எம் மனதில் உள்ள குறைபாடுகள், பலவீனங்கள் என்பன தொடர்பாகவே இப்போது ஆராயப்போகிறோம். எம் மனதில் உள்ள குறைபாடுகள் என்ன? பலவீனங்கள் தான் என்ன?
கோபம்
எம் அனைவருக்கும் கோபம் வருகிறதல்லவா? ஆம், நாம் அனைவரும் சினங்கொள்கிறோம். அதேபோல் இன்னுமொருவரால் எம்மை கோபமடையச்செய்யவும் முடியும். ஏன் இவ்வாறு நடக்கிறது? இப்படி நடக்க காரணம் கோபமடையும் இயல்பினை உடைய மனம் எம்முள் இருப்பதே. நாம் கோபத்தை தொடர்ந்தும் பழக்கப்படுத்தி வந்தால் காலப்போக்கில் அதுவே பகைமை குணமாக மாறிவிடுகிறது. இந்த பகைமை குணத்தினால் பழிவாங்கும் எண்ணம் உருவாகிறது. இந்த கீழ்த்தரமான குணத்தினால் எமக்கும் எம்மை சூழ உள்ளவர்களுக்கும் அழிவேஏற்படும். அப்படியானால் கோபம் என்பது எங்களது மனதில் உள்ள ஒரு குறைபாடாகும். ஒரு பலவீனமாகும்
ஆசை
எம் அனைவருக்கும் ஆசை உண்டாகிறதல்லவா? தொலைக்காட்சியை பார்ப்பதால் சில பத்திரிக்கைகளை வாசிப்பதால் எம் மனதில் இதுவரையில் இல்லாத புதுவித ஆசைகள் தோன்றுகிறதல்லவா? இவ்வகையான ஆசைகளினால் மனிதர்கள் ஆச்சரியமூட்டும் வகையில் பாவங்கள் செய்கிறார்கள். ஆசையை அடிப்படையாக கொண்டு ஏனையோரை வஞ்சிக்கின்றனர். அதனாலேயே தம் வாழ்வையும் இருளடையச்செய்து கொள்கின்றனர். பாவம் செய்யாமலிருக்க உதவும் வெட்கம், பயம், என்பவற்றை முழுமையாக அழித்து கொள்கின்றனர். ஆசைக்கு அடிமையாகிய பின் தாம் எங்கிருக்கிறோம் என்பதையே மறந்து விடுகின்றனர். பாவ புண்ணியங்களை மறக்கின்றனர். பாவ புண்ணியங்கள் மீதான நம்பிக்கையை இழந்து விடுகின்றனர். இவ்வனைத்திற்கும் காரணம் மனதிலுள்ள ஆசையே! ஆசையினால் கண்மூடித்தனமாக செயற்படுகிறோம். இப்படியான கண்மூடித்தனமான ஆசை எம்முள் இருப்பதால்தான் அல்லல்படும் வாழ்க்கை எமக்கு சொந்தமாகியுள்ளது. அறியாமை எனப்படும் அஞ்ஞானம் ஏனையோரால் நாம் ஏமாற்றப்படுகிறோம் அல்லவா? ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ள முடியாத தன்மை எம் உள்ளத்தில் இருப்பதால்தான் இன்னுமொருவரால் எம்மை ஏமாற்ற முடிகிறது. ஒருவர் எமக்கு சரியான முறையில் அவ்விடயங்களை கற்று கொடுத்தால் எம்மை யாராலும் ஏமாற்ற முடியாது. இவை இருக்கும் வரை நிம்மதி இல்லை. மேற்கூறப்பட்ட இம்மூன்று பலவீனங்கள் இருக்கும்வரை ஒருவருக்கு நிரந்தரமான நிம்மதி கிட்டாது. எமது அறியாமையால் சிற்சில விடயங்கள் எம்மால் நிம்மதி போன்று உணரபட்டாலும் அவை தொடர்ந்தும் எமக்கு நிம்மதியை தராது. அதற்கு காரணம்; நிலையில்லாமையாகும். வேட்கை, கோபம் அறியாமை என்பன எம் மனதில் இருக்கும் வரை நிரந்தரமான நிம்மதி ஏற்படாது. மாறாக இந்த பலவீனங்களை தரும் இம்மூன்று மனவழுக்குகளும் எம் மனதில் இருக்கும் வரை அவை துன்பத்தையே தரும்.
இதே குறைபாடுகளை உடைய தலைமைத்துவத்தையா தெரிவு செய்வது?
பாருங்கள், இதே பலவீனங்களை கொண்ட ஆன்மீக தலைமைத்துவத்தை தெரிவு செய்வதால் எமக்கு என்ன நன்மை கிடைக்கும்? எமக்கு நிரந்தரமான நிம்மதி, விடுதலை கிடைக்க வேண்டுமாயின் நாம் பின்பற்ற வேண்டியது இந்த ஆசை, கோபம், அறியாமை என்பன அற்ற பரிசுத்தமான உள்ளத்தை கொண்ட ஒருவரை என்றால் அது மிகவும் சரியே. இவ்வுலகில் அவ்வாறான தலைமைத்துவம் ஒன்று உள்ளதா? ‘கௌதம சித்தார்த்த’ எனும் பெயருடைய ஒரு அரசகுமரன் தனது இருபத்தொன்பதாவது வயதில் இல்லறம் விடுத்து துறவறம் பூண்டு மனதை தூய்மைபடுத்துவதற்கே அரும்பாடுபட்டார். ஈற்றிலே எவ்வித குரு உபதேசமுமின்றி தன் சுயஞானத்தினாலேயே அனைத்து மனமாசுகளையும் அழித்து பரிசுத்தமான நிலையை அடைந்தார். என்று நாம் ஒரு மகா முனிவரை பற்றி கேள்விபட்டிருக்கிறோம் அல்லவா? ஆம் அவரே ‘கௌதம புத்த பகவான்’ நாம், ‘புத்தங் சரணங் கச்சாமி’ என சரணடைந்த உத்தமரே அவராவார். நாம் சரியாக சிந்தித்து பார்த்துதானா எமது ஆன்மீக தலைவரை தெரிவு செய்தோம்? நாங்கள், புத்த பகவானை சரணடைந்தது, எம் பெற்றோர்கள் பௌத்தர்கள் என்பதாலேயோ அல்லது எமக்கு வேண்டியவர்கள் பௌத்தர்கள் என்பதாலேயோ என்று இருந்தால் அது பயனற்றதாகும்.நாம் புத்த பகவானை சரணடையவேண்டியது நன்றாக சிந்தித்து அறிவினால் ஆராய்ந்து பார்த்து முழுமையான புரிந்துணர்வுடனேயே. இவ்வுலகத்தில் எல்லோரும் சரணடைந்த ஏனைய ஆன்மீக தலைவர்களாகட்டும் அல்லது தேவர்களாகட்டும் அவ்வனைவரும் மனவழுக்குகளை முழுமையாக நீக்காதவர்கள். அதேபோல் பற்றுகளுக்கு, பாசங்களுக்கு உட்பட்டவர்கள்
கண்ணீரை நிறுத்த கூடிய உன்னத தலைவர்
