அரியபரியேசன சூத்திரம்

மேன்மையான நிலையை அடைவதற்காக செய்த பரிசோதனை தொடர்பான போதனை

என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. அந்நாட்களில் பாக்கியமுள்ள புத்த பகவான் சாவத்திய நகரின் அநாதபிண்டிக சீமானால் கட்டுவிக்கப்பட்ட ஜேதவனராமம் எனப்படும் ஆராமத்தில் வசித்திருந்தார். அன்று காலைப் பொழுதில் பகவான், சீவரத்தை போர்த்திக் கொண்டு ஐயக் கொள்கலனையும் இரு மடிப்புடைய சீவரத்தையும் எடுத்துக் கொண்டு சாவத்தி நகரில் ஐயமேற்க சென்றார். அச் சமயத்தில் நிறைய பிக்குமார்கள் ஆனந்த தேரரிடம் வருகை தந்தார்கள். வருகை தந்து ஆனந்த தேரரிடம் இவ்வாறு கூறினார்கள்.

‘ அன்பிற்குரிய ஆவுசோ ஆனந்தரே, பாக்கியமுள்ள பகவானிடமிருந்து நாம் தர்மத்தினை செவிமடுத்து நீண்ட காலங்களாயிற்று. ஆனந்தரே, எம்மால் மீண்டும் பகவானிடத்திலேயே தர்மத்தை கேட்கவிருந்தால் எவ்வளவு நல்லது?’ என்று. “அப்படியாயின் ஆவுசோக்களே, நீங்கள் அனைவரும் இரம்மக பிராம்மணரது ஆஸ்ஸிரமத்திற்கு செல்லுங்கள். அங்கு உங்களால் புத்த பகவானது தர்மத்தை கேட்க கூடியதாக இருக்கும்” என்று ஆனந்த தேரர் விடையளித்தார். அதற்கு அந்த பிக்குமார்கள் “நல்லது ஆவுசோ” என மறுமொழியளித்தனர்.

அன்று பாக்கியமுள்ள பகவான் சாவத்திய நகரில் ஐயமேற்று அன்னம் உட்கொண்ட பின்னர் ஆனந்த தேரரை அழைத்து. “புண்ணியமிகு ஆனந்த, நாம் பகற் பொழுதை கழிப்பதற்காக பூர்வாராமம் எனப்படுகின்ற மிகாரமாது மாடத்திற்கு செல்வோம்” என்று மொழிந்தார். “அப்படியே ஆகட்டும், பகவானே” என ஆனந்த தேரர் மறுமொழியளித்தார். அதன் பின்னர் பாக்கியமுள்ள புத்த பகவான் ஆனந்த தேரருடன் ப+ர்வாராமம் எனப்படுகின்ற மிகாரமாது மாடத்திற்கு வருகை தந்தார். பாக்கியமுள்ள பகவான் சாயுங்காலத்தில் தியானத்திலிருந்து எழுந்து ஆனந்த தேரரை விழித்து, “புண்ணியமிகு ஆனந்த, நாம் உடலை சுத்தம் செய்து கொள்வதற்காக கிழக்கு திசையில் நீராடும் துறைக்கு செல்வோம்” என்றார். “அப்படியே பகவானே” என்று ஆனந்த தேரர் பகவானுக்கு மறுமொழியளித்தார்.

அதன் பிறகு பாக்கியமுள்ள பகவான் ஆனந்த தேரருடன் தம் திருவுடலை சுத்தம் செய்து கொள்வதற்காக கிழக்கு திசையில் அமைந்துள்ள நீராடும் துறைக்கு பயணித்தார். பாக்கியமுள்ள பகவான் கிழக்கு திசையில் அமைந்துள்ள நீராடும் துறையில் தம் திருவுடலை கழுவி சுத்தம் செய்துகொண்டு கரையேறி தம் உட்சீவரத்தை மாத்திரம் தரித்துக் கொண்டு திருவுடலை உலர்த்திக்கொண்டிருந்தார். அப்போது ஆனந்த தேரர் பாக்கியமுள்ள பகவானிடம் பின்வருமாறு கூறலானார்.

