புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தினை அறியாத புதுஜ்ஜனன் சுகம் அனுபவிப்பான். துக்கம் அனுபவிப்பான். சுக துக்கங்களற்ற உபேக்கா எனப்படும் நடுநிலையான நுகர்ச்சியையும் அனுபவிப்பான். அதேபோன்று தர்மத்தினை அறிந்த ஆரிய சீடனும் சுகம் அனுபவிப்பார். துக்கம் அனுபவிப்பார். சுக துக்கங்களற்ற உபேக்கா எனப்படும் நடுநிலையான நுகர்ச்சியையும் அனுபவிப்பார். புண்ணியமிகு பிக்குகளே, இந்த விடயத்தில் புத்த சீடனுக்கும் தர்மத்தினை அறியாத புதுஜ்ஜனனுக்கும் உள்ள வேறுபாடு என்ன? விசேடத்துவம் என்ன? (அது தொடர்பான) கருத்து என்ன?

(அதற்கு பிக்குமார்கள் இவ்வாறாக மறு மொழியளித்தனர்)

‘பாக்கியமுள்ள பகவானே, இந்த ஸ்ரீ சத்தர்மம் தங்களை மையப்படுத்தியதாகும். தங்களை புகலிடமாகக் கொண்டதாகும். தாங்களே எம் மீது கருணைகூர்ந்து அதன் கருத்தை போதிப்பீராக..! தாங்கள் போதிக்கும் தர்மத்தினை நாம் அவ்வாறே ஏற்றுக் கொள்கின்றோம். அதனையே ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறோம்’

(புத்த பகவான்)

‘அப்படியாயின் பிக்குகளே, நன்கு செவிசாய்த்து கேளுங்கள். அறிவினால் ஆராயுங்கள். நான் போதிக்கிறேன்’.

(பிக்குமார்கள்)

‘அப்படியே பகவானே…!’

பாக்கியமுள்ள புத்த பகவான் இவ்வாறு போதித்தார்.

‘புண்ணியமிகு பிக்குகளே. தர்மத்தினை அறியாத புதுஜ்ஜனன் துக்கமான நுகர்ச்சிகளை அனுபவிக்க நேரிடும்போது சோகம் கொள்வான், மயக்கமடைவான், அழுவான், ஒப்பாரி வைப்பான், மார்பினில் கைகளை அடித்துக்கொண்டு கதறியழுவான், புலம்புவான், சுயவுணர்வை இழப்பான். அவன் அந்த துக்கம் காரணமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எனும் இருவகையில் துன்புறுவான்.

அது இத்தகையதாகும். ஒருவனுக்கு ஒரு கூரிய வேலால் யாரேனும் ஒருமுறை தாக்குகினார்கள் என நினைப்போம். தாக்கப்பட்டவன் அதனால் பெரும் துன்பத்திற்குள்ளாகி துடித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும்  ; இன்னுமொரு வேலால் அதே காயத்தினுள் அந்த நபரை தாக்குகின்றான். அந்த நபர் ஒரே இடத்தில் இரு வேல்களால் தாக்கப்பட்டதால் கொடிய வேதனையை அனுபவிக்க நேரிடும்.

புண்ணியமிகு பிக்குகளே, இரு வேல்களினால் தாக்கப்பட்டவனைப் போன்றவனே தர்மத்தினை அறியாத புதுஜ்ஜனனுமாவான். ஏதேனும் துக்கம் அனுபவிக்க நேரிடும்போது அவன் சோகம் கொள்வான், மயக்கமடைவான், அழுவான், ஒப்பாரி வைப்பான், மார்பினில் கைகளை அடித்துக்கொண்டு கதறியவான், புலம்புவான், சுயவுணர்வை இழப்பான்.

