சாக்கிய முனி வந்தனம்
சேதவ்ய நகரிற்கும் உக்கட்டா நகரிற்கும் இடையே ஒரு பாதை இருந்தது. அஞ்ஞான இருளை போக்கும் ஆதவனாக அவதரித்த உலகின் அனைத்து பாக்கியங்களையும் தன்னுள்ளே தாங்கிய புத்த பகவான் தன் திருவடிகளின் சுவடுகள் பாதையில் பதியுமாறு பயணித்துக்கொண்டிருந்தார். அவ்வேளை அவ் வழியே தேகலட்ணவியலில் கரைதேர்ந்த துரோணர் எனும் பிராம்மணரும் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அவருக்கு பகவானது திருவடிகளின் சுவடுகளை காணக்கூடியதாக இருந்தது. அந்த சுவடுகளை கூர்ந்து அவதானித்த அவரது விழிகள் ஆச்சரியத்தில் மூழ்கியது. “ஆச்சரியம்… அற்புதம் ” என தனக்குள்ளே கூறிக்கொண்டார். ஏனெனில் அந்த சுவடுகள் சாதாரண ஒரு மனிதரது பாதச்சுவடுகளாக இல்லை. தலை நிமிர்ந்து பார்த்தார். பொன்னே மேனியாக கொண்ட ஒரு உத்தமர் மரநிழலில் பிரம்மனை போல் அமர்ந்திருப்பதை அவதானித்தார். ஆச்சரியத்தின் மிகுதியால் அவரை அறியாமலேயே அவரது கால்கள் புருஷோத்தமரான பகவானை நோக்கி சென்றது. பகவானை கண்டதும் அவரையும் அறியாமலே திருவடிகளை வணங்கி நின்றார். அப்போதுதான் பகவானது திருமுகத்தினை பார்க்கலானார். பொன் வேறு மேனியின் நிறம் வேறு என பொற்கொல்லனால் கூட பிரித்துணர முடியாத நிறத்திலான திருமேனி, பரந்த நெற்றி வானவில்லைப்போன்ற வலைந்த கருநீல மயிர் கொண்டஅந்த புருவங்களின் மத்தியில் வெண் பஞ்சினை சுருட்டி வைத்தாற்போன்ற ஊர்ண ஊரோம தாது, அன்று பிறந்த கன்றின் கண்கள் போன்ற அளவிளான நீல மணிகளை பொருத்தி வைத்தாற் பொன்ற கருணை ததும்பும் கண்கள், மிகவும் நேர்த்தியாக அமைந்த நீண்ட நாசி, அழகிய செவ்விதழ்கள் என துரோணர் பகவானது முகத்தினை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த திருமுகத்தினை கண்ட துரோணருக்கு கண்களை அகற்றுவதற்கு முடியாமல் இருந்தது. கண்கொண்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தார். அந்த அழகே உருவான திருமுத்தினை தான் இதுவரை எங்கும் காணவில்லை என தோன்றினாலும் இவ்வாறான முக இலட்சணங்கள் தொடர்பாக தான் தனது சாஸ்திரத்தில் கற்றிருப்பதன் படி பார்த்தால் ….. என நினைக்கும் போதே அவரது உடல் கூசியது. எதற்கும் சந்தேகத்தினை தீர்த்துக்கொள்ள வேண்டும் என தன்னை சுதாகரித்துக்கொண்டு பின்வருமாறு பகவானை நோக்கி வினவலானார். ”தங்களை பார்த்தால் சாதாரண மனிதனாக தோன்றவில்லை. தாங்கள் நாம் காலையும் மாலையும் வணங்கும் எம் பிரம்மனா? இல்லை அந்த ஐசுவரியம் படைத்த இந்திரனா? தேவலோகத்தினரா? அரக்கனா? காந்தருவனா? யட்சனா? தாங்கள் யாரென்று அடியேனுக்கு கூற முடியுமா?”
