ஆனாபானசதி தியானத்தினுள் தம்மானுபஸ்ஸனத்தினை விருத்தி செய்யும் முறை
2.4 ஆனாபானசதி தியானத்தினுள் தம்மானுபஸ்ஸனத்தினை விருத்தி செய்யும் முறை
ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் எது?
இப்போது நீங்கள் சதிபட்டான தியானங்கள் தொடர்பாக சிறிது சிறிதாக கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆனாபானசதி தியானத்தின் மூலம் உளச்சமாதியை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பதனையும் நீங்கள் இப்போது கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனாபானசதி தியானத்தின்போது அமைதியான ஆள் அரவமற்ற ஒரு இடத்திலே முதுகெலும்பை நேராக வைத்து அமர்ந்து சுவாசத்தின் மீது முழுக்கவனத்தினை செலுத்தியவாறு தியானம் செய்ய வேண்டும், என்பதனையும் நீங்கள் இப்போது அறிவீர்கள். ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசத்தின் மீது கவனம் செலுத்துதலாகும். நிமித்தம் எனக்கூறுவது தியானத்தின்போது முழுக்கவனத்தினையும் செலுத்த வேண்டிய விடயமாகும். அதாவது இந்த தியானத்தின்படி உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவாகும்;. இப்போது நீங்கள் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவற்றின் மீதே உங்கள் முழுக்கவனத்தினையும் செலுத்த வேண்டும். எனவேதான் அது தியான நிமித்தம் எனப்படுகிறது. இதனை தவிர்த்த வேறெந்த நிமித்தத்தினையும் நீங்கள் இந்த தியானத்தினுள் தேட வேண்டாம்.
மென்மேலும் கற்றுக்கொள்ள விரும்பினால்…
ஆனாபானசதியினுள்ளேயே அதாவது உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பவற்றினுள்ளேயே முழுக்கவனத்தினையும் குவிக்க பழக்கப்படுத்திக்கொள்ளும் போது சமாதியை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பதனை நீங்கள் முன்னர் கற்றுக்கொண்டீர்கள். சதிபட்டான சூத்திரத்தினை தவிர கிரிமானந்த சூத்திரம், சம்யுக்த நிகாயத்தின் ஐந்தாம் பாகத்திற்குரிய சதிபட்டான சங்யுக்தம், மற்றும் ஆனாபானசதி சங்யுக்தம் என்பனவற்றிலும் இந்த ஆனாபானசதி எனும் மகத்தான தியானம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் கற்பதனூடாக மென்மேலும் இந்த தியானம் தொடர்பாக அறிந்துகொள்ள முடியும். இவை யாரோ ஒருவரது தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல. மாறாக அனைத்தையும் உய்த்துணர்ந்து கிலேசங்களை வேரறுத்த நிர்மலமான உள்ளம் கொண்ட புத்த பகவான் ஒருவரது அகத்தில் தோன்றிய உன்னத கருத்துக்களாகும்.
புத்த பகவான் மீது தெளிவானதொரு நம்பிக்கை வேண்டும்.
அதேபோன்று, புத்த பகவான் மொழிந்தருளிய இந்த தியானங்களை நீங்கள் பழக்கப்படுத்த வேண்டுமானால் உங்கள் மனதில் புத்த பகவான் மீது சிரத்தை இருக்க வேண்டும். இந்த சிரத்தை எனப்படும் சத்தாவானது வெறும் பக்தியோ அல்லது நம்பிக்கையோ அல்ல. புத்த பகவானது குணங்களை பகவான் மொழிந்த தர்மத்தினூடாக அறிந்து பகவானது ஞானத்தினை ஏற்றுக்கொள்வதே சிரத்தையாகும். அதற்கு காரணம், பகவான் இந்த தியானங்களை அரஹத் நிலை வரை விருத்தி செய்தார். அதன் பிறகே தன் சீடர்களுக்கு இந்த தியானங்களை எவ்வாறு செய்ய வேண்டும்? எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும்? என்பனவற்றை மொழிந்தார். ஒருவருக்கு எப்படி தர்மத்தினை போதித்தால் அவர் அதனை உய்த்துணர்ந்து கொள்வாரோ அவ் அவ் முறைகளை பயன்படுத்தி தர்மத்தினை பகவான் போதிப்பார். எனவே தர்மத்தில் குறிப்பிடப்படாத வேறு வேறு குறுகிய எளிய முறைகளை தேடி அலைய வேண்டாம். ஏனெனில் புத்த பகவானை தவிர இந்த தியானங்கள் தொடர்பாக, மனதினை மேம்படுத்தும் முறைகள் தொடர்பாக வேறு யாரும் இதுவரை கூறவில்லை. பகவானிடத்தில் இவை தொடர்பாக இருந்த ஞானத்தினை போன்று வேறு யாருக்கும் இருந்ததில்லை.