புத்த பகவான் இவ்வுலகத்தோரை பார்த்து கண்ணீர் சிந்தவில்லை.மரணித்தவர்களை பார்த்து அழவில்லை. புத்த பகவான் துக்கமடையவில்லை. கண்ணீரை அனுமதிக்கவும் இல்லை. அவர் கண்ணீர் சிந்துபவர்களிடம் சென்று இவ்வாறு மொழிந்தார், ‘கண்ணீர் வருவதற்கு காரணம் மனதிலுள்ளது. அக்காரணத்திலிருந்து விடுதலையடையுங்கள். அவ்வாறு விடுதலையடைந்தால் இனி ஒரு நாளும் கண்ணீர் விடவேண்டியதில்லை’ என்று. உண்மையிலேயே இவ்வாறுதான் கண்ணீரை நிறுத்த வேண்டியுள்ளது. அவ்வாறில்லாது மனிதர்கள் கண்ணீர் விட்டு சோகமடைகையில் நாமும் சேர்ந்து அழுதோமேயானால் சோகம் மேலும் மேலும் கூடுமல்லவா? ‘ஐய்யோ! இந்த சுவாமியே சோகம் தாங்க முடியாது அழுகிறாரே. நாம் ஏன் கவலையுறாமல் இருக்க வேண்டும்? என எல்லோரும் சத்தமிட்டு அழுவோம்’ என்றுதானே நினைப்பார்கள்.இப்படிபட்ட தலைவரா எமக்கு வேண்டும்? என சிந்தித்து பாருங்கள். இல்லை. மாறாக எமக்குஎங்களுடைய அழுகையை, சோகத்தை நிறுத்தக்கூடிய தலைவரே அவசியம். புத்த பகவான் இதைத்தான் செய்தார். சரணடைய வேண்டியது இவ்வாறான ஒருவரைத்தான் இதை நாங்கள் தெளிவான அறிவோடு செய்ய வேண்டியதொன்றாகும். பிரச்சினை வரும் போது ஓடி ஒளியாத ஒருவராக வேண்டும் நாம் சரணடையும் அந்த ஆன்மீக தலைவரின் வாழ்வானது அனைத்து உயிர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.அந்த தலைமையானது பிரச்சினைகளை கண்டு ஓடி ஒளிந்தால் பிரச்சினைகளை கண்டு பயமடைந்தால், வரும் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது தவித்தால், அந்த தலைமைத்துவத்தின் பயன்தான் என்ன? இவ்வாறான தலைமைத்துவத்தை பின்பற்றும் ஒருவருக்கு சிறப்பான ஆளுமை திறனை பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறாயின் நாம், பிரச்சினைகளை பற்றி அறிந்து கொள்ளக்கூடிய சக்தியை கொண்ட, பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க கூடிய, பிரச்சினைகளை கண்டு ஓடி ஒளியாத, ஒரு தலைமைத்துவத்தைதான் தெரிவு செய்ய வேண்டும். சத்தியத்தின் முன்னால் அசத்தியம் ஒழிந்துவிடும். சத்தியமே உருவான புத்த பகவானின் முன் அசத்தியம் வெற்றிகொண்டதாக இல்லை. எம் பகவானிடம் சத்தியம், திறமை, ஆற்றல், பலம் என்பன ஒருங்கே குடிகொண்டிருந்தன. ஒரு சாதாரண மனிதனிடம் இவ்குணங்கள் இருந்தால் பெரும்பாலானவர்கள் தவறான பாதையிலே பயணிப்பார்கள். அதற்கான காரணம் தான் உள்ளத்தின் அசுத்தம். புத்த பகவான் அப்படிப்பட்டவர் அல்ல. நாம் எமது ஆன்மீக தலைவராக தெரிவு செய்ய வேண்டியவர் உள்ளத் தூய்மையுடையவராதல் மிக அவசியமே. இதனை அறிவால் நன்கு ஆராய்ந்துதான் தெரிவுசெய்ய வேண்டும். அதற்கான இலட்சணங்களையும் அறிந்திருத்தல் அவசியம். அதனடிப்படையில் புத்த பகவான் யாரென்பதை அறிந்து கொள்ள அவரின் ஒன்பது குணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். ‘இத்திபி சோ பகவா அரஹங்சம்மா சம்புத்தோ விஜ்ஜாச்சரண சம்பண்ணோ சுகதோ லோக்கவிதூ அனுத்தரோ புரிசதம்ம சாரதீ ஸத்தா தேவ மனுஸ்ஸானங் புத்தோ பகவா| எனும் செய்யுளின் முதலாவது குணம்தான்
‘அரஹங்’ இதன் பொருள் தான் மனத்தை அழுக்கடையச்செய்யும் ஆசை, கோபம், அறியாமைஎனும் மூன்று மன அழுக்குகளையும அதன் படிவுகளையும் முற்றாக நீக்கியவர் என்பதாகும். தன் சுய ஞானத்தால் நாற்பேருண்மைகளை உய்த்தறிந்தார். ஆன்மீக தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்கையில் தெரிவு செய்யப்படும் அந்த தலைவர் ‘நான் இன்னுமொருவரிடம் கற்றுகொண்டேன்’ என்று கூறினால் அவர் சீடராவார். அவரை விட அது தொடர்பான அறிவு அவரின் குருவிடம் இருக்கலாம். அதனால் அவ்வாறானவரின் அறிவு பூரணமானது என்று கூறமுடியாது. புத்த பகவானின் குரு யார்? தானே தான். எம்பெருமான் தன் சிந்தையை பயன்படுத்தியே மாற்றமுறாத உன்னதமான சத்தியங்களை உய்த்தறிந்தார். புத்தபகவான் பரிநிர்வாணம் அடைந்து 2558 ஆகியும் அவரைபோல்ஒருவரேனும்; இன்னும் பிறக்கவில்லை. தன்னை ஆன்மீக தலைவர்களாக கூறும் பலர் தோன்றினாலும் அவர்களை புத்த பகவானுடன் ஒப்பிட முடியாது. இன்றுவரை புத்த பகவானை தவிர தன்னுடைய சுய ஞானத்தால் அனைத்தையும் உய்த்தறிந்த எவரும் இல்லை. அதனாலேயே அந்த பாக்கியமுள்ளவர் ஷசம்மா சம்புத்த| எனும் குணங்கொண்டவராக திகழ்கிறார்.
புற மற்றும் உள்ளக உலகங்களை பூரணமாக உய்த்தறிந்தார்.
புத்த பகவான் சுயஞானத்தால் உய்த்தறிந்து கொண்ட ஞானம் அளவிடமுடியாது. நாம் காணும் இவ்வுலகமானது வரையறுக்கப்பட்டதாகும். நாம் உலகம் அல்லது சூரிய குடும்பம் எனும் போது எம் அறிவுக்கு எட்டுவது எமது பூமியும் இன்னும் விரல் விட்டு எண்ண கூடிய சில கிரகங்கள் மாத்திரமே! ஆனால் புத்த பகவானின் ஞானமானது வரையறுக்கப்பட்டதல்ல.கௌதம புத்த பகவானை போன்றே இன்னும் பல புத்தர்மார்கள் ஆதியில் தோன்றியுள்ளனர். அவ்வாறான ஒரு சம்புத்த பகவான் தான் ‘கக்குசந்த’ என பெயர் கொண்ட புத்த பகவான். புத்த பகவானை தவிர வேறு யாரலும் இதனை அறிந்து கொள்ள முடியவில்லை. புத்த பகவான் தன்னுடைய சீடர்களுள் ஒருவரான ஆனந்த சுவாமியிடம், ‘புண்ணியமிகு ஆனந்த, பல கற்பங்களுக்கு முன்னர் சிகீ எனும் பெயரில் புத்த பகவான் ஒருவர் தோன்றியிருந்தார். அவருக்கு ‘அபிபூ’ எனும் பெயரில் சீடர் ஒருவரிருந்தார். அந்த சீடருக்கு பிற உலகங்களுடன் பேசும் ஆற்றலிருந்தது. என புத்த பகவான் மொழிந்ததும், ஆனந்த பிக்கு இவ்வாறு வினவினார். ‘பகவானே சீடர் ஒருவருக்கே வேற்று கிரக வாசிகளோடு பேச முடியுமானால் பாக்கியமுள்ள பகவானுக்கு எத்தனை உலகங்களுக்கு பேச முடியும்?’ எனக்கேட்டார்.
