உன்னத நிலையை அடைய வேண்டுமா?

புண்ணியமிக்கவர்களே!

நாம் இன்று கற்பது ‘‘அங்குத்தர நிகாயம் எனும் புனிதமான நூலில் அடங்கியுள்ள ஒரு போதனையாகும். இந்த போதனையின் பெயர் ‘‘அனுத்தரிய” சூத்திரமாகும். அதன் அர்த்தம்தான் உன்னத நிலைக்கு உட்படுத்துவதாகும். புத்தபகவான் அதனை பின்வருமாறு மிக அழகாக மொழிகிறார்.

நாம் எமது வாழ்வில் பல்வேறான இடங்களுக்கு செல்கின்றோம். குளங்கள், வாவிகள், குன்றுகள், மிருகங்கள் என்பனவற்றை பார்க்க செல்கின்றோம். திரைப்படங்களை பார்க்க செல்கின்றோம். உற்சவங்களை பார்க்க செல்கின்றோம். புதுவருட கொண்டாட்டங்களில் கூத்துக்களை பார்க்க செல்கின்றோம். ஆடல் பாடல்களை பார்க்க செல்கின்றோம். இம்மாதிரியாக நாம் பல்வேறுபட்ட விடயங்களை காணச்செல்கின்றோம்.

இவற்றை பார்ப்பதால் என்ன பயன்?

புத்தபகவான் மொழிகிறார். ஒரு சிலர் மூடபார்வைகள் கொண்ட துறவிகளை காணச் செல்கின்றனர் . அவர்களை காண செல்வதால் எமக்கு ஏற்படும் நன்மைகள்தான் என்ன? அதேபோல் ஆடல் பாடல்களை பார்ப்பதாலோ அல்லது மிருகங்களை பார்ப்பதாலோ ஏற்படும் நன்மைதான் என்ன? ஒருசிலர் நாடுகளை, நகரங்களை பார்க்கச் செல்கின்றனர். வேறுசிலர் சமுத்திரங்களை பார்க்கச் செல்கின்றனர். புத்தபகவான் மொழிகின்றார். ‘‘இவ்வாறு பார்க்கச் செல்பவை இழிவானவையாகும், சிறுபிள்ளைத்தனமானதாகும்., போதுஜ்ஜனருக்கே (மும்மணிகளை சரணடையாதவருக்கே) உரித்தானதாகும். (அனரியோ) உன்னதமற்றவையாகும். (அனத்தசங்ஹிதோ) அர்த்தமற்றதாகும்.”

காதலின் சின்னம் ஒரு கல்லறையா?

இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றதொரு கல்லறை இருக்கின்றது. அதுதான் தாஜ்மஹால். புத்தபூமி வணங்குவதற்கு செல்லும் அநேகமான எமது நாட்டவரும் அந்த கல்லறையை பார்க்கச் செல்வார்கள். நானும் ஒருநாள் அந்த கல்லறையை பார்க்கச் சென்றேன். அங்கு சென்றவுடனே நான் ‘‘இதனை பார்ப்பதால் என்ன பயன்?” என்று நினைத்தேன். அன்றிலிருந்து நான் அந்த கல்லறையை பார்ப்பதை விட்டுவிட்டேன். அன்றிலிருந்து நான் எவரையும் அந்த கல்லறையை பார்க்கச் செல்லுமாறு கூறியதில்லை. 25,000 அடிமைகளின் உதவியாலே அந்த கல்லறை கட்டப்பட்டது. அப்பாவி மக்களின்

கண்ணீரினாலேயே கட்டப்பட்டது. ஆனால் அதனை பார்வையிடும் எவருக்கும் இது தோன்றுவதில்லை. அது எதன் சின்னம்? காதலின் சின்னம். அதேபோல் அந்த கல்லறையை போல் இன்னுமொன்றினை உருவாக்க கூடாது என அதனை நிர்மாணித்த பொறியியலாளரின் கண்களும் குருடாக்கப்பட்டன. அப்படியாயின் அது இழிவானதல்லவா? சிறுபிள்ளைதனமானதல்லவா? ஆம் போதுஜ்ஜனருக்கு உரித்தானதாகும். உன்னதமற்றதாகும். தீமைகளை விளைவிப்பதாகும். ஆனால் உலகத்தோரால் வருணிக்கப்படுபவை இவையே! அதற்கு காரணம்தான் அவற்றை விட சிறந்த எதனையும் அவர்கள் அறிந்திராமையாகும்.

பார்க்க வேண்டுமாயின் பாருங்கள்..

புத்தபகவான், ‘‘ஒருவர் புத்தபகவானையோ அல்லது புத்த சீடனையோ காணச்சென்றால் அவர் தனது வாழ்விற்கு அர்த்தத்தை தேடிக்கொள்கிறார். வாழ்விற்கு மிகவும் தேவையானதை தெரிந்து கொள்கிறார்” என மொழிந்தார்.

புத்தபகவானது காலத்திலே ‘‘மிதிலை” எனும் நகரிலே மிகவும் செல்வாக்குடைய மதிப்பிற்குரிய ஒரு அந்தணர் இருந்தார். அவரது பெயர் பிரம்மாயு. அவருக்கு அப்போது 120 வயது நிரம்பியிருந்தது. அவர் 120 வயது வாழ்ந்ததால் அவருக்கு புத்தபகவானை காணும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறில்லாது அவரது ஆயுட்காலம் எண்பதோ அல்லது தொண்ணூறாகவோ இருந்திருந்தால், அவருக்கு அந்த பாக்கியம் கிட்டியிருக்காது.

ஆராய தேவையில்லை. என்னிடம் இருக்கிறது.

இவர் புத்தபகவானை காணச்சென்று பகவானது 32 வகையான மகா புருட இலட்சிணைகளை ஆராய்ந்தார். புத்தபகவான் தனது 32 வகையான புருட இலட்சணங்களையும் அவருக்கு காணச்செய்தார். ஆனாலும் இந்த அந்தணர் புத்தபகவானையே கண்ணிமைக்காது பார்த்து கொண்டு இருந்தார். அப்போது புத்தபகவான் ‘‘புண்ணியமிகு

பிராம்மணரே! நீங்கள் தேடும் 32 வகையான மகா புருட இலட்சணங்களும் என்னிடம் இருக்கிறது. அது தொடர்பாக சந்தேகம் கொள்ளாதீர்கள்.” எனக்கூறினார். அந்த அந்தணரிடம் புத்தபகவான், ‘புண்ணியமிகு அந்தணரே! உய்த்துணர்ந்து கொள்ள வேண்டிய அனைத்தினையும் நான் உய்த்துணர்ந்து கொண்டேன். அழிக்க வேண்டியவற்றை அழித்துவிட்டேன். மனதிலிருந்து நீக்க வேண்டியவற்றை நீக்கி விட்டேன். பூரணப்படுத்த வேண்டிய விடயங்கள் அனைத்தினையும் நான் முழுமையாக பூரணப்படுத்திவிட்டேன். அதனால் நான் ‘‘புத்த” என அறிவீராக’ என மொழிந்தார்.

சந்தேகமின்றி தர்மத்தினை செவிமடுங்கள்.

அதன்பிறகு மீண்டும் புத்தபகவான் அந்த அந்தணரை பார்த்து, ‘‘புண்ணியமிகு பிராம்மணரே! இவ்வுலகிற்கும் மறுவுலகிற்கும் நன்மையை விளைவிக்கும் விடயங்கள் தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் என்னிடம் கேளுங்கள்” என்றார்.

பிரம்மாயு அந்தணன் கண்களால் காணவேண்டிய உன்னதமானதை கண்டார். ஆம் மேன்மை பொருந்திய புத்தபகவானை கண்களால் கண்டார். அவர் புத்தபகவானிடம், ‘‘இவ்வுலகில் பிராம்மணன் என அழைக்கப்படுபவர் யார்? இவ்வுலகில்; ஞானத்தினால் பரிபூரணமடைந்தவர் எனக்கூறப்படுபவர் யார்? இவ்வுலகில்; முழுமையடைந்தவராக கருதப்படுபவர் யார்? புத்த எனப்படுபவர் யார்? முனிவர் எனப்படுபவர் யார்?” எனக்கேட்டார்.

சத்தாயுடன் சரணடைகிறேன்

புத்தபகவான் பின்வருமாறு விபரிக்கிறார். ‘‘ ஒருவருக்கு எல்லைகளற்ற முற்பிறப்புக்களை காண முடியுமாயின், உயிர்கள் மரணிப்பதனையும் மரணித்து சுவர்க்க நரகங்களில் பிறப்பதனையும் காண முடியுமாயின், மனமாசுகளை முற்றாக அழித்தவராயின், அதேபோல் பிறப்பு, இறப்பு எனும் சன்சாரத்திலிருந்து முழுமையாக நீங்கியவராயின் அவரே புத்தர் என அழைக்கப்படுபவராவார்.” என மொழிந்தார். பிரம்மாயு அந்தணர், தான் இப்போது நின்று கொண்டிருப்பது ஒரு புத்த பெருமகன்

முன்னிலையில் என்பதனை உணர்ந்தார். உடனே இருகைகூப்பிய வண்ணம் புத்தபகவானது திருப்பாதங்களில் விழுந்தார். தன் இருகைகளாலும் பகவானது திருப்பாதங்களை வருடிய வண்ணம், ‘‘சுவாமியே! நான்தான் பிரம்மாயு என அழைக்கப்படும் அந்தணன்”,  ‘‘சுவாமியே! நான்தான் பிரம்மாயு என அழைக்கப்படும் அந்தணன்”, ‘‘சுவாமியே! நான்தான் பிரம்மாயு என அழைக்கப்படும் அந்தணன்” என மூன்றுமுறை கூறலானார். புத்தபகவான் அவரை எழச்செய்து உன்னத தர்மத்தினை போதித்தார். இந்த போதனை முடிவுறும் போது பிரம்மாயு அந்தணன் சோவான்ழூ  நிலையை எய்தி இருந்தார்.

வயது வித்தியாசமில்லை.

பிரம்மாயு அந்தணர் புத்தபகவான் உட்பட பிக்குமார்களுக்கு ஏழு நாட்கள் தொடர்ந்து அன்னதானம் வழங்கினார். சிறிது காலத்திற்கு பின்னர் அவர் மரணமடைந்தார். பிக்குமார்கள் புத்தபகவானிடம் அவர் மரணத்தின் பின் எங்கு பிறந்தார் எனக்கேட்டனர். அதற்கு புத்தபகவான் ‘‘பிரம்மாயு அந்தணன் மரணிக்கும் போது அநாகாமி நிலையை அடைந்திருந்தார்” எனக்கூறினார். தனது 120 வது வயதில்தான் பிரம்மாயு அந்தணர் தர்மத்தினை உய்த்துணர்ந்து கொண்டார். புத்தபகவானை கண்டு வெகு நாட்களாகவில்லை. ஆனால் அவர் உத்தம நிலையை அடைந்தார். கண்களால் காணும் விடயங்களில் புத்தபகவான் ஒருவரை காண்பதே உன்னதத்தை தரும். அவ்வாறில்லாவிடில் புத்தசீடரை காண்பதே உன்னதத்தை தரும். இதுதான் தஸ்ஸனானுத்தரியம். அதாவது காண்பதனால் உன்னத நிலையை அடைதலாகும்.

இருளில் கண்டாலும்..

உன்னதமானதை  இருளில் பார்த்தாலும் மேன்மையே! புத்த பகவான், ஒருநாள் தர்மத்தினை போதித்து வரும் வேளையில் இரவுப்பொழுதாகி

விட்டது. பகவான் வருகைதரும் வழியில் குயவர்களுடைய மட்பாண்டங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் வீடுகள் இருந்தன. அவ்வாறானதொரு வீட்டில் ஒரு பர்ணசாலை இருந்தது. அதனைப் பார்த்த புத்தபகவான் அந்த பர்ணசாலையின் உரிமையாளரிடம் ‘‘புண்ணியமிக்கவரே! நான் இன்று இரவு இந்த அறையில் தங்கிக்கொள்ளவா?” எனக்கேட்டார். அதற்கு அந்த குயவன்,  ‘‘சுவாமியே! தாராளமாக தங்கிக்கொள்ளுங்கள்” என அனுமதித்தான். அந்த அறையில் சிறு பாய் துண்டொன்று இருந்தது. புத்தபகவான் அதனை விரித்து அதில் அமர்ந்திருந்தார்.

