டிங் டிங் ஓசை எழுப்பும் அணில்
மனிதர்களை பார்த்தாலே நான் அச்சம் கொள்வேன். ஒருநாள் எனது அம்மாவை ஒரு சிறுவன் பிடித்து கொண்டான். எனது அம்மாவின் கழுத்தினை இறுக பற்றிக்கொண்டான். டிங் டிங் என்று என் அம்மா தொடர்ந்து அலற துவங்கினாள். நானும் நன்றாகவே பயந்துவிட்டேன். டிங் டிங் என நானும் அழ ஆரம்பித்தேன். அப்போது அவ்வீட்டில் இருந்த ஒரு அக்கா என்னை பார்த்து, ‘ஐயோ தம்பி இந்த அணில் அம்மாவை விட்டு விடுங்கள். அந்த அணில் பிள்ளையும் அழுகிறது பாவம்…
”இல்லை… இல்லை நான் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த அணிலை பிடித்தேன்… நான் இந்த அணிலை அந்த கூட்டுக்குள் விடப்போகிறேன். வேண்டுமானால் இந்த சின்ன அணிலும் வராதா என்ன? ஹஹ் ஹா…’ என்று பலத்த சிரிப்புடன் எனது அம்மாவை சிறியதொரு கூட்டுக்குள் அடைத்தான். ‘என்ட மகனே! நீ சீக்கிரமாக இவ்விடத்தை விட்டு ஓடிவிடு’ என அம்மா கதறினாள்.
அம்மாவின் அழுகுரலை கேட்ட எனது அப்பாவும் ‘டிங் டிங’; என சத்தமிட்டு கீச்சிட்டுக் கொண்டிருந்தார். நான் அப்பாவிடம் ஓடிச்சென்றேன். அன்று எம்மிருவருக்கும் எவ்வித சந்தோ’முமில்லை. நானும் அப்பாவும் எமது கூட்டுக்குள் வந்து அழுதுகொண்டிருந்தோம். அன்று இரவு அப்பா என்னை அணைத்துகொண்டு ‘மகனே! நீ பிறப்பதற்கு முன் இரண்டு குட்டிகள் எமக்கு பிறந்திருந்தன’ எனக்கூறிக்கொண்டு அழத்தொடங்கினார். முதலாவது குட்டி சிறிது காலத்திற்குள் நன்கு வளர்ந்துவிட்டான். நானும் உனது அம்மாவும் அந்த குட்டிக்கு நடை பழக்குவதற்காக இதோ இந்த கிளை வழியே அழைத்து சென்றோம். ஐயோ அப்போது அந்த குட்டி கால் தவறி கீழே விழுந்துவிட்டது. நானும் அம்மாவும் அழுதுக்கொண்டே கீழ் நோக்கி ஓடினோம். ஆனாலும் எங்களால் அவனை காப்பாற்ற முடியவில்லை. அந்த வீட்டில் ஒரு கொடூரமான பூனை ஒன்று இருக்கிறது. அது ஒரு நொடியிலேயே எனது மகனை வாயிலே கௌவிக்கொண்டது. நாம் கதறி அழுதோம். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அந்த பூனை எனது மகனை… நறு நறு’ வென தின்று முடித்துவிட்டது.நாம் யாரிடம்தான் முறையிடுவது…? எமது இரண்டாவது குழந்தை பிறக்கும் போது நாம் வேறொரு மரத்தில் இருந்தோம். நாம் இந்த சூழலை மிகவும் வெறுத்தோம். ஆனாலும் நாம் வேறு எங்குதான் செல்வது? நாம் கூடு கட்டிய மரம் உயரமானதல்ல. அன்று நானும் உனது அம்மாவும் உணவு தேடுவதற்காக கூட்டினை விட்டு வெளியேறிவிட்டோம். மீண்டும் கூட்டிற்கு திரும்பிய எம்மால் மூச்சை உள்வாங்க முடியவில்லை. இதயமே ஒரு கணம் நின்றுவிட்டது. பயங்கரமான கண்களும் அகலமான வாயும் இருந்த மிக நீளமான உடலை கொண்டதொரு நாகம் கூட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அப்போது நாம் மிக சத்தமாக அனைவருக்கும் கேட்கும் வணணம் உதவிகேட்டு அலறினோம். ஆனால் எமது அழுகுரலுக்கு யாருமே செவிசாய்க்கவில்லை. அயல் வீட்டில் இருந்த பாட்டி ஒருவர் ‘இந்த அணில்களோடு மிகவும் தொல்லையாக இருக்கிறதே’ என்று எம்மையே சாடினாள். எம் இருவரால் அந்த பயங்கரமான பாம்புடன் போராட முடியாது என்பதை உணர்ந்த நாம் இருவரும் அது அங்கிருந்து நீங்கி செல்லும் வரையிலும் காத்திருக்க வேண்டியதாயிற்று. பாம்பு அவ்விடத்திலிருந்து நீங்கியவுடனேயே நமது பிள்ளையை பார்ப்பதற்காக ஓடோடிச்சென்றோம். இஹி… இஹி… அந்த பாம்பு எமது பிள்ளையை விழுங்கி சென்றுள்ளது.