அதற்கு புத்த பகவான் ‘புண்ணியமிகு ஆனந்த, புத்தபகவானின் வல்லமையை அளவிட முடியாது எனக்கூறவும் மீண்டும் ஆனந்த பிக்கு ‘புண்ணியப்பெருங்கடலே, நான் பகவானால் எத்தனை உலகங்களுக்கு பேச முடியும் என்பதனை அறிய மிகுந்த ஆவலாய் உள்ளேன்’ எனக்கூற புத்த பகவானிடம் இருந்து அதே பதில்தான் கிடைத்தது. மூன்றாவது முறையாகவும் ஆனந்த தேரர் இரைஞ்சி கேட்கும்போது புத்த பகவான் இவ்வாறு மொழிந்தார். ‘அப்படியாயின் ஆனந்த நன்றாக செவிடுங்கள். இந்த சந்திர சூரியனை கொண்டியங்கும்; கிரக மண்டலங்கள்தான் ‘ஸஹஸ்ரீ’ உலக மண்டலமாகும். இவ்வகையான ஆயிரம் ‘ஸஹஸ்ரீ’ மண்டலங்கள் ‘ஸஹஸ்ரீ சூலநிக்கா’ உலக மண்டலமாகும். ஸஹஸ்ரீ சூலநிக்கா உலக மண்டலங்கள் ஆயிரம் ‘துவிஸஹஸ்ஸீ மஜ்ஜிமா’ உலக மண்டலமாகும். துவிஸஹஸ்ஸீ மஜ்ஜிமா உலக மண்டலங்கள் ஆயிரம் தான் ‘திஸஹஸீ மஹாஸஹஸ்ஸீ’ உலக மண்டலமாகும்.இந்த உலக மண்டலங்களையும் காட்டிலும்; என்னால் தர்மத்தை போதிக்க முடியும்அதற்காக நான் செய்வது முதலில் ஒளியை அனுப்பி அதன் பின் ஒலி அலைகளை செலுத்துவதாகும்’, என மொழிந்தார். அந்த விளக்கங்களை கூறியவர் இற்றைக்கு 2558 வருடங்களுக்கு முன் சுந்தரமான பரிநிர்வாணத்தை அடைந்த பரிபூரணமான ஞானத்தையே தனது ஒளியாக கொண்ட எமது பரமகுரு ஆவார். இன்றும் விஞ்ஞானிகளால் இவற்றை கண்டுபிடிக்க கூடியதாக இருக்கிறதா? இப்போது எம்மால் சிறிதளவேனும் சம்மா சம்புத்த பகவானின் ஞானத்தை உணரக்கூடியதாக இருக்கும். இப்படியான ஒப்பற்ற ஞானத்துடன் கூடிய இன்னுமொருவர் இவ்வுலகத்தில் தோன்றினாரா? எவ்விதமான புற உபகாரங்களும் இல்லாமல் தன் விருத்தியடைந்த உள்ளத்தை மாத்திரம் பயன்படுத்தி உய்த்தறியப்பட்ட ஞானம் விந்தையானதல்லவா? தற்போதைய விஞ்ஞானம் பற்பல புதுமை நிரம்பிய விடயங்களை கண்டுபிடிக்கிறது, என நாம் நினைக்க காரணம் இவ்விடயங்களை அறிந்திராமையே. இப்போதனை ‘அங்குத்தர நிக்காயம்’ எனும் புனித நூலில் அடங்கியுள்ளது.
பரிபூரணமான ஒருவரையே சரணடைய வேண்டும்.
மனிதன் சரணடைய வேண்டியது முழுமையான ஒருவரையே அன்றி குறைபாடுகள் கொண்ட ஒருவரையல்ல. பகவான் உள்ளத்தால்; முழுமையாகவே தூய்மையானவர். ஞானத்தின் உறைவிடமாகியவர.; குரு ஒருவருக்கு இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளும் புத்த பகவானிடத்திலே இருந்தது. எமக்கு வழிகாட்டியாக, முன்மாதிரியாக இருக்க வேண்டிய எமது தலைமைத்துவமானது இப்படிப்பட்டதாகவே இருக்க வேண்டும். நாம் பிறந்தது இவ்வாறான உத்தமரை பற்றி, அவரின் தர்மத்தை பற்றி உரையாடுகின்ற ஒரு காலமாக இருப்பது எமது அதிஷ்டமாகும். ‘புத்தங் சரணங் கச்சாமி’ என சொல்லி சரணடையும் போது அது தொடர்பான விளக்கம் இல்லாவிடில் நம்பிக்கையுடன் கூடிய பக்தியானது நிலையாது. அதேபோல் புத்த பகவானை முழுமையாக அறிந்து கொள்ளாமல் ‘புத்தங் சரணங் கச்சாமி’ என்று சொன்னால் அது புத்த பகவானுக்கு செய்யும் அகௌரவமாகும். ஒருவர் வந்து எம்மிடம் சொன்னால், ‘அந்த கோயிலுக்கு சென்று நேருங்கள் அந்த கோயிலுக்கு போனால் உமது காரியம் கைகூடும்| என்று. நாம் அங்கு செல்வதில்லையா? ஏன் நாம் அவ்வாறு செல்கிறோம்? எம் ஆன்மீக தலைமைத்துவத்தை சரியாக அறிந்து கொள்ளாமையே இதற்கு காரணம். இது கண்ணில்லா குருடரின் செயல் போலாகிறது. எல்லா இடங்களுக்கும் நாம் செல்வது கண்மூடித்தனத்தினால்தான் கண் தெரியாத ஒருவருக்கு ஓரிடத்திற்கு செல்லும் அவசியம் ஏற்படுகிறது. ஒருவர் அவரிடம் ஊன்றுகோலை கொடுத்து அவர் செல்ல வேண்டிய திசைபக்கம் திருப்பி; விடுவார். அவர் ஒருவாராக அவ்விடத்திற்கு செல்லும் போது இன்னுமொருவர் ‘இந்த பக்கமாக செல்லுங்கள்’ என திசையை மாற்றி விடுவார். இன்னொருவர் ‘இதுவல்ல அந்த திசை’ என வேறு திசையை காட்டுவார். இப்படி நடக்க காரணம், அவருக்கு கண்கள் புலப்படாமையே. கண்கள் புலப்படுமாயின் அவர் சரியான இடத்தை அடைந்திருப்பார்.தன்னை பௌத்தனாக கூறிக்கொள்ளும் சிலர் இப்படி குருடர்கள் போல் ஒவ்வொரு திசையில் செல்கிறார்கள். மூட நம்பிக்கைகளை நம்புவார்கள். மூட நம்பிக்கைகளிலிருந்து கொண்டு புத்த பகவானை சரணடைவார்கள். தாம் சரணடைந்தவர் யாரென்பதே தெரியாத பௌத்தர்கள் இருக்கிறார்கள். இது ஒரு துரதிஷ்டமான விடயமாகும்.ஆனால் முழுமையான புரிந்துணர்வுடன் ஒருவர்; சரணடைந்தால் அவருக்கு தெரியும் தான்; சரணடைந்தவர் யார் என்று. அவரின் சரியான தெரிவை இட்டு அவர் மகிழ்ச்சி கொள்வார்.
ஆராய்ந்து தெரிவு செய்தல் அவசியம்
இவ்வாறு நாம் சிந்தித்து பார்ப்போம். நாம் கடை ஒன்றில் ஒரு பொருளை கொள்வனவு செய்யப்போகிறோம். ஒரு மரத்தளபாடம் என்று நினைப்போமே. உக்கிய, கறையான் பிடித்த, அமர்ந்தால் உடைந்து விழக்கூடிய பொருளை நாம் வாங்க விரும்புவோமா? நாம் பார்ப்பது நீண்ட காலம் பாவனை செய்ய கூடிய உறுதியான பலம் நிறைந்த மரதளபாடத்தையே ஆடை கொள்வனவு செய்யும் போது தையல் பிரியாத நூல் இழுபடாத துணியை கொண்ட ஆடையைதான் தெரிவு செய்வோம். தேங்காய் கொள்வனவு செய்யப்போனால் கூட அந்த தேங்தாய் அழுகாத, காய்ந்திராத ஒன்றா என கவனிப்போம். ஒரு பொருளை கொள்வனவு செய்யும் போது இவ்வளவு விடயங்களை ஆராயும் நாம் எம்மால் செய்யப்படும் பெரும்பாலான விடயங்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பெரிதும் தாக்கம் செலுத்தும் சமயத்தை தெரிவு செய்கையில் எவ்வளவு ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதனை மறந்து விடுகிறோம். நாம் பின்பற்ற போகும் சமயத்தை தெரிவு செய்கையில் அறிவால் நன்கு பகுப்பாய்வு செய்ய வேண்டும். நான் இவ்வாறு கூறுவது பௌத்தர்களுக்கு மாத்திரம் இல்லை. பொதுவாக அறிவுள்ளஅனைத்து மக்களுக்கும்தான். மனிதர்கள் இவ்வாறு தான் சமயத்தை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறில்லாது கண்கள் தெரியாத குருடனை போல் சமயத்தை தெரிவு செய்தால் தடி செல்லும் திசையிலே பயணிக்க வேண்டியதாக இருக்கும். இப்படியாக அறிவை பயன்படுத்தாது சமயத்தைபின்பற்றும் ஒருவருக்கு இவ்வாழ்வுக்கோ அல்லது மறுவாழ்விற்கோ எவ்வித தீர்வும் கிடைக்காது.
சரியான தலைமைத்துவத்தை தெரிவு செய்ய புத்தி கூர்மை மிக அவசியமாகும்.