புத்தபகவானுக்காக துறவு பூண்ட ஒரு மன்னன் இருந்தார். அவரது பெயர் ‘‘புக்குசாதி” அவர் மன்னராக இருக்கும் போது ‘‘இவ்வுலகில் புத்தப்பெருமகன் ஒருவர் தோன்றி தர்மத்தினை போதிக்கிறார்” எனும் செய்தி கிடைத்தது. இவர் அப்போதே தனது அரச பதவியை துறந்தார். தனியாகவே புத்தபகவானுக்காக துறவு பூண்டார். அந்த துறவியும் புத்தபகவான் அன்றிரவு தங்கியிருந்த பர்ணசாலையின் அருகே அமைந்துள்ள பாதையில் சென்று கொண்டிருந்தார். இருள் சூழவும் அவர் எங்காவது தங்குவதற்கு முடிவு செய்தார். அப்போது புத்தபகவான் தங்கியிருந்த பர்ணசாலையை அவரும் கண்டார். இவரும் அந்த குயவனிடம் தங்குவதற்கு அனுமதி கேட்டார். அந்த குயவன்  ‘‘நான் உங்களுக்கு தங்குவதற்கு அனுமதிக்கலாம். ஆனால் நீங்கள் வரும் முன்பு ஒரு துறவி இங்கு வந்து தங்கினார். அவர் அனுமதித்தால் நீங்கள் இங்கு தங்கலாம்” எனக்கூறினார்.

புண்ணியத்தின் சந்திப்பு

புக்குசாதி துறவி புத்தபகவானிடம் ‘‘புண்ணியமிக்கவரே! நான் இங்கு தங்குவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா?” எனக்கேட்டார். புத்தபகவான் ‘‘தாராளமாக தங்கிக்கொள்ளுங்கள்” என அனுமதித்தார். இந்த புக்குசாதி புத்தபகவானுக்காக துறவுபூண்டு புத்தபகவானை காணச்செல்லும் வழியில் தான் இந்த சம்பவம் இடம்பெறுகிறது. அக்காலத்தில் மின்விளக்குகள் இல்லை. இருவரும் இருளில்தான் இருந்தார்கள். அப்போது அந்த புக்குசாதி துறவி அறையில்

ஒருபுறத்தில் பத்மாசன முறையில் அமர்ந்து அமைதியாக இருந்தார். அப்போது புத்தபகவான் அவருடன் பேசவேண்டும் என நினைத்து ‘‘நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?” எனக்கேட்டார்.

‘‘நான் சாவத்திய நகரிற்கு செல்கிறேன்”

‘‘அங்கு எதற்காக செல்கிறீர்கள்?”

‘‘புத்தபகவானை காண்பதற்காக”

‘‘இதற்கு முன்பு நீங்கள் அவரை பார்த்திருக்கிறீர்களா?

‘‘இல்லை”

‘‘ஒருவேளை நீங்கள் அவரை பார்த்தால் இணங்கண்டு கொள்வீர்களா?”

‘‘முடியாது. என்னால் அந்த உத்தமரை இணங்காண முடியாது”

‘‘நீங்கள் துறவு பூண்டது யாருக்காக?”

‘‘நான் துறவு பூண்டது அந்த உத்தமருக்காகவே”

இர்திக்களைழூ காண்பிக்கவில்லை.

அதன் பின்னர் புத்தபகவான், இவர் தனக்காகவே துறவு பூண்டு தன்னை காணும் நோக்கில் வந்தவர் என்பதனை அறிந்து கொள்கிறார். புத்தபகவான், ஏன் இர்திக்களைழூ செய்வதற்கு முயற்சிக்கவில்லை? அப்படி பகவான் செய்திருந்தால் அந்த துறவி புத்தபகவான் மீது ‘‘இவர் என்ன ஒரு மாயாவியா?” என சந்தேகம் கொண்டிருப்பார். பாருங்கள், புத்தபகவானின் உய்த்துணர்வு எப்படியானதென்று. அதன் பின்னர் புத்தபகவான் இவரிடம், ‘‘எனது கருத்துக்களை கேட்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா?” எனக்கேட்டார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவேபுத்தபகவான் அமிர்த்தத்திலும் இனிய தர்மத்தினை மொழிந்தருளினார். அந்த தர்மபோதனை முடிவுறும் போது புக்குசாதி அநாகாமிழூழூ நிலையினை எய்தினார். இறுதியில் புத்தபகவானின் திருப்பாதங்களை வணங்கி, ‘‘பகவானை அறியாமல் ஒரு தோழனுடன் உரையாடுவதை போல் பேசிவிட்டேன். அறியாமையினாலேயே அவ்வாறு செய்தேன்.” எனக்கூறினார்.

இருளில் பார்த்தாலும் சரியானதையே பார்த்தார்.

இருளில் கண்டாலும் உன்னதமானதை அல்லவா கண்டார்? பாருங்கள், நாம் காணும் விடயங்களில் புத்தபகவான் ஒருவரை காண்பதே எம்மை உன்னத நிலைக்குட்படுத்தும். அதேபோல் புத்த சீடர் ஒருவரிடமாவது இந்த தர்மத்தினை செவிமடுக்க கிடைத்தால் அது உன்னத நிலைக்கே வழிவகுக்கும். அதுவே  தஸ்ஸனானுத்தரியம். அதாவது காண்பதனால் அடைகின்ற உன்னத நிலையாகும்.

மனிதர்கள் புழுக்கள் போலாகிவிட்டனர்.

இரண்டாவது விடயம் தான் சவனானுத்தரியம். அதாவது செவிமடுப்பதால் அடைகின்ற உன்னத நிலையாகும். நாம் பாடசாலை செல்லும் பருவத்திலிருந்தே செவிமடுத்து கொண்டிருக்கிறோம். ஆசிரியர்களும் எமக்கு கற்று தருகிறார்கள். நாமும் கற்றுக்கொள்கிறோம், எழுதுகிறோம், இதுவரையிலும் உன்னதமடைந்தோமா? இல்லையே. அதேபோல் நாம் கதைகளை கேட்கிறோம். பேய் பிசாசுக்கதைகளை கேட்கிறோம். இன்னும் எத்தனையோ வகையான கதைகளை கேட்கிறோம். மேன்மையடைந்தோமா? இல்லை. எங்கேயாவது இசை நிகழ்ச்சிகள் நிகழவிருப்பதாக அறிந்தால் அங்கு ஓடிச்செல்கிறோம். மழையில் நனைந்தபடி வெயிலில் காய்ந்தபடி நின்று அவற்றை கேட்கிறோம். அதனால் உன்னதநிலையை அடைந்தோமா? இல்லை. அவற்றை கேட்டு இரண்டு துண்டாக வெட்டப்பட்ட புழுக்களை போல் துள்ளி ஆடுகிறோம். இசை நிகழ்ச்சி இறுதியில் அயர்வும் சோர்வும் மாத்திரமே எஞ்சுகிறது. முடிவில் வீட்டிற்கு வந்து நன்றாக கண்னயர்ந்து விடுகிறோம். அப்படியாயின் இவ்வாறு கேட்டதில் நாம் உன்னதம் அடைந்தோமா? இல்லை.

சிறுபிள்ளைதனமான விடயங்களை கேட்க வேண்டாம்.

புத்தபகவான் மொழிந்தார், ‘‘இம்மாதிரியான விடயங்களை கேட்டாலும் இன்னுமொருவருக்கு கேட்கச்செய்தாலும் அதனால் உன்னதத்தையை பெற முடியாது. அது ஏன்? ஏனெனில் அவ்வாறு கேட்கும் விடயங்கள் சிறுபிள்ளைதனமானவை, இழிவானவை. போதுஜ்ஜனருக்கு உரித்தானவை, தீமைகளை விளைவிப்பவை. இவ்வாறானவற்றினை செவிமடுப்பதால் வாழ்வினை உய்த்துணர முடியாது. வாழ்வினை உய்த்துணர்ந்து கொள்வதற்கு, முழுமையாக துன்பங்களிலிருந்து நீங்குவதற்கும் உன்னதம் பொருந்திய தர்மத்தினையே செவிமடுக்க வேண்டும்”. என்று.

உன்னதமானதை செவிமடுங்கள்.

புத்தபகவான் மொழிந்தார்,  ‘‘ஒருவர் புத்தபகவானையோ அல்லது புத்த சீடரையோ காணச்சென்று அவர்களுக்கு செவிசாய்ப்பாராயின், அவர் உன்னதமானதை அறிந்து கொள்வார்”. என்று.  உன்னதமான விடயம் எது? அதுதான் நாற்பேருண்மைகள். இந்த நாற்பேருண்மைகளை செவிமடுக்க முடியாவிட்டால் அவர் செவிமடுப்பதன் மூலம் உன்னதநிலையை அடையமாட்டார். எமக்கு தெரியும் புத்தபகவானது காலத்தில் எண்ணற்றோர் இந்த தர்மத்தினை செவிமடுத்து உன்னத நிலையை அடைந்தார்கள”; என்று.

எதிர்பாராத வகையிலான சந்திப்பு

புத்தபகவானது, ‘‘சாரிபுத்த மகா தேரர்” மற்றும் ‘‘மொக்கல்லான மகா தேரர்” எனும் உன்னதம் மிகுந்த சீடர்கள் இல்லற வாழ்வின்போது உபதிஸ்ஸ மற்றும் கோலித என அழைக்கப்பட்டனர் (புத்தபகவானை சரணடைய முன்பு இவ்விருவரும் தபசிகளாக இருந்தனர்). அக்காலத்தில் இவர்கள் அநேகமானோரின் கருத்துக்களை கேட்கச்சென்றனர். இவர்கள் அதனால் உன்னதநிலையை அடைந்தார்களா? இல்லை. ஒருநாள் உபதிஸ்ஸ தபசி ஒரு பாதையின் வழியாக பயணிக்கும் போது அமைதியான சாந்தமான நடத்தையையுடைய ஒரு பிக்குவை கண்டார். அவர்தான் அரஹத அஸ்ஸஜி; மகா தேரர். அவர் உணவருந்தி ஓய்வெடுக்கும் நேரம் வரை, உபதிஸ்ஸ தபசி அவரை

பின்தொடர்ந்தார். ஓய்வெடுக்கும் அஸ்ஸஜி தேரரிடம் உபதிஸ்ஸ தவசி பின்வருமாறு வினவுகிறார்.    ‘‘சுவாமியே! தங்களது சாந்தமான நடத்தையை கண்டு நான் மகிழ்ச்சிடைகின்றேன். தங்களது குரு யார்?” என்று. அதற்கு அஸ்ஸஜி தேரர், ‘‘எனது குரு சாக்கிய வம்சத்தவர். அவர்தான் சித்தார்த்த கௌதம சம்மா சம்புத்தபகவான்” என்றார்.

‘‘அவர் என்ன போதிக்கிறார்?”

‘‘எனக்கு விபரிக்க தெரியாது. மிகவும் அண்மைய காலத்திலேயே நான் இந்த புத்த சாசனத்தில் துறவு பூண்டேன்”

ஞானமிருந்தால் ஒரு வார்த்;தை கூட போதும்.

அதனை கேட்ட உபதிஸ்ஸ தபசி ‘‘விபரமாக கூற முடியாவிடில் சுருக்கமாகவேனும் கூறுவீராக” என இரந்து நின்றார். ‘‘அப்படியாயின் நான் சுருக்கமாக கூறும் விடயத்தினை நீங்கள் விபரமாக உணர்ந்து கொள்வீராக” என்றார்.

(யே தம்மா ஹேதுப்பவா) காரணங்களால் தோன்றிய ஏதேனும் இருப்பின் (தேஸங் ஹேது ததாகதோ ஆஹ) அவ்வாறு தோன்றும் விடயத்தின் காரணத்தை புத்தபகவான் கற்றுத்தந்தார். (தேஸங் ச யோ நிரோதோ) அக்காரணத்தை நீக்கும் முறையையும் கற்றுத்தந்தார். (ஏவங் வாதி மஹா சமணோ) அந்த மகா உத்தமர் இதனையே கற்றுத்தருகிறார்.

அதனை செவிமடுத்தவுடனேயே, நாற்பேருண்மைகளை தன்னுள்ளே உய்த்தறிந்து கொள்ளும் பாக்கியம் உபதிஸ்ஸ தபசிக்கு இருந்தது. அப்படியாயின் நீங்கள் இப்போது செவிமடுப்பதன் மூலம் உன்னதமடைவதனை உணர்ந்திருப்பீர்கள். இவ்வாறாக  உன்னத நிலையை அடைய வேண்டுமாயின் காணும் விடயங்களோ கேட்கும் விடயங்களோ சாதாரணமான விடயங்களாக இருக்க முடியாது.

ஆடை மரப்பட்டைகளிலாக இருந்தாலும் ஞானமிருந்தால் பிரகாசிக்கலாம்.

