நால்வகை சதிபட்டான தர்மத்தினுள் ஆனாபானசதி தியானம். 2016-12-14T08:33:19+00:00

Project Description

நால்வகை சதிபட்டான தர்மத்தினுள் ஆனாபானசதி தியானம்.

 ஆனாபானசதி தியானம்  01

நாம் சதிபட்டான தர்மம் தொடர்பாக முன்னர் கற்றுக்கொண்டோம். சுயவுணர்வினை விருத்தி செய்து அதனை சம்மா சதி எனும் நிலைக்கு கொண்ட வருவதற்கு சதிபட்டான தர்மத்தினை பழக்கப்படுத்துவதன் மூலமே முடியும் என்பதனை கற்றோம். சம்மா திட்டி என்பது நால்வகை பேருண்மைகள் தொடர்பான ஞானமேயாகும். அப்படியாயின் தர்ம உய்த்துணர்வை குறிக்கோளாக கொண்டுதான் சதிபட்டானத்தை மேம்படுத்த வேண்டும்.

சுயவுணர்வின பெறுமதி…

புத்த பகவான் மகா கருணையாளர். புத்த பகவான் சதிபட்டான தர்மபோதனையை மொழிந்தருளிய போது இவ்வாறு குறிப்பிட்டார். ‘உயிர்களது மனதினை தூய்மைப்படுத்திக்கொள்வதற்கும், அழுகை, துக்க சோகங்களை இல்லாமல்செய்வதற்கும் உடல் உள துக்கங்களை நீக்கிக்கொள்வதற்கும் வாழ்வினை உய்த்துணர்வதற்காகவும் இந்த சதிபட்டான தர்மங்கள் உபகாரமாகும்’ என்று.

எனவே புத்த பகவான் சதிபட்டானத்தை போதிப்பதற்கு முன்னர் சதிபட்டானத்தினை பழக்கப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் தெளிவாக விளக்கியுள்ளதால் நாம் அது தொடர்பாக எவ்வித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.

இந்த தர்மத்தினை பின்பற்றினால், இந்த சுயவுணர்வினை மேம்படுத்தினால் அது எமது வாழ்விற்கு மிகவும் உபகாரமாக அமையும் என்பதில் எமக்கு எவ்வித சந்தேகமும் இருக்கக்கூடாது. சதிபட்டான தர்மத்தினை மேம்படுத்தும் போது நாம் முதன் முதலில் காயானுபஸ்ஸனத்தினையே செய்யக்கூடியதாக இருக்கும்.

சுந்தரமான மூச்சுக்காற்று.

காயானுபஸ்ஸனா பகுதியில் புத்த பகவான் முதன் முதலாக மொழிந்த தியானம்தான் ஆனாபானாசதி தியானமாகும். ஆனாபானாசதி என்றால் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு எனும் இரண்டின் மீதும் கவனம் செலுத்துதலாகும். நாம் அனைவரும் பிறந்ததிலிருந்தே சுவாசிக்கிறோம் என்பது யாவரும் அறிந்த விடயமே. ஆனால் பிறந்த நாளிலிருந்தே நாம் சுவாசித்தாலும் வெளியிட்டாலும் நாம் இவ்வாறு எடுக்கும் மூச்சினை அடிப்படையாக்ககொண்டு இந்த மனதினை விருத்தி செய்து மனதை தூய்மைபடுத்த முடியும் என்பதனை அறிந்திருக்கவில்லையல்லவா…?

ஆனால் புத்த பகவான் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னர் இது தொடர்பாக மொழிந்தருளினார். கோடிக்கணக்கான மக்கள் இந்த தர்மத்தினால் பயன் பெற்றார்கள். புத்த பகவான் மொழிந்த தர்மம் உய்த்துணராத முடியாத, பயன் பெற முடியாத தர்மமல்ல.

மோட்சமிருக்கும் புத்த சாசனம்.

புத்த பகவானது தர்மம் நால்வகை பேருண்மைகளுக்கு அப்பாற்பட்டதல்ல. நாம் அந்த விடயத்தினை நன்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். புத்த பகவான் இந்த தியானம் தொடர்பாக மொழியும்போது முதலிலேயே மொழிந்த விடயம்தான் ஷதனிமை| என்பதாகும். ஆரணியத்திற்கு சென்றோ, மரநிழலிற்கு சென்றோ அல்லது யாருமற்ற இடத்திற்கு சென்றோ (இங்கு கூறப்படுவது தனிமையாக வேண்டும் என்பதாகும்.) தான் தனிமையாக வேண்டும். உங்களால் முடியுமாயின் உங்களுடைய அறையிலேனும் தனிமையாக இருக்க முடியும்.