முன்பு கூறியது போன்று, நாம் பொருளான்றை வாங்கும் போது ஆராய்ந்துதான் வாங்குவோம் தரம் குறைந்த பொருட்களை வாங்க யாரும் விரும்புவதில்லை. அதேபால் வாழ்விற்கு உபயோகமில்லாத சமயத்தை கடைபிடிக்கவும் யாரும் விரும்பமாட்டார்கள். வாழ்விற்கு உபயோகமற்ற ஒருவரை சரணடைய யாரும் விரும்ப மாட்டார்கள். இப்படியாக பிழையற்ற சமயத்தை தெரிவுசெய்ய புத்தியில்லாததால் தான் மனிதர்களுக்கு பிரச்சினைகள் அதிகரித்து உள்ளது. தரம் குறைந்த பொருளை விற்கும் ஒருவர் ‘வாருங்கள் தரம் குறைவான இந்த பொருட்களை வாங்கி செல்லுங்கள்’ என சொல்வாரா? மாறாக அவர் பார்ப்பது எப்படியாவது பொய் வர்ணனைகள் செய்து ஏமாற்றி அப்பொருளை யாரிடமாவது விற்றுவிடுவதற்கே. இன்றைய உலகத்திலுள்ள சமயங்கள் இப்படிப்பட்டவையே. எவ்வாறு சுயாதீனமாக ஒரு சமயத்தை பின்பற்ற வேண்டும் என கூற மாட்டார்கள்.நாம் அதனை கூறவில்லை. மாறாக தெரிவு செய்யும் விதத்தையே கூறுகின்றோம். தெரிவு செய்யும் முறை தெரிந்துவிடின் ஒருவரால் சரி எது பிழை எது எனும் அறிவு கிட்டும். அந்த அறிவில்லாவிடில் பிழையானதையே தெரிவு செய்யும் துர்ப்பாக்கிய நிலை உருவாகிறது. சில வருடங்களுக்கு முன் எம் நாட்டிற்கு தொடர்ந்து அன்டனோ எனும் விமானவகை கொள்வனவு செய்யப்பட்டது. அவையெல்லாம் சிறிது காலத்திலே உடைந்து விட்டன. அதற்கு காரணம் பொருளொன்றை கொள்வனவு செய்வதற்குரிய அறிவின்மையே. அமெரிக்கர்களிடம் ஒரு விமானத்தை தெரிவு செய்ய கொடுத்தால் தரம் குறைந்ததை தெரிவு செய்ய மாட்டார்கள். இப்படியான இயந்திர பொருட்களை தெரிவு செய்வதற்குரிய அறிவு அவர்களிடம் இருப்பதே அதற்கு காரணம். அவர்கள் அவ்வியந்திர பொருட்கள் தொடர்பாக கற்றுள்ளனர். அதேபோல் நாமும் எமது ஆன்மீக தலைவரை தெரிவு செய்யும் முறையை கற்று கொண்டால் மிகச்சரியான தலைமைத்துவத்தை எம்மால் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் பாரபட்சமின்றி ஆராய்ந்து பார்க்க முடியும். உலகில் வாழ்ந்த, வாழும் சமயத்தலைவர்களின் நடத்தைகள் எப்படிப்பட்டவை என்பதை ஆராய வேண்டும். அதேபோல் ஒருவர், உள்ளார்ந்தமாக சிதைந்து போன வரலாற்றினையுடைய ஒரு சமய தலைவரை தன் ஆன்மீக தலைவராக தெரிவு செய்ய மாட்டார். தன் இவ்வாழ்வு மற்றும் மறுவாழ்வை சுமுகமாக்கும் முறையை கூறும் தன் வாழ்வினை முன்னேற்ற பாதையில் செலுத்த கூடிய தலைவரையே தன் ஆன்மீக தலைவராக தெரிவு செய்வார். அவரையே பின்பற்றுவார். எவ்வித களங்கமுமற்ற ஒழுக்கத்தினையுடைய வார்த்தையால் கூட பாவம் செய்யாத தலைமைத்துவம்.
தலைமைத்துவத்தை பாரபட்சமின்றி அறிவால் ஆராய்ந்து தெரிவு செய்கையில் புலப்படுவதானது
நாற்பத்தைந்து வருடகால பிரம்மச்சரியத்தில் எவ்வித கலங்கமும் அற்ற தூய்மையான ஒழுக்கத்தை கொண்டவர். கணப்பொழுதில் கூட சீலத்தில் களங்கம் ஏற்படாதவர். நாற்பத்தைந்து வருடங்களுல் எவ்விதமான சந்தர்ப்பத்திலும் ஏனையோரின் மனதை வேதனையடைச்செய்யும் ஒரு வார்த்தையையேனும் கூறாதவர். வாய்மையே உருவாகியவர். அர்த்தமற்ற பேச்சுக்கள், புறங்கூறல் என்பனவற்றிலிருந்து முழுமையாக விடுபட்டவர் எமக்கு சொல் தவறலாம் ஆனால் தலைமைத்துவம்? எமக்கென்றால் சொற்கள் தவறும். அவ்வாறு தவறி விட்டால் ‘ஐய்யோ நான் சொல்ல நினைத்து இதுவல்ல. அதற்கு பதிலாக இதனை வேறுமுறையில் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே’ இப்படியாக நாம் நினைவு கூறும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. பாருங்கள், மிகச்சரியான தலைமைத்துவத்தை. புத்த பகவானின் வாழ்வில் இவ்வாறான ஒரு சம்பவம் கூட இல்லை. புத்த பகவானுக்கு ஒரு சொல் கூட பிழைக்கவில்லை. எவ்விதமான பிழைகளுமற்ற சொற்களையே புத்த பகவான் உபயோகித்தார். இது புத்த பகவானின் ‘விஜ்ஜாசரன’ குணமாகும். ஷவிஜ்ஜா| என்பது உய்த்தறியப்பட்ட ஞானமாகும் ‘சரண’ என்பது நடத்தையாகும் தன்னால் உய்த்தறியப்பட்ட ஞானத்திற்கேற்ப தூய்மையான நடத்தை கொண்டவராக தன் வாழ்வினை நடத்தியவரே புத்த பகவான் என்பதே இதன் பொருளாகும். ஞானத்தின்படி தன் வாழ்வை நடத்தும் ஒரு ஞானியையே சரணடைய வேண்டும். அவ்வாறில்லாது மூடத்தனமானவர்களை சரணடைந்தால் நாமும் அழிந்து போக வேண்டியதுதான்.