புத்தபகவானது காலத்தில் ‘‘தாருசீரிய” என அழைக்கப்படும் ஒருவர் இருந்தார். மரப்பட்டைகளையே ஆடையாக அணிந்தவர். இதனிலிருந்து நாம் ஒரு விடயத்தை உணர்ந்து கொள்ளலாம். அதுதான் அணிந்திருக்கும் ஆடை முக்கியமானதல்ல. அதன் நிறம் கருப்பானாலும் வெள்ளையானாலும் பரவாயில்லை. ஏன் மரப்பட்டையானாலும் அது முக்கியமில்லை. முக்கியமானது அணிந்திருக்கும் ஆடையா? இல்லை.ஞானம் தான் முக்கியம். ஞானமின்றி பொன்னாடையை அணிந்திருந்தாலும் பயனில்லை. தாருசீரிய என்பவர் பல்லாயிரம் மைல்கள் தொலைவில் இருந்து புத்தபகவானை காண நடந்தே வந்தார். இவர் புத்தபகவான் வசித்திருந்த ஆச்சிரமத்திற்கு வரும்போது புத்தபகவான் காலை உணவிற்காக பிண்டபாதம் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். ‘‘தாருசீரிய” புத்தபகவானை  கண்டவுடனேயே ‘‘நான் தேடும் நபர் இவர்தான்” என அடையாளம் கண்டுகொண்டார். புத்தபகவானை இனங்கண்டு கொண்டு புத்தபகவானிடம் ‘‘சுவாமியே! நான் வெகு தொலைவில் இருந்து தங்களை காண வந்துள்ளேன்… எனக்கு தர்மத்தை உபதேசிப்பீராக” என்று கூறினார்.

எந்நேரத்தில் மரணம் வருமோ தெரியாது.

புத்தபகவான் ‘‘புண்ணியமிக்கவரே! நான் இப்போது உணவிற்காக பிண்டபாதம் செல்லும் நேரம். இப்போது தர்மம் போதிக்கும் நேரமல்ல”, என்றார். அப்போது தாருசீரிய, ‘‘பாக்கியமுள்ள பகவானே! நான் வெகு தொலைவில் இருந்து வந்தேன். எனது உயிருக்கோ அல்லது தங்களது உயிருக்கோ ஏதேனும் ஆபத்து கூட ஏற்படலாம். எனவே அதற்கு முன் தர்மத்தினை போதித்தருளுவீராக!”  என மும்முறை வேண்டி நின்றார். புத்தபகவான் இவரது பாவ புண்ணியங்களை நன்கு ஆராய்ந்து பார்த்தார். இவ்வாறு புத்த ஞானத்தினால் ஆராயும் போது தாருசீரிய என்பவரின் ஆயுள் மிகவும் குறுகிய நேரத்தில் முடிவுறுவதை உணர்ந்தார். ஆனால் இந்த குறுகிய நேரத்தில் தர்மத்தினை

முழுமையாக உய்த்துணரும் திறமை இவரிடம் இருப்பதனையும் உணர்ந்தார். அதனால் சீக்கிரமாக தர்மத்தினை உய்த்துணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் தர்மத்தினை போதிக்க வேண்டும் என பகவான் நினைத்தார்.

நிரந்தரமாக விடுதலை அடைதல்

புத்தபகவான் ‘‘புண்ணியமிகு தாருசீரிய! கண்ணால் கண்டால் கண்டது மாத்திரம்தான். செவிமடுத்தால் செவிமடுத்தது மாத்திரம்தான். நுகர்ந்தால் நுகர்ந்தது மாத்திரம்தான். சுவை அனுபவித்தால் அனுபவித்தது மாத்திரம்தான். உடலின் ஸ்பரிசம் உணர்ந்தால் உணர்ந்தது மாத்திரம்தான். நினைத்தால் நினைத்தது மாத்திரம்தான்.. நீங்கள் ஏதேனும் ஒன்றினை நினைத்தாலோ, எதிர்பார்த்தாலோ அல்லது ஆராய்ந்தாலோ அவை அக்கணமே முடிவுறுகிறது. அங்கு எதும் தோன்றாவிடில் நீங்கள் அங்கில்லை. அவ்விடத்தில் நீங்கள் இல்லாவிடில் அதேபோல் வேறு இடத்திலும் இல்லாவிடில் அதற்கிடையிலும் நீங்கள் இல்லை. அப்போது நீங்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும் முழுமையாக விடுதலை பெற்றவராவீர்கள்,” என மொழிந்தருளினார்.

இவ்வாறு கூறப்பட்ட வார்த்தைகளில்; புதைந்திருக்கும் ஆழம் எத்தகையது என்றால் பாஹிய தாருசீரிய அவ்வார்த்தைகளை கேட்டவுடன் அவ்விடத்திலே நின்று சிந்தனை செய்வதற்கு துவங்கினார். புத்தபகவான் என்ன மொழிந்தார் என்று தன் அறிவினால் பகுப்பாய்வு செய்ய ஆரம்பித்தார். இறுதியில் அவ்விடத்திலேயே உன்னதமான அரஹத்ழூ நிலையையும் அடைந்தார்.

எந்த விடயமானாலும் அறிவினால் ஆராய வேண்டும்.

நாம் இங்கு வரும் புண்ணியவர்களிடம் விழிப்புணர்வு என்றால் என்ன

என்று கேட்டோம். அதற்கு அவர்கள் சுயவுணர்வு என பதிலளித்தார்கள். சுயவுணர்வு என்றால் என்ன என கேட்கும்போது விழிப்புணர்வு என பதிலளித்தார்கள். இதிலிருந்து தெளிவாகும் ஒரு விடயம் தான்; அவர்கள் தர்மத்தினை செவிமடுத்தாலும்  அந்த தர்மத்தினை பகுப்பாய்வு செய்வதில்லை என்பதாகும். செவிமடுத்த விடயங்களோடு திருப்தி அடைந்து விடுகிறார்களே தவிர கேட்ட விடயத்தினை ஆராய்வு செய்வதில்லை. ஆனால் பாருங்கள்,  ஞானமுள்ளவரது வேறுபாட்டினை, சிறு விடயமானாலும் அறிவினால் ஆராய்ந்து விபரமாக பகுப்பாய்வு செய்து இறுதியில் வாழ்வினையும் உய்த்துணர்ந்து கொள்கிறார்கள்.  செவிமடுப்பதன் மூலம் உன்னதமடையும் முறை இதுவே. இதுதான் சவணானுத்தரியம்.இந்த புண்ணியவான்களுக்கு நான் இப்போது இரு விடயங்களை கூறினேன். முதலாவது தஸ்ஸனானுத்தரியம். இரண்டாவது சவணானுத்தரியம்.

கிடைக்கும் விடயங்களில் உன்னதமானது.

மூன்றாவது இலாபானுத்தரியம். அதாவது தனக்கு கிடைக்கும் விடயங்களில் உன்னத நிலையை அடைவதாகும். சிலருக்கு பிள்ளைகள் கிடைப்பார்கள். அவ்வாறு பிள்ளைகள் கிடைத்ததும் ‘‘இந்த உலகிலுள்ள அழகான பெயரை நான் எனது குழந்தைக்கு வைப்பேன்” என நினைப்பார்கள். அதன் பிறகு பிறந்த நேரத்தினையும் எடுத்துக்கொண்டு பெயர் வைப்பதற்கு எழுத்துக்களை அறிந்து கொள்ள அங்கும் இங்கும் ஓடுவார்கள். அதன் பின்னர் ஜாதகத்தினை தயாரிப்பதற்கு ஓடுவார்கள். இவ்வனைத்தினையும் செய்துகொண்டு அரும்பாடுபட்டு வளர்க்கும் பிள்ளைகளினாலே ஒருநாளைக்கு அந்த பெற்றோர்கள் துயரமும் அனுபவிப்பார்கள். தாம் அன்புடன் வளர்த்த பிள்ளைகளினாலேயே அழவும் நேரிடும். சில நேரங்களில் சில தாய்மார்கள் தான் பெற்ற பிள்ளைகளை நினைத்து துயரம் மேலிட்டு ‘‘இந்த பிள்ளைகளை பெற்ற இந்த வயிறுகூட எனக்கு வேண்டாம்” எனக்கூறும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் அந்த குழந்தை பிறந்த அக்கணம் அவ்வாறு நினைக்கவில்லை. பெரும் பாக்கியமாகவே கருதினார்கள்.

சிலருக்கு கணவர்மார்களோ, மனைவிமார்களோ கிடைப்பார்கள். அப்போது ‘‘எனக்கு தான் இவ்வுலகில் மிகவும் நல்ல கணவன் கிடைத்திருக்கிறார்.” ‘‘எனக்குதான் மிகவும் நல்ல மனைவி கிடைத்திருக்கிறாள்” என்று கூறிக்கொள்வார்கள். ஆனால் திருமணம் முடிந்து ஓரிரு மாதங்களில் ஒருவருக்கொருவர் முகத்தை காணக்கூட விரும்பாதவர்களாக மாறிவிடுவார்கள். என்னிடம் ஒரு தாய்  ‘‘ஐயோ சுவாமி, நான் என் கணவரை என் கண்கண்ட தெய்வமாகவே நினைத்து திருமணம் முடித்தேன். ஆனால் நான் அவரால் மிகவும் துயரங்களை அனுபவித்தேன். எனக்கு இப்போது தான் புரிகிறது, நான் தெய்வமாக நினைத்த என் கணவர் என்னுடைய சன்சார பயணத்தில் பின்தொடர்ந்து வந்த ஒரு எதிரி என்பதை”  எனக்கூறினார். பாருங்கள் அவருக்கு கிடைத்ததை. அவருக்கு அது கிடைக்கும்போது அவ்வாறு நினைக்கவில்லை. அப்போது அவர் அதனை சந்தோ’‘மாக ஏற்றுக்கொண்டார். அதேபோல்தான் வீடு, வாசல், நிலம், வாகனம் என்பனவும் கிடைக்கும். கிடைக்கும் போது இன்பமாக அதனை ஏற்றுக்கொண்டாலும் போகப்போக அது பெரும் தலைவலியாக மாறிவிடுகிறது. புத்தபகவான் இவ்வாறு விபரிக்கிறார், ‘‘இவ்வாறு கிடைக்கும் விடயங்கள் இழிவானவை, சிறுபிள்ளைதனமானவை, போதுஜ்ஜனருக்கே உரித்தானதாகும். (அனரியோ) உன்னதமற்றவையாகும். (அனத்தசங்ஹிதோ) அர்த்தமற்றவையாகும்.” என்று.

சத்தா இல்லாவிடில் ஏழையே!

ஆனால் ஒருவருக்கு சத்தா (மும்மணிகள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை) என்பது கிடைக்குமாயின் அதுதான் கிடைக்கும் விடயங்களில் உன்னதமானதாகும். எம் நாட்டில் பெரும்பாலானோருக்கு இந்த சத்தா எனும் விடயம் பொதுவாக இல்லை என்றே கூறலாம். பொதுவாக எமது நாட்டில் ஒரு கருத்து உள்ளது. ‘‘சத்தா கொண்டவன் முட்டாள், ஞானமுள்ளவன் தந்திரமானவன்” என்று. அது தவறாகும். ஒருபோதும் ஞானமுள்ளவன் தந்திரமானவனல்ல. அதேபோல் புத்தபகவான் மீது சத்தா (சத்தா) கொண்டவன் முட்டாளுமல்ல.

இங்கு சத்தா எனக்கூறப்படுவது புத்தபகவானது நிகரற்;ற ஞானத்தின் மீதான அசைக்க முடியாத திடகாத்திரமான நம்பிக்கையாகும். இம்மாதிரியான உறுதியற்ற, நம்பிக்கையற்ற சத்தா இருந்தால் அதுதான் முட்டாள்தனம்.

மர்மமான இரகசிய முறைகள் இல்லை. இங்கு அனைத்துமே வெளிப்படையானவையே!

ஒரு நாள் ஒரு பிள்ளை தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பேசினாள். சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் செய்யும் ஒரு பிள்ளை என்றுதான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இந்த பிள்ளை  ‘‘சுவாமியே! எனக்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஆனால் எனக்கு அதற்கு முகங்கொடுக்க பயமாக இருக்கிறது. வேறு ஏதாவது மந்திர தந்திர மூலமாக என்னை குணப்படுத்த முடியுமா?” என்று கேட்டாள். எவ்வாறு நான் மந்திர தந்திர மூலமாக அந்த பிள்ளையை குணப்படுத்துவது? அதனால் நான் அந்த பிள்ளைக்கு கூறினேன், ‘‘மகளே இந்த வாழ்க்கை தொடர்பாக நீங்கள் சிந்திக்கும் முறை பிழையானது.” என்று. மீண்டும் இந்த பிள்ளை என்னிடம் சத்திர சிகிச்சை இல்லாமல் ஏதேனும் மர்ம முறையில் என்னை குணப்படுத்த முடியாதா? எனக்கேட்டாள். அதற்கு நான் ‘‘எவரும் சத்திர சிகிச்சைகள் செய்வதற்கு விரும்ப மாட்டார்கள். சத்திர சிகிச்சைகளின் போது எமது உடலை வெட்டுவார்கள,; தையல் போடுவார்கள், அதேபோல் மிகுந்த வேதனை அனுபவிக்க வேண்டும். மகள், நீங்கள் மட்டுமல்ல அனைவரும் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளாது குணமடையவே விரும்புவார்கள். அவ்வாறு விரும்புவதால் அப்படி செய்ய முடியாதல்லவா? என்னால் உங்களது உடலை குணப்படுத்த முடியாது. ஆனால் உள்ளத்தை குணப்படுத்த முடியும்” என்று கூறினேன். நான் அவ்வாறு கூறிய விடயங்கள் அந்த பிள்ளைக்கு புரியவில்லை.