நாம் நினைப்போம் நீங்கள் இருக்கும் அறையில் மூன்று பேர் இருக்கிறார்கள். அந்த மூவரும் மூன்று திசைகளில் தனித்தனியாக தியானங்கள் செய்கிறார்கள் என்று. அதுவும் தனிமைதான். அப்படியில்லாவிடில் ஏதேனும் அமைதியான ஓரிடத்தை தெரிவு செய்துகொள்ள வேண்டும்.

முதலாவதாக செய்ய வேண்டியது.

அதன் பிறகு புத்த பகவான் (நிசீததி பல்லங்கங் ஆபுஜித்வா) தியான நிலையில் அமர்கிறார். இங்கு அமர்தல் என்றால் இருகால்களை மடித்துகொண்டு நிலத்தில் உட்கார்தலாகும். ஆனால் இங்கே புத்த பகவான் உஜுங் காயங் பணிதாய அதாவது இருகால்களையும் மடித்துகொண்டு கீழே அமர்ந்த பிறகு முதுகு நேராக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆனாபான சதி செய்யும் போது தான் விசேடமான, குறிப்பிட்ட ஆசனம் பிடகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூத்திரத்தில் கூறப்பட்ட ஏனைய தியானங்களுக்கு ஆசன நியதி இல்லை. இவற்றைச் செய்யும்போது நீங்கள் இருக்கலாம், நிற்கலாம், நடக்கலாம், படுத்திருக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் ஆனாபான தியானத்தின் போது சூத்திரத்தில் கூறப்பட்ட படி ‘அட்டணைக்காலிட்டு உடலை நேராக வைத்துக் கொண்டு, மனத்தை அலையவிடாது, விழிப்பாயிருக்க வேண்டும்.’ பத்மாசனமாய்க் காலை மடக்கிக் கொண்டிருப்பது எல்லா நாட்டவர்க்கும் இலேசானதன்று. விசேடமாக மேனாட்டவர்க்குச் சிரமமானதாயிருக்கும். எனவே காலை மடக்கியிருக்கக் கஷ்டப்படுவோர் கதிரையிலேயே இருக்கலாம். ஆனால் உடலை நேராக வைத்திருக்க வேண்டும். மனத்தை விழிப்போடு வைத்திருக்க வேண்டும். இந்தப்பயிற்சிக்கு உடலை நேராக வைத்திருப்பது மிக அவசியம். ஆனால் விறைப்பாக வைத்திருக்க வேண்டியதில்லை. கையை லாகவமாக மடியில் வைத்திருக்கலாம். இவ்வாறிருந்து கொண்டு கண்ணை மூடிக் கொள்ளலாம். பெரும்பாலானோர்க்கு இருகால்களை மடித்துகொண்டு நிலத்தில் உட்காருவது கடினமாகும். அப்படியே சிலர் அமர்ந்தாலும் முதுகை நேராக வைத்திருப்பது கடினமாகும். எனவே தன் இலட்சியத்தினை நினைவுகூரிக்கொள்ள வேண்டும்.

அதாவது மனதை மேன்மைபடுத்திக்கொள்ள வேண்டும். உளச்சமாதியை மேம்படுத்த வேண்டும். ஞானத்தினை விருத்தி செய்து கொள்ள வேண்டும். எனும்  அந்த உயர்ந்த இலட்சியத்தை அடைய வேண்டும் எனும் தேவை இருக்க வேண்டும். எனவே தியானம் செய்யத்தேவையான ஆசனம் தொடர்பாக கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.

தியானம் செய்வதற்கு ஆரம்பியுங்கள்.

