உங்களால் என்ன செய்ய முடியும், உங்களுக்கு பிடித்தமானவை எவை? சாப்பிடுவது, குளிப்பது, உடுப்பது போன்ற அன்றாட செயற்பாடுகளை தவிர நீங்கள் வேறு என்ன செய்வதற்கு விரும்புகிறீர்கள்? நீங்கள் சரி.. உங்களால் பாடுவதற்கு முடியும், நடனம் ஆடுவதற்கு, நன்றாக கல்வி கற்பதற்கு… இன்னும் எவ்வளவு எவ்வளவோ உங்களால் முடியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அவற்றை உங்களால் மட்டும்தான் செய்ய முடியுமா? ஒப்பிட்டு பார்க்கையில் அளவுகோலின் வித்தியாசங்கள் இருந்தாலும் எல்லோராலும் இவற்றை செய்வதற்கு முடியும். என்னதான் திறமை இருந்தாலும் அவை அனைத்துமே நாம் அறிந்த விடயங்கள் அல்லது கற்ற விடயங்கள் என்பனவற்றிற்குள் வரையறுக்கப்பட்டதாகும்.

எனவேதான் அறிந்து வைத்திருக்கும் விடயங்களை வைத்து சமூகத்தின் மத்தியில் தமக்கென்று ஒரு இடத்தை அமைத்துக்கொள்வதற்கு அனைவரும் படாத பாடு படுகின்றனர். சிலவேளை இப்போது உங்கள் வாழ்க்கை ஒரு முன்னேற்ற பாதையில் இருக்கும். அதுபோல் ‘வாழ்க்கையை தோற்றுவிட்டேன்’ என நினைப்பவர்களும் இருக்கலாம். வாழ்க்கையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கடந்த காலங்களை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறதா? கவலைப்படுகிறீர்களா? அல்லது ‘எல்லாம் தலைவிதி’ என தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறீர்களா? எது எப்படியோ வாழ்க்கையில் இருந்து தப்பியோட முடியாது. எங்கு தான் தப்பி ஓடுவது? எனவே நாம் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ வாழ்விற்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்று கிடைக்கும் சந்தோஷம் நாளை கிடைக்காமல் போகலாம். நாளை உங்களுக்கு ஏதேனும் தாங்கிக்கொள்ள முடியாத துக்கம் ஏற்பட்டால் இன்று கிடைத்த இந்த சந்தோஷம் காலாவதி ஆகி விட்டது என எடுத்துக்கொள்ளலாம் இல்லையா..?

கஷ்டப்பட்டு உழைக்கும், கடினமாக பாதுகாக்கும் பெரும்பாலானவற்றின் இயல்பு இப்படிப்பட்டதே. இறுதியில் கவலையை தந்துவிடுகின்றன. அது கொடுக்கும் சந்தோஷங்களும் விரைவிலேலே காலாவதியாகிவிடுகின்றன. ஆனால் ஈட்டுவதற்கு இலகுவான, பாதுகாப்பதற்கும் இலகுவான காலாவதியாகாத ஒரு விடயம் இந்த உலகில் இருக்கிறது. அதுதான் மனிதநேயம். ஒருசிறு எண்ணம் போதும் நாம் சாப்பிடும் தட்டில் இருந்து இன்னுமொருவருக்கு ஒரு பிடி கொடுப்பதற்கு. நன்றாக நினைத்து பாருங்கள். மன சந்தோஷத்துடன் யாருக்காகவாவது எவ்வளவாவது ஏதாவது தானமாக கொடுத்த நாள் ஒன்று உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

கொடுத்ததை விடுங்கள். கொடுக்க நினைத்த நாளாவது இருக்கிறதா? பசிக்காக ஒருவர் ஒரு ரூபாயோ அல்லது இரண்டு ரூபாயோ இரந்து கேட்கையில் உங்கள் மனதில் அனுதாபம் தோன்றிய நாள் ஞாபகம் இருக்கிறதா? இந்த உலகின் அபாராமான அலுவல்களை முன்னிட்டு சிலவேளை இப்படியானவர்கள் உங்கள் கண்களுக்கே தெரியாமலும் போயிருக்கலாம். அது பரவாயில்லை. இனிமேலும் இறந்தகாலத்தினைப் பற்றி பேசாமல் நாம் எம் தவறுகளையும் பிழைகளையும் சிறிது சிறிதாக சரி செய்து கொள்வதற்கு முயற்சிப்போம். பிறந்த நாள், வேறு பார்ட்டிக்கள், பாடசாலையின் வைபவங்கள், போன்ற இன்னும் எத்தனையோ வகை வகையான வைபவங்களின்போது பல இலட்சக்கணக்கில் பணத்தினை செலவு செய்து விழா எடுப்பதை விட யாருமற்றவர்கள், நோயாளிகள், ஏழைகள் என்போருக்காக உங்களால் ஏதேனும் செய்யக்கூடியதாக இருந்தால் எவ்வளவு நல்லம் என்று நீங்கள் நினைத்ததுண்டா? ஊர் சிரிக்கும் என்று அந்த எண்ணத்தினை அப்போதே குழி தோண்டி புதைத்துவிட்டீர்களா? உங்கள் உபகாரத்தினால் இன்னுமொருவரது வயிறு நிரம்புமென்றால் அது உங்களுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கும்? நோய்நொடிகளினால் பீடித்திருக்கும் ஒருவரது முகத்திற்கு உங்களால் ஒரு அமைதிப்புன்னகையை ஏற்படுத்த முடியுமானால் அது உங்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துமல்லவா? படிப்பதற்கு, பாடசாலை செல்வதற்கு கொப்பி புத்தகங்களை வாங்குவதங்கு முடியாமல் தவிக்கும் சின்னஞ்சிறுசுகளின் முகத்திற்கு ஒரு சிரிப்பினை கொடுக்க முடியுமானால் அது உங்களுக்கு மன நிம்மதியை ஏற்படுத்துமல்லவா? உலகத்தோரே வந்து எதிர்த்தாலும் அந்த மனங்களை சந்தோஷப்படுத்துவதை நீங்கள் நிறுத்த நினைக்கமாட்டீர்கள்.

இந்த புதுமையான உணர்வே உன்னத மனங்களின் உயரிய வெளிப்பாடாகிய சுந்தரமான மனிதநேயமாகும். உங்கள் மனமும் இந்த சுந்தர மனிதநேயத்தின் தழுவலைப்பெற விரும்புகிறதா?