“பகவானே, இந்த இரம்மக பிராம்மணரது ஆஸ்ஸிரமம் அண்மையிலேயே இருக்கிறது. வெகு தொலைவில் அல்ல. பகவானே, இரம்மக பிராம்மணரது ஆஸ்ஸிரமம் அழகானது. பகவானே, இரம்மக பிராம்மணரது ஆஸ்ஸிரமத்தை காண்பதற்கு ஆவலாக இருக்கிறது. எனவே பகவானே, எம் மீது கருணை கொண்டு இரம்மக பிராம்மணரது ஆஸ்ஸிரமத்திற்கு வருகை தருவதாயின் எவ்வளவு நல்லது?” பாக்கியமுள்ள பகவான் அந்த வேண்டுகோளை அமைதியுடன் பொறுத்துக் கொண்டார். பாக்கியமுள்ள பகவான் இரம்மக பிராம்மணரது ஆஸ்ஸிரமத்திற்கு வருகை தந்தார். அச் சமயத்தில் நிறைய பிக்குமார்கள் இரம்மக பிராம்மணரது ஆஸ்ஸிரமத்தில் தர்மத்தை பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள். பாக்கியமுள்ள பகவான் அவர்களது அந்த தர்மம் சார்ந்த கலந்துரையாடல் நிறைவுறும் வரை கதவருகே காத்திருந்தார். தர்ம கலந்துரையாடல் நிறைவுற்ற பின்னர் பாக்கியமுள்ள பகவான் தம் குரல்வளையை செருமியபடி கதவை தட்டினார். அப்போது அங்கிருந்த பிக்குமார்கள் பகவானுக்காக கதவை திறந்தார்கள்.

அதன் பின்னர் பாக்கியமுள்ள பகவான் இரம்மக பிராம்மணரது ஆச்சிரமத்தில் தமக்காக ஏற்பாடு செய்திருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். அமர்ந்த பின்னர் பகவான் பிக்குமார்களை பார்த்து இவ்வாறு வினவினார். “புண்ணியமிகு பிக்குகளே, நீங்கள் அனைவரும் இப்போது எது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தீர்கள்? எத்தகைய பேச்சு இப்போது முடிவுற்றது?” என்று.

“பகவானே, பாக்கியமுள்ள பகவானைப் பற்றிய தர்மம் சார்த்த கலந்துரையாடலையே நாம் ஈடுபட்டிருந்தோம். அந்த கலந்துரையாடல் முடிவடையும் சமயத்திலேயே தாங்கள் இங்கு வருகை தந்தீர்கள்”.

“மிகவும் நன்று பிக்குகளே, இல்லற வாழ்வை கைவிட்டு சிரத்தையை அடிப்படையாகக் கொண்டு  துறவு பூண்ட உங்களைப் போன்ற குலப்புத்திரர்களுக்கு இத்தகைய பேச்சுக்களே உசிதமானதாகும். நீங்கள் தர்மத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தமை மிகவும் நல்லது. புண்ணியமிகு பிக்குகளே, நீங்கள் ஒன்று கூடும்போது இரண்டு விடயங்களை செய்ய வேண்டும். ஒன்று தர்மத்தை பற்றி பேச வேண்டும், அல்லது அமைதியாக தியானம் செய்ய வேண்டும்.

புண்ணியமிகு பிக்குகளே, இருவகையான ஆராய்ச்சிகள் இருக்கின்றன. அவைதான்: மேன்மை நிலையை அடையும் முறையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள். மேன்மையற்ற  விடயங்களுக்கான ஆராய்ச்சிகள்.

