கர்மம் என்றால் என்ன?Tamil Buddhist2018-07-11T06:21:57+05:30
கர்மம் என்றால் என்ன?
‘சேதனாஹங் பிக்கவே கம்மங் வதாமி. சேதயித்வா கம்மங் கரோதி காயேன வாசாய மனசா’
“புண்ணியமிகு பிக்குகளே, நான் சிந்தனையையே கர்மம் என்பேன். சிந்தனையை அடிப்படையாகக்கொண்டே உடலினாலும் வார்த்தைகளினாலும் மனதினாலும் கர்மங்கள் செய்ய முடியும்.
(நிப்பேதிக சூத்திரம் அங்.நி. 6 வது பகுதி)
தேவர்கள் மற்றும் மனிதர்களைக் கொண்ட சகல உலகவாசிகளாலும் இன்னும் விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு மர்மமான விடுகதையே இந்த கர்மம். எனினும் எமது பரம குருவான பாக்கியமுள்ள புத்த பகவான் இந்த கர்மத்தின் இயல்பு, அது பலனளிக்கும் விதம், கர்மத்திலிருந்து விடுதலையடையும் முறை என்பவை தொடர்பாக உள்ளங்கை நெல்லிக்கனியைப் போன்று உய்த்துணர்ந்தார். மனித வரலாற்றின் பொற்காலத்தினை உருவாக்கிய எமது புத்த பகவான் கர்மம் தொடர்பாக வரைவிலக்கணப்படுத்தியுள்ள முறையிலேயே அவரது ஒப்பற்ற ஞானத்தினை எம்மால் விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
கர்மம் அல்லது சிந்தனை, தோற்றம் பெறுவது காரணங்களினாலேயே. காரண காரியம் இன்றி எதுவுமில்லை. சிந்தனைக்கு காரணமாக அமைவது ஸ்பரிசமாகும். ஸ்பரிசம் என்றால் அறுவகைப்புலன்களுடன் புற விடயங்கள் மற்றும் விஞ்ஞானம் (நுண்னுணர்வு) எனும் மூன்றும் சேர்வதாகும். உதாரணமாக நாம் கண் எனும் புலனை எடுத்துக்கொள்வோம். கண்ணால் கேட்கவோ நுகரவோ முடியாது. கண்ணினால் பார்க்க மட்டுமே முடியும். கண்ணும் உருவமும் எனும் இரு காரணிகள் ஒன்று சேர்வதால் அங்கு சக்கு விஞ்ஞானம் (விசேடமாக அறிந்துகொள்ளும் இயல்பு) கண்ணில் தோற்றம் பெறும். இம் மூன்றின் சேர்க்கையே ஸ்பரிசமாகும்.