தன்னுடைய குறைகளை அறிந்துகொண்டவரே அவற்றை நிவர்த்தி செய்துகொள்வார்.
புண்ணியமிக்கவர்களே, பெரிதாக காசு பணம் இல்லாதவர்கள் சோம்பேறித்தனத்தின் காரணமாக இலகுவாக பணம் தேடுவது எப்படி என யோசித்து, அது பாவமோ புண்ணியமோ என்ற விஷயங்கலெல்லாம் ஒதுக்கி எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஒருசிலர் காசுக்காக உயிர்களை கொல்வார்கள். சிலர் திருடுவார்கள். சிலர் தகாத காமத்தில் ஈடுபட்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பார்கள். இன்னும் சிலர் பொய் சாட்சிகள் சொல்லி, வஞ்சனைகள் செய்து பொய் பேசி, புரளிகள், கிசுகிசுப்புகள் சொல்லி அதன் மூலம் காசு தேடுவார்கள். இன்னும் சிலர் சாராயம் வடித்து, சாராயம் விற்று பிழைப்பு நடாத்துவார்கள். இவை எல்லாம் பிழையான ஜீவனோபாய வழிகளாகும். அதாவது பிழையான முறையில் பணம் ஈட்டுவதாகும்.
மக்கள் நல்ல கூட்டமாக சேரும் இடங்களில் திருடுபவர்கள் இருக்கிறார்கள். பஸ்களில், கூட்டங்களில், புகையிரதவண்டிகளில் காசு வைத்திருக்கும் பையை காணாமல் திண்டாடுபவர்களை நீங்கள் கண்டதில்லையா? இத்தகைய திருடர்கள் புத்த பகவான வாழ்ந்திருந்த காலத்திலும் இருந்தார்கள். இந்த கதையில் இத்தகைய இரு திருடர்கள் தொடர்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் தர்மபோதனைகள் செய்யும் இடங்களுக்கு போவார்கள். இவர்களும் வெள்ளை உடுத்திக் கொண்டு பூக்களை எடுத்துக் கொண்டு பக்திமான்களைப் போல ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் தர்மநிகழ்ச்சிகளுக்குச் செல்வார்கள். சென்று அங்கு கூடியிருக்கும் மக்களின் பணப்பைகளை (பர்ஸ்களை) எடுத்துக் கொண்டு மாயமாக மறைந்துவிடுவார்கள். இந்த திருடர்களின் மனைவிமாரும் இந்த தொழிலை மிகவும் பாராட்டினார்கள். இவர்கள் அதிகமாக திருடிய நாட்களில் அந்த மனைவிமார்கள் இந்த திருடர்களை புகழ்ந்து பேசுவார்கள்.
ஒருநாள் இவர்கள் இருவரும் வழமைபோன்று ஒரு தர்ம நிகழ்ச்சியிற்கு திருடுவதற்காக சென்றார்கள். பார்ப்பவர்கள் இவர்கள் இதற்காகத்தான் வந்திருப்பார்கள் என நினைத்துகூட பார்க்க முடியாது. அன்று புத்த பகவான் இனிமையாக தர்மத்தை போதிக்கும்போது ஒரு திருடனது மனம் அந்த தர்மத்தின் மீது கவரப்பட்டது. அவருக்கு வந்த வேலை மறந்துவிட்டது. அவர் மிகவும் தேவையுடன் அந்த தர்மத்தை கேட்டார். திருட வேண்டும் எனும் எண்ணமே இல்லாமல் போய்விட்டது. அவர் மிகவும் கவனிப்புடனும் அவதானத்துடனும் தர்மத்தை நன்றாக கேட்டுக்கொண்டிருந்தார். கர்மங்கள் மற்றும் அதன் பலன்கள், காரண காரிய செயற்பாட்டு முறை, நாற்பேருண்மை என்பன தொடர்பாக அவருக்கு நல்லதொரு புரிந்துணர்வு கிடைத்தது. இவ்வறாக சிரத்தையுடன் ஒருமித்த மனதுடன் தர்மத்தை செவிமடுத்த அவர் முதலாது ஞானப்பேற்று நிலையான சோதாபண்ண நிலையை அடைந்தார். இவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பேரின்ப நிலையை உணர்ந்தார். ‘இனிமேல் சோறில்லாமல் செத்தாலும் பரவாயில்லை. கடுகளவான பொருளைக் கூட இனி நான் திருடமாட்டேன்’ என திடமான இலட்சியத்தினை ஏற்படுத்திக் கொண்டார். வெறுங்கையுடன் ஆனால் ரொம்ப சந்தோஷத்துடன் அவர் அன்று வீட்டிற்கு சென்றார். ஆனால் அவரது நண்பன் அன்றும் வழமைப் போல ஒருவரின் பணப்பையை திருடிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் இரவு திருடியவரது வீட்டில் சோறு சமைத்து சாப்பிட்டு கொண்டிருக்கும்போது திருட்டை கைவிட்டவரது வீட்டில் சாப்பிடுவதற்கு எதுவுமே இருக்கவில்லை. இப்போது திருடாமல் கைகால்களை பயன்படுத்தி உழைக்கும் வழி என்ன என அவர் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு யோசிக்க ஆரம்பித்தார். அவரது மனைவி அவருடன் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.