இப்போது (பரிமுகங் சதிங் உபட்டபெத்வா) செய்யும் தியானம் மீது தன் முழுக்கவனத்தையும் செலுத்தி தியானிக்க வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு நிமித்தம் இருக்கிறது. நிமித்தம்தான் ஆனாபாசதி. இப்போது ஆனாபானசதியை தவிர வேறு நிமித்தங்களை மனதால் தேட வேண்டாம். இந்த ஆனாபானசதி எனும் தியானத்தின் நிமித்தம் எது? புத்த பகவான் மொழிந்தார் (சோ சதோவ அஸ்ஸதி) அவர் முழு அவதானிப்புடன் மூச்சினை உள்வாங்குவார். (சதோ பஸ்ஸதி) அவதானிப்புடன் மூச்சினை வெளியிடுவார். இதுவே இந்த தியானத்தின் நிமித்தமாகும்.

அப்படியாயின் நாம் இப்போது எமது முழுக்கவனத்தினை மூச்சின் மீதே செலுத்த வேண்டும். நீங்கள் இப்போது சுயவுணர்வுடன முழு அவதானத்துடன் மூச்சினை உள்ளெடுக்கிறீர்கள். வெளியே விடுகிறீர்கள். அதற்கு தேவையான முதலாவது தகுதியே முதுகுத்தண்டை நேராக நிமிர்த்திக்கொண்டு அமர்தலாகும்.

ஆனாபானசதிக்கு முன்னர்.

ஆனால் இந்த தியானத்தினை செய்வதற்கு முதலில் அதற்கு ஒரு பிரவேசமாக புத்தானுஸ்ஸதி தியானத்தினை செய்யுங்கள். புத்த பகவானது குணங்களை தம் தாய் மொழியினைக்கொண்டே சிந்தியுங்கள். புத்த பகவானது ஷஅரஹங்| எனும் குணம் எத்தகையது? சம்மா சம்புத்த என்றால் என்ன? விஜ்ஜாசரண, சுகத, லோகவிதூ, அனுத்தரோ புரிசதம்ம சாரதி, சத்தா தேவ மனுஸ்ஸானங், புத்த, பகவா எனும் குணங்களை நினைத்து உங்களது மனதினை அமைதியாக்கிக்கொள்ளுங்கள்.

புத்த பகவானது தர்மத்தினை நினைக்கும்போது கலங்கிய நீர் கலங்களற்று படிந்து விடுவதைப்போன்று மனம் அமைதி பெறும். தணிந்துவிடும். மனம் மகிழ்ச்சியடையும். இந்த உணர்வுகள் ஆனாபானசதி தியானத்தினை விருத்தி செய்துகொள்தற்கு உங்களுக்கு மிகப்பெரும் உதவியாக அமையும். ஆனாபானசதி தியானத்தின் ஆரம்பத்தில் செய்ய வேண்டியவை இவ்வளவே.

இது கடினமானதல்ல. எவ்வளவு சரளமானதொரு ஆரம்பம் என்பதனை உங்களாலேயே உணரக்கூடியதாக இருக்கும்;. ஆனால் இந்த தியானத்தின் போது நீங்கள் விழிப்புணர்வுடன் சுவாசிக்கும் போது இதுவரை காலமும் எம்முள் இருந்த சுயவுணர்வு எத்தகையது என்பதனை உணர்ந்துகொள்ள முடியும். அதேபோன்று இந்த மனதினை உங்களுக்கு வேண்டிய வகையில் வைத்துக்கொள்ள முடியாது என்பதனையும் நீங்கள் உணர்ந்துக்கொள்வீர்கள்.

சாதாரண மனதின் இயல்பு

இந்த மூச்சு தொடர்பாக நீங்கள் உங்களது முழுக்கவனத்தை செலுத்த முற்படும்போது உங்களது மனம் உங்களையும் மீறி பல இடங்களுக்கு செல்லும். ஒவ்வொரு எண்ணங்களின் பின்னாலேயெ செல்லும். ஒவ்வொரு சிந்தனையின் பின்னாலயே ஓடிக்கொண்டிருக்கும். மனம் இறந்தகாலத்தில் சுற்றித்திரியும். எதிர்காலத்தினை நினைத்து கனவு காண முற்படும். புற சப்தங்களின் பின்னே ஓட ஆரம்பிக்கும். அப்போது இவ்வாறான ஒரு மனதுடனா இவ்வளவு காலம் வாழ்ந்தோம் எனத்தோன்றும். உங்களுக்கு உங்களுடைய சுயவுணர்வு தொடர்பாக நல்லதொரு அனுபவத்தினை பெற முடியும்.