மேலதிக திருத்தங்கள் அவசியமில்லை.
எனவே புத்த பகவான் மொழிந்தருளிய தியானங்களாகட்டும் அல்லது போதனைகளாகட்டும் இவற்றிற்கு எவ்வித திருத்தங்களும் அவசியமில்லை. ‘இது இப்படி செய்ய வேண்டும்? இந்த தியானத்தின்போது இதனை நினைக்க வேண்டும்’ என்று மேலதிகமாக சேர்க்க வேணடிய எதுவுமே இந்த தர்மத்தில் இல்லை. காரணம் இந்த தர்மம் ‘சுவாக்காத’ குணம் கொண்டதாகும். அதாவது முழுமையாகவும் முறையாகவும் தெளிவாகவும் மோட்சத்தினையே ஒரே இலக்காகவும் கொண்டு போதிக்கப்பட்டதாகும். நாம் பகவானது தர்மத்தினை திருத்தம் செய்ய முற்படுவதாயின் நாம் புத்த பகவானை மீறிச்செல்வதுடன் பகவானது ஞானத்தினையும் ஏளனம் செய்வதாகவே அமையும்.
பகவான் இந்த சதிபட்டான சூத்திரத்தில் சமதா மற்றும் விபஸ்ஸனா எனும் இரு தியானங்கள் தொடர்பாக மொழிந்துள்ளமையை நாம் முன்னர் கற்றுக்கொண்டோம். அவற்றில் நாம் இதுவரை கற்றுக்கொண்டிருப்பதெல்லாம் சமதா எனும் பகுதியாகும். இந்த சமதா எனும் தியானத்தினை பகவான் மேலும் விரிவாக மொழிந்துள்ளமையை இப்போது நாம் ஆராய்வோம்.
ஏனையோரின் அகமும் இப்படித்தான்.
(இதி அஜ்ஜத்தங் வா காயே காயானுபஸ்ஸீ விஹரதி); ஒருவர் இந்த உள்மூச்சு மற்றும் வெளிமூச்சின் மீது தன் முழுக்கவனத்தினையும் நிலைக்கச்செய்து கொண்டிருக்கிறார். இப்போது அவர், ‘என்னுள் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சின் செயற்பாடு இப்படியானது, இவ்வாறாக அதன் மீது விழிப்புணர்வுடன் இருக்க முடியும்’ என்பதனை உணர்ந்து கொள்வார். (பஹித்தா வா காயே காயானுபஸ்ஸீ விஹரதி) அடுத்ததாக அவர் தன்னுள் (சுவாசத்தினுள்) எவ்வாறு தனது விழிப்புணர்வினை நிலைநிறுத்திக்கொண்டாரோ அதேபோன்று ஏனையோரது உள்மூச்சு மற்றும் வெளிமூச்சி என்பனவற்றிலும் தன்னுடையது போன்றதொரு செயற்பாடே இருக்கிறது என்று ஏனையோர் மீதும் தமது விழிப்புணர்வினை நிலைநிறுத்திக்கொள்வார். அதாவது உங்களுள் எவ்வாறான சுவாச செயற்பாடு இருக்கிறதோ அதேபோன்ற செயற்பாடுதான் எல்லோர் மத்தியிலும் இருக்கிறது எனும் உணர்வாகும். இன்னும் சரளமாக சொல்வதாயின் தன்னுடையதும், ஏனையோரதும் சுவாச செயற்பாட்டின் இயல்பு ஒன்றே என்பதனை நன்கு உணர்ந்து கொள்வார்.