புண்ணியமிகு பிக்குகளே, மேன்மையற்ற விடயங்களை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் என்றால் என்ன? புண்ணியமிகு பிக்குகளே, இங்கு ஒருவர் தானும் பிறக்கின்ற இயல்புடன் இருந்து கொண்டு பிறப்பிற்குரிய ஒன்றிற்காக ஆராய்ச்சி செய்வார். தாமும் முதுமையடையும் நிலையிலிருந்து கொண்டு முதுமைக்குரிய ஒன்றிற்காக ஆராய்ச்சி செய்வார். தாமும் நோயுறும் இயல்புடன் இருந்து கொண்டு நோய்களுக்குரிய விடயங்களுக்காக ஆராய்ச்சி செய்வார். தாமும் மரணமடையும் இயல்புடன் இருந்து கொண்டு மரணத்திற்குரிய விடயங்களுக்காக ஆராய்ச்சி செய்வார். தாமும் சோகமடையும் இயல்புடன் இருந்து கொண்டு சோகத்திற்குரிய விடயங்களுக்காக ஆராய்ச்சி செய்வார்.  தாமும் (தம் மனமும்) அழுக்கடையும் நிலையிலிருந்து கொண்டு கிலேசங்களுக்குரிய (மன அழுக்கிற்கு காரணமாகும்) விடயங்களுக்காக ஆராய்ச்சி செய்வார்.

புண்ணியமிகு பிக்குகளே, பிறக்கும் இயல்பிற்குரிய விடயங்கள் என்றால் எவை? புண்ணியமிகு பிக்குகளே, மனைவி மக்கள் என்போர் பிறக்கும் இயல்பிற்குரியவர்கள். பணியாட்கள் பிறக்கும் இயல்பிற்குரியவர்கள். ஆடு மாடுகள் பிறக்கும் இயல்பிற்கு உரியனவாகும். பன்றிகள், கோழிகள் என்பன பிறக்கும் இயல்பிற்கு உரியனவாகும். யானைகள், எருதுகள், குதிரைகள் பிறக்கும் இயல்பிற்கு உரியனவாகும். பொன், வௌ;ளி, பணம் என்பன பிறக்கும் இயல்பிற்கு உரியனவாகும். இந்த ஐவகையான காம பண்புகளும் பிறக்கும் இயல்பிற்கு உரியனவாகும். இந்த விடயங்களில் பேராசை கொண்டு, அவற்றின் மீது  பித்து பிடித்து, அவற்றிலேயே திளைத்திருக்கும் மக்கள், தாமும் பிறக்கின்ற இயல்புடன் இருந்து கொண்டு பிறப்பிற்குரியவற்றை தேடுவார்கள். புண்ணியமிகு பிக்குகளே, இற்றுப்போகும் (முதுமையடையும்) இயல்பிற்குரிய விடயங்கள் என்றால் என்ன? மனைவி மக்கள் என்போர் இற்றுப்போகும் (முதுமையடையும்) இயல்பிற்குரியவர்கள். பணியாட்கள் இற்றுப்போகும் (முதுமையடையும்) இயல்பிற்குரியவர்கள். ஆடு மாடுகள் இற்றுப்போகும் (முதுமையடையும்) இயல்பிற்கு உரியனவாகும். பன்றிகள், கோழிகள் என்பன இற்றுப்போகும் (முதுமையடையும்) இயல்பிற்கு உரியனவாகும். யானைகள், எருதுகள், குதிரைகள் இற்றுப்போகும் இயல்பிற்கு உரியனவாகும். பொன், வௌ;ளி, பணம் என்பன இற்றுப்போகும் இயல்பிற்கு உரியனவாகும். இந்த ஐவகையான காம பண்புகளும் இற்றுப்போகும் இயல்பிற்கு உரியனவாகும். இந்த விடயங்களில் பேராசை கொண்டு, அவற்றின் மீது  பித்து பிடித்து, அவற்றிலேயே திளைத்திருக்கும் மக்கள், தாமும் முதுமையடைகின்ற இயல்புடன் இருந்து கொண்டு முதுமைக்குரியவற்றையே தேடுவார்கள்.