மகனே! நாம் மிகவும் பயத்துடனே வாழ்கிறோம். மழை பெய்தால் நனைகிறோம். சற்று வேகமாக காற்று வீசினாலும் எமது கூடுகள் உடைந்து விடுகிறது. பெரிய பெரிய விலங்குகள் எம்மை வேட்டையாடுகின்றன. உனது சித்தியை ஒரு பருந்துதான் தூக்கி சென்றது. நாம் மிகவும் பாவம் செய்தவர்களாவோம். அதனால்தான் இந்த மிருகலோகம் எனும் நரகத்தில் பிறந்திருக்கிறோம்.
அப்பா இவ்வாறு கூறிவிட்டு பொழுது புலரும் வரையிலும் அழுதுகொண்டே இருந்தார். நாம் அதிகாலையிலேயே அம்மாவை பூட்டி வைத்திருந்த கூடு இருக்கும் இடத்திற்கு சென்று சற்று சேய்மையில் இருந்தே அம்மாவை பார்த்து கொண்டிருந்தோம். அம்மாவால் அங்கிருந்து தப்பித்து கொள்வதற்கு எந்த வழியும் இல்லை. எனது அம்மாவை கூட்டில் அடைத்த அந்த சிறுவன் எனது அம்மாவுக்கு சிறு பாண் துண்டினை அளித்தான்… நான் அப்பாவிடம் ‘அப்பா எனக்கும் பசிக்கிறது… அங்கே பாருங்கள்… அம்மாவும் பாண் சாப்பிடுகிறாள்.’ என்று மிகுந்த பசியுடன் கூறினேன். கொஞ்சம் பொறுமையாக இரு.. அங்கே ஒரு மாமரம் இருப்பது தெரிகின்றதா? அங்கே ஒரு புற்றில் ஈசல்கள் நிறைந்திருந்தன. நாமிருவரும் அங்கு சென்று ஈசல்களை சாப்பிடுவோம்…’
நாமிருவருமே அங்கு சென்று அந்த ஈசல்களை சாப்பிட்டோம். எவ்வித சுவையுமே இல்லை. நாம் மீண்டும் அம்மா இருந்த இடத்திற்கு சென்றோம். ‘மகன் இங்கே வந்து பார். அந்த தட்டில் ஒரு பாண் துண்டு இருக்கிறது. நாம் அதை சாப்பிடுவோம். சுற்றும் முற்றும் பார்த்தோம். யாருமே தென்படவில்லை. மெதுவாக நாம் அதனை சாப்பிடுவதற்காக சென்றது மாத்திரம் தான். இரண்டு சிறுவர்கள் ‘பெரிய அணிலும் குட்டி அணிலும் வந்துவிட்டன…’ என கத்திக்கொண்டு வீட்டிலிருந்து திடீரென வெளியில் குதித்து ஓடி வந்தனர்.
நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? என்னையுமறியாமல் நான் சிறுநீர் கழித்துவிட்டேன். நானும் அப்பாவும் பெரும் சத்தமாக கத்திக்கொண்டே மரத்திற்கு ஓடினோம். பய மிகுதியால் என்னால் வேகமாக ஓட முடியவில்லை. அப்போதுதான் அந்த வீட்டிலிருந்த அந்த சிறுவர்களின் தந்தையார் வெளியில் வந்தார். ‘இங்கே பாருங்கள் பிள்ளைகள், பிராணிகளுக்கு சாப்பாடு கொடுப்பதாக இருந்தால். அவைகளை நிம்மதியாக சாப்பிட்டு போக விடுங்கள்… அந்த அணில் அம்மாவையும் அடைத்து கொண்டு… என்ன பெரிய பாவம்…? இந்த அணிலை விட்டு விடுங்கள்… இனி இந்த அப்பாவி அணில்களுக்கு கூடு தேவையில்லை… இங்கே பாருங்கள் மகன்.. பிராணிகள் மீது கருணையோடு இருந்தால் அவை எம்மை கண்டு பயப்படாது. எம் அருகில் வேண்டுமானாலும் வரும். அதனால் நல்ல பிள்ளைகள் போல் அந்த கூட்டை திறந்து விடுங்கள்’. அப்போது அங்கிருந்த ஒரு சிறுவன் அம்மாவை அடைத்து வைத்திருந்த கூட்டினை திறந்து விட்டான். ஹா… ஹா… அம்மா மின்னலை போல் அங்கிருந்த வெளியில் பாய்ந்து ஓடோடி எம்மிடம் வந்தார். நானும் அம்மாவிடம் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து கொண்டேன். அம்மா எனக்கு மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் சிறிது காலத்தில் நல்லவர்களாகிவிட்டனர். ஒரு பலகையில் தினந்தோரும் எமக்காக உணவு வைத்தனர். அந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார் அவர் மிகவும் நல்லவர். ‘எனது குட்டி அணிலே வா… வந்து சாப்பிடு’ என அன்போடு அழைத்து உணவு கொடுப்பார். ஒருநாள் எனது அம்மா எவ்வித பயமும் இல்லாமல் அந்த அக்காவின் அருகிலேயே சென்றார். ‘அங்கே பாருங்கள் அப்பா… அம்மா எந்த பயமும் இல்லாமலே அந்த அக்காவிடம் போய் அந்த பழத்துண்டையும் எடுத்து வருகிறார்…’ ‘கவனம்…பழத்தினை எடுத்ததும் சீக்கிரமாக வந்துவிடுங்கள்’ என அப்பா உரக்க கத்தினார்.