ஞானமுள்ளவர்களின் தெரிவு

அதன் பிறகு நான், ‘‘’மகள், வேறு மதத்தை பின்பற்றும் ஒருவர் உங்களிடம், ‘‘வாருங்கள் எங்களிடம் நாம் உங்களை

குணப்படுத்துகிறோம்” என்று கூறினால் அது உங்கள் தேவையை பூர்த்தி செய்வதாக அமையும் தானே’ என்று கேட்டேன். அதற்கு அந்த பிள்ளை எதுவும் கூறவில்லை. நான் மீண்டும், ‘‘அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் நீங்கள் மதம் மாறுவீர்களா?” என்று கேட்டேன். நான் இந்த பி;ள்ளைக்கு மீண்டும் இவ்வாறு விபரித்து கூறினேன். ‘மகள்! தான் பின்பற்றும் சமயத்தினை உடம்பினை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டாம். அறிவை பயன்படுத்தி தெரிவு செய்யுங்கள். எவராயினும் ‘‘உங்களது நோயை குணப்படுத்துகிறேன்” என்று ஏமாற்ற முடியும். அவ்வாறு ஏமாற்றி அவர்களது கட்டுப்பாட்டில் உங்களை வைத்திருக்கவும் முடியும்.  ‘‘நீங்கள் வாக்களித்துள்ளீர்கள் அந்த உறுதி மொழியை மீறினால் உங்களுக்கு துன்பம் மேல் துன்பம் தான் வரும்” என்று கூறி மென்மேலும் அந்த சமயத்திலேயே உங்களை சிறைப்படுத்தி வைக்கலாம். அதனால் அந்த நிலைக்கு நீங்கள் ஆளாக வேண்டாம்’ என்று கூறினேன். அதை கூறிவிட்டு அந்த பிள்ளையின் முகவரியை பெற்றுக்கொண்டு பிரித் செய்யப்பட்ட நூல் ஒன்றினை தபாலில் அனுப்பி வைத்தேன்.

ஏமாற வேண்டாம்.

சத்தா (மும்மணிகள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை) அற்றவர்களின் கதியை பாருங்கள். அவர்கள் தர்மம் எதற்காக உள்ளது?  என்று கூட தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தம்மை பௌத்தர்களாக அறிமுகப்படுத்தி கொள்பவர்கள். இவர்களை எளிதாகவே ஏனையோர்களால் ஏமாற்ற முடியும். பாருங்கள் கிடைக்கும் விடயங்களில் உன்னதமான விடயம் கிடைக்காவிட்டால் எவ்வளவு நஷ்டம் என்று.ஒருநாளும் நோயுறாத வண்ணம் இந்த உடலை வைத்திருக்க முடியுமா? முடியாது. எம்மனைவருக்கும் கட்டாயம் நோய்கள் ஏற்படும். பெரும்பாலும் அந்த நோய்களின் காரணமாகவே எமது மரணமும் நிகழும். எம் அனைவருக்குமே என்றாவது ஒருநாள் குணப்படுத்த முடியாத நோய்கள் ஏற்படும். அந்த நோய்கள் ஏற்பட்டவுடன் எந்த மருத்துவத்தினாலும் குணப்படுத்த முடியாமல் போய் அதன் காரணமாகவே மரணித்தும் போகலாம். ஒருவர்

உள்ளம், உள விருத்தி, குணநலன்கள், ஞானம் என்பவை தொடர்பாக சிந்திக்காமல் இவற்றை தம் வாழ்விலிருந்து தூக்கி வீசிவிட்டு இந்த உடலை  மாத்திரம் கவனத்திற்கொண்டு வாழ்வாராயின்  அவருக்கு இந்த சத்தா எனும் அரிய விடயம் கிடைக்காது போய்விடும்.

நோயற்ற வாழ்வு எப்போதும் இருக்குமா?

நாம் இவ்வாறு சிந்திப்போம். ஒருவர் இவ்வாறு கூறுகிறார் ‘வாருங்கள் நான் உங்களது எல்லா நோய்களையும் குணப்படுத்துகிறேன்’ என்று. பிறந்த உயிர்கள் நோயுறும் என்பதனை உணராத ஞானமற்ற ஒருவர் அந்த கூற்றுக்கு ஏமாறுவார். ஆனால் உயிரினங்கள் நோயுறும் இயல்பினை கொண்டுள்ளன. அதனை நிறுத்த முடியாது, என உணர்ந்த ஒருவருக்கு தடிமன் ஏற்பட்டால் கொத்தமல்லி போன்ற மூலிகைகளை பயன்படுத்தவும் அதைவிட பெரிய நோய்கள் ஏற்பட்டால் மருந்து மாத்திரைகளை எடுக்கவும் முடியும். அவ்வாறில்லாமல் மந்திர தந்திரங்களை தேடியலையமாட்டார்.

நோயுறும் துன்பம் அனைவருக்கும் பொதுவானதே!

புத்தபகவானுக்கு வயிற்றுக் கோளாறு ஒன்று ஏற்பட்டது. ஆனந்த தேரர் அவர்கள் அதனை ஜீவக வைத்தியரிடம் தெரியப்படுத்தினார். ஜீவக வைத்தியர் மூன்று நீல அல்லி மலர்க்கட்டுக்களை புத்தபகவானிடம் கொடுத்தார். கொடுத்து, ‘‘பாக்கியமுள்ள புத்தபகவானே! இந்த நீல அல்லி மலர் கொத்துக்களிலிருந்து ஒரு மலர்கொத்தினை ஒரு முறை நுகர்ந்து பாருங்கள், அப்போது ஒரு முறை வயிற்றுப்போக்கு ஏற்படும். அதன்பின் இரண்டாவது மலர்கொத்தினை ஒரு முறை நுகர்ந்து பாருங்கள், அப்போது இரண்டாவது முறையாகவும் வயிற்றுப்போக்கு ஏற்படும். மீண்டும் மூன்றாவது மலர்கொத்தினை ஒரு முறை நுகர்ந்து பாருங்கள், அப்போது மூன்றாவது முறையாகவும் வயிற்றுப்போக்கு ஏற்படும்” என்று கூறி மூன்று நீல அல்லி மலர் கொத்துக்களையும் கொடுத்தார். பாருங்கள், புத்தபகவானும் மூலிகைகளை பயன்படுத்தியுள்ளார்.

கானல் நீருக்கு ஏமாறுவது போல் ஏமாற வேண்டாம்.

சாதாரண மக்கள் மர்ம முறைகளில் நோய்களை குணப்படுத்த சிந்திக்கும் போது இந்த உடலை அவர்கள் நித்தியமானதாகவே பார்ப்பார்கள். அவர்களுக்கு, ‘‘இந்த உடல் மண்ணாகும் இயல்பினை கொண்டது” எனும் விடயம் மறந்து போகும். ‘‘இந்த உடல் துர்நாற்றம் வீசி அழிந்து போகும் ஒன்று” எனும் விடயம் மறந்துவிடும். இந்த உடலில் இருப்பது மிகவும் அருவருப்பான விடயங்கள் என்பதனை அறியாதவராகி விடுவாரகள்;. இறுதியில் அவருக்கு சத்தா எனும் அரிய விடயம் நிலைக்காமல் போய்விடும். அதற்கு காரணம் என்ன? அவருக்கு வாழ்க்கை தொடர்பான புரிந்துணர்வு இல்லாமையே ஆகும். அதனால் எவராவது நோய்களை குணப்படுத்துவேன், என்று கூறினால் அவர் பின்னே ஓட வேண்டியதுதான்.

மும்மணிகளை சரணடைந்து இறந்து சுவர்க்கத்தில் பிறப்பேன்.

மனிதர்கள் அறிவற்றவர்களாக இருப்பது அழிவையே உண்டாக்கும். முதலாவது இழப்பு தனக்குத்தான் ஏற்படும். அதற்கு காரணம். எந்நேரத்தில் வேண்டுமானாலும் ஏமாறுவதற்கு தான் தயாராக இருப்பதே. காரணம்? அறிவற்ற நிலையே.  அறிவினை பயன்படுத்துபவருக்கு தெரியும் ‘‘இறந்தாலும் பரவாயில்லை, நான் மும்மணிகளை சரணடைந்துள்ளேன். அதனால் சுவர்க்கத்திலேயே பிறவி எடுப்பேன்” என்று. இதுதான் சத்தா (சத்தா) எனும் இலாபம். சத்தா என்பது உன்னதமான இலாபமாகும். கிடைக்கும் விடயங்களில் உன்னதமானது புத்தபகவானின் நிகரற்ற ஞானத்தின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத திடகாத்திரமான நம்பிக்கையேயாகும். பாளி மொழியில் ‘‘சத்தா” எனப்படுவது இவ்வகையான சத்தாவே. இது கண்மூடித்தனமானது அல்ல.

சத்தா (சத்தா) கொண்டவனது அடையாளம்தான் அவர் புத்தபகவானது எல்லையற்ற ஞானம் சத்தியமே என ஏற்றுக்கொள்வார். அவர் மொழிந்த தர்மத்தினை செவிமடுக்கும் போது இது உண்மையே என உணர்ந்து கொள்வார். நான் அண்மையில் ஒருநாள் களுத்துறை பிரதேசத்திற்கு தர்ம போதனை ஒன்றிற்காக சென்றிருந்தேன். ஒரு பத்திரிக்கையில்

பின்புறத்தில் ஒரு மனிதர் விளக்கொன்றினை கையிலேந்தி கொண்டு இருக்கும் ஒரு படம் போடப்பட்டிருந்தது. அது ஒரு விந்தையான விளக்கு ஒன்று என்றும் குறிப்படப்பட்டிருந்தது. அலடினின் அற்புத விளக்கைத்தான் கையில் வைத்திருந்தாரோ, என்று எனக்கு தெரியாது. மேலும் அந்த படத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. விளக்கை கையிலேந்தி இருக்கும் இந்த படத்தை வீட்டில் ஓரிடத்தில் பொருத்தி ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் கௌரவத்துடன் அதன் முன்னின்று ‘‘இதிபிசோ பகவா” (புத்தபகவானது குணங்கள் கொண்ட செய்யுள்) எனும் செய்யுளை சொல்ல வேண்டும்.” என்று. ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமைகளில் அவர் நடத்தும் பிரசங்கங்களுக்கு செல்கின்றனர். இதனை கண்டவுடன் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. ஏன் இப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள?; என்று எனக்கு புரியவில்லை. கேட்கும் மனிதர்களுக்கு சிந்திக்கும் திறமை இல்லையென்றே வைத்துக்கொள்வோம். இவ்வாறு இருக்கும் அப்பாவி மக்களை ஏமாற்றுவது ஒரு மனிதாபிமான காரியமா? இல்லை. நாம் மாறாக அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? சிந்திக்கும் திறமையை வளர்க்க உதவிசெய்ய வேண்டும்.

ஒரு நாளும் முட்டாளாக வேண்டாம்.

நாம் இவ்வாறு நினைத்து பார்ப்போம், ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு போதுஜ்ஜனர். அதாவது தர்மம்  என்றால் என்னவென்பதே அறியாத மும்மணிகளை அறியாத, வாழ்வின் யதார்த்தத்தை அறியாத ஒருவர். நாம் அவரை தர்மத்தில் ஈடுபட வைப்பதற்காக தர்மத்தினை அவர் இருக்கும் நிலமைக்கு கொண்டு வருவது சிறந்த விடயமா? அவ்வாறு செய்வதால் இவர் இருக்கும் போதுஜ்ஜனர் எனும் நிலையிலிருந்து மீளுவாரா? ஒருபோதும் இல்லை. ஆனால் புத்தபகவானது தர்மம் என்பது ஆரிய தர்மம். அதாவது உன்னத மிகுந்த தர்மம். உன்னத தர்மமானதால் நாம் போதுஜ்ஜனரை உன்னத நிலைக்கு கொண்டு வரவே முயற்சி செய்ய வேண்டும். தர்மத்தினை கீழ் நிலைக்கு தள்ளாது, தர்மத்தின் உயர் தரத்திற்கு ஏற்றபடி மனிதனின் அறிவினை

வளர்க்க வேண்டும். இதுதான் மனிதர்களுக்கு செய்யும் மிகப்பெரிய கௌரவமாகும். நான் மேற்கூறிய சம்பவத்தில் என்ன நடக்கிறது? ஒருவர் தன்னை ஒரு உன்னத மிகுந்த ஒருவராகவும், ஏனையோர் தன்னை சரணடையச் செய்வதற்காக  நடித்து, அப்பாவி மக்களின் அறியாமையை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்கிறார். இவ்வாறு அறியாமையால் ஏமாற்றப்படும்போது அவர்கள் ஒருபோதும் அறிவாளிகளாக மாட்டார்கள். இந்த உடலின் மீது மோகம் கொண்டவர்களாக இருப்பார்களே தவிர எண்சீர் மார்க்கத்தையோ அல்லது நாற்பேருண்மைகளையோ கொண்ட தர்மத்தினை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் அவர்களுள் தோன்றாது. பாருங்கள், இப்படிப்பட்டோருக்கு புத்தபகவானது தர்மம் மீதான சத்தா ஏற்படாது. அவர் மர்மமான விடயங்களிலேயே சிக்கி விடுவார். அதன் பிறகு அதிலிருந்து விடுதலை அடைய முடியாது.  இவை தவிர வேறு என்ன நடக்கக்கூடும்?

ஒப்பற்ற புத்த குணங்களையே நினைவுகூர வேண்டும்.

புத்தபகவானது தர்மத்தின் மீது சத்தா இருக்கும் ஒருவர்; புத்தபகவான் அரஹங் குணம் படைத்தவர் என்பதனை ஏற்றுக்கொள்வார். ‘‘அரஹங்” எனப்படுவது மனமாசுகள் (ஆசை, கோபம், அறியாமை) இல்லாத நிலை என்பதாகும். புத்தபகவான், ‘‘சம்மாசம்புத்த குணம”; படைத்தவர். அதாவது தன் சுயமான ஞானத்தினால் நாற்பேருண்மைகளை உய்த்தறிந்தார், என்பதனையும் ஏற்றுக்கொள்வார். இவ்வாறு தன் சுய ஞானத்தினால் உய்த்தறிந்த ஞானத்திற்கேற்ப உன்னதமான சீலத்துடனும் சமாதியுடனும் தம் வாழ்வை நடத்தியவர.; அதாவது ‘‘விஜ்ஜாசரண சம்பண்ண” குணம் படைத்தவர். தெளிவான சுந்தரமான பாதையான எண்சீர் வழியில் பயணித்து பரம சுந்தரமான மோட்சத்தினை அடைந்தவர். அதாவது ‘‘சுகத குணம்” படைத்தவர். புத்தபகவானது ஒப்பற்ற ஞானத்திற்கு உலகில் மறைந்தவை எதுவுமே இல்லை. அனைத்து விடயங்களுமே அவர் அறிந்திருந்தார். தேவ உலகங்கள், பிரம்ம உலகங்கள், நரகம், பிரேத உலகம், மிருக உலகம் , மனித உலகம் எனும் அனைத்து உலகங்களினதும் உண்மை நிலையை

உய்த்தறிந்தவர். ‘‘லோகவிதூ” எனும் குணம் படைத்தவர். ஏனையோரை கட்டுப்படுத்துவதில் உன்னதமானவர். ‘‘அனுத்தரோ புரிசதம்மசாரதீ” எனும் குணம் படைத்தவர்.  தேவர்களதும் மனிதர்களதும் நிகரற்ற குருவானவர். ‘‘சத்தா தேவமனுஸ்ஸானங”; எனும் குணம் படைத்தவர். மகா கருணை கொண்ட ‘‘புத்த” எனும் குணம் படைத்தவர். உலகிலுள்ள அனைத்து விதமான உத்தம குணங்களையும் தன் ஒருவருள்ளே கொண்டிருக்க தகுதியானவர.; ‘‘பகவா” எனும் குணம் படைத்தவர். புத்தபகவானது இவ்வனைத்து குணங்களும் ஒப்பற்றவையாகும். இவ்வாறாக புத்தபகவானது அனைத்து குணங்களையும் புத்தபகவானது தர்மம்  மீது சத்தா கொண்ட ஒருவர் ஏற்று கொள்வார்;;. புத்தபகவானது காலத்தில் ஒரு தம்பதியினர் இருந்தனர். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் அவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.  பெற்றோர் அந்த குழந்தைக்கு ‘‘பத்ர” எனப்பெயர் சூட்டினர். இந்த பெற்றோர் மிகுந்த பாசத்துடன் இந்த குழந்தையை வளர்த்தனர். ஒருபோதும் கீழே இறக்கவில்லை. ஒரு நாள் இந்த பெற்றோர்கள் ‘‘எமது இந்த பிள்ளை செல்வத்திற்கு ஒரு போதும் அழியாத ஒன்றை அளிக்கவேண்டும்” என நினைத்தனர்.

நாமென்றால் எமது பிள்ளைகளுக்கு மணம் முடித்துக் கொடுப்போம். அவ்வாறு திருமணம் முடிப்பவர் மரணிப்பதில்லையா? அழிந்து போவதில்லையா?. அதனால் இந்த பெற்றோர்கள் அழியாத ஒன்றை கொடுக்க வேண்டும், என நினைத்து அவர்களிருவரும் புத்தபகவானிடம் தம் ஒரே மகனை அழைத்து சென்றார்கள். அழைத்து சென்று புத்தபகவானிடம் ‘‘பாக்கியமுள்ள பகவானே! நாம் அரும்பாடுபட்டு இந்த குழந்தை செல்வத்தை பெற்றெடுத்தோம். இவனுக்கு இப்போது ஏழு வயதாகிறது. இவன் மிக மிக மென்மையானவன். மிகவும் சுகத்துடனேயே இவனை வளர்த்தெடுத்தோம். அதனால் நாம் இவனுக்கு ஒருபோதும் அழியாத ஒன்றை கொடுக்க நினைத்தோம். அதனை பகவானுக்கு மாத்திரம் தான் செய்ய முடியும். அதனால் பாக்கியமுள்ள பகவானே! எமது பிள்ளையை தங்களது சீடராக

ஏற்றுக்கொள்வீராக!” என்று கூறி புத்தபகவானிடம் அந்த குழந்தையை ஒப்படைத்தனர்.

ஏழு வயது குழந்தையும் அரஹத் நிலையை அடைந்தது.

புத்தபகவான் அந்த ஆண் பிள்ளையை ஏற்றுக்கொண்டு  ஆனந்த தேரரிடம் ‘‘புண்ணியமிகு ஆனந்த! இந்த குழந்தையை உடனே துறவு பூணச்செய்யுங்கள். இந்த குழந்தை ஒரு மகா புருஷோத்தமர் ஆவார்” எனக் கூறினார். ஆனந்த தேரரும் இந்த குழந்தையை காலை வேளையில் துறவு பூணச்செய்தார். அன்று நண்பகல் வேளையில் அக்குழந்தை உன்னதமான அரஹத் நிலையை எய்தினார். மாலைப்பொழுதில் புத்தபகவான் ‘‘புண்ணியமிகு பத்ர! இங்கு வாருங்கள்” என அழைத்தார். அதுவே அவரது உபசம்பதாவாகழூ அமைந்தது. பாருங்கள்! புண்ணியவர்களே!  ஏழு வயது குழந்தையின் திறமையை.  புத்தபகவானது ‘‘அனுத்தரோ புரிசதம்மசாரதி” எனும் குணம் என்பது சிறிய விடயமா? இல்லை. எமக்கு ஏழு வயது குழந்தை ஒன்றுக்கு சோறு ஒருபிடி ஊட்டிக்கொள்ள முடியாது. அந்த சோற்றுப்பிடியை ஊட்டுவதற்கு எத்தனை பொய்கள் சொல்லுகிறோம்? இந்த விடயத்திலிருந்தும் எம்மால் புத்தபகவானது ‘‘அனுத்தரோ புரிசதம்மசாரதி” எனும் குணத்தின் மகிமையை உணர்ந்து கொள்ளக்கூடியாதாக இருக்கிறது.

இவை தொடர்பாக சந்தேகம் ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்.

புத்தபகவான் மீது சத்தா கொண்ட ஒருவருக்கு இவற்றை கேட்டாலும் சந்தோ’‘ம்தான். அவர் புத்தபகவானது குணங்களை நினைவுகூருவார். புத்தபகவானது இன்னுமொரு  குணம்தான்                                ‘‘சத்தா தேவமனுஸ்ஸானங்” எனப்படுவது. அதன் பொருள்தான் புத்தபகவான் அறிவுள்ள தேவர்களினதும் மனிதர்களினதும் பரம குருவானவர் என்பதாகும். இதனை அறியாத மூட மக்கள் ‘‘தேவர்களுக்கு தர்மத்தினை உய்த்துணர முடியாது” என்று கூறி புத்தபகவானது

உன்னத குணத்தை இழிவுபடுத்துகின்றனர். தேவர்களுக்கு தர்மத்தினை உய்த்துணர முடியாவிடில் புத்தபகவான் எவ்வாhறு தேவர்களினதும் மனிதர்களினதும் பரம குருவாவார். சத்தா கொண்டவர் ஞானமுள்ளவரே. அவர் சரியான முறையில் சிந்திப்பார். புத்தபகவான் தேவலோகத்திற்கு ஸ்தூல உடலோடும் செல்வார். மனோமய உடலினாலும் செல்வார். அதனை புத்தபகவானே போதித்துள்ளார். புத்தபகவான் சில சமயங்களில் தேவர்களாலும் தம்மை இனங்காண முடியாதபடி தேவர்கள் மத்தியிலிருந்து, தேவர்களுக்கு தர்மத்தினை போதிப்பார்.

மோட்சத்தினை உறுதி செய்த தேவர்கள்.

தேவர்கள்தான் புத்தபகவானிடம் மங்கல விடயங்களை கேட்டிருக்கிறார்கள். ‘‘பராபவ சூத்திரம்”, ‘‘வசல சூத்திரம்”, ‘‘மகா மங்கல சூத்திரம்” போன்ற பல  சூத்திரங்கள் தேவர்கள் வினவிய வினாக்களுக்கு விடைகளாக போதிக்கப்பட்டவையாகும். புத்தபகவானது தர்மம் மனிதர்கள் மத்தியில் மேலோங்க தேவர்கள் மிகவும் முயற்சி செய்திருக்கிறார்கள். தர்மத்தினை உய்த்துணர்ந்த எண்ணற்ற தேவர்கள் இருக்கின்றனர். பெரும்பாலான தேவர்கள் புத்தபகவானிடம் வந்து தர்மத்தினை செவிமடுத்து மோட்சத்தினை உறுதி செய்திருக்கின்றனர்.

ஒரு நாள் ஒரு தேவர் புத்தபகவானிடம் தர்மத்தினை செவிமடுக்க வந்தார். இவர் புத்தபகவானை கண்டதும் தன்னிலை மறந்தார். தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதனையும் மறந்துவிட்டார். நிலத்தில் நிற்க முயற்சித்தாலும் அவரால் நிற்க முடியவில்லை. எண்ணையை நிலத்தில் இட்டது போல் நிலத்திற்குள் மூழ்கி விடுகிறார். புத்தபகவான் இதனை கண்ணுற்று ‘‘புண்ணியமிகு தேவனே! விரைவாக ஸ்தூல உருவத்தை தோற்றுவித்து கொள்ளுங்கள்.” என்றார். அதனை செவிமடுத்த பின்புதான் அந்த தேவனுக்கு சுய உணர்வு வந்தது. புத்தபகவானை காணும் போது தேவர்களும் தன்னிலை மறந்திருக்கிறார்கள்.

முழு உலகிற்கே

பத்தாயிரம் உலக மண்டலத்திற்கும் ஒரே ஒரு புத்தபகவான்தான் தோன்றுவார். நான்கைந்து புத்தர்மார்கள் ஒரே சமயத்தில் தோற்றம் பெற மாட்டார்கள். அதனால் இவ்வுலகத்தோருக்கு இருக்கும் மிக அரிதான அதிஷ்டம் தான் அவ்வாறு தோன்றும் புத்தபகவான் மீது சத்தா கொள்ளுதல் என்றால் அது மிகையாகாது. சத்தா எனும் இலாபம் இருக்கும் ஒருவர் புத்தபகவானை நினைவு கூருவார். அதுமட்டுமல்ல தர்மத்தினையும் நினைவுகூருவார். முழுமையாக போதிக்கப்பட்ட இந்த தர்மத்தில் அடங்கியுள்ளது என்ன? நால்வகை விழிப்புணர்வுகள்ழூ (சத்தாரோ சதிபட்டானோ) நான்கு வகையான வீரியம்ழூ, நான்கு வகைப்பட்ட இத்தி பாதங்கள்ழூ, பஞ்ச இந்திரியம்ழூ, பஞ்ச பலம்ழூ, எழுவகை போதி அங்கங்கள்ழூ, எண்சீர் மார்க்கம்ழூ. இவற்றையே புத்தபகவான் முழுமையாக போதித்தார். இந்த தர்மத்தில் தனது உடம்பினை அசுபமான ஒன்றாக நினைத்து செய்யும் தியானங்கள், தனது உடலை நால்வகை தாதுக்களாக பார்க்கும் தாது மனசிகார தியானம், ஒரு பிணத்திற்கு உவமைப்படுத்தி செய்யும் நவசீவதிக தியானம் போன்ற தியானங்களும் உள்ளடங்குகின்றன.

இரும்பின் துருவே இரும்பை அழிக்கும்.

நம் நாட்டு மக்கள், ‘‘ஐயோ!..இந்த மாதிரியான தியானங்கள் இல்லற வாழ்வை வாழ்பவர்கள் செய்ய கூடாது. இல்லற வாழ்வினை கொண்டவர்கள்; எப்படி வீடுபேறு அடைய முடியும்? இவற்றை செய்யாதீர்கள். குடும்பங்கள் கலைந்துவிடும், தியானம் செய்யாதீர்கள் பைத்தியம் பிடிக்கும்” என்றெல்லாம் கூச்சலிடுகிறார்கள். குடும்பங்கள் களையுமென்றால், தியானம் செய்து பித்து பிடிக்குமென்றால் அது முழுமையாக போதிக்கப்பட்ட தர்மமா? இல்லையே. இப்படிப்பட்டவருக்கு சத்தா எனும் இலாபத்தை உருவாக்கி கொள்ள முடியாது. இல்லறத்தோர் மட்டுமல்லாது சீவரம் தரித்த சில பிக்குமாரும் இப்படி கூறுகிறார்கள். இவர்களால் ஒருபோதும் புத்தபகவானது தர்மத்தின் மீது சத்தாவை ஏற்படுத்தி கொள்ள முடியாது.

இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

நான் ஒருநாள் தர்ம போதனை ஒன்றிற்கு சென்று அசுப தியானத்தை கற்றுக்கொடுத்தேன். அந்த போதனையின் இறுதியில் ஒருவர் என்னிடம் வந்து இவ்வாறு கூறினார். ‘சுவாமியே! என்னிடம் ஒருவர்   ‘‘அசுப தியானத்தை மட்டும் செய்துவிடாதீர்கள். திருமணம் முடித்த ஒருவர் இந்த தியானத்தை செய்தால் அந்த குடும்பம் பாழாகிவிடும்.” என்று கூறினார்.  அப்படியாயின் இந்த தர்மம் பரிபூரணமாக போதிக்கப்பட்டதல்லவே’ என்று. நான் அவரிடம் இவ்வாறு கூறினேன். ‘‘நீங்கள் கூறுவது மிகவும் புதுமையான விடயமல்லவா?

பத்து பதினைந்து நிமிடம் ஒருவர் கண்களை மூடி அசுப தியானத்தை செய்து குடும்பம் பாழாகிவிடுமென்றால், உயர்தரம் படிக்கும் பிள்ளைகளை வைத்திய கல்லூரிக்கு அனுப்பாதீர்கள். ஏன் சிறிது நேரம் கண்களை மூடி அசுப தியானத்தை செய்வதால் குடும்பம் பாழாகிவிடுமென்றால் அங்கு சென்று பற்களை சுத்தம் செய்யும் போது வாய் நாற்றம் வீசும், அழுகிய பிணங்களை வெட்டி பரிசோதனை நடத்த வேண்டும். நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகளை செய்ய வேண்டும். இவற்;றையெல்லாம் கண்களால் பார்த்து குடும்பம் பாழாகிவிடுமென்றால், அனைவரும் துறவு பூணுவார்கள். அதனால் வைத்திய கல்லூரிகளுக்கு பிள்ளைகளை அனுப்பாதீர்கள்” என்று கூறினேன். இந்த உடலின் உண்மை நிலையை கண்ணால் பார்ப்பதனால் ஒன்றும் இவ்வாழ்க்கை வெறுத்து விடாது. குறைந்த பட்சத்தில் வைத்தியசாலைகளில் தொழில் புரிவோர் ‘‘நாமும் ஒரு நாள் மரணிப்பவர்கள்” என்பதனை உணர்ந்தாலாவது செனலிங் கட்டணத்தையாவது குறைப்பார்கள்.  மருந்துகளும் இவ்வளவு விலையேறாது. வைத்தியரிடம் ஒரு நோயாளி வந்தால் அந்த நோயாளியை இரண்டு நிமிடங்கள் கூட பரிசோதனை செய்யவதில்லை. அடுத்த நோயாளியை பரிசோதிப்பதற்கு முற்படுவார். இந்த அசுபம் தொடர்பாக அவர் அறிந்திருந்தால் 15 நிமிடமாவது ஒரு நோயாளியை பரிசோதிப்பார். கருணையுடன் மருந்து கொடுப்பார். வேலை நிறுத்த போராட்டங்களைச் செய்யமாட்டார். நோயாளிகள் மீது கருணைகொண்டு

அன்புடன் பராமரிக்கும் வைத்தியர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகவும் சொற்பமான எண்ணிக்கையானோரே.

அசுபமான விடயங்கள் அசுபமானவையே!

நாம் அசுப தியானத்தை சற்று நேரம் செய்வதால் வாழ்க்கை வெறுத்துவிடுமா? இல்லை. நான் அவருக்கு புரியும் படியாகவே கூறினேன். ‘‘சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு முடி, மயிர், நகம், பற்கள்…..  இவை அழுக்காகும்’‘ என்பதனை நினைவுகூறுவது தகாது என்றால், நீங்கள் மலசலகூடத்திற்கும் செல்ல வேண்டாம். ஏன் அங்கு போனதும் தன்னுடைய அசுபமான விடயத்தைதானே காண வேண்டும்.” என்று. இவ்வாறு கூறியவுடன் தான் அவர் அதர்மத்தின் இயல்புகளை உணர்ந்து கொண்டார். ‘‘ஆ! அசுப தியானத்தை செய்ய கூடாது” என்று இவ்வளவு நேரமும் அவர் எதனை   தூற்றி பேசினார்? புத்தபகவானது தர்மத்தினையே! நாம் நினைத்தாலும் இல்லாவிடிலும் தியானம் செய்தாலும் செய்யாவிடிலும், அது தொடர்பாக பேசினாலும் இல்லாவிடிலும் அசுபமான விடயம் அசுபமே. இது தான் சத்தியம்.

உடம்பிற்கு ஏமாறாதீர்கள்.

இப்போது நீங்கள் நினைத்து பாருங்கள். மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நாம் பற்களை துலக்காது இருக்கிறோம் என்று. எம் வாய் நாற்றத்தை எம்மால் பொறுத்துக்கொள்ள முடியுமா? முடியாது. எவருடனாவது எம்மால் வாய் திறந்து பேச முடியுமா? முடியாது. மூன்று நாட்களுக்கு முகம் கழுவாமல், குளிக்காமல் இருந்தால் எவ்வளவு நாற்றமாக இருக்கும் என்று நினைத்து பாரக்க முடியுமா? நாம் இவ்வாறு நினைத்து பார்ப்போம். நாம் உண்ணும் உணவில் எமது தலையில் இருக்கும் ஒரு முடி இருந்ததென்று. அதனை கறிவேப்பிலையை ஒதுக்கி வைப்பதை போல் பீங்கானில் ஒரு புறத்தில் வைத்துக்கொண்டு எம்மால் சாப்பிட முடியுமா? முடியாது. தர்மம் என்றால் என்னவென்பதை அறியாத ஒருவர் கூட அப்படிச்செய்ய மாட்டார். இதன் மூலம் நாம் அசுபமானவை அசுபமானவையே என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இந்த உண்மையை உணர முடியாதவர்களால்

சத்தாவை (சத்தாவை) ஏற்படுத்திக் கொள்ள முடியாது.

உங்கள் உள்ளத்திலிருக்கும் பகைமை உங்களையே அழிக்கும்.

‘‘மாகந்தியா” அரசிக்கு ஏற்பட்ட நிலையை அறிவீர்கள்தானே?  புத்தபகவான் இவ்வுடலை ஒரு மலம் நிரப்பிய ஒரு மட்பாத்திரத்திற்கு உவமித்துள்ளார். அது அசத்தியமா? இல்லையே. மாகந்தியா தன் உடலை பெறுமதியானதாக நினைத்தாள். அதனால் புத்தபகவான் மீது பகைமை கொண்டாள். ஆனால் அவளது பெற்றோர் சத்தியத்தை உணர்ந்தனர். அவர்கள் இறுதியில் வீடுபேற்றினையும் அடைந்தனர். ஒருவருக்கு சத்தா உருவாக வேண்டுமாயின,; அவருக்கு புத்தபகவான் மீது, தர்மத்தின் மீது மற்றும் ஆரிய சங்கத்தினர் மீதும் சத்தா உருவாக வேண்டும்.

இன்னும் முட்டாள்தனத்திற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லையே!

ஒருநாள் ஒரு தாய் என்னிடம் வந்து , ‘‘நீங்கள், சன்சாரத்தில் பயணிக்க வேண்டாம், என்று கூறுகிறீர்கள். அப்படியென்றால் புத்தபகவான் கூட இந்த சன்சாரத்தில் பயணித்தவர் தானே! அப்படியாயின் நாம் பயணித்தால் என்ன?” என்று கேட்டார். பாருங்கள், இந்த கேள்வியை என்னிடமே வந்து கேட்கிறாரே! நான் ‘‘சரி நீங்கள் பயணியுங்கள்..” என்று கூறினேன். அவ்வாறு கூறவும் தேவையில்லை. எப்படியும் பயணிப்பார்கள். ‘‘ஐயோ! சன்சாரத்தில் பயணிக்க வேண்டாம்” என இழுத்து எம்மால் நிறுத்த முடியாதல்லவா? தர்மத்தில் பிறப்பு இறப்பு எனும் சன்சாரத்தை ஒரு பயங்கரமான வெள்ளப்பெருக்கிற்கு உவமைப்படுத்தியே புத்தபகவான் மொழிந்துள்ளார். பயங்கரமான வெள்ளத்தில் அடித்து செல்லும் ஒருவர் நாம் தடுத்தாலும் இல்லாவிடிலும் அடித்தே செல்லப்படுவார்.

சன்சாரத்தில் பயணிப்பது மிக மிக இலகுவானதாகும்.

‘‘நீங்கள் சன்சாரத்தில் பயணிக்க வேண்டுமாயின் ஒரு சிறு விடயம் தான் செய்ய வேண்டும். ஆசை, வெகுளி, வஞ்சனை காமம் என்பன

தோற்றுவிக்கும் எண்ணங்கள் மனதில் எழும் போது அவற்றை தடுக்க வேண்டாம். பொறாமை, பழிவாங்கும் குணம், குரோதம், அகந்தை, பகைமை எனும் குணங்களை நன்றாக மனதில் தேக்கி வைத்து கொண்டு நன்றாக சாப்பிட்டு, குடித்து, நன்றாக நித்திரை செய்து கொண்டிருங்கள். இவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு சன்சாரத்திலே பயணித்து கொண்டிருக்கலாம். எவ்விதமான தடையும் இல்லை” என்று கூறினேன்.

நாம் எமது வாழ்வில் மேற்கூறிய விடயங்களுக்கு மாறுபட்ட விடயங்களை தோற்றுவிக்கவே முயற்சி செய்கிறோம். ‘‘மோட்சத்தினை நீங்கள் விரும்பாவிட்டால் சன்சாரத்திலேயே பயணிக்க வேண்டுமாயின் இவற்றை செய்து கொண்டிருங்கள்.” என்று கூறினேன். பாருங்கள் சத்தா என்பது கடுகளவேனும் இருக்கிறதா? என்று.

அடித்தளம் உறுதியானதாக இருக்க வேண்டும்.

சத்தா என்பது சிறு விடயமல்ல. அது வாழ்வின் மிகப்பெரியதொரு உந்துதலாகும். அந்த உந்துதல் சத்தாயினாலேயே துவங்குகிறது. அதுதான் ‘‘சத்தானுசாரி” எனப்படுகிறது. சத்தாவை அடிப்படையாக கொண்டுதான் துக்கத்திலிருந்து மீளலாம். சத்தா இல்லாவிடில் வாழ்வினை உய்த்துணர முடியாது. சத்தா உள்ளவர் புத்தர் ஒரு சம்மா சம்புத்தபகவான் என்பதனை அறிவார். மோட்சத்திற்கான இந்த தர்மத்தினால் நாற்பேருண்மைகளை உய்த்துணரலாம் என்பதனையும் இந்த தர்மத்தில் பயணித்து மோட்சத்தினை உறுதி செய்த புத்த சீடர்கள் இருந்தார்கள், என்பதனையும் ஏற்றுக்கொள்வார். அதேபோல் நானும் இந்த தர்மத்தின் படி வாழ்ந்தால் என்னாலும் அந்த வீடுபேற்றினை அடைய முடியும் என்பதனையும் ஏற்றுக்கொள்வார்.

இந்த  சத்தாவை அடிப்படையாக கொண்டு அவர் தர்மத்தை ஏற்று அதன்படி தன் வாழ்வினை நடத்துவார். இவ்வாறானவரே சத்தானுசாரி என அழைக்கப்படுவார். இந்த சத்தானுசாரியானவர்தான் தம்மானுசாரி எனும் நிலையை அடைவார். அதாவது அவர் முன்பை விட மென்மேலும் தர்மத்தினை பழக்கப்படுத்துவார்.

அநித்தியமானதை அநித்தியமானதாகவும் துக்கத்தை துக்கமாகவும் அறிவால் ஆராய்வார். தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத விடயங்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதவையாகவே (அநாத்மமாகவே) அறிவால் ஆராய்ந்து கொண்டிருப்பார். இவ்வாறாக தர்மத்தினை பழக்கப்படு;த்தும் தம்மானுசாரிழூ நிலையில் உள்ளவரே சோதாபண்ணழூழூ நிலையை அடைவார்.

இவற்றை ஏன் பாராட்டுகிறீர்கள்.

அடுத்த விடயம் தான் சிக்கானுத்தரியம். அதாவது கற்றுக்கொள்ளும் விடயங்களில் உன்னதத்தை தருவது. நாம் பல விடயங்களை கற்றுக்கொள்கிறோம். கணனி, தையற்கலை, சமையற்கலை, கட்டிடற்கலை, என்பன கற்கின்றோம். வாகனங்களை திருத்துவதற்கு கற்றுக்கொள்கிறோம், பல்வேறு தொழிநுட்ப முறைகளை கற்றுக்கொள்கிறோம், விவசாயம் செய்யும் விதங்களை கற்றுக்கொள்கிறோம், மருந்து, மூலிகைகள் தொடர்பாக கற்றுக்கொள்கிறோம், ஆனால் இவற்றை கற்பதால் நாம் ஒரு நாளும் வாழ்வினை உய்த்துணர மாட்டோம். துக்கத்திலிருந்து விடுதலையடைவும் மாட்டோம்.

சீல, சமாதி, ஞானம் என்பன விருத்தி செய்யும் முறையையே கற்க வேண்டும்

புத்தபகவான், ‘‘சீலத்தினை பாதுகாக்கும் முறையை கற்றுக்கொள்ளுங்கள், உளச்சமாதியை வலுப்படுத்தும் முறையை கற்றுக்கொள்ளுங்கள், ஞானத்தினை விருத்தி செய்யும் முறையினை கற்றுக்கொள்ளுங்கள்” என மொழிந்துள்ளார். இவைதான் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள். புத்தபகவான் தன் சீடர்களுக்கு சீலம், சமாதி, ஞானம் என்பன விருத்தி செய்யும் முறையை கற்றுக்கொடுத்திருக்கிறார். துக்கத்தினை உய்த்துணரல், துக்க தோற்றத்தினை அழித்தல், துக்க நிவாரணத்தை உறுதி செய்தல், அதற்கான வழியில் பயணித்தல் எனும் விடயங்களை தெட்டத்தெளிவாக விளக்கி கற்றுக்கொடுத்திருக்கிறார்.

இந்த உத்தம விடயங்களை கற்றுக்கொள்ளுமாரும் கூறியிருக்கிறார். இந்த விடயங்களை கற்றுக்கொள்ளுவதால் ஒருவர் உன்னத நிலையை அடைய முடியும். இது சிக்கானுத்தரியம். வேறு எந்த விடயங்களை கற்றாலும் அதனால் ஒருவர் உன்னத நிலையை அடையமாட்டார். எண்சீர் மார்க்கத்தில் தம்மை நெறிப்படுத்துவது எவ்வாறு என்பதை கற்றுக்கொள்ளும் ஒருவருக்குதான் உன்னத நிலையை அடைய முடியும். வேறு எந்த முறையிலும் ஒருவர் உன்னதநிலையை அடைய முடியாது. இந்த கல்விதான் இவ்வுலகில் கற்கும் கல்வியில் உன்னதமான கல்வி. பாருங்கள் அறிவுள்ள ஒரு மனிதனுக்கு புத்தபகவானது தர்மத்திலிருந்து எவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது என்று.

மரணத்தின் முன் பேராசிரியர்களுக்கும் தோல்வியே!

நான் அறிந்த ஒரு பேராசிரியர் இருந்தார். நன்றாக கல்வி கற்ற ஒருவருக்குதானே பேராசிரியராக முடியும். இந்த பேராசிரியர் வயது முதிர்ந்து நோயால் பீடிக்கப்பட்டார். அதன் விளைவாக பக்கவாதமும் ஏற்பட்டது. அவரால் ஓரளவு எழுந்து நிற்கவும் அமரவும் மாத்திரமே முடியும். நானும் இன்னும் சிலரும் அவரை பார்க்கச் சென்றோம். அப்போது நாம் கண்டதோ அவர் மலம் கழித்து அந்த மலத்தை தன் உடம்பெங்கும் பூசிக்கொண்டது மட்டுமல்லாது தன் வாயிலும் பூசிக்கொண்டிருக்கும் காட்சியே ஆகும். இந்த காட்சியைக் கண்டு நான்  ‘‘இவர் கற்ற கல்வி எவ்வளவு தாழ்மையான விடயமென்று” நினைத்தேன் இப்போது தன்னுடைய மலத்தையே தன் உடலிலும் வாயிலும் பூசிக்கொண்டிருக்கும் இவரை யாரேனும் ‘‘ஒரு பேராசிரியர்” என்று கூறினால் நம்புவார்களா? இல்லை. நாம் கற்கும் கல்வியின் தரத்தை பார்த்தீர்களா? நான் யோசித்தேன், ‘‘இவர் இக்கல்வியை கற்க முயற்சிக்கும் காலத்தில் சீலம், சமாதி, ஞானம் என்பவற்றை தன்னுள் வளர்த்து கொள்ள முயற்சித்திருந்தால் ஒருபோதும் இந்நிலையை அடைந்திருக்கமாட்டார். சுய உணர்வின்றி மரணித்திருக்கவும் மாட்டார்.” என்று.

பாருங்கள் புண்ணியவான்களே! அவர் மனித உலகில் வாழும்போதே தன் இறுதி காலத்தில் தன்னுடைய மலத்தையே உண்ணும் படியாகிவிட்டதென்றால் அவர் கற்ற கல்வி பற்றி என்ன கூறுவது? ஆனால், அவர் சரியான முறையில் சீலம், சமாதி, ஞானம் எனும் விடயங்களை தன்னுள்ளே உருவாக்கி கொண்டிருந்தால்,  மிகுந்த அமைதியுடனும் சுயவுணர்வுடனும் தன் இறுதி மூச்சினை விட்டிருப்பார். அதுதான் சரியான கல்வி. உண்மையான படிப்பறிவு என்றால் இவைதான்: நாற்பேருண்மைகள் தொடர்பான அறிவு மற்றும் சீலம், சமாதி, ஞானம் தொடர்பான அறிவு என்பவையாகும். கற்கும் விடயங்களில் உன்னதமடைவது இந்த விடயங்களை கற்பதனாலேயே!

சேவையினால் உன்னதமடைதல்

அடுத்த விடயம் தான் பாரிசரியானுத்தரியம். அதாவது சேவையினால் உன்னதநிலையை அடைதலாகும். பாருங்கள், நாமும் சேவைகள் செய்கிறோமல்லவா? அதிகாலை எழும்புகிறோம், தேநீர் அருந்துகிறோம். சமைக்கின்றோம். உணவு உண்கின்றோம். மீதி உணவை பொதி செய்து வேலைத்தளத்திற்கு புறப்படுகின்றோம். நண்பர்களை சந்தித்தால் ஏனையோரின் குறைகளை பேசுகின்றோம். அலுவல் வேலைகளை செய்கின்றோம். நேரத்தை பார்க்கின்றோம், பஸ்ஸில்;                         ஏறுகின்றோம். வழியில் ஏதேனும் ஒரு கடையில் தேவையான பொருட்களை வாங்குகின்றோம். வீட்டை அடைகின்றோம். சமைத்து சாப்பிடுகிறோம். பின் தொலைக்காட்சியை பார்த்து உறங்கிவிடுவோம். நாம் அணிந்திருக்கும் ஆடைகளை கழுவுவதற்கு கூட எமக்கு நேரமில்லை. எம் வாழ்க்கை வட்டம் இதுவே. உறங்கும் உறக்கம் கூட நிம்மதியானதல்ல. ஆயிரம் பிரச்சினைகளை சிந்தித்து கொண்டுத்தான் நாம் உறங்கவும் செல்கின்றோம். மீண்டும் அடுத்த நாள் அதிகாலையில்; எழுவோம.; இன்னும் சற்று நேரம் வரை தூங்க நினைத்தாலும் அது முடியாது. வேலைத்தளத்திற்கு சென்றாலும் எப்போது மாலை ஐந்து மணியாகும் என பார்த்து கொண்டேயிருந்து நேரம் வந்தவுடன் வேலைத்தளத்திலிருந்து வெளியேறி ஏதாவது ஒரு கடையில்

தேவையான மரக்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவோம். வந்து மறுநாளைக்கு தேவையான ஆடைகளை தயார் செய்து வைத்து சமைத்து சாப்பிட்டு உறங்குகிறோம். இப்படித்தான் நாம் வாழும் வாழ்க்கை அமைந்துள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சிறிதளவேனும் ஓய்வு நேரம் கிடைக்கிறது. அன்று தான் அழுக்கான உடைகளை துவைக்க நேரமிருக்கும். இப்படித்தான் நாம் சேவைகளை செய்கிறோம்.  இறுதியில் ஓய்வு பெற்ற பின், தனக்கென்று, தன் உள்ளக வாழ்வுக்கென்று ஒன்றுமே செய்ய முடியாத நிலை தான் உருவாகிறது.

இந்த சேவை எதற்காக

இம்மாதிரியாக சேவைகள் செய்வதால் என்ன கிடைகின்றது? இதனால் ஒருபோதும் தனக்கு ஒன்றுமே கிடைக்காது. புத்தபகவான் ‘‘எவராயினும் ஒருவர் புத்தபகவானுக்கு சேவை புரிவாராயின், புத்த சீடருக்கு சேவை செய்வாராயின் அதுவே சேவையின் மூலம் உன்னதம் அடையும் சேவையாகும்.” என மொழிந்தார். நாம் நினைப்போம் ஒருவர் ஜேத்தவனராமத்திற்கு செல்கிறார். சென்று அவ்விடத்தினை சுத்தப்படுத்தி ஓரிடத்தில் அமர்கிறார். அவருக்கு புத்தபகவானது தர்மத்தினை செவிமடுக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. தியானம் செய்யும் வாய்ப்பு கிடைகின்றது. இது ஒருவருக்கு  உன்னதத்தை தரும் சேவையாகும். இந்த சேவையினூடாக ஒருவர் தன்னை உன்னதப்படுத்தி கொள்ளலாம். புத்தபகவான், ‘‘ஒருவர் சம்மாசம்புத்தபகவான்ழூ, பச்சேக புத்தபகவான்ழூ;, அரஹத் பிக்குமார் என்போருக்கு சேவை செய்வாராயின் அவர் அந்த சேiவையினால் உன்னதமடைய முடியும்” எனவும் மொழிந்தருளியுள்ளார்.

சேவையினால் நான் தர்மத்தினை கண்டேன்

எம்மனைவருக்கும் ‘‘கோபிகா” எனும் உபாசகியின் கதை தெரியும். நான்கு பிக்குமார்கள் ஓரிடத்தில் மாரி காலத்தில்; தரித்திருந்தார்கள். அவர்களுக்கு சேவை புரிவதற்கு கோபிகா எனும் உபாசகி சென்றிருந்தாள். அவள் அங்கு சென்று அந்த பிக்குமார்களுக்கான

அன்னதானம் என்பன வழங்கி, அவர்களுக்கு சேவை செய்யும் காலத்தில் ஒரு நாள் அந்த பிக்குமாரிடம்  ‘‘புண்ணியமிக்க பிக்குமாரே! தாங்கள் பழக்கப்படுத்தும் தர்மத்தினை எனக்கும் கற்றுத் தருவீர்களாக..” என வேண்டி நின்றாள். அப்போது அந்த பிக்குமாரும் அந்த உபாசகிக்கு தாம் பயிற்சி செய்யும் புத்தபகவானது தர்மத்தினை போதித்தனர். அதனை கவனமாக செவிமடுத்த அந்த உபாசகி தினமும் அவற்றை பயிற்சி செய்தாள். அவள் வீட்டிற்கு நடந்து செல்லும் போதும் தியானத்தை பழக்கப்படுத்தினாள். நாம் இந்த தர்மத்தினை கற்கும் போது ‘‘நடை தியானம்” எனும் தியானத்தை பற்றி கற்றிருக்கிறோம். விழிப்புணர்வுடன் நடத்தல் என்பதுவும் ஒரு வகையான தியானமாகும். நாம் விழிப்புணர்வுடன் நடத்தல் என்றவுடன் செய்வது என்ன? இடது கால் – வலது கால் என்று செய்வது, அது சரியா? அவ்வாறில்லாது (கால்) தூக்குகிறேன். கொண்டு செல்கிறேன். வைக்கின்றேன் என்று நினைத்து கொண்டு செய்வது சரியா? இம்மாதிரியான நடை தியானத்தை புத்தபகவான் மொழியவில்லை. புத்த போதனைகளில் ‘‘நடக்கும் போது இந்த கண் அநித்தியமானது, இந்த காது அநித்தியமானது, இந்த நாசி அநித்தியமானது , இந்த நாவு அநித்தியமானது, இந்த உடம்பு அநித்தியமானது , இந்த மனம் அநித்தியமானதுழூ” என்பதனை நினைவு கூர்ந்த வண்ணம் நடை தியானத்தை செய்ய வேண்டும். இவ்வாறாக கோபிகா வீட்டிற்கு சென்று தர்மத்தினை பழக்கப்படுத்தினாள். அதன் விளைவாக ஒரு நாள் சோதாபண்ன நிலையை எய்தினாள். பாருங்கள், அவள் சேவையின் விளைவினை பெற்றுக்கொண்டாள். அவள் சேவைகளை செய்தாள். அதன் நற்பேறுகளையும் பெற்றுக்கொண்டாள்

சேவையினூடாக உன்னதமடைதல்.

ஒருவர் புத்தபகவானிடமோ அல்லது புத்தபகவானது சீடரிடமோ சேவை செய்ய முனைந்தால் அவ்வாறு சேவை செய்யும் காலத்தில் அவருக்கு தர்மத்தினை செவிமடுக்கும் வாய்ப்பு ஏற்படும். அவ்வாறு செவிமடுத்த தர்மத்தினை தம் வாழ்விற்கு ஒருங்கிணைத்து வாழ முற்படுவார். அவர் ஒருநாள் அந்த தர்மத்தினை தமது வாழ்வில் காணும் வாய்ப்பும்

அதனால் ஏற்படும். அவர் சேவையினூடாக உன்னத நிலையை அடைய முடியும். அதுதான் பாரிசரியானுத்தரியமாகும்

ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்

  1. தஸ்ஸனானுத்தரியம் – காணுவதினூடாக உன்னத நிலையை அடைதல்
  2. சாவனானுத்தரியம் – கேட்பதினூடாக உன்னத நிலையை அடைதல்
  3. இலாபானுத்தரியம் – கிடைக்கும் விடயத்தினூடாக உன்னத நிலையை அடைதல்
  4. சிக்கானுத்தரியம் – கற்றுக்கொள்வதினூடாக உன்னத நிலையை அடைதல்
  5. பாரிசரியானுத்தரியம் – சேவையுனூடாக உன்னத நிலையை அடைதல்
  1. அனுஸ்ஸதானுத்தரியம் – நினைவுகூருவதனூடாக உன்னத நிலையை அடைதல்

நினைவுபடுத்துவது உன்னதமானதொன்றையா?

நாம் ஒவ்வொரு விடயங்களை சிந்திக்கிறோம். ‘‘இப்போது எனது பெரிய மகள் அமெரிக்காவில், சின்ன மகள் இங்கிலாந்தில்.. மூன்றாவது மகள் ஒரு வைத்தியர், எனது மருமகனுக்குதான் அந்த கடை சொந்தம், சின்ன மகனுக்கு ஒரு கார் இருக்கிறது”. இவ்வாறு நினைத்து கொண்டிருப்பது நினைவு கூறும் விடயங்களில் உன்னதத்தை தருமா? இல்லை.

அதேபோல், எனது ஒரு பிள்ளை இந்த சர்வதேச பாடசாலையில் படிக்கிறாள். பெரிய மகன் பல்கலைக்கழகத்தில் படிக்கிறான். சின்ன மகன் கிரிக்கெட் அணியில் இருக்கிறான். என்று நினைவு

கூறுவதெல்லாம் உன்னதத்தை தருமா? இல்லை.

மும்மணிகளை நினைவுகூர வேண்டும்.

புத்தபகவான், ‘‘நினைவுகூரும் விடயங்களில் புத்தபகவானை நினைவு கூருவதே உன்னதமானதாகும். நினைவுகூரும் விடயங்களில் புத்தபகவானது ஆரிய சீடர்களை நினைவு கூறுவதே உன்னதமானதாகும்.” என மொழிந்தார். அண்மையில் நான் சிங்களத்திற்கு மொழி பெயர்த்த, புத்தபகவானது ஆரிய சீடர்கள் பற்றி  கூறப்படும் ‘‘தேர தேரி காதை” எனும் புத்தகத்தை நீங்கள் வாசித்திருப்பீர்கள். நீங்கள் அந்த புத்தகத்தை வாசித்திருந்தால் அரஹத் பிக்குமாரின் வாழ்வை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். அவர்கள் தம் வாழ்வினை எவ்வளவு உன்னதமானதாக வாழ்ந்திருக்கிறார்கள்? வீரியம், ஞானம், ஒழுக்கம், நற்குணங்கள், பணிவு, என்பனவற்றினால் உன்னதநிலையை அடைந்தோர்களாகவே அவர்கள் தம் வாழ்வினை வாழ்ந்திருக்கின்றார்கள். இம்மாதிரியான உத்தமர்கள்தான் இந்த புத்த சாசனத்தில் இருந்திருக்கிறார்கள்.  ஒருவருக்கு தாம் சரணடைந்த மும்மணிகளை நினைவுகூருவதற்கான திறமை இருக்க வேண்டும். இந்த திறமை இல்லாவிடில் அது அவருக்கு பெரும் நட்டமேயாகும்.

அவர் என்னை தூற்றினார்.. அவர் என்னை தோற்;கடித்தார்..

அவ்வாறில்லாவிடில் ‘‘அவர் என்னை ஏசினார்” (அக்கொச்சி மங்) ‘‘அவர் என்னை துன்புறுத்தினார”; (அவதி மங்) ‘‘அவர் என்னை தோற்;கடித்தார்” (அஜினி மங்) ‘‘அவர் என்னுடைய பொருளை அபகரித்துவிட்டார்” (அஹாசி மே) ‘‘அவர் என்னை நிந்தித்தார்.” என்று தான் நினைத்;துக் கொண்டிருக்க முடியும்.  வீட்டுப்பெண்கள் இவ்வாறு சிந்தித்து கொண்டு அரிசியை கழுவும் போது என்ன செய்வார்கள்?  கழுவும் அரிசியிலிருந்து ஒரு பிடியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு அதனை மென்றுக்கொண்டு தனியாகவே பேசுவார்கள் ‘‘ என்னை, அவர்கள் என்ன அநியாயம் செய்தார்கள்” ‘‘எப்படியெல்லாம் ஏசினார்கள்” என சிந்தித்து கொண்டிருப்பார்கள். சாதாரணமாக வீடுகளில் இவ்வாறு

நடப்பதில்லையா? நினைவுகூரும் விடயங்களில் இவற்றை நினைவு கூறுவதால் மென்மேலும் கோபம்தான் அதிகரிக்கும். துவேசம், பழிவாங்கும் எண்ணம், ஒன்றுக்கொன்று எதிராக செய்தல், போன்ற இழிவான எண்ணங்களே தோன்றும். அவை ஒருபோதும் நன்மையை விளைவிக்காது. நினைவு கூறுவதாயின் புத்தபகவான் அவரது தர்மம், புத்தபகவானது ஆரிய சீடர்கள் எனும் மும்மணிகளையே நினைவுகூருங்கள்.

இவ்வாறு நினையுங்கள்.

புத்தபகவான் ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய சீடர்களான பிக்குமார்களிடம் ‘‘புண்ணியமிக்க பிக்குகளே! தேவையற்ற விடயங்களை நினைத்து கொண்டிருக்க வேண்டாம். சிந்திப்பதாயின் சிந்தியுங்கள்,  ‘‘இது துக்கம்” என்று. இந்த துக்கம் காரணத்தினால் தோன்றியது” என்று. ‘‘இந்த காரணத்தை அழித்தால் துக்கத்திலிருந்து விடுதலை பெறலாம” என்று. சிந்தியுங்கள், ‘‘எண்சீர் மார்க்கத்தில் பயணிப்பதால் இந்த காரணத்தை இல்லாதொழிக்கலாம் என்று” இவ்வாறு தான் சிந்திக்க வேண்டும். இப்படி சிந்திக்கும் போது மனதில் தம்மானுஸ்ஸதி   எனும் தியானமே விருத்தி அடைகிறது. ஒருவர் இவ்வாறு நினைவுகூரும்போது அவர் நினைவுகூரும் விடயங்களினூடாக உன்னதத்தையடைகிறார.;  நாம் இப்போது ஆறு விடயங்கள் தொடர்பாக பேசினோம். அவை முறையே தஸ்ஸனானுத்தரியம், சாவனானுத்தரியம், இலாபானுத்தரியம், சிக்கானுத்தரியம், பாரிசரியானுத்தரியம், அனுஸ்ஸதானுத்தரியம் என்பவையாகும். இந்த ஆறு விடயங்களையுமே எம்முள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

தர்மத்தினை உணர்ந்தவருக்கு!

எம்மால் தற்காலத்தில் புத்தபகவானை நேரடியாக காண முடியாது. ஆனால் ஒருவருக்கு தர்மத்தினூடாக புத்தபகவானை காணமுடியும். புத்தபகவானது திருவாயினால் நேரடியாக எமக்கு தர்மத்தினை கேட்க முடியாது. ஆனால் அவரது உத்தம தர்மத்தினை இன்றும் எமக்கு

கேட்கும் வாய்ப்பு இருக்கிறது. இன்றும் எம்மால் புத்தபகவானது உத்தம சீடர்கள் மீது சத்தாவை உருவாக்கி கொள்ளவும் முடியும். இன்றும் எம்மால் தர்மத்தினை செவிமடுத்து அதன் வழி பயணித்து வாழ்வினை புனிதமாக்கி கொள்ள முடியும். இன்றும் எம்மால் புத்தபகவானையும் அவரது சீடர்களையும் நினைவுகூர முடியும். அதன் மூலம் எம் அனைவரது வாழ்விலும் உன்னதமான இந்த ஆறு விடயங்களையும் ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.

ஞானமுள்ளவர்களுக்கு இந்த சன்சாரத்திலிருந்து மீள முடியும்.

இந்த விடயங்களை எம்முள் நாம் உருவாக்கி கொள்ளும்போது நாம் உன்னத நிலையை அடைவோமே அன்றி, ஒருபோதும் இழிவான நிலைக்கு ஆளாகமாட்டோம்.  இந்த விடயங்களை நம்முள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமாயின், அறிவால் சிந்திக்கும் திறமை எம்மிடம் இருக்க வேண்டும். அறிவினால் ஆராயும் திறமை எம்மிடம் இல்லாவிடில் அது எமது துர்ப்பாக்கியமே!

எனவே, ஒவ்வொருவரும் அறிவினால் ஆராயும் திறமை, ஞாபக சக்தி என்பவற்றை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறுகிய மனப்பான்மையை நீக்கி பரந்தளவிலான மனதினை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இவ்விடயங்களை உருவாக்கிக்  கொள்ளும் போது எம்மால் சீக்கிரமாகவே நாற்பேருண்மைகளை உய்த்தறிந்துக் கொள்ள முடியும். எனவே அனைத்து புண்ணியவான்களுக்கும் இந்த விடயங்களை தத்தமது வாழ்வினுள் உருவாக்கிக் கொண்டு உன்னத நிலையை அடையவும், இந்த கௌதம புத்த சாசனத்திலேயே உன்னதமான நாற்பேருண்மைகளை உய்த்தறிந்து கொண்டு பரம சுந்தரமான மோட்சத்தினை அடையவும் அதிஷ்டம் கிட்ட வேண்டும்.