புண்ணியமிகு பிக்குகளே, நோயுறும் இயல்பிற்குரிய விடயங்கள் என்றால் எவை? புண்ணியமிகு பிக்குகளே, மனைவி மக்கள் என்போர் நோயுறும் இயல்பிற்குரியவர்கள். பணியாட்கள் நோயுறும் இயல்பிற்குரியவர்கள். ஆடு மாடுகள் நோயுறும் இயல்பிற்கு உரியனவாகும். பன்றிகள், கோழிகள் என்பன நோயுறும் இயல்பிற்கு உரியனவாகும். யானைகள், எருதுகள், குதிரைகள் என்பன நோயுறும் இயல்பிற்கு உரியனவாகும். இந்த ஐவகையான காம பண்புகளும் நோயுறும் இயல்பிற்கு உரியனவாகும். இந்த விடயங்களில் பேராசை கொண்டு, அவற்றின் மீது  பித்து பிடித்து, அவற்றிலேயே திளைத்திருக்கும் மக்கள், தாமும் நோயுறுகின்ற இயல்புடன் இருந்து கொண்டு நோயுறும் இயல்பிற்குரியவற்றையே தேடுவார்கள்.

புண்ணியமிகு பிக்குகளே, இறந்து போகும் இயல்பிற்குரிய விடயங்கள் என்றால் எவை? புண்ணியமிகு பிக்குகளே, மனைவி மக்கள் என்போர் இறந்து போகும் இயல்பிற்குரியவர்கள். பணியாட்கள் இறந்து போகும் இயல்பிற்குரியவர்கள். ஆடு மாடுகள் இறக்கும் இயல்பிற்கு உரியனவாகும். பன்றிகள், கோழிகள் என்பன இறந்து போகும் இயல்பிற்கு உரியனவாகும். யானைகள், எருதுகள், குதிரைகள் என்பன இறந்து போகும்  இயல்பிற்கு உரியனவாகும். இந்த ஐவகையான காம  பண்புகளும் இறந்து போகும் இயல்பிற்கு உரியனவாகும். இந்த விடயங்களில் பேராசை கொண்டு, ஏமாறி அவற்றின் மீது பித்து பிடித்திருக்கும், அவற்றிலேயே திளைத்திருக்கும் மக்கள், தாமும் இறந்து போகும் இயல்புடன் இருந்து கொண்டு இறக்கும் இயல்பிற்குரியவற்றையே தேடுவார்கள்.

புண்ணியமிகு பிக்குகளே, சோகத்தை தோற்றுவிக்கும் இயல்பிற்குரிய விடயங்கள் என்றால் எவை? புண்ணியமிகு பிக்குகளே, மனைவி மக்கள் என்போர் சோகத்தை தோற்றுவிக்கும் விடயங்களாகும். பணியாட்கள் சோகத்தை தோற்றுவிக்கும் விடயங்களாகும். ஆடு மாடுகள் சோகத்தை தோற்றுவிக்கும் விடயங்களாகும். பன்றிகள், கோழிகள் என்பன சோகத்தை தோற்றுவிக்கும் விடயங்களாகும். யானைகள், எருதுகள், குதிரைகள் என்பன சோகத்தை தோற்றுவிக்கும் விடயங்களாகும். இந்த ஐவகையான காம பண்புகளும் சோகத்தை தோற்றுவிக்கும் விடயங்களாகும். இந்த விடயங்களில் பேராசை கொண்டு, பித்து பிடித்து, அவற்றிலேயே திளைத்திருக்கும் மக்கள், தாமும் சோகமடையும் இயல்புடன் இருந்து கொண்டு சோகமடைய வழிவகுக்கும் இயல்பிற்குரியவற்றையே தேடுவார்கள்.