அது மாத்திரல்ல. அவனுக்கு துக்கம் அனுபவிக்கும்போது அவனுள் கோபம் தோன்றும். துக்கம் எனும் நுகர்ச்சினால் தோன்றக்கூடிய படிகானுசம் (ஆழ்மனதில் புதைந்திருக்கும் கோபம்) இருக்குமாயின் அந்த கோபம் மனதில் தோன்றும். அவர் அந்த துக்கத்திiனை அனுபவித்துக் கொண்டு புலனின்ப சுகத்தினை தேடி அதனையே ஏற்றுக்கொள்வார். (அதாவது அவர் அந்த துக்கத்திலிருந்து மீள்வதற்காக புலனின்பங்களை தேடுவார்) அதற்கு காரணம் என்ன? தர்மத்தினை அறியாத புதுஜ்ஜனன் புலனின்ப சுகத்தினை தவிர துக்கத்திலிருந்து விடுதலை அடைவதற்கு தர்மத்தினை அறிந்தவனல்ல. இவ்வாறாக புலனின்பத்தினை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வதால் அந்த புலனின்பங்களினால் தோன்றும் சுக நுகர்ச்சியினால் தோன்றக்கூடிய ராகானுசம் (ஆழ் மனதில் புதைந்திருக்கும் இழிவான வேட்கை) அவருள் தோன்றும். அவர் இந்த சுகம் துக்கம் எனும் நுகர்ச்சிகளின் தோற்றம், அழிவு, அதன் சுகம், அதனால் ஏற்படும் தீங்குகள், அவைகளிலிருந்து விடுதலையடையும் முறை தொடர்பாக அறிந்தவரல்ல.

இவ்வாறாக நுகர்ச்சிகளின் தோற்றம், அழிவு, அதன் சுகம், அதனால் ஏற்படும் தீங்குகள், அதனிலிருந்து விடுதலையடையும் முறை தொடர்பாக அறியாததால் சுக துக்கங்களற்ற உபேக்கா எனப்படும் நடுநிலையான நுகர்ச்சியை அனுபவிப்பதால் ஏதேனும் அஞ்ஞான அனுசயம் (ஆழ் மனதில் புதைந்திருக்கும் அறியாமை) தோன்றுமாயின் அவருள் அதுவும் தோன்றும்.

எனவே அவர் சுக நுகர்ச்சியை அனுபவிக்கும்போது அந்த நுகர்ச்சியுடன் ஒன்றித்துபோய் அந்த சுகத்தை அனுபவிப்பார். அதேபோன்று துக்க நுகர்ச்சியை அனுபவிக்கும்போது அந்த துக்க நுகர்ச்சியுடன் ஒன்றித்துபோய் அந்த துக்கத்தை அனுபவிப்பார்.  அதேபோன்று சுக துக்கங்களற்ற உபேக்கா எனப்படும் நடுநிலையான நுகர்ச்சியை அனுபவிக்கும்போது அந்த நுகர்ச்சியுடன் ஒன்றித்தே அவ் நுகர்ச்சியை அனுபவிப்பார்.

புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தினை அறியாத இத்தகைய புதுஜ்ஜனனை, பிறப்பு, முதுமை, மரணத்துடன் கூடிய துக்கங்கள் சோகங்கள் என்பவற்றுடன் ஒன்றித்திருப்பவர் என்றே கூற வேண்டும்.

புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தினை அறிந்த ஆரிய சீடன் துக்கரமான நுகர்ச்சிகள் தோன்றும்போது சோகங்கொள்ளமாட்டார். மயக்கமடைய மாட்டார். ஒப்பாரி வைக்க மாட்டார். மார்பினில் கைகளை அடித்துக் கொண்டு கதறியழ மாட்டார். சுயவுணர்வினை இழக்கமாட்டார். அவர்  உடல்ரீதியாக துன்புற்றாலும் மனரீதியாக துன்புறாதிருப்பார்.

புண்ணியமிகு பிக்குகளே, அது இத்தகையதாகும். ஒருவனை ஒரு வேலால் மாத்திரம் யாராவது தாக்குவார்கள். மீண்டும் அதே இடத்திற்கு இன்னுமொரு வேலால் தாக்கமாட்டார்கள். எனவே அந்த நபர் ஒரு காயத்தினால் மாத்திரமே துன்புறுவார். அவருக்கு இரண்டாவதாக அனுபவிக்கநேரிடும் கொடிய வேதனை இருக்காது. ஒரு வேதனை மாத்திரமே இருக்கும். புண்ணியமிகு பிக்குகளே, ஆரிய சீடனும் அப்படித்தான். துக்கரமான நுகர்ச்சிகள் அனுபவிக்க நேரிடும்போது சோகங்கொள்ளமாட்டார். மயக்கமடைய மாட்டார். ஒப்பாரி வைக்க மாட்டார். மார்பினில் கைகளை அடித்துக் கொண்டு கதறியழ மாட்டார். சுயவுணர்வினை இழக்கமாட்டார். அவர் உடல்ரீதியாக துன்புற்றாலும் மனரீதியாக துன்புறாதிருப்பார்.

