்தினை அமைத்து கொடுத்தே பரினிர்வாணம் அடைந்தார். அதனால் இன்றும் புத்த பகவானை எம்மால் காண முடியும். அவர் மொழிந்தருளிய தர்மத்தினாலேயே காண முடியும் வேறு வழிகளில்லை. அதனால் எம்மனைவருக்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்பினை இழந்து விடாதீர்கள். எமது சிந்தையுனுள் புத்த பகவானது அளப்பரிய ஞானத்தினை நாம் உணர வேண்டுமாயின் எம்மிடம் சில விடயங்கள் இருக்க வேண்டும்.  அதில் முதலாவதுதான் சிரத்தை எனப்படும் நம்பிக்கையுடன் கூடிய திடகாத்திரமான பக்தியாகும். அது பாளி மொழியில் சத்தா எனக்கூறப்படுகிறது.

சத்தா என்றால் என்ன?

வருடத்திற்கு ஒருமுறை யாத்திரை செல்வதையே சத்தா என சிலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தாம் வீடுகளில் சமைக்கும் உணவிலிருந்து சிறிதினை புத்த பகவானுக்கு படைத்து பூஜிப்பதனை சத்தா என சிலர் நினைக்கின்றனர். அவ்வாறில்லாவிடில் வருடத்திற்கு ஒருமுறை ஒரு தாதுகோபுரத்திற்கு மகா பூஜைகளை செய்வதை சிலர் சத்தா என நினைத்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்கின்ற அனைவருக்கும் நம்பிக்கையுடன் கூடிய திடகாத்திரமான பக்தி எனப்படும் சத்தா இருக்கிறது என்று கூற முடியாது. சத்தா என்றால் தாம் பின்பற்றும் விடயம் தொடர்பாக மிகத்தெளிவாக இனங்கண்டு கொள்ளலும் அவ்வாறு இனங்கண்டதன் மீது ஏற்படும் விருப்புமாகும்.

புத்த பகவானை இனங்கண்டுகொள்வோம்.

புத்த பகவான், ‘தெளிவான முறையில் புத்த பகவானை இனங்கண்டு கொள்வதனையே  சத்தா’ எனக்குறிப்பிட்டுள்ளார். அப்படியாயின் நாமும் புத்த பகவானை சரியாக அறிந்து கொள்ள வேண்டும். அந்த மகா உத்தமர் யார் என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவர் புத்த பகவானை அறிந்துகொண்டதன் பின்னர் அவர் மொழிந்த தர்மத்தினை உணரக்கூடியதாக இருக்கும். அவ்வாறில்லாவிடில் எம்மனதில் தோன்றியிருக்கும் இந்த பக்தியானது மிகவும் சிறிதளவேயாகும். அந்த சத்தாவை யாராலும் எப்போதும் மாற்ற முடியும். அவ்வாறு மாற்றமடையும் சில சந்தர்ப்பங்களை நான் உங்களுக்கு கூறுகிறேன். ‘..நாம் இவ்வளவு காலமும் புத்த பகவானை சரணடைந்திருக்கிறோம்..இவ்வளவு பூஜைகளை செய்கிறோம். ஆனால் எமக்கு ஒன்றுமே சரிவந்த பாடில்லை’. இவ்வாறு கூறும், தம்மை பௌத்தர்களாக காட்டிக்கொள்வோர்கள் இல்லையா? இவ்வாறு கூறிக்கொண்டு அவர்கள் மும்மணிகளையே தூற்றுகிறார்கள். அப்படியாயின் இவர்கள் இவ்வளவு காலமும் ‘புத்தங் சரணங் கச்சாமி’ என பொய்க்குத்தானே கூறிக்கொண்டிருந்திருக்கிறார்கள்? அவர்கள் புத்த பகவான் யார்? அவர் மொழிந்தருளிய தர்மம் யாது? அதனை பின்பற்றும் ஆரிய சீடர்களான சங்கத்தினர் எப்படியானவர்கள் என்பதனை உணராதோர்களாகவே இருந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் இவ்வாறு கூறக்கேட்டதில்லையா?  ‘தர்மத்தினை பின்பற்றுபவன் தர்மத்தினாலேயே காக்கப்படுவான்’ என்று கூறப்படுகிறது…எங்கே எம்மை தர்மம் பாதுகாத்ததா என்ன..? என்று  கூறுபவர்கள் இல்லையா? இவ்வாறு கூறுவதால் முழுமையாகவும் பரிபூரணமாகவும் போதிக்கப்பட்ட தர்மத்தினையே அவர்கள் இகழ்ந்து பேசுகிறார்கள். இவ்வாறு  அவர்கள் கூறுவதற்கு காரணம் அவர்கள் புத்த பகவான் யார் என்பதனை அறியாததாலேயே. இந்த தர்மம் என்றால் என்னவென்றே அறியாததாலேயே. இவர்களிடம் சத்தா எனப்படும் பக்தி இருக்கிறதா? எம்நாட்டில் வாழும் பெரும்பாலானோர்க்கு இருப்பது உண்மையான பக்தியா இல்லையா என்பதனை இப்போது உணர்கிறீர்களா?

சோடா போத்தலை போன்ற  பக்தி

பெரும்பாலான பௌத்தர்களிடம் இருப்பது சோடா போத்தல் போன்ற பக்தியாகும். சோடா போத்தலை திறந்தவுடன் போத்தல் நுரையால் நிறைந்து பொங்கி வெளியே வந்து சில செக்கன்களிலே முடிவுறும். இம்மாதிரியானோர்களை நீங்களும் பார்த்திருப்பீர்களல்லவா? இப்படியானோர்கள் ஏதாவது ஒரு பூஜையை செய்வதற்கு முற்படும் போது அவர்களது பக்தியை பார்த்திருக்கிறீர்களா? நிலத்தில் புரண்டு புரண்டு அழுவார்கள். சாது! என்று சொல்லுவார்கள். கண்ணீர் மல்க வணங்குவார்கள். சோடா போத்தலை உடைத்தது போன்று சற்று நேரத்திலேயே அனைத்தும் முடிவுறும். புத்த பகவான் இந்த சத்தா எனப்படும் பக்தியை தெளிவுபடுத்துவதற்கு அழகானதொரு சொல்லை பயன்படுத்தினார். ஷபரிப்லவ சத்தா| அது ஷபரிப்லவ பசாத| எனவும் அது தர்மத்தில் குறிப்பிடப்படுகிறது.. ஷபரிப்லவ பசாதஸ்ஸ  பஞ்ஞா ந பரிபூரதி| இங்கு குறிப்பிடப்படும் சத்தா எனப்படும் பக்திக்கு ஞானத்தினை தோற்றுவித்து கொள்ள முடியாது, என புத்த பகவான் குறிப்பிட்டுள்ளார். சலனமடையும் பக்தியால் ஞானத்தினை தோற்றுவித்துக்கொள்ள முடியாது. இது அவர்களது பிழையன்று. இதுவே மனதின் பொதுவான இயல்பாகும்.

தர்மத்தினை பரிகாசம் செய்தலாகாது.

தர்மத்தினை பின்பற்றுபவன் தர்மத்தினால் பாதுகாப்படைவான் என நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? அது எப்படி நடக்கிறது? நான் உங்களுக்கு சிறிய உதாரணம் ஒன்றினை கூறுகிறேன். விடூடபன் சாக்கியர்களை சம்ஹாரம் செய்ததை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த போரில் விடூடபனால் பெரும்பாலான சாக்கியர்கள் கொள்ளப்பட்டார்கள். அந்த சாக்கிய இனத்தவர்கள் மும்மணிகளை சரணடைந்த பௌத்தர்களாவர். ஆனால் அங்கிருந்த ஒருவரேனும் உயிர் தப்பவில்லை. அதேபோல் அங்கிருந்த ஒருவரேனும் ‘ஐயகோ..! நாம் எவ்வளவு காலம் இந்த தர்மத்தினை பின்பற்றினோம்..? ஆனாலும் இந்த தர்மத்தினால் எம்மை பாதுகாக்க முடியவில்லையே’ எனக்கூறினார்களா? இல்லை. ஒருவரேனும் தர்மத்தினை பரிகாசம் செய்யவில்லை.

இதனை நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

தர்மத்தினால் பாதுகாக்கப்படுவது இந்த உடலல்ல. மாறாக தர்மத்தினால் பாதுகாப்படையச்செய்வது தர்மத்தினை பயிற்சி செய்த இந்த உள்ளமாகும். உடல் நோயுறுவதை தடுக்க தர்மத்தினால் முடியுமா? முதிர்ச்சியடைவதை, தடுக்க முடியுமா? மரணமடைவதை தடுக்க முடியுமா? முடியாது. ஆனால் மிக அவசியமானதை இந்த  தர்மம் செய்கிறது. அதுதான் ஒருவர் நரகத்தில் பிறப்பதனை தடுக்க இந்த தர்மத்தினால் முடியும். இப்போது அவர் தர்மத்தினால் பாதுகாப்படைகிறார். மனதில் கோபம் தோன்றும் போது அதனை தடுப்பதற்கு தர்மத்திற்கு முடியும். பழிவாங்கும் எண்ணம் ஒன்று மனதில் உதித்தவுடன் தர்மத்தினை பின்பற்றும் ஒருவரது மனம் ‘அதை நீ செய்யாதே! அது உனக்கு நீண்ட காலத்திற்கு துர்விளைவுகளை தரும்’ எனக்கூறும். அவரை அந்த தீய செயல்களிலிருந்து பாதுகாக்கும். இவ்வாறாகத்தான் ஒருவரை தர்மம் பாதுகாக்கிறது. இப்போது புரிகிறதா தர்மம் எவ்வாறு தர்மத்தினை பின்பற்றும் ஒருவரை பாதுகாக்கிறது என்பதனை. இது வெளிப்புறமாக தென்படாத ஒன்றாகும். தர்மத்தினால் முழுக்க முழுக்க பாதுகாப்படைவது உள்ளமேயாகும். மனதினை அகுசலத்திலிருந்து பாதுகாத்து குசலத்திற்கு கொண்டு வரும் வல்லமை தர்மத்திற்குள்ளது. தர்மத்தினை சரணடைந்த ஒருவருக்கு ஏதாவது சோகம் தரும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது என நினைப்போம். அப்போது அவர் ‘நான் சரணடைந்த பரம உத்தமரான புத்த பகவானுக்கு இந்த சோகமிருக்கவில்லை அல்லவா? இந்த சோகம் அவருள் தோன்றாத ஒரு விடயம் தானே.. நான் அந்த உத்தமரையல்லவா சரணடைந்தேன்! நானும் அவர் மொழிந்த தர்மத்தினை பின்பற்றி அவ்வாறானதொரு நிலைமைக்கு எனது மனதினை மேன்மைபடுத்துவேன்..’ என்று தர்மத்தினை அறிந்தவர் இவ்வாறு தான் சிந்திப்பார். தர்மத்தினால் பாதுகாப்படைவது இவ்வாறுதான். அப்போது அவருக்கு புகலிடமாக அமைவது தர்மமேயாகும்.

தர்மம் வயிற்றுக்கல்ல…  சிரசிற்காகும்.

ஒருவர் இவ்வாறு சிந்தித்தால் ‘நான் இத்தனை வருடங்களாக தர்மத்தினை பின்பற்றினேன். எனக்கு என்னதான் கிடைத்தது?’ என்று. அவர் நி;ந்தனை செய்வது புத்த பகவானையே. எமக்கு இதிலிருந்து புலப்படும் ஒரு விடயம் தான் பக்தி வயிற்றுக்கு தேவையானதல்ல. மாறாக அது தலைக்கே தேவைபடுகிறது. அறிவுக்குத்தான் சத்தா எனப்படும் பக்தி தேவைபடுகிறது. பெருப்பாலானோர்கள் வயிறை போசிப்பதற்காகவே இருக்கிறார்கள். எவரேனும் வீடுகளில் சாரிபத்த தேரரது படத்தினை வைத்து வணங்குவதை கண்டிருக்கிறீர்களா? இல்லையே. சாரிபுத்த தேரர் ஞானத்தினால் முதன்மை பெற்ற சீடராவார். ஆனால் சீவலி தேரரது படத்தினை வீடுகளில் வைத்து வணங்குவதை பார்த்திருப்பீர்கள். சீவலி தேரர் தானம் கிடைப்பதில் முதன்மை பெற்றவராவார். நாம் அவர் தானம் உண்ண ஆயத்தாமாவதை நினைவுகூரும் ஒரு படத்தினை வீடுகளில் வைத்து வழிபடுகிறோம். அதன் அர்த்தம் என்ன? நாம் வயிற்றுக்கே கேட்கிறோம். அறிவுக்கல்ல. வயிற்றினுள் விழுகின்றவற்றால் எம்மை அறிவுள்ளோர்களாக முடியுமா? முடியாது. புத்த பகவானது தர்மத்திற்கு முழுக்க முழுக்க அறிவே அவசியமாகும். அறிவினை முதன்மைபடுத்தியதாகவே புத்த தர்மம் அமைந்துள்ளது.

உண்மையான சத்தா அசைக்க முடியாததாகும்

புத்த பகவானது தர்மத்தினால் கிடைப்பது அறிவாகும். அந்த அறிவுத்திறனை வளர்ப்பதற்கே இந்த தர்மம் அவசியமாகிறது. இந்த தர்மத்தினால் நாம் எம்மை பாதுகாத்து கொள்ளலாம். இவ்வாறான சத்தா இருந்தால் அதனை யாராலும் அசைக்க முடியாது. இம்மாதிரியான திடகாத்திரமான நம்பிக்கையுடன் கூடிய பக்தி எம்மிடம் இருக்கிறதென்றால் சன்சாரகடலில் விழுந்திருக்கும் எமக்கு தீவு தென்பட்டுவிட்டது என்பது பொருளாகும்.

அகாரவதீ சத்தா

ஆகாரவதீ சத்தா எனக்கூறப்படுவது உய்த்துணர்வுடன் கூடிய சத்தாவாகும். இம்மாதிரியான திடகாத்திரமான நம்பிக்கையுடன் கூடிய பக்தி எனப்படும சத்தா இருக்கும் ஒருவருக்கு பட்டினி ஒரு பிரச்சினையா? ஒருவரிடம் இவ்வாறான சத்தா இருக்குமாயின் பசி பட்டினி, சித்திரவதைகள், தாகம், நோய் நொடிகள் என்பவற்றினால் மரணத்தை தழுவ நேர்ந்தாலும் அது அவருக்கு பொருட்டல்ல. அவர் உலக தர்மத்தினை உணர்ந்தவராகவே இருப்பார். அவரை தர்மம் பாதுகாக்கிறது.

நாம் அதிஷ்டசாலிகளாவோம்.

நான் இவ்விடயங்களை கூறக்காரணம் எம்மனைவருக்கும் இப்போது கிடைத்திருக்கும அரிய வாய்ப்பின் பெறுமதி தொடர்பாக உணர்த்துவதற்காகும். எமக்கு இப்போது கிடைத்திருக்கும் தர்மத்தின் பெறுமதி, மற்றும் இப்போது எமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு எவ்வளவு பெறுமதியானது என்பதனை நினைத்தால் இவ்வுலகில் வாழும் மிகவும் அதிஷ்டசாலிகள் நாமே என்ற எண்ணம் தோன்றும். எமது பெறுமதியினை எம்மால் புரிந்து கொள்ள முடியாவிடில் பயனில்லை. புத்த பகவானால் எமக்கு கிடைத்த விடயங்களை நாம் நன்கு உணர வேண்டும்.

எம் அனைவருக்குமே இந்த பிறவிப்பயணத்தினை முடிவுக்கு கொண்டுவர முடியும்

எம்மிள் பெரும்பாலானோர்க்கு இந்த பிறவிப்பயணத்தினை நிறைவுபெறச்செய்ய முடியும். முயற்சி, தைரியம், வீரியம் எனபவற்றுடன் அறிவினை செயற்படுத்த வேண்டும். அப்போது அஞ்ஞானம் கவிழ்ந்து மெய்ஞ்ஞானம் மேலோங்கும். இவ்வாறு நடந்தால் எம் அனைத்து பிரச்சினைகளுக்கும் அது முடிவாக அமையும். இதனை செய்துகொள்வதற்கே  தர்மம் எமக்கு மிகவும் அவசியமாகிறது.

இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.

புத்த பகவான் அதற்கான வழியை காட்டியுள்ளார் திடீரென எம்மனதை சத்தியத்தை நோக்கி திசைதிருப்புவது மிகவும் கடினமான விடயமாகும். பலகோடிக்கணக்கான பிறப்புக்களிலிருந்து பொய்மையிலேயே மூழ்க்கி இருக்கும் இம்மனதின் இயல்பினை மாற்றுவதற்கு முன்னர் இந்த மனதினை ஒரு கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவர வேண்டும். இம்மனதினை அமைதிபடுத்த வேண்டும். அதற்கு துணையாக இருப்பதுதான் சமத தியானமாகும். சீலத்தினால் உடலையும் வார்த்தையையும் கட்டுப்படுத்தி கொள்ளலாம். ஆனால் உடலையும் வார்த்தையையும் கட்டுப்படுத்தி கொள்வதற்கு அந்த சீலம் சம்மா திட்டியுடன் கூடியதாக இருக்க வேண்டும். இந்த சம்மா திட்டி இல்லையென்றால் ‘நான் இவ்வளவு காலமாக சீலத்தினை அனுசரிக்கிறேன் ஆனால் எனக்கேன் இவ்வாறு நடக்கிறது?’ எனும் கேள்விகளை கேட்க மனது ஆயத்தமாக இருக்கும்.

நீங்கள் இப்போது புத்த பகவானது தர்மத்தில் குறிப்பிடப்படும் சிரத்தை எனப்படும் புத்த பகவான் மீது கொள்ள வேண்டிய திடகாத்திரமான பக்தி சாதாராண மாதல்ல என்பதனை உணர்ந்திருப்பீர்கள். இந்த பக்தியானது அறிவுபூர்வமானதாகும். இந்த திடகாத்திரமான பக்தியால் தன்னைதானே பாதுகாத்துகொள்ள முடியும். நாம் எமது மனதினை கட்டுப்படுத்த வேண்டும். அதற்குதான் சமத தியானங்களை செய்ய வேண்டும். அதற்காக நாம் வீரியம் செய்ய வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். இவற்றை நாம் உண்மையான மனதோடு செய்தால் அந்த முயற்சிக்கான விளைவு கட்டாயமாக கிடைக்கும்.

சாது! சாது!! சாது!!!