புண்ணியமிகு பிக்குகளே, அசுத்தமடையும் இயல்பிற்குரிய விடயங்கள் என்றால் எவை? புண்ணியமிகு பிக்குகளே, மனைவி மக்கள் என்போர் அசுத்தமடையும் இயல்பிற்கு உரியவர்களாவர். பணியாட்கள் அசுத்தமடையும் இயல்பிற்கு உரியவர்களாவர். ஆடு மாடுகள் அசுத்தமடையும் இயல்பிற்கு உரியனவாகும். பன்றிகள், கோழிகள் என்பன அசுத்தமடையும் இயல்பிற்கு உரியனவாகும். யானைகள், எருதுகள், குதிரைகள் என்பன அசுத்தமடையும் இயல்பிற்கு உரியனவாகும். இந்த ஐவகையான காம பண்புகளும் அசுத்தமடையும் இயல்பிற்கு உரியனவாகும். இந்த விடயங்களில் பேராசை கொண்டு பித்து பிடித்து, அவற்றிலேயே திளைத்திருக்கும் மக்கள், தாமும் அசுத்தமடையும் இயல்புடன் இருந்து கொண்டு அசுத்தமடைய வழிவகுக்கும் இயல்பிற்குரியனவற்றையே தேடுவார்கள். புண்ணியமிகு பிக்குகளே, இவையே மேன்மையற்ற விடயங்களுக்கான ஆரய்ச்சிகள் எனச் சொல்லப்படுகிறது.

புண்ணியமிகு பிக்குகளே, மேன்மையான நிலையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் என்றால் என்ன? புண்ணியமிகு பிக்குகளே, ஒருசிலர் தாம் பிறக்கும் இயல்புடன் இருந்து கொண்டு, அவ்வாறு பிறக்க நேரிடுவதன் உபாதைகளை உணர்ந்து கொள்வார்கள். (அதன் காரணமாக அவர்கள்) பிறப்புகளற்ற, அதி உன்னதமான, அனைத்திலிருந்தும் விடுதலையான மோட்சத்தை தேடி பயணிப்பார்கள்.  தாமும் முதுமையடையும் இயல்புடன் இருந்து கொண்டு, முதுமையடையும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு, முதுமைகளற்ற, அதி உன்னதமான அனைத்திலிருந்தும் விடுதலையான மோட்சத்தை தேடி பயணிப்பார்கள்.

தாமும் நோயுறும் இயல்புடன் இருந்து கொண்டு, நோயுறும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு, நோய்களற்ற, அதி உன்னதமான, எல்லாவற்றிலிருந்தும் விடுதலையான மோட்சத்தையே தேடி பயணிப்பார்கள்.

தாமும் மரணமடையும் இயல்புடன் இருந்து கொண்டு, மரணமடையும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு, மரணங்களற்ற, அதி உன்னதமான, எல்லாவற்றிலிருந்தும் விடுதலையான மோட்சத்தையே தேடி பயணிப்பார்கள்.

தாமும் சோகமடையும் இயல்புடன் இருந்து கொண்டு, சோகம் தோன்றும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு, சோகங்களற்ற, அதி உன்னதமான, எல்லாவற்றிலிருந்தும் விடுதலையான மோட்சத்தையே தேடி பயணிப்பார்கள்.

தாமும் அசுத்தமடையும் இயல்புடன் இருந்து கொண்டு, அசுத்தமடையும்  இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு, அசுத்தமற்ற, கிலேசங்களற்ற அதி உன்னதமான, எல்லாவற்றிலிருந்தும் விடுதலையான மோட்சத்தையே தேடி பயணிப்பார்கள்.  புண்ணியமிகு பிக்குகளே, இவையே மேன்மை நிலையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் என சொல்லப்படுகிறது.