அதேபோன்று ஆரிய சீடன் துக்க நுகர்ச்சியை அனுபவிக்கும்போது துக்கம் எனும் நுகர்ச்சினால் தோன்றக்கூடிய படிகானுசம் (ஆழ்மனதில் புதைந்திருக்கும் கோபம்) இருக்குமாயின் அந்த கோபம் மனதில் தோன்றாது. அவர் தன் துக்கத்தை போக்குவதற்காக புலனின்பத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். அதற்கு காரணம் என்ன? புண்ணியமிகு பிக்குகளே, ஆரிய சீடன் புலனின்பத்தை தவிர்த்த முறையில் துக்கத்திலிருந்து விடுதலையடையும் முறையை (தர்மத்தினை) அறிவார்.

எனவே, புலனின்பத்தை ஏற்றுக்கொள்வதால் தோற்றம் பெறும் இராகானுசம் எனப்படும் (ஆழ் மனதில் புதைந்திருக்கும் இழிவான வேட்கை) அவர் மனதில் தோன்றாது.  அவருள் இந்த சுகம் துக்கம் எனும்  நுகர்ச்சிகளின்; தோற்றம், அழிவு, அதன் சுகம், அதனால் ஏற்படும் தீங்குகள், அதனிலிருந்து விடுதலையடையும் முறை தொடர்பாக அறிந்த உய்த்துணர்வு இருப்பதால் அவருள் அஞ்ஞான அனுசயம் (ஆழ் மனதில் புதைந்திருக்கும் அறியாமை) தோன்றுமாயின் அதுவும் தோன்றாது. எனவே அவர் சுகமான நுகர்ச்சியை அனுபவிக்கும்போது அந்த நுகர்ச்சியுடன் ஒன்றிக்காமலேயே அதனை அனுபவிப்பார்.  துக்கமான நுகர்ச்சியை அனுபவிக்கும்போது அந்த நுகர்ச்சியுடன் ஒன்றிக்காமலேயே அதனை அனுபவிப்பார்.  சுக துக்கங்களற்ற நடுநிலையான உபேக்கா நுகர்ச்சியை அனுபவிக்கும்போது அந்த நுகர்ச்சியுடன் ஒன்றிக்காமலேயே அதனை அனுபவிப்பார்.  புண்ணியமிகு பிக்குகளே, அந்த ஆரிய சீடனை இவ்வாறாகவே குறிப்பிட வேண்டும். பிறப்பு, முதுமை, மரணத்துடன் கூடிய துக்கங்கள் சோகங்கள் என்பவற்றுடன் ஒன்றித்து இருக்காதவர் என்றே கூற வேண்டும்.

புண்ணியமிகு பிக்குகளே,  இந்த விடயத்தில் ஆரிய சீடனுக்கும் தர்மத்தினை அறியாத புதுஜ்ஜனனுக்கும் உள்ள வேறுபாடு இதுவேயாகும். விசேடத்துவம் இதுவேயாகும். கருத்து இதுவேயாகும்.

செய்யுள்கள்.

தர்மம் தொடர்பான அறிவுடைய ஞானமுள்ளவர், சுகம், துக்கம், சுக துக்கங்களற்ற நடுநிலையான நுகர்ச்சி எனும் எத்தகைய நுகர்ச்சிகளாயினும் அவர் அந்த நுகர்ச்சிகளுடன் ஒன்றித்து இரண்டறக் கலந்து அந்த நுகர்ச்சிகளை அனுபவிக்க மாட்டார். திறமையான புத்த சீடனதும், தர்மஞானம் அற்ற புதுஜ்ஜனரினதும் வேறுபாடு இதுவேயாகும்.

இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் எனும் இருவுலகங்களை முறையாக காணும் தர்மத்தினை உய்த்துணர்ந்த பிக்குவின் மனதை சுக நுகர்ச்சிகள் அடிபணிய வைக்காது. அதேபோன்று அவருள் துக்கங்கள் தொடர்பாக முரண்பாடுகளும் தோன்றாது.

அவருள் விருப்பும் இருக்காது. வெறுப்பும் இருக்காது. அவற்றை அவர் அழித்திருக்கிறார். இல்லாமல் செய்திருக்கிறார். அவை தன்னுள் இல்லாத காரணத்தினால் சோகங்கள் அற்ற, மோட்சத்தினை உறுதி செய்து பிறவியிலிருந்து தாம் விடுதலை அடைந்தவர் என்பதனை நன்கு உணர்ந்துகொள்வார்.