இப்போது நீங்கள் நன்கு வீரியம் செய்ய வேண்டும். மனம் சிதறும்போது மீண்டும் மீண்டும் ஆனாபானசதி எனும் நிமித்தத்திற்கு கொண்டு வர வேண்டும். இங்கு ஒரு முக்கியமான காரணியை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் புத்த பகவான் மொழிந்த ‘சதிபட்டானத்தினை விருத்தி செய்யும்போது விருப்பு வெறுப்பு எனும் இரண்டினையும் முதன் முதலிலேயே கைவிட வேண்டும்’ எனும் விடயமாகும்.

விருப்பு வெறுப்புக்களை துறந்து…

மனம் விரும்பும் எண்ணங்கள் தோன்றும்போது அவற்றை ஏற்க வேண்டாம். முரண்படும் எண்ணங்கள் தோன்றும் போது அவற்றையும் ஏற்றுக்கொள்ளும் வேண்டும். நீங்கள் இந்த விருப்பு வெறுப்பு எனும் இரண்டினையும் கைவிட்டு மூன்று வகையான திறமைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவைதான் (ஆதாபி) உங்களுடைய மனதில் தோன்றும் பலவீனங்களை அகற்றக்கூடிய திறமையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். (சம்பஜான) முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். (சதிமா) நல்ல அவதானத்துடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

சதிபட்டானத்தினை இந்த காரணிகளை அடிப்படையாகக்கொண்டே விருத்தி செய்ய வேண்டும். இதனை கிலேசங்களை அழிக்கும் அறிவுடனும், சிறப்பான விழிப்புணர்வுடனும், முழுக்கவனத்துடனுமே செய்ய வேண்டும்.

பெறுமதியான விழிப்புணர்வு

இப்போது நீங்கள் ஏனோதானோ என்று தியானம் செய்பவரல்ல. நீங்கள் உய்த்துணர்வுடனேயே தியானம் செய்யும் ஒருவராவீர்கள்.  மனம் விரும்பும் விடயங்களின் பி;ன்னால் ஓடும்போதும் முரண்படும் விடயங்கள் மனதிற்கு வரும்போதும் உங்களால் ஆனாபானசதி தியானத்தினை செய்ய முடியாது என்பதனை உங்களால் உணரக்கூடியதாக இருக்கும். அப்படியாயின் இவை இரண்டும் இல்லாதபோதே மனம் அமைதியடையும். அந்த போழுதினை நீங்கள் தனிமையானதொரு இடத்தில் ஏற்படுத்திக்கொள்ள முடியும். அதன் பிறகு நீங்கள் முழு அவதானத்துடன் மூச்சினை உள்ளெடுக்க வேண்டும். மூச்சினை வெளியிட வேண்டும். இதுவே ஆனாபானசதியில் உள்ள முதலாவது அப்பியாசம். இதனை நீங்கள் நன்கு பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

மென்மேலும் இந்த ஆனாபானாசதி தியானத்தினை விருத்தி செய்ய முடியும்.

ஆரம்பத்தில் நீங்கள் சுயவுணர்வுடன் மூச்சினை உள்ளெடுத்து வெளியிட வேண்டும். ஆனால் நீங்கள் இச்சந்தர்ப்பத்தில் மனதை சிதறவிடாமல் உங்கள் மூச்சின் மீதே முழுக்கவனத்தினை செலுத்தி இருக்க வேண்டும். அதற்காக உங்களிடம் வீரியம், அறிவு, விழிப்புணர்வு எனும் இவை மூன்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இம்மூன்றினையும் உபயோகப்படுத்திக்கொண்டே இந்த தியானங்களை நாம் பழக்கப்படுத்த வேண்டும். இதற்காக நீங்கள் சிறிதளவு கூட வருந்தாத, பச்சாத்தாபப்படும் இயல்பு இல்லாத நிலையை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

நீங்கள் இவ்வாறாக தியானம் செய்யும் போது மனம் ஒன்றிணையாவிடில் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டிதெல்லாம் முழுக்கவனத்துடன் மூச்சினை உள்ளெடுத்தலும் மூச்சினை வெளியிடுதலுமாகும். இதிலேயே உங்கள் மனதினை நிலைப்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இவ்வாறாக மனதை ஒன்றிணைக்கும் உங்களால் உங்கள் மனதினை விருத்தி செய்து உன்னதமான வாழ்வினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

 தொடரும்…
Back to meditation page