புண்ணியமிகு பிக்குகளே, நான் கூட சம்புத்த நிலையை அடைவதற்கு முன்னர் போதிசத்துவராக வாழ்ந்திருந்த காலத்தில்,

நானும் பிறக்கும் இயல்புடன் இருந்து கொண்டு, பிறக்கும் இயல்பிற்குரியதையே  தேடினேன். நான் முதுமையடையும் இயல்புடன் இருந்து கொண்டு, முதுமையடையும் இயல்பிற்குரிய விடயங்களையே தேடினேன். நானும் நோயுறும் இயல்புடன் இருந்து கொண்டு, நோய்வாய்ப்படும்  இயல்பிற்குரிய விடயங்களையே தேடினேன். நானும் மரணிக்கும் இயல்பிற்குரியவராக இருந்து கொண்டு, மரணிக்கும்  இயல்பிற்குரிய விடயங்களையே தேடினேன்.  நான் சோகமடையும் இயல்புடன் இருந்து கொண்டு, சோகமடையும் இயல்பிற்குரியனவற்றை தேடினேன். நானும் அசுத்தமடையும் இயல்புடன் இருந்து கொண்டு, அசுத்தமாகும் இயல்பிற்குரியவற்றை தேடினேன்.

புண்ணியமிகு பிக்குகளே, அப்போது நான்  இவ்வாறாக நினைத்தேன். உண்மையிலேயே நான் பிறக்கும் இயல்புடன் இருந்து கொண்டு, பிறக்கும் இயல்பிற்குரியதை எதற்காக தேட வேண்டும்? நான் முதுமையடையும் இயல்புடன் இருந்து கொண்டு, முதுமையடையும் இயல்பிற்குரிய விடயத்தை எதற்காக தேட வேண்டும்? நானும் நோயுறும் இயல்புடன் இருந்து கொண்டு, நோய்வாய்ப்படும்  இயல்பிற்குரிய விடயங்களை எதற்காக தேட வேண்டும்? நானும் மரணிக்கும் இயல்பிற்குரியவராக இருந்து கொண்டு, மரணிக்கும்  இயல்பிற்குரியதை எதற்காக தேட வேண்டும்? நான் சோகமடையும் இயல்புடன் இருந்து கொண்டு, சோகமடையும் இயல்பிற்குரியனவற்றை எதற்காக தேட வேண்டும்? நானும் அழுக்கடையும் இயல்புடன் இருந்து கொண்டு, மேலும் மாசுபடுத்தும்  இயல்பிற்குரியவற்றை  எதற்காக தேட வேண்டும்? எனவே (மீண்டும் மீண்டும்) பிறக்கும் இயல்புடன் இருக்கின்ற நான், மீண்டும் மீண்டும் பிறப்பதால் அனுபவிக்க நேரிடும் உபாதைகளை உணர்ந்து கொண்டு பிறப்புகளற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை தேடியே செல்வேன். முதுமையடையும் இயல்புடன் இருக்கின்ற நான், முதுமையடையும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு முதுமையற்ற, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் அதி உத்தமமான மோட்சத்தை தேடியே செல்வேன். நோயுறும் இயல்புடன் இருக்கின்ற நான், நோயுறும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு நோய்களற்ற, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் அதி உத்தமமான மோட்சத்தை தேடியே செல்வேன். மரணமடையும் இயல்புடன் இருக்கின்ற நான், மரணமடையும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு மரணங்களற்ற, துக்கங்களில்  இருந்து விடுதலையடைதல் எனும் அதி உத்தமமான மோட்சத்தை தேடியே செல்வேன். சோகமடையும் இயல்புடன் இருக்கின்ற நான், சோகமடையும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு சோகங்களற்ற, துக்கங்களில்  இருந்து விடுதலையடைதல் எனும் அதி உத்தமமான மோட்சத்தை தேடியே செல்வேன். (மனம்) அழுக்கடையும் இயல்புடன் இருக்கின்ற நான், அழுக்கடையும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு அழுக்குகள், மாசுகள் அற்ற, துக்கங்களில்  இருந்து விடுதலையடைதல் எனும் அதி உத்தமமான மோட்சத்தை தேடியே செல்வேன்.