எம் வாழ்க்கை முறை
எம் வாழ்க்கை செயற்படும் முறை ஒன்று உள்ளதல்லவா? அதிகாலை எழும்புகிறோம். தேநீர் அருந்துகிறோம். சமைக்கின்றோம். சாப்பிடுகிறோம். வேலைத்தளத்திற்கு புறப்படுகிறோம். நண்பர்களை சந்தித்தால் ஏனையோரின் குறைகளை பேசுகின்றோம். அலுவல் வேலைகளை செய்திறோம். நேரத்தை பார்க்கிறோம். பஸ்ஸில் ஏறுகிறோம். கடையில் தேவையான பொருட்களை வாங்குகிறோம். வீட்டை அடைகிறோம். சமைத்து சாப்பிடுகிறோம். பின் தொலைக்காட்சியை பார்த்து உறங்கிவிடுவோம். எம் வாழ்கை வட்டம் இதுவே. அடுத்த நாளும் இதுபோன்றுதான். தினந்தோறும் இதனையே செய்கின்றோம்.நாம் தலைவராக தெரிவு செய்பவரும் எம்மை போன்றே இவ்வாறான இல்லற வாழ்வை நடத்தியவரையா தேர்ந்தெடுக்க வேண்டும்? gouthama buddhar
புத்த பகவானின் வாழ்க்கை முறை
புத்த பகவானின் வாழ்க்கை முறை மிகவும் சுந்தரமானது. பகவான் அதிகாலை இரண்டு மணிக்கு துயிலெழுவார். காலை கடன்களை முடிப்பார். சில சமயங்களில் நீர் அருந்துவார். அடுத்தாக அனைத்து உலகங்களுக்கும் கருணையை பரப்புவார். அது ஷமஹா கருணை சமாபத்தி| எனப்படும். அதன் பின்னர் தியான நிலையை அடைவார். தியானத்திலிருந்து எழுவதற்கு முன் அன்றைய தினத்தில் யாருக்கு உதவ வேண்டும் என தீர்மானிப்பார். அடுத்து அவரின் உணவு பாத்திரத்தை கையிலேந்தி வீடு வீடாக செல்வார். புத்த பகவானை போன்ற உத்தமருக்கு வழங்கும் தானத்தினால் மஹா புண்ணியம் கிட்டும். ஒரு வீட்டில் அவர் பெறுவது ஒரு பிடி சோறுதான். இவ்வாறு தமக்கு போதியளவு உணவு கிடைத்ததும் எங்காவது ஒரு மரத்தின் கீழ் அல்லது ஓய்வான இடத்தில் அமர்ந்து அந்த உணவை சாப்பிடுவார். அப்போது யாராவது புத்த பகவானை காண வந்தால் அவருக்கும் தர்மபோதனைகளை நிகழ்த்துவார். அடுத்ததாக பகவான் காலையில் உதவி செய்ய நினைத்த மக்களை தேடிச்சென்று அவர்களுக்கு தர்மத்தை போதிப்பார். அவர்களை துயரத்திலிருந்து மீட்பார். பரம சுந்தரமான மோட்சத்திற்கான வழியை காட்டுவார். புத்த பகவான் ஒரு நாளைக்கு ஒரு வேளை மாத்திரம்தான் உணவு உட்கொள்வார். பகல் வேளைகளில் கொஞ்சம் ஓய்வெடுத்து மீண்டும் தியானத்தில் அமர்வார். பகவான் மாலை நேரத்தில் நீராடுவார். அதன்பின் தர்ம சபையில் எழுந்தருளி பிக்குமார்களுக்கு தர்மத்தை போதிப்பார்.அதன்பின் இரவு வேளைகளில் அதாவது பத்து மணியிலிருந்து பன்னிரெண்டு மணிவரையிலான காலத்தில் புத்த பகவானை காண பிரம்மாக்களும் தேவர்களும் கூட்டமாக வருவார்கள். புத்த பகவான் அவர்களுக்கும் தர்மத்தை போதிப்பார் (புத்த பகவான் குருவாக இருப்பது மனிதர்ளுக்கு மட்டுமல்ல தேவர்களுக்கும் தான்) அதன்பின் பன்னிரெண்டு; மணியிலிருந்து இரண்டு மணிவரையிலும் துயில் கொள்வார். புத்த பகவான் தலையணை உபயோகிக்கவில்லை. வலது புறமாக சரிந்து தன் கையையே தலையணையாக கொண்டு இரு மணித்தியாலங்கள் மாத்திரம் நித்திரை கொள்வார். அவர் சம்புத்த நிலையை அடைந்து உன்னத பரிநிர்வாணத்தை அடையும் வரையிலான இடைப்பட்ட காலம் அதாவது நாற்பத்தைந்து வருட காலங்கள் எவ்வளவு தூய்மையானது என்பது புலப்படுகின்றதா? புத்த பகவானிடம் சுந்தரமான செயல்பாடுகளே இருந்தன. அவரின் வாழ்க்கையானது மிகவும் சுந்தரமானதாகும். அது புத்த பகவானின் ஒரு குணமான ஷசுகத்த| எனும் ஒரு குணத்தின் ஒரு வெளிப்பாடாகும். இவ்வாறான தூய்மையான நடத்தைகளை கொண்ட ஒருவரையே எமது ஆன்மீக தலைவராக தெரிவு செய்ய வேண்டும். ஏனையோரின் பேச்சுக்களுக்கு அடிமையாகாமல் சுயாதீனமாக தெரிவு செய்ய வேண்டும்.
உள்ளக மற்றும் அனைத்து புற உலகங்கள் தொடர்பான அறிவு தெட்ட தெளிவானதாகும்
ஒவ்வொரு உயிரினதும் இந்த பிறவிபெருங்கடலில் தன் கர்ம வினைக்கேற்ப கிடைக்கும் கதா பாத்திரங்கள் வேறுபட்டவை. ஆதி எதுவென்று புலப்படாத இவ்சுழற்சியில் திணரும் அவ்வுயிர்களுக்கே தெரியாத தத்தமது முற்பிறப்புக்ளை புத்த பகவானால் மிகத்துள்ளியமாககூறமுடியும்.
ஒரு மீனின் உலகம்
சாவத்திய நகரத்திலுள்ள ஒரு கங்கையில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் வலையில் பொன்னிறமான மீன் ஒன்று சிக்கியது. அந்த மீன் விசேடமான மீனாக இருந்ததால் மீனவர்கள் அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு அரசனிடம் கையளித்தார்கள். அரசனும் அந்த மீனைக்கண்டு புதினமடைந்து அதனை புத்த பகவானுக்கு காட்ட வேண்டும் என்று கூட்டத்தோடு ஜேத்தவன ஆராமத்திற்கு சென்றார். செல்லும் வழியில் மீன் வாயை திறந்து பெரிய கொட்டாவி ஒன்று விட்டது. அந்த கொட்டாவியினால் அந்த பிரதேசம் முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசியது. அரசன் உட்பட அனைத்து மக்களுக்கும் இது ஆச்சரியமானதாக இருந்தது. அதுதான் இம்மீPனின் உடம்பு பொன்னிறமானது. ஆனால் வாய் மிக மிக துர்நாற்றமானது. இந்த மீனைப்பற்றி தெரிந்து கொள்ள அனைவருக்கும் மிகுந்த ஆவலாக இருந்தது. மீனை புத்த பகவானிடம் கொண்டுசென்றார்கள். புத்த பகவான் மீனை பார்த்து, ‘இதனுடைய இறந்த காலத்தை பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?’ என அரசனிடம் வினவினார். அரசன் தன் விருப்பத்தை தெரிவித்ததும் புத்த பகவான் தன் ஆற்றலின் மூலமாக மீனுக்கு பேசும் திறமையை ஏற்படுத்திகொடுக்கிறார்.
புத்த பகவான் இப்போது அந்த மீனுடன் உரையாடுகிறார்.
‘மீனே நீ முன்பு எங்கு வாழ்ந்திருந்தாய்?’
‘மனித உலகில் பிக்குவாக இருந்தேன்’
‘அப்போதைய பெயர் என்ன?’
‘கபில’
‘குடும்பத்தில் வேறு யார் இருந்தனர்?’
‘அம்மா இருந்தார் அவருடைய பெயர் ‘சாதனா’ ‘தாப்பனா’ என ஒரு தங்கை இருந்தாள்.
சோதன என்று ஒரு அண்ணா இருந்தார். நாம் அனைவரும் பிக்குகளாக துறவு பூண்டிருந்தோம்.’
‘அவர்கள் இப்பொழுது எங்கே?’
‘அம்மாவும் தங்கையும் நரகலோகத்தில் பிறந்துள்ளனர்’
‘ஏன் அவ்வாறு நிகழ்ந்தது?’
‘ஐய்யோ பகவானே, நாம் பாவங்களையே செய்தோம். அந்த காலத்தில் வாழ்ந்திருந்த ஒழுக்கமான சீலமுள்ள ஏனைய பிக்குமாரின் மீது பொறாமை கொண்டு அவர்களை தூற்றினோம். நாம் மூவரும் சேர்ந்து அவர்களுக்கு நிறைய தொந்தரவுகள் செய்தோம்.நாம் உடம்பால் மட்டுமே துறவிகளாக இருந்தோம் மனத்தால் இருக்கவில்லை. அதனால்தான் இந்த துர்பாக்கியம் ஏற்பட்டது.’
‘அப்படியாயின் அண்ணாவிற்கு என்ன நடந்தது?’
‘அண்ணா உடம்பினால் மட்டுமல்ல மனத்தாலும் பிக்குவாக இருந்தார். அவர் உன்னதமான பரிநிர்வாணத்தை அடைந்தார்.’
‘இதன் பின் உனக்கு என்ன நடக்கும்?’
‘நான் இந்த மிருகலோகத்தின் பிறவிக்கு பின் நேரடியாக நரகத்திலே பிறப்பேன்’ gouthama buddhar
இப்படியாக கூறிய மீன் மனப்பலத்துடன் மேலே பாய்ந்து அந்த பாத்திரத்தில் தலையை மோதி மரணமடைந்து மருகணமே துயரம் மிகுந்த நரகத்தில் பிறந்தது.
அறிவியலினூடாக பார்க்கும் உலகமா இது?
பாருங்கள், உலகங்களை பற்றி உய்த்துணராத ஒருவருக்கு இந்த மீனுடைய முழுக்கதையும் சொல்ல முடியுமா? எங்களால் செய்ய கூடியது தாங்கி ஒன்றை செய்து மீனை அதில் விட்டு அதற்கு உணவு கொடுத்து அதன் உடம்பில் ஏற்படும் நிறமாற்றத்தை மற்றும் அதன் வளர்ச்சியை பார்க்க மாத்திரமே. ‘லோகவிதூ’ என்பது எல்லா உலகங்களையும் உய்த்தறிந்தவர் என பொருள்படும் மனித உலகம், பிரேத உலகம், நரக உலகம், அசுர உலகம், மிருக உலகம், தேவ உலகம், நாக உலகம், பிரம்ம உலகம் என்ற அனைத்து உலகங்கள் தொடர்பாக புத்த பகவானிடம் மிக மிக தெளிவான அறிவிருந்தது. தன்னை பௌத்தர்கள் என கூறிக்கொள்ளும் சிலர் இந்த நரகலோகம் சுவர்க்கலோகம் எனும் எல்லாமே இருப்பது இந்த பூமியில்தான் என சொல்கிறார்கள். அவர்கள் அனைத்து உலகங்களையும் உய்த்தறிந்த ‘லோகவிதூ’ குணம் படைத்த தன் மோட்ச வழிகாட்டியை நம்பவில்லை. வறையறுக்கப்பட்ட, குறுகிய மனப்பான்மையை கொண்ட, தன் அறிவை சரணடைந்துள்ள இவர்களால் ஒரு சிறப்பான, மிகச்சரியான ஆன்மீக தலைமைத்துவத்தை தெரிவு செய்ய முடியாது.
எவ்வித ஆயுதமுமின்றி ஏனையோரை கட்டுப்படுத்திய தலைமைத்துவம்.
புத்த பகவானுக்குரிய இன்னுமொரு குணம் தான் ‘அனுத்தரோ புரிச தம்ம சாரதீ’ இந்த குணத்திலிருந்து வெளிப்படுத்துவது யாதெனில் புத்த பகவான உலகத்தோரை கட்டுப்படுத்த வல்லவர் என்பதாகும். ஒருவரை கட்டுப்படுத்த சிலர் ஆயுதங்களை உபயோகிப்பார்கள். சிலர் வஞ்சனை நிறைந்த தந்திரமான புத்தியை உபயோகிப்பார்கள். சிலர் பணத்தை உபயோகிப்பார்கள். ஆனால் புத்த பகவான் இவ்வுலகத்தோரை கட்டுப்படுத்தியது வஞ்சனை நிறைந்த தந்திரத்துடன் அல்ல. பணத்தினால் அல்ல. ஆயுதங்கள் பயன்படுத்தி அல்ல. படைகளை பயன்படுத்தி அல்ல. அவர் இவ்வுலகத்தோரை கட்டுப்படுத்தியது தன் விருத்தியடைந்த உள்ளத்தினாலேயே. அதாவது வலிமை மிக்க தன் மனோபலத்தினாலேயே. அவர் அதற்காக மூன்று முறைகளை கையாண்டார்
இர்தி பாடிஹார்யம்
புத்த பகவானுக்கு அளவிட முடியாத சித்தாற்றல்கள் இருந்தன. ஆகாயத்தில் நடப்பது. நீரில் நடந்து செல்வது. நிலத்தில் ஓரிடத்தில் மூழ்கி இன்னுமொரு இடத்தில் தோன்றுதல். மலைகள் குன்றுகள், சுவர்கள் என்பன ஊடுருவி செல்லுதல். எவ்வளவு சேய்மையான இடத்திற்கும் ஒரு கணப்பொழுதில் செல்லுதல்;. சாதாரண காதுகளுக்கு விளங்காத ஒலியலைகளை கேட்டல். என எண்ணிலடங்காத இர்தி ஆற்றல்களை உடையவராக புத்த பகவான் விளங்கினார். புத்த பகவான்இவ்வுலகத்தோரை கட்டுபடுத்த இம்முறையையும் பயன்படுத்தினார்
ஆதேசனா பாடிஹார்யம்
புத்த பகவானுக்கு இன்னுமொருவரின் மனத்தை அறியும் ஆற்றலிருந்தது. ஒருநாள் புத்த பகவான்ஒரு தவசியின் ஆச்சிரமத்திற்கு செல்லும் பொழுது அங்கிருந்த முனிவர் இவ்வாறு நினைத்தார்.
‘நாளைய தினம் எனது பெருந்தொகையான மக்கள் எனக்கு தானம் கொண்டு வருவார்கள் அவ்வேளை புத்த பகவான் இருந்தாரெனில் வரும் என்மக்கள் புத்த பகவான் மீது பக்தி கொண்டுவிட்டால் என்ன செய்வது?’ என்று. புத்த பகவான்அவரின் இவ் எண்ணத்தை அறிந்து மறுநாள் அதிகாலையிலே ஆச்சிரமத்தை விட்டு வெளியேறிபிண்டபாதம் செய்து விட்டு மாலை நேரத்தில் மீண்டும் ஆச்சிரமத்திற்கு வருகை தந்தார். புத்தபகவானை கண்டதும் அந்த முனிவர் இவ்வாறு கூறலானார். ”நான் தாங்கள் வரும் வரைதான் பார்த்து கொண்டிருந்தேன். எனது பக்தர் கூட்டத்திற்கும் தங்களின் மகத்துவத்தை பற்றி கூறினேன். தாங்கள் ஏன் தானத்திற்கு வரவில்லை ..?” என்று. அதற்கு புத்த பகவான் ”நான் எப்படி வர முடியும்? நீங்கள் நினைத்தது அவ்வாறில்லையே..’ என்று பதிலளித்தார். புத்த பகவானுக்கு இப்படியாக ஒரு புத்தகத்தை வாசிப்பது போன்று ஏனையோரின் உள்ளங்களை வாசிக்க முடியும். இதுவே ஆதேசனா பாடிஹார்யம் எனக்கூறுவது.
அனுசாசனீ பாடிஹார்யம்
செவிமடுப்போருக்கு தர்மத்தை உய்த்துணரும் படியாக போதிப்பதற்கு புத்த பகவானால் முடியும்.இதுவே அனுஷாசனீ பிரார்திஹார்யமாகும். உலகத்தினோரை துன்பத்திலிருந்து மீட்க புத்தபகவான் அநேகமாக இம்முறையையே பயன்படுததினார்;. இந்த முறைகளினூடாகத்தான் புத்தபகவான் ஒழுக்கமற்றவர்களை சீலமுள்ளவர்களாக்கினார். மனம் ஒன்றிக்காதவர்களை சமாதியை உருவாக்க செய்தார். உலோபிகளை கொடையாளிகளாக்கினார். மூடர்களை ஞானிகளாக்கினார்.கொடூரமான உள்ளங்களை கொண்டோரை மென்மையான குணம் படைத்தோராக்கினார். இவ்வாறு புத்த பகவான் உயிர்களை கட்டுப்படுத்தி கம்பீரமான தர்மத்தை போதித்து நிரந்தரமாகவே துயரப்பெருங்கடலில் இருந்து மீட்டெடுத்தார். இவ்வாறான ஒப்பற்ற ஆற்றல் படைத்த புத்த த பகவானை எமது ஆன்மீக தலைவராக தெரிவுசெய்வோமேயானால் இது எமது பெரும்பாக்கியமே.
தேவர்களினதும் மனிதர்களினதும் உன்னதமான குரு
புத்த பகவானின் இன்னுமொரு குணம்தான் ஷசத்தாதேவ மனுஸ்ஸானங்| அதிலிருந்து கூறப்படுவது என்னவென்றால் புத்த பகவான் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் பரமகுரு ஆவார் என்பதாகும். தர்மபோதனைகளை வாசிக்கும் போது எமக்கு புலனாகும் ஒரு விடயம் தான் புத்த பகவான் அநேகமான போதனைகளை தேவர்களுக்கும் பிரம்மாக்களுக்கும் போதித்துள்ளார் என்பதாகும். எவ்விதமான பிழைகளுமில்லாமல் ஓடி ஒளியாமல் தர்மத்தை போதித்தார் புத்த பகவானின் எட்டாவது குணம் தான் ‘புத்த’. அறும்பாடுபட்டு தன் சுயஞானத்தால் உய்த்தறியப்பட்ட பரம கம்பீரமான, ஒப்பற்ற, மாற்றங்களுக்குட்படாத அந்த தர்மத்தை உலகத்தோருக்கு மகா கருணையோடு மொழிந்தருளினார். தெளிவான சொற்பிரயோகங்கள் உவமைகள் என்பன பயன்படுத்தி பண்டிதன் முதற்கொண்டு பாமரன் வரையிலும் தர்மத்தை தன் வாழ்வில் உய்த்துணரக்கூடிய வகையில் அந்த மொழிந்தருளினார். இவ்வனைத்து குணங்களும் தன்னகத்தே கொண்ட மேன்மையாளர். இதன்படி மேற்கூறப்பட்ட அனைத்து குணங்களும் ஒரு மனிதருள் இருப்பதாயின் அவர் உண்மையிலையே பாக்கியமுள்ளவர்தான். ஆம், இவ்வனைத்து குணங்களும் தன்னுள் தாங்கிக்கொண்டிருந்த அந்த சம்மா சம்புத்த பகவான் ஷபகவா| எனும் குணம் படைத்தவர் அதாவது பாக்கியமுள்ளவராவார். தவறானதை கைவிட்டு சரியான வழியை தெரிவு செய்வதற்கு மனதில் உறுதி வேண்டும், தைரியம் வேண்டும்.
நாம் குறிப்பட்டதொரு சமயத்தை பின்பற்றும் ஒரு குடும்பத்தில் பிறந்தோம் என்பதற்காகவே அந்த சமயத்தை பின்பற்றினோமேயானால் அதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. எமக்கு பிரயோசனத்தை தரும் ஒரு சமயத்தையே பின்பற்ற வேண்டும். நாம் இவ்வாறு நினைப்போம், ஒரு குடும்பம் உள்ளது அந்த குடும்பத்தில் கால்கள் இருந்தாலும் ஊன்றுகோலை பயன்படுத்தி தான் நடக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அம்மாதிரியான குடும்பமொன்றில் ஒருவர் பிறக்கிறார். பிறந்து சில வருடங்களுக்கு பின் அவர் நடந்து செல்லும் வயது வந்ததும் அவரது பெற்றோர் அவருக்கு ஊன்றுகோலை கொடுத்து ”எம் அனைத்து பரம்பரையினரும் ஊன்றுகோலை பயன்படுத்தித்தான் நடந்தார்கள் நீயும் அவ்வாறு செய்” எனக்கூறுகிறார்கள். அறிவுள்ள ஒருவரானால் அவர் அதனை ஏற்காது தனியாக நடக்க முயற்சிக்க வேண்டும்.அவ்வாறு முயற்சி செய்து நடந்த பின் அவர் ஏனையோருக்கும் அதனை கூறுகிறார். ”நீங்கள் தவறானதை செய்கிறீர்கள், நீங்கள் பரம்பரை பரம்பரையாக கால்களால் நடக்க முடிந்தும் அதனை செய்யவில்லை. பாருங்கள் ஊன்றுகோலின்றி நடக்கக்கூடியதாக உள்ளது” என்று. அப்போது அதனை செவிமடுக்கும் அறிவுள்ள ஒருவர் உண்மைதான் என ஊன்றுகோலை விடுத்து நடப்பார்.இவ்வாறான முறையில்தான் சமயத்தை தெரிவு செய்ய வேண்டும் அதாவது ஒருவர் பிறந்தது
குறிப்பிட்டதொரு சமயத்தை பின்பற்றும் ஒரு குடும்பத்தில் என்றால், அந்த ஒரே காரணத்தை இட்டு அவர் அந்த சமயத்தை பின்பற்ற கூடாது. அக்குடும்பம் பௌத்தமானாலும் சரியே. தற்காலத்தில் பௌத்தமும் ஊன்றுகோல் போன்ற சமயமாகிவிட்டது. உண்மையிலேயே புத்தசமயமானது எவ்வித குறையுமற்ற சுயாதீனமான சமயமாகும். ஒரு மனிதன் ஒரு இந்துவாகவோ, கிறிஸ்துவனாகவோ, இஸ்லாமியனாகவோ ஏன் பௌத்தனாகவோ இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு சரியானதை, அல்லது தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு அறிவும் சுயாதீனமும் மிகவும் அவசியமாகும். gouthama buddhar
ஆன்மீக தலைமைத்துவத்தை தெரிவு செய்வதாயின் தன் அறிவை உபயோகித்து ஆராய வேண்டும்.
புத்த பகவானின் 18000 போதனைகளினூடாக புத்தபகவானின் ஒப்பற்ற எண்ணவலைகளை நாம்; உணரலாம். தன்னை பௌத்தர்கள் என வெளியுலகிற்கு காட்டிக்கொள்ளும் எத்தனை பேர் இவற்றை அறிந்திருப்பார்கள்? வெறும் கண்மூடித்தனமான பக்தியோ அல்லது நம்பிக்கையோ கொண்டு பௌத்தத்தை கடைபிடிக்க முயன்றால் அது பிரயோசனமற்றது. ஏனெனில் பௌத்த சமயம் முழுக்க முழுக்க அறிவால் ஆராய வேண்டியதொன்றாகும். இவ்வாறு அறிவால் ஆராய்ந்து பார்த்தே தன் ஆன்மீக தலைமைத்துவத்தையும் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படும் தலைமைத்துவத்திற்குதான் எம்மை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல முடியும்.
சிவப்பு, நீல, பச்சை நிறங்கொண்ட தலைவர்கள்?
ஒரு சாதாரண மனிதரிடம் அவரின் தலைவரை பற்றி வினவினால் அவரவர் அரசியற்கட்சிகளை பிரநிதித்துவப்படுத்தும் தலைவர்களையே கூறுவர். அதாவது ‘என்னை வெட்டினாலும் என் இரத்தம் கூட பச்சை நிறமாகவிருக்கும்” என்று சிலர். இன்னும் சிலர் ‘நீல நிறமானது என் இரத்தம்’ என்றவாறு கூறிக்கொள்வதை நாம் பார்த்துள்ளோம். இவ்வாறு அவர்கள் சரணடைந்தது அரசியற்கட்சிகளையே! இங்கு கூறப்படும் இந்த தலைவர்கள் மனமாசுகளற்றவர்களா? gouthama buddhar
இரத்தத்தை சுத்திகரிப்போம்
இன்றைய இலங்கையில் அநியாயங்கள், கொலைகள் மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகரிக்க காரணம் பௌத்த சமயத்தின் பிழையால் அல்ல. பௌத்த சமயத்தினை பின்பற்றாமையே அதற்கு காரணம். மனிதர்களின் இரத்தத்தில் உறைந்துள்ள பலவீனஙகளை போக்கும்;, குறைபாடுகளை நிவர்த்தி செய்யும், இந்த தர்மத்தை அவர்கள் பின்பற்றாமையே அதற்கு காரணமாகும். இரத்தத்தை சுத்திகரிக்கும் இந்த தர்மத்தினை அறியாமையே இவ்வனைத்து சமூகச்சீர்கேடுகளுக்கும் காரணமாக இருக்கிறது. இலங்கை மக்களுக்கு தவறிய இடம் இதுதான். தன் இரத்தத்தை சுத்திகரிப்பதற்கு தூய்மையான இரத்தத்தை கொண்ட தலைவரையே பின்பற்ற வேண்டும். தன்னுடைய ஆன்மீக தலைமைத்துவத்தை மிகச்சரியாக தெரிவு செய்தவர் முன்னேற்றமடைவார். புத்த பகவான் அல்லது எம் ஆன்மீக தலைமைத்துவத்தை நினைக்கும் போது எமக்கு நினைவுக்கு வருவது மனமாசுகளற்ற உத்தமர் ஒருவரையே. அவ்வாறல்லாது பல்வேறுபட்ட நம்பிக்கைகளையுடைய எமது இரத்தத்தை சூடாக்கும் ஒருவரையல்ல. பகவான் சுயமாக ஞானத்தை உய்த்தறிந்த ஒப்பற்ற ஞானியாவார். நாம் இவ்வாறு நினைவுகூருவது மனம், வாக்கு, காயம் என்பவற்றை முழுமையாக தூய்மைபடுத்திய பரம சுந்தரமானவரையே. தான் சரணடைச்தவரை இவ்வாறு நினைவுகூரும் ஒருவருக்குத்தான் அறிவை பயன்படுத்தி அவசியமானதை மாத்திரம் தெரிவு செய்ய முடியும். gouthama buddhar
தாம் பின்பற்றும் சமயத்தை தெரிவு செய்கையில் ஏமாறினால் அவ்வளவுதான்
எம் வீடுகளுக்கு ஒரு சில வகையான பொருட்களை வாங்கிச்சென்றால் திட்டு வாங்க நேரிடும். ‘ஏன் இதனை வாங்கினீர்கள்? நீங்கள் நன்றாக ஏமாற்றபட்டிருக்கிறீர்கள்’ போன்ற சொற்களையும் கேட்கலாம். இவ்வாறு சரியான முறையில் தெரிவு செய்யாததால் நஷ்டமே ஏற்படுகிறது. எவ்வாறாயினும் உண்ணக்கூடிய அல்லது பாவனை செய்யக்கூடிய பொருளானால் மலிவானதாயினும், தரம் குறைந்ததாயினும், விலையுயர்ந்ததாயினும் சாப்பிட்டோம், குடித்தோம் பாவனை செய்தோம் என அதனை மறந்து விடலாம். அது அத்தோடு முடிந்துவிட்டது. என விட்டுவிடலாம். ஆனால், தான் வாழ்நாள் இறுதிவரை பின்பற்ற போகும் சமயத்தை தெரிவு செய்கையில் தவறினால் அவ்வளவுதான். தரம் குறைந்த பொருளை விடுத்து உயர்ந்த பொருளை தெரிவு செய்ய அறிவை உபயோகிக்கும் போது, தான் இறந்துபோகும் வரை பின்பற்றபோகும்
சமயத்தை தெரிவு செய்வதற்கு அறிவை பயன்படுத்தியாக வேண்டும்.
மிகச்சரியான ஆன்மீக தலைமைத்துவத்தை தெரிவு செய்ய அறிவிருக்க வேண்டும் சரணடைவதாயின் சரணடைய வேண்டியது மேற்குறிப்பிட்ட நற்குணங்களை கொண்டஒருவரையே நான் இவ்வாறு கூறுவது தன் பிறப்பு சான்றிதழால் மாத்திரம்பௌத்தர்களானவர்களுக்கு மட்டுமல்ல பொதுவாக அனைத்து மனிதர்களுக்குமேயாகும். இவ்வாறு எடுத்து கூறிய விடயங்களை உடையவர் தலைமைத்துவத்திற்கு தகுதியானவராவார். அம்மாதிரியான தலைமைத்துவத்தை தெரிவு செய்வது அவரவரது சொந்த விடயமாகும். அதேபால் தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் போது உணர்ச்சிகளுக்கு அடிமையாகாது அறிவாலே ஆராய வேண்டும்.
ஆன்மீக தலைவர்கள் சத்தியத்தையே பரப்ப வேண்டும்.
நாம் ஒருவரை பின்பற்றவோ அல்லது பக்தி கொள்வதோ அவருடைய நடை, உடை, பாவனை என்பவற்றினாலாக இருக்கக்கூடாது மாறாக அவர் கூறும் விடயத்தில் சத்தியம் உள்ளதா? என விமர்சித்து பார்க்க வேண்டும். உண்மையான ஒரு ஆன்மீக தலைவர் உலகிற்கு சத்தியத்தை எடுத்து கூறியே மனிதர்களிடையே பக்தியை உருவாக்க வேண்டும். அவர் கூறுவது பரம சத்தியம் என விமர்சித்து அறிந்து கொள்ளும் மக்கள் அவரை நாடிச்செல்கின்றனர். அவ்வாறு செல்ல காரணம் அவர் சத்தியத்தை கூறுவதேயன்றி வேறொன்றுமில்லை.
சத்தியத்தை இலக்காக கொண்ட தலைமைத்துவம்.
புத்த பகவானின் வாழ்க்கையை பாருங்கள், அந்த உத்தமர் காலணிகள் அணியவில்லை.சீவரத்தை மாத்திரமே தரித்தார். பாத்திரத்தை எடுத்து ஆகாரத்திற்காக வீடு வீடாக தனியேதான் சென்றார். சாதாரண மக்களோடுதான் வாழ்ந்தார். புத்த பகவான் மக்களுக்கு ஒரு இலக்கு கொடுத்தார். அது தான் அறிவை விஸ்தரிக்கும் சத்தியம் எனும் இலக்கு. அதனால் புத்தபகவானை சரணடைந்த மக்களுக்கு தத்தம் வாழ்வில் வெற்றியடைய முடிந்தது.
உள்ளமா? உடலா?
எம்மனைவருக்கும் உள்ளம், உடல் என இரண்டு உள்ளது. இவ்விரண்டில் முக்கியமானது உடலல்ல உள்ளமேயாகும்.அப்படியான மனதை முதன்மைபடுத்தியே புத்த பகவான் தர்மத்தை போதித்தார். gouthama buddhar
உங்களுக்கும் பிழையற்றதொரு இலக்கு
இவ்வகையில் பரிசுத்தமான தலைவருக்குரிய இலட்சணங்கள் கூறக்காரணம் பௌத்த சமயத்தை பற்றி தெரியாத மக்கள், பல்வேறுபட்ட சமயங்ளை ஒன்றாக கலந்து குழப்பி கொண்டிருக்கும் மக்கள், புதிதாக ஒரு சமயத்தை தெரிவு செய்ய விரும்பும் மக்கள், தன் ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான சரியான புரிந்துணர்வில்லாமல் இலக்கொன்றில்லாமல் ஓடுகிறவன் பின்னால் ஓடும் பௌத்த மக்கள் என்போரை இலக்கு வைத்தேயாகும்.
மிகச்சரியான ஆன்மீக தலைவரை தெரிவு செய்தேன்
*. புத்த பகவான் மிகவும் தூய்மையான உள்ளத்தை உடையவராக பரிசுத்தமான வாழ்வை மேற்கொண்டவர். (அரஹங்)
*.புத்தபகவான் எவ்வித குரு உபதேசங்களுமின்றி உலகத்தின் மாற்றமுறாத பரம கம்பீரமான சத்தியத்தை தன்னுள்ளே உய்த்தறிந்தார். (சம்மாசம்புத்த)
*.பகவான் எண்ணிலடங்காத சீலத்தினையுடைவராக, அசைக்கமுடியாத உளச்சமாதியுடைவராக, ஒப்பற்ற ஞானத்தினை உடையவராக வாழ்ந்தார் (விஜ்ஜாசரண சம்பண்ன)
*.எமது புத்தபகவான் சுந்தரமான பாதையில் பயணித்து உன்னதமான மோட்சத்தினை அடைந்தார் (சுகத்த)
*.அனைத்து உலகங்களையும் முழுமையாக உய்த்தறிந்து எல்லா உலகங்களிலிருந்தும் முழுமையாக விடுபட்டவர். (லோகவிதூ)
*.கட்டுப்படாத தேவர்களையும் மனிதர்களையும் கருணையினால் கட்டுப்படுத்தியவர் (அனுத்தரோ புரிச தம்ம சாரதீ)
*.புத்தபகவான் தேவர்களினதும் மனிதர்களினதும் மோட்சத்தின் வழிகாட்டியாவார் (ஸத்தா தேவ மனுஸ்ஸானங்)
*.எம் புத்தபகவான் சுயமாக உய்த்தறிந்த ஞானத்தை ஏனைய உயிர்கள் மீது மஹா கருணைகொண்டு போதித்தார் (புத்த)
*.இவ்வனைத்து உயரிய குணங்களையும் தன் ஒருவருள்ளே தாங்க வல்லவர். பரிபூரணமானவர். (பகவா)
*.நாம் சரணடைந்த எம் புத்தபகவான் இப்பேர்பட்ட முழுமையான குணங்களோடு
நாற்பத்தைந்து வருட காலமாக அனைத்து விதமான சவால்களுக்கும் சரியாக முகங்கொடுத்தார்.
அனைத்து அசத்தியங்களையும் தோற்கடித்து உலகின் அஞ்ஞானம் எனும் இருளை நீக்கி சத்தியம்
எனும் ஒளியை பரப்பினார்.
*.பரிபூரணமான ஞானம் படைத்த மானுடர்களுல் முழுமை அடைந்திருந்த, உயர்ந்த
குணங்களின் இருப்பிடமான, கருணைபெருங்கடலான, அந்த பாக்கியமுள்ள சம்மா சம்புத்த
பகவானை நான் இக்கணம் முதல் முழுமையான மனம்டன் சரணடைகிறேன்.
இந்த சரணமே என் வாழ்வின் ஒளியாகும்!!!