ஒருநாள் அந்த வீட்டிலிருக்கும் சிறுவனிடம் அயல் வீட்டிலிருந்த ஒரு சிறுவன் ஏதோ கூறினான். அதற்கு அந்த சிறுவன் ‘ஏய்…விமல் எங்கள் வீட்டிற்கு கவண் கொண்டு வரத்தேவையில்லை. இங்கே அப்பாவியான அணில்கள் தான் வருகின்றன’ என கத்தினான்.
‘கவண் என்றால் என்ன அம்மா…’ என்றேன். ‘தெரியவில்லை மகன்… ஏதாவது சாப்பாடாகத்தான். இருக்கும்’ அன்று நானும் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அந்த விமல் எனும் கொடூரமான சிறுவன் கவணை எடுத்து அதிலே கற்களை வைத்து எம்மை குறி வைத்தான். ‘மகனே! எம்மை கொல்ல போகிறார்கள்… வா ஓடிவிடுவோம்…’ நான் மிகவும் பயந்துவிட்டேன். மரத்தின் உயர்ந்த கிளைகளை நோக்கி ஓடினேன். அவ்வாறு ஓடும் போது அப்பா கீழே விழுவதை கண்டேன். ‘அம்மா…அப்பா கீழே விழுந்துட்டார்’ என கத்தினேன் அம்மாவும் நானும் ஓடுவதை நிறுத்தி பயத்தினால் நடுங்கி;க்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த கொடூரமான சிறுவன் என் அப்பாவின் வாலால் தூக்கியெடுத்தான். ‘ஐயோ…எனது அப்பாவின் உடலிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ஐயோ…எனது அப்பா இறந்துவிட்டார்…’ நானும் அம்மாவும் கதறியழுதோம்.
‘ம்… இலக்கு எப்படி? என அந்த கொடிய சிறுவன் பெருமிதம் கொண்டு சிரித்தான். அப்போது அந்த வீட்டிலிருந்த அக்கா வெளியே வந்தாள். நடந்ததை கண்டு அழுதாள். ‘ஐயோ இந்த அப்பாவி அணிலை ஏன் சாவடித்தீர்கள்…? விமல் நீ இனிமேலும் இங்கே வராதே. போய்விடு…போ…’ என சத்தமிட்டாள். அந்த வீட்டிலிருந்த அப்பாவுக்கும் மிகுந்த கோபம். ‘விமல் அந்த கவணை இங்க கொண்டு வா’ என அந்த கவணை பெற்று இரண்டு துண்டாக உடைத்து வீசினார். விமல் எனும் அந்த கொடிய சிறுவன் ஓடிவிட்டான்.
நாங்கள் மிகவும் அப்பாவிகளாவோம்… எம்மை இவ்வாறு இம்சிக்காதீர்கள்… எம்மை கூடுகளில் அடைக்க வேண்டாம். எமக்கு கருணை காட்டுங்கள். எம்மீது அன்பு செலுத்துங்கள். பூனைகள் நெறுங்க முடியாத இடங்களில் எமக்கும் கொஞ்சம் உணவு வையுங்கள். நாம் உங்களுக்கு தொல்லைகள் தருவதில்லை அல்லவா…?
‘டிங் டிங்’ என ஓசை எழுப்பினாலும் – முதுகில் மூவரியிருந்தாலும்
அழகிய தோற்றமிருந்தாலும் – நாம் துன்பத்துடனே வாழ்கிறோம்..
மழையில் நனைந்து கொண்டும் – வெயிலில் காய்ந்துகொண்டு வாழ்கிறோம்..
அழகிய கூட்டிலிருந்தாலும் மரண பயத்துடயே இருக்கிறோம்…
தவறேதும் செய்யாத நாம் – அப்பாவியான அணில்களாவோம்…
சிறைப்படுவதை வெறுக்கின்ற எம்மை கூட்டினுள் அடைக்காதீர்…
பரிவினை அளித்து – எமது சிறு வயிறுகள் நிரம்ப
உணவு சிறிதளவை உவந்தளியுங்கள் – மேன்மைமிகு மாந்தர்களே!