எனவே புண்ணியமிகு பிக்குகளே, நான் பிற்காலத்தில் என் இளமையான வயதிலேயே, கருமையான முடியிருக்கும் சுந்தரமான இளமைக்காலத்திலே, வாழ்வின் முதற்கால கட்டத்தில் இருக்கும் போது, பெற்றோர்கள் கண்ணீர் விட்டழுகும் போது, நான் தலைமுடி தாடியை மழித்து, சீவரத்தை போர்த்திக் கொண்டு, இல்லறத்தை விடுத்து உத்தம துறவறத்தை மேற்கொண்டேன்.

துறவறம் மேற்கொண்ட பின்னர் நான், ‘குசலங்கள் என்றால் என்ன,’ என்று தேடும் ஒருவரானேன். உன்னதமான மோட்சத்தை தேடும் ஒருவரானேன். நான் ஆலார காலாமரிடமும் சென்றேன். சென்று ஆலார காலமரிடம் இவ்வாறு சொன்னேன். “காலாம ஆவுசோ, இந்த தர்மம் மற்றும் ஒழுக்கத்தில் ஈடுபடுவதற்கு நான் விரும்புகின்றேன்” என்று.

புண்ணியமிகு பிக்குகளே, அச்சமயம் ஆலார காலாமர் என்னிடம் இப்படிச்  சொன்னார். “அன்பிற்குரிய ஆவுசோ, அப்படி என்றால் இந்த தர்மத்தில் ஈடுபடுங்கள். பிரம்மச்சரியத்தில் ஈடுபடுங்கள். அறிவுள்ள ஒருவரால் சில காலத்திலேயே இந்த தர்மத்தை தன்னுள்ளே உணர்ந்து கொண்டு உறுதி செய்து கொள்ள முடியும்” என்று. புண்ணியமிகு பிக்குகளே, நான் மிக சொற்ப காலத்திலேயே அந்த தர்மத்தை முழுமையாக கற்றுக் கொண்டேன். அவர்கள் உதடுகளை அசைத்து ஏதேனும் சொல்லும் போதே நான் அதனை புரிந்துகொண்டேன். அவர்களது தர்ம முறையை நான் புரிந்து கொண்டேன். அதனை அறிந்தவராகவும் கண்டவராகவும் நான் விளங்கினேன். ஏனேயோர்களும் என்னைப் பற்றி அப்படிச் சொன்னார்கள்.

புண்ணியமிகு பிக்குகளே, அப்போது நான் இப்படி நினைத்தேன். ‘இந்த ஆலார காலாமர் இந்த தர்மத்தை வெறும் கற்ற அறிவினாலோ அல்லது பக்தியால் மாத்திரமோ கூறுபவர் அல்ல. தாமே உய்த்துணர்ந்து, உறுதி செய்து கொண்டே இவ்வாறு சொல்கின்றார். உண்மையாகவே இந்த ஆலார காலமர் இந்த தர்மத்தை அறிந்து  கண்டுணர்ந்தே இருக்கிறார்’ என்று. புண்ணியமிகு பிக்குகளே, நான் ஆலார  காலமரிடம் சென்றேன். சென்று ஆலார காலமரிடம் இப்படிக் கேட்டேன். “காலம  ஆவுசோ, உங்கள் உய்த்துணர்வின் மூலமாக உறுதி செய்து கொண்ட இந்த தர்மத்தை எந்தளவிற்குள் சொல்ல முடியும்?” என்று. அதற்கு அவர் என்னிடம் ‘ஆகிஞ்சஞ்ஞாயதன’ எனும் சமாதி நிலையை பற்றிச் சொன்னார்.

அதனை கேட்ட நான் இப்படி நினைத்தேன். ‘அப்படி என்றால் சிரத்தை எனும் விடயம் ஆலார காலாமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் சிரத்தை இருக்கிறது. வீரியம் எனும்  விடயம் ஆலார காலாமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் வீரியம் இருக்கிறது. விழிப்புணர்வு  எனும் விடயம் ஆலார காலாமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் விழிப்புணர்வு இருக்கிறது. சமாதி (மன ஒருங்கிணைவு) எனும் விடயம் ஆலார காலாமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் சமாதி இருக்கிறது. