ஒரு விவசாயின் கதை
வருந்த நேரிடும் செயல்களை செய்ய வேண்டாம்.
புண்ணியமிக்கவர்களே, கனவிலும் நினைக்காத மாதிரி எமது வாழ்க்கைக்கு பிரச்சினைகள் வரும். பிரச்சனைகள் சொல்லிக்கொண்டு வருவதில்லை. பலர் அம்மாதிரியான பிரச்சினைகளின்போது துவண்டு விழுகின்றனர். அந்த பிரச்சினைகளின் காரணமாக பெரும் அவஸ்தைகளுக்கு ஆளாகின்றனர்.நிரபராதிகளாக இருந்தாலும் தாம் செய்யாத தவறுக்காக நிந்தனைகளும் தண்டனைகளும் அனுபவிப்பவர்கள் இல்லையா?
இந்த கதையும் அப்படித்தான். தான் செய்யாத ஒரு தவறுக்காக மாட்டிக்கொண்ட ஒரு விவசாயின் கதையே இதுவாகும்.
சாவத்திய நகரிற்கு அருகே ஒரு வயல்வெளி இருந்தது. ஒருநாள் ஒரு கள்வர்கூட்டம் நள்ளிரவில் ஒரு சீமானின் வீட்டில் புகுந்து பொற்காசுகளையும் நகைகளையும் திருடிக்கொண்டு இந்த வயல்வெளிக்கு நீர் செல்லும் கால்வாயின் வழியே வயலுக்கு வந்து திருடிய செல்வத்தை பங்கு போட்டுக்கொண்டார்கள். அச்சமயம் அங்கிருந்த ஒரு திருடன் ஏனைய திருடர்களுக்கு தெரியாமல் ஆயிரம் பொற்காசுகள் பெறுமதியான ஒரு பொற்சங்கிலியை தன் பங்கிற்குள் மறைத்துக் கொண்டான். பங்கு பிரித்து கொண்டு அவர்கள் அங்கிருந்து போகும்போது அந்த தங்க சங்கிலி அந்த கள்வனின் பையிலிருந்து கீழே நழுவி விழுந்தது. அதனை அந்த கள்வன் கவனிக்கவில்லை. மறுநாள் காலை பாக்கியமுள்ள புத்த பகவான் மகா கருணையை அடிப்படையாகக் கொண்டு உலகைப் பார்க்கும்போது குற்றமிலாத விவசாயி தண்டனை அனுபவிக்கப்போவதை உணர்ந்து, ஆனந்த தேரரை அழைத்து இவ்வாறு கூறினார்.
‘புண்ணியமிகு ஆனந்த, சாவத்திய நகரருகே இருக்கும் வயல்வெளிப்பக்கம் நாம் இன்று செல்ல வேண்டும். ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று.
இவ்வாறாக புத்த பகவானும் ஆனந்த தேரரும் அந்த வயல் வரப்புகளின் மீது வருகை தரும்போது அந்த வயலின் உழும் விவசாயியும் மண்வெட்டியை தோலில் சுமந்துகொண்டு வயலை நோக்கி வந்து கொண்டிருந்தான். வந்து வயலை கொத்த ஆரம்பித்தான். அவன் அருகிலேயேதான் அந்த ஆயிரம் பொற்காசுகள் பெறுமதியான தங்கச் சங்கிலியும் விழுந்திருந்தது. ஆனால் அதனை அந்த விவசாயி காணவில்லை. வரப்பின் மீது வருகை தரும் புத்த பகவானை கண்ட அந்த ஏழை விவசாயி அன்புடன் பகவானை வணங்கினான். மீண்டும் வயலுக்கு இரங்கினான்.
‘புண்ணியமிகு ஆனந்த, அந்த கொடிய நாகத்தை நீங்கள் பார்த்தீர்களா?’
‘ஆம்.. பகவானே, அதுவென்றால் மிகவும் கொடியதொரு சர்ப்பம்தான்’
அந்த உரையாடலை விவசாயியும் கேட்டான். ”புத்த பகவானும் ஆனந்த தேரரும் பயங்கரமான சர்ப்பம் இருப்பதாக அல்லவா பேசிக்கொண்டார்கள். எங்கே என்று தேடி அதனை இங்கிருந்து விரட்டிவிட வேண்டும்”. என்று நினைத்த அந்த விவசாயி சர்ப்பத்தை தேடி சுற்றும் முற்றும் பார்த்தான். இவ்வாறு பார்க்கும்போது அங்கே கொடியதொரு நாகத்திற்கு பதிலாக ஆயிரம் பொற்காசுகள் பெறுமதியான தங்கச்சங்கிலியை கண்டான். இவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வாயடைத்துபோன விவசாயி அந்த தங்கச்சங்கிலியை கையில் எடுத்து பார்த்து யோசித்தான்.