தோற்றம் மறைவு என்பன மீதான உணர்வு
அடுத்ததாக புத்த பகவான் மொழிந்தார். (சமுதய தம்மானுபஸ்ஸீ வா காயஸ்மிங் விஹரதி) இப்போதுதான் இந்த தியானம் விபஸ்ஸனா எனும் பகுதிக்கு திரும்புகிறது, புத்த பகவான் இந்த சதிபட்டான தியானத்தின் ஒரு பகுதியை விபரிக்கும் போது அவற்றினுள் சமதா மற்றும் விபஸ்ஸனா எனும் இரு பகுதியையுமே விபரித்துள்ளமை வியப்பிற்குரியதாகும். நாம் முன்னரும் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சின் மீது கவனம் செலுத்துவதானது காயானுபஸ்ஸனாவிற்கு உரியதாகும். இந்த காயானுபஸ்ஸனத்தினை விருத்தி செய்யும்போது ‘சமுதய தம்மானுபஸ்ஸீ வா’ அதாவது உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவற்றின் தோற்றத்தினை காணுதலே முக்கியமாக அமையும்.
உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவற்றின் தோற்றத்தினை காணுதல் என்று கூறப்படுவதின் அர்த்தத்தினை பகவான் பின்வருமாறு மொழிந்துள்ளார். புத்த பகவான் மொழிந்தார் ஆகாரத்தின் காரணமாகத்தான் இந்த உடல் தோன்றுகிறது. அப்படியாயின் இந்த உடலுக்கு ஏதேனும் போசணை தொழிற்பாடு அவசியமாகிறது. அதேபோல் முழு சம்சாரத்திற்கும் (பிறப்பு, இறப்பு சுழற்சிக்கும்) ஒரு போசணை தொழிற்பாடு அவசியமாகிறது. இந்த போசணை தொழிற்பாடு பரிபூரணமாக இல்லாமல் போய்விடில், அவர் சம்சார பயணத்தில் இருந்து விடுதலை அடைவார். இப்போது இங்கு கூறப்படுவது இந்த உடம்பு தொடர்பானதாகும். ஆகாரத்தினால்தான் இந்த உடல் உருவாகியுள்ளது. எனவே இந்த உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவும் ஆகாரத்தின் காரணமாகவே தோற்றம் பெற்றுள்ளது. இந்த உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு எனும் சுவாசம் நித்தியமானதல்ல. அது காரணங்களினால் தோற்றம் பெறுவதாகும். அதுவே சமுதய தம்மானுபஸ்ஸீ வா எனப்படுகிறது. அதாவது காரணங்களினால் தோற்றம் பெறும் இயல்பிலானது என்பதாகும். ‘வயதம்மானுபஸ்ஸீ வா காயஸ்மிங் விஹரதி’ அதாவது இந்த உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பன இல்லாமல் போகும் இயல்பிலானதாகும். அப்படியாயின் இந்த தியானத்தினை முறையாக செய்யும் ஒருவர் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சின் தோற்றத்தினையும் காண்பார். அழிவினையும் காண்பார். (சமுதய வயதம்மானுபஸ்ஸீ வா காயஸ்மிங் விஹரதி) இந்த உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு எனும் இரண்டினதும் தோற்றம், மற்றும் மறைவு என்பனவற்றை தெளிவாக இனங்கண்டுகொண்டு அவர் காயானுபஸ்ஸனா எனும் தியானத்தில் வாசம் செய்வார். இப்போது இங்கு குறிப்பிடப்படுவதெல்லாம் விபஸ்ஸனா எனும் தியான பிரிவாகும். இவ்வாறாக விபஸ்ஸனாவை பழக்கப்படுத்த வேண்டுமாயின், தர்மத்தினை நன்கு செவிமடுத்து விபஸ்ஸனாவை நன்கு விருத்தி செய்திருக்க வேண்டும். விபஸ்ஸனா என்றால் அநித்தியமானதை அநித்தியமானதாக, துக்கத்திற்குரியதை துக்கமானதாக, ஆத்மமில்லாததை ஆத்மமில்லாததாக காணும் திறமையாகும்.
பிரக்ஞை எவ்வாறு கிடைக்கும்?
விபஸ்ஸனாவின் மூலம்தான் பிரக்ஞை எனும் ஞானம் வளரும் என நான் முன்னரே குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். தனக்கு ஏதேனும் உய்த்துணரும் திறமையை பிரக்ஞை ஏற்படுத்திக்கொடுக்கும். பிரக்ஞை சுயமாக தோன்றுவதல்ல. அதுவும் காரண காரியங்களினாலேயே தோற்றம் பெறும். புத்த பகவானிடம் ஒருவர் (கதங்சு லபதே பஞ்ஞங்) பிரக்ஞை எவ்வாறு கிடைக்கும்? என வினவுகிறார். (சத்தானங் அரஹதோ நிப்பாணபத்தியா) மோட்சத்திற்கு இட்டுச்செல்லும் அரஹத் உத்தமர்களது தர்மத்தினை செவிமடுத்து (சுஸ்சூதா லபதே பஞ்ஞா அப்பமத்தா விபஸ்ஸனா) முறையாக தர்மத்தினை செவிமடுத்து, இடைவிடாத முயற்சியுடனும் வீரியத்துடனும் அறிவினால் ஆராய்பவரே இந்த கம்பீர தர்மத்தினை உய்த்துணர்வார் என மொழிந்தருளினார்.
இதிலிருந்து எமக்கு ஒன்று மிகவும் தெளிவாகிறது. பிரக்ஞை ஏற்படுவதற்கு அரஹத் தேரர்களது தர்மத்தினை செவிமடுப்பது இன்றியமையாத ஒரு காரணியாகும். அதுவே புத்த பகவான் மொழிந்தருளிய உன்னத தர்மமாகும். எவரேனும் கூறலாம், ‘நீங்கள் தியானம் செய்து கொண்டிருங்கள். உங்களுக்கு திடீரென ஞானம் பிறக்கும்’ என்று. தியானம் செய்து கொண்டுபோகும் போது வெறுமனே ஞானம் உதிக்குமானால் புத்த பகவான்மார், யாருக்கும் தர்மத்தினை போதிப்பதற்கு உள்ள அவசியம் என்ன?
புத்த பகவான் தம் சீடர்களான அரஹத் தேரர்களிடம்
‘ஒரு பாதையில் இருவர் பயணிக்க வேண்டாம். சந்திக்கும் அனைவருக்கும் இந்த தர்மத்தினை தெளிவாக போதியுங்கள் (அஸ்ஸவன்தோ தம்மங் பரிஹாயென்தி) தர்மத்தினை செவிமடுக்க கிடைக்காவிடில் மக்கள் மென்மேலும் இழிவானவர்களாவார்கள். (பவிஸ்ஸன்தி தம்மஸ்ஸ அஞ்ஞாதாரோ) தர்மத்தினை உபதேசித்தால் உய்த்துணர்ந்து கொள்வோர்கள் தோன்றுவார்கள்’ என்றே மொழிந்தருளினார். இந்த தர்மத்தினை உய்த்துணர்ந்து அனைத்து துக்கங்களில் இருந்தும் மீள முடியும் என்பதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
விபஸ்ஸனாவினை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
பிரக்ஞையினை விருத்தி செய்து கொண்டு அநித்தியமானதை அநித்திமானதாகவே ஆராயும்போது, உங்களுக்கு துக்கம் என்றால் என்ன? என்பதனை உணர்ந்துக்கொள்ள முடியும். துக்கம் என்றால் என்ன? என்பதனை அநித்தியத்தினை நன்கு உணர்ந்துக்கொண்ட ஒருவராலேயே உணர்ந்துக் கொள்ள முடியும். அநித்தியம் தொடர்பாக வெறுமனே பேசிக்கொண்டிருப்பவருக்கு அதனை உய்த்துணர முடியாது. அதற்காக நீங்கள் உங்களது விழிப்புணர்வினை நன்கு நிலைப்படுத்தி அநித்தியம் தொடர்பாக மனசிகாரம் செய்தல் அவசியமாகும். அப்போதுதான் உங்களால் அநித்தியமானதை அநித்தியமானதாகவே உணரக்கூடிய விழிப்புணர்வு தோன்றும். ஆனாபானசதி தியானத்தினுள் நன்கு அநித்தியத்தினை உணர்ந்து கொள்ளக்கூடிய ஒருவர் (ந ச கிஞ்சி லோகே உபாதியதி) உலகில் எதன் மீதும் பிணைந்து போக மாட்டார் என புத்த பகவான் மொழிந்தார். அதாவது அவர் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு எனும் இரண்டினை அடிப்படையாகக்கொண்டு ‘நான்’ ‘எனது’ ‘எனது ஆத்மம்’ எனும் பார்வைக்கு (வேரூன்றி இருக்கும் எண்ணத்திற்கு) பிணைந்துபோகமாட்டார். அவ்வாறான கருத்துக்கு பிணைந்துபோக மாட்டார். அவர் சுதந்திரமான மனதுடன் இருப்பார். அப்போதுதான் (ந ச கிஞ்சி லோகே உபாதியதி) அவரது மனம் உலகின் எதன் மீதும் பிணைந்திராமல் இருக்கும். அதுவே அவரது ஞானம் மற்றும் விழிப்புணர்வு என்பன மென்மேலும் விருத்தியடைவதற்கு காரணமாக அமையும். இவ்வாறாக புத்த பகவான் மொழிந்தருளிய விதத்தில் ஒருவர் ஆனாபானசதி தியானத்தினை செய்வாராயின் அவருக்கு இந்த வாழ்க்கை தொடர்பான பரிபூரணமான ஞானத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.
தெளிவான இலட்சியத்தினை கொண்டிருங்கள்.
புண்ணியவர்களே, புத்த பகவான் மொழிந்த தர்மத்தில் கீழ்த்தரமான, இழிவான இலக்குகள் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் இந்த தியானங்கள் தொடர்பாக பேசுகையில் சுகாதாரம், ஞாபக சக்தி எனும் விடயங்களை பற்றி பேசுகிறோம். ‘நல்ல சுகாதாரமான வாழ்விற்கு இதனை செய்யுங்கள். ஞாபக சக்தி கூடுவதற்கு அதனை செய்யுங்கள்’ என்றெல்லாம் பேசுகிறோம். இவ் வகையான கருத்துக்கள் மேலேத்தேய நாடுகளில் இருந்து வந்தனவாகும். அரஹத் தேரர்கள் தொடர்பான வரலாறுகள் மேலேத்தேய நாடுகளில் இல்லை. அங்கு புத்தர்மார்கள்; தோன்றுவதில்லை. உள விருத்தி, தியானங்கள், வாழ்வின் யதார்த்தம் என்பன தொடர்பாக பேசியவர்கள் அங்கு இருக்கவில்லை. இந்த மாபெரும் சிந்தனை புரட்சி முழுக்க முழுக்க கீழைத்தேய நாடுகளில் இடம்பெற்றதே. எனவே புத்த பகவானது தர்மம் தொடர்பான இலக்கினை நீங்கள் இனங்கண்டு கொள்வது மிகவும் அவசியமாகும். எனவேதான் நான் அடிக்கடி உங்களுக்கு ‘இந்த தர்மத்தினை செவிமடுக்கும்போதும், பின்பற்றும் போதும், தியானங்கள் செய்யும் போதும் வாழ்வின் யதார்த்தத்தினை உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும். அனைத்து துக்கங்களில் இருந்தும் மீள வேண்டும்’ எனும் எண்ணத்தினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். அப்போதுதான் உங்களுள் உண்மையான வீரியம், விடாமுயற்சி மற்றும் இந்த வாழ்வினை உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும் எனும் பவித்திரமான எண்ணமும
தோன்றும். இதுவரை நாம் ஆனாபானசதி தியானத்தினை அடிப்படையாகக் கொண்டு உளச்சமாதியை ஏற்படுத்திக்கொள்ளும் முறை மற்றும் ஆனாபானசதி தியானத்தினை அடிப்படையாகக்கொண்டு பிரக்ஞையை விருத்தி செய்துகொள்ளும் முறை என்பன தொடர்பான சிறிதளவு விளக்கத்தினை அளித்துள்ளோம்.
பிரக்ஞையை உருவாக்கிக் கொள்ளும் முறையை நீங்கள் அறிந்துகொள்வதற்கு நீங்கள் கீழ் குறிப்பிடுவனவற்றை உணர்ந்துக் கொள்வது அவசியமாகும். இந்த ஆனாபானசதி எனும் தியானத்தினுள் இருப்பது அநித்தியமான மனசிகாரமாகும். உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவையும் அநித்தியமானவையா கும். அதேபோல் இந்த சுவாசம் இயங்கும் உருவம் அநித்தியமானதாகும். நாம் சுக துக்கம் மற்றும் சுகமோ துக்கமோ அற்ற நடுநிலை எனும் அனுபவிப்புக்களை அனுபவிக்கிறோம். உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு எனும் இரண்டினுள் எண்ணங்களைக்கொண்டு சங்ஸ்காரங்களை தோற்றுவிக்கிறோம். இதுவும் அநித்தியம். இந்த உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவற்றினை விஞ்ஞானம் எனும் நுண்னுணர்வினாலேயே அறிந்துகொள்கிறோம். இதுவும் அநித்தியமாகும். நீங்கள் இவ்வாறாக அநித்தியத்தினை சிந்திக்கும்போது அறிவினால் ஆராயும் போது அநித்தியமானதை அநித்தியமானதாகவே காணும் திறன் உருவாகும். (ஆனாபானசதி தியானம் முற்றிற்று)