கருணையான அந்த நீல விழிகள் கருணையின் பிராவகமாகவே துரோணருக்கு தென்பட்டது. அந்த பவள இதழ்கள் விரிந்தன. சம அளவிலான வெண்மையான பற்கள் கொண்ட திருவாயினால் பகவான் பின்வருமாறு பிரம்மஸ்வரம் வெளிப்படுமாறு மொழிந்தருளினார். ”புண்ணியமிகு துரோணரே, நான் பிரம்மனுமல்ல. தேவனுமல்ல. கந்தவர்வனுமல்ல. அரக்கனுமல்ல. யட்சனுமல்ல. பிராம்மணரே, நான் பிரம்மனாக இருந்தால் பிரம்மனாக பிறக்க ஏதுவான மனதின் கிலேசங்கள் என்னிடம் இருக்க வேண்டும். பிரம்மர்கள் மத்தியில் காணப்படும் கிலேசங்கள் என்னிடம் இல்லை. அவ் அனைத்து மனமாசுகளையும் நான் அழித்துவிட்டேன். நான் தேவராக இருந்தால் தெய்வமாக பிறக்க ஏதுவான மனதின் கிலேசங்கள் என்னிடம் இருக்க வேண்டும். தெய்வங்கள் மத்தியில் காணப்படும் கிலேசங்கள் என்னிடம் இல்லை. அவ் அனைத்து மனமாசுகளையும் நான் அழித்துவிட்டேன். நான் காந்தருவனாக இருந்தால் காந்தருவனாக பிறக்க ஏதுவான மனதின் கிலேசங்கள் என்னிடம் இருக்க வேண்டும். காந்தருவர்கள் மத்தியில் காணப்படும் கிலேசங்கள் என்னிடம் இல்லை. அவ் அனைத்து மனமாசுகளையும் நான் அழித்துவிட்டேன். நான் யட்சனாக இருந்தால் யட்சனாக பிறக்க ஏதுவான மனதின் கிலேசங்கள் என்னிடம் இருக்க வேண்டும். யட்சர்கள் மத்தியில் காணப்படும் கிலேசங்கள் என்னிடம் இல்லை. அவ் அனைத்து மனமாசுகளையும் நான் அழித்துவிட்டேன். நான் மனிதராக இருந்தால் மனிதர்கள் மத்தியில் இருக்கும் மனமாசுகள் என்னிடம் இருக்க வேண்டும். ஆனால் எவ்விதமான மனமாசுகளும் என்னிடம் இல்லை. நான் அனைத்து மன மனமாசுகளையும் அழித்துவிட்டேன். அனைத்து கிலேசங்களையும் அழித்துவிட்டேன். பனைமரத்தின் மேற்பகுதியை வெட்டி அழித்தனைப்போன்று அனைத்து மனமாசுகளையும் மீண்டும் தோற்றம் பெறாத வண்ணம் அழித்தொழித்துவிட்டேன்.எவ்விதமான கிலேசங்களும் இனி என் மனதில் தோற்றம் பெறாது.
பிராம்மணரே, சேறு நிறைந்த அழுக்கு நிறைந்த ஒரு குளத்தில் தோன்றி வளர்ந்து, மேலெழுந்து, மொட்டவிழ்ந்து மனம் கமழும் வெண்தாமரை குளத்தோடு ஒன்றிக்காமல் இருப்பதனைப்போன்று நானும் இந்த கிலேசங்கள் நிறைந்த உலகில் தோன்றினேன். வளர்ந்தேன். ஆனால் இவ் அனைத்து உலகங்ளையும் மீறிச்சென்றேன். எவ் உலகத்துடன் ஒன்றிக்காமல் இருக்கிறேன். பிராம்மணரே! நான் சம்புத்தர் என அறிவீராக!
உண்மையிலே புத்த பகவான் அனைத்து மனமாசுகளையும் அழித்தார். எமது மனதில் பிரதானமாக மூன்று வகையான மனமாசுகள் இருக்கின்றன. அவை முறையே ஆசை, கோபம், அறியாமை என்பனவாகும். இவற்றை மூலமாகக்கொண்டே பொறாமை, பகைமை, எரிச்சல், முரண்பாடு, ஏனையோரது உடமைகள் மீது ஆசைப்படல், அகங்காரம், செறுக்கு, போன்ற ஏனைய கிலேசங்கள் தோன்றுகிறது. புத்த பகவான் இவ் அனைத்து மனமாசுகளையும் அதன் படிவுகளையும் முற்றாக நீக்கினார். பரம பவித்திரமான உள்ளத்தினை கொண்டவராகினார். இதுவே பகவானது முதல் குணமாகிய ‘அரஹங்’ எனும் குணமாகும். புத்த பகவானுக்கு எண்ணிலடங்காத குணங்கள் இருக்கின்றன. அவை ஒன்பது குணங்களுக்குள் உள்ளடக்கிப்பேசப்படுகிறது. ( இது தொடர்பான மேலதிக விளக்கங்களை இந்த இணையத்தளத்தின் தியானம் எனும் பகுதியில் அறிந்துகொள்ளலாம்) இவ்வாறாக பல ஒப்பற்ற குணங்களை படைத்த பகவான் தொடர்பான இந்த திருப்பாடலை கேட்பதன் மூலம் நீங்கள் மேலும் அறிந்துகொள்ள முடியும்.