”ம்ம்.. என்னவொரு அற்புதம், பகவான் பயங்கரமான சர்ப்பம் என இதனைத்தான் சொல்லியிருக்கிறார். இதனால் ஏதேனும் பெரியதொரு பிரச்சினை ஏற்படலாம். இல்லையென்றால் பகவான் அவ்வாறு சொல்லியிருக்கமாட்டார். இதனால் எனக்கு கிடைக்கும் நன்மைகள் ஏதும் இல்லை” என்று நினைத்து அந்த நகையை அங்கேயே போட்டு அதன் மீது மண்ணை வெட்டி மூடிவைத்து தன் வேலையை செய்ய ஆரம்பித்தான்.
நகரில் கடந்த நாளிரவில் நடந்த திருட்டு சம்பவத்தினை அறிந்த அரசசேவகர்கள் திருடர்கள் சென்ற கால்தடங்களை வைத்து அதன் பின்னே பின்தொடர்ந்து வாய்கால் வரை வந்தார்கள். வாய்காலில் இறங்கி வயலுக்கு வந்தார்கள். அங்கே கள்வர்கள் ஒன்றுகூடி இருந்தமைக்கு சான்றுகள் இருந்தன. மேலும் மேலும் அரச சேவகர்கள் சுற்றும் முற்றும் ஆராய ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு சேவகன், ‘அடேய்.. இங்கு பாருங்கள்.. இதோ பொருளிருக்கிறது’
அரச சேவகர்கள் கோபங்கொண்டு அந்த விவசாயியை ”அடேய்.. திருடனே.. இங்கே வா..” என வயலிருந்து இழுத்துகொண்டு வந்து எல்லோரும் சேர்ந்து அடித்தனர். ‘நீ இரவெல்லாம் வீடுகளை உடைத்து திருடி பகலில் வயல் உழுவதைப் போல் நடிக்கிறயா? உன் நடிப்பெல்லாம் இன்றோடு முடிந்தது’ அரச சேவகர்கள் விவசாயின் கைகளை கட்டி கசையால் அடித்து இழுத்துகொண்டு அரசரிடம் போனார்கள். திருடனாக கருதப்பட்ட அந்த விவசாயிக்கு மரண தண்டனை நியமிக்கப்பட்டது. கசையால் அடித்து மரண தண்டனை அளிக்கும் இடத்திற்கு இழுத்துச் சென்றார்கள். வீதியோரங்களில் மக்கள் கூடி இதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த அப்பாவி விவசாயிக்கு தன் பக்க நியாயத்தை சொல்வதற்கு எந்த வழியுமில்லை. எனவே விவசாயி முடிந்தளவு சப்தத்துடன்
‘புண்ணியமிகு ஆந்த, அந்த கொடிய நாகத்தை நீங்கள் பார்த்தீர்களா?’
‘ஆம்.. பகவானே, அதுவென்றால் மிகவும் கொடியதொரு சர்ப்பம்தான்’
என கத்திக்கொண்டு போனான். விவசாயி இதனையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதால் அரச சேவகர்கள் விவசாயிடம், ‘ஏய்.. திருடனே, நீ ஏன் புத்த பகவானிடம் பெயரையும் ஆனந்த தேரருடைய பெயரையும் சொல்லிக் கொண்டு கத்துகிறாய்.. நீ தப்பிக்க தந்திரம் செய்கிறாயா..?’
‘இல்லை.. நான் ஒரு திருடனல்ல. நான் எதையும் திருடவில்லை. அதனை அந்த புத்த பகவான் அறிவார்’ என அழ ஆரம்பித்தான்.
இதனை கேட்ட அரச சேவகர்கள். ‘இவன் ஏன் புத்த பகவானுடைய பெயரை இழுக்கிறான். இதில் வேறெதாவது காரணமும் இருக்க வேண்டும்’ என பேசி மீண்டும் அந்த விவசாயியை அரசனிடம் இழுத்துச் சென்று அரசனிடம் நடந்தவற்றை சொன்னார்கள்.
‘சேவகர்களே, மூவுலகிற்கும் மேன்மையான எமது வழிகாட்டியான புத்த பகவானையே இவன் சாட்சியாக சொல்வதால் இதனை சற்று ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். இப்போதைக்கு இவனை சிறைப்படுத்துங்கள். சாயங்காலத்தில் இவனையும் ஜேதவனராமத்திற்கு கூட்டிச் சென்று விசாரித்துப் பார்ப்போம்.