‘ஐயோ.. ஐயோ.. என்ட புருஷனது முன்னேறத்தை இங்க பார்க்க யாருமே இல்லையா..? சோற்றுபானையும் வயிறும் காலியானதுதான் இவரது முன்னேற்றம்.. தண்ணி தான் சாப்பாடு, ஏதோ ஞானப்பேறு கிடைச்சிருச்சாம்.. அங்கே பார்.. அந்த வீட்டில என்ன சாப்பிடுறாங்க என்டு..!அவர்களுக்குதான் உண்மையான ஞானம் இருக்கிறது. அந்த குழம்போட வாசம் வருதா? ஞானத்தை பயன்படுத்துறன்றது இதுக்குதான். அதவிட்டு இப்படி வெறும்பானைய வைச்சுகிட்டு மேல பார்த்துகிட்டு இருக்கிறதில்ல.
அவர் ஒன்றும் பேசவில்லை. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். பின்னேரம் புத்த பகவானை காண்பதற்காக ஜேதவனராமத்திற்கு சென்றார். பகவானை கண்டு அன்புடன் வணங்கி நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொன்னார்.
நான் அசத்புருஷ வாழ்க்கையே வாழ்ந்தேன். பாவகரமான வாழ்க்கையே வாழ்ந்தேன். பாவ புண்ணியங்கள் தொடர்பாக எவ்வித அறிவும் இருக்கவில்லை. நான் நேற்று தங்களுடைய போதனையை கேட்ட பின்னர் நான் அசத்புருஷன் என்று உணர்ந்து கொண்டேன். என்னை பாவியாக்கியது நான் செய்து கொண்ட கர்மங்களேயாகும். நான் அவ் அனைத்து கர்மங்களையும் கைவிட்டுவிடேன். ஆனால் எனது மனைவி மக்கள் என்னை திட்டுகிறார்கள். திருடிய எனது நண்பன் அவன் செய்த வேலையே அறிவுள்ள வேலை. நான் ஏதோ முட்டாள்தனமாக நடந்துகொள்கிறேன். என சொல்கிறான்’
அச்சமயம் புத்த பகவான் மகா கருணையுடன் இந்த செய்யுளை போதித்தார்.
யோ பாலோ மஞ்ஞதி பால்யங் – பண்டிதோ வாபி தேன சோ
பாலோ ச பண்டிதமானி – ச வே பாலோதி வுச்சதி
எவரேனும் ஓர் அஞ்ஞான மூடன் தன் அறிவின்மையை உணர்ந்துக்கொள்வாராயின் அவர் அறிவாளியாவதற்குக் காரணமாக அமைவது அந்த விடயமே. ஆனால் அஞ்ஞான மூடன் தன்னை ஒரு மகா அறிவாளியைப் போன்று நினைத்துக் கொண்டிருப்பானாயின் அவனை கண்டிப்பாக மகா மூடன் என்றே கூற வேண்டும்.
புண்ணியமிக்கவர்களே, அந்த திருடன் தன் தவறை உணர்ந்து அதிலிருந்து மீள்வதற்கு தர்மத்தை கேட்டதே உதவியாக அமைந்தது. சத்புருஷ தர்மத்தை கேட்கும்போது தன்னைக் காண முடியும். தன் குறை நிறைகளைக் காண முடியும். தான் பாவமிகுந்த நடத்தையை உடையவர், தான் ஒரு அசத்புருஷன் என்பதனை அதன்மூலம் உணர்ந்துக் கொள்வார். இக்கதையில் கூறப்படும் இந்த திருடன் அவ்வாறு உணர்ந்து கொண்டதாலேயே அவர் தன் தவறுகளை நிவர்த்தி செய்துகொண்டார். சரி செய்து கொண்டார். தவறான பாதையிலிருந்து விலகி சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்தார். இதிலிருந்து ஒரு விடயத்தை நன்கு உணரந்துக் கொள்ள முடியும். தீய வழியில் பயணித்த ஒருவரேயானாலும், தான் இதுவரை தவறான வழயிலேயே பயணித்ததை உணர்ந்துகொள்வாராயின் அவர் செய்யவேண்டியதெல்லாம் உடனடியாக அவ் அனைத்தையும் கைவிட்டு சரியான பாதையினுள் பயணிப்பதாகும்.
ஆனால் தவறான பாதையில் பயணிக்கின்ற, தவறுகள் செய்கின்ற, அசத்புருஷ குணம் கொண்ட, கீழ்தரமான குணங்கள் கொண்ட, இழிவான நடத்தைகளுடையவன் தான் செய்யும் இழிவான கேவலமான வேலைகளை அவர் ஏதோ வீரத்தனமான செயல்களாக நினைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருப்பாராயின் அவரை விட முட்டாள்கள் வேறு யாருமில்லை.