பின்னேரம் அரசன் புத்த பகவானை தரிசிக்க சென்றார். அந்த விவசாயி கைகள் கட்டப்பட்டு கசையடி பட்டதால் காயங்களுடன் மிகவும் வேதனையுடன் அரசனுடன் சென்றான். அரசர் புத்த பகவானிடம் ‘பகவானே, இவன் ஒரு திருடன். ஆனால் தாங்கள் கூறியதாக ஏதோவொரு கதையை இவன் உலறுகிறான்’
‘புண்ணியமிகு அரசரே, அது உண்மைதான். அந்த பயங்கரமான நாகம் உயிருள்ள உண்மையான நாகத்தை விடவும் கொடியது. அந்த பயங்கரமான நாகத்தின் காரணமாக அப்பாவி மக்கள் துன்புறுகிறார்கள். பெரும்பாலவர்கள் பாவங்களை சேகரித்துக் கொள்கிறார்கள். அந்த பயங்கரமான சர்ப்பம் வேறெதுவுமில்லை. இந்த ஆயிரம் பொற்காசுகள் பெறுமதியான தங்கச்சங்கிலியேயாகும். நான் இதனை ஆனந்தனுக்கு காட்டி ‘புண்ணியமிகு ஆந்த, அந்த கொடிய நாகத்தை நீங்கள் பார்த்தீர்களா?’ என்றேன். அதற்கு ஆனந்த, ‘ஆம்.. பகவானே, அதுவென்றால் மிகவும் கொடியதொரு சர்ப்பம்தான்’ என்று கூறினார். அந்த உரையாடலின் காரணமாகவே இன்று இந்த விவசாயி தப்பித்துக்கொண்டார். அரசரே இந்த விவசாயி திருடனல்ல. அறிவுள்ள ஒருவரால் இத்தகையவற்றை புரிந்துகொள்ள முடியும். இந்த விவசாயி நான் கூறிய கூற்றை தெரிந்துகொண்டார் அல்லவா? இவ்வாறாக சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் அறிவை பயன்படுத்தினால் தாம் ஒருபோதும் கவலைக்குள்ளாக நேரிடாது. என்று புத்த பகவான் இந்த செய்யுளை மொழிந்தருளினார்.
ந தங் கம்மங் கதங் சாது – யங் கத்வா அனுதப்பதி
யஸ்ஸ அஸ்ஸுமுகோ ரோதங் – விபாகங் படிசேவதி
எதேனும் செய்த பின்னர் அது தொடர்பாக பின்வருந்த நேரிடுமாயின், கண்ணீர் சிந்திக்கொண்டு அதன் தீய விளைவுகளை அனுபவிக்க வேண்டுமாயின் அவ்வாறான பாவங்களைச் செய்யக்கூடாது.
புண்ணியமிக்க பிள்ளைகளே, ஏதேனும் செய்த பின்னர் அதனை நினைத்து கவலையடைவதாயின், வருந்துவதாயின் அத்தகைய வேலைகளை ஒருபோதும் செய்ய வேண்டாம். அத்தகைய பாவச் செயல்கள் செய்வதால் நரகத்தில் பிறக்க நேரிடுமாயின் ஒருபோதும் அத்தகைய செயல்களை செய்ய வேண்டாம். ஏதாவது செய்த பின்னர் கண்ணீர் விட்டு அழுவதற்கு நேரிடுமாயின் அதனை செய்வதன் அர்த்தம் என்ன? ஒருபோதும் அத்தகைய செயல்களை செய்ய வேண்டாம். புத்த பகவான் இந்த செய்யுளை போதித்து தர்மத்தை போதித்தார். போதனை முடிவின்போது அந்த விவசாயி முதலாவது ஞானப்பேற்று நிலையான சோதாபண்ண நிலையை அடைந்தார். சோதாபண்ண என்றால் அவர் ஏழு பிறவிகளின் முடிவில் மோட்சத்தை உறுதி செய்பவர். அதேபோன்று அந்த ஏழு பிறவிகளின் ஒரு பிறவியில் கூட நால்வகை நரகங்களில் பிறக்கமாட்டார். புத்த பகவான் அந்த விவசாயின் உயிரையும் காப்பாற்றினார். நால்வகை நரகங்களிலிருந்தும் காப்பாற்றினார். புத்த பகவானுடைய கருணை என்பது அனைவருக்கும் பெரும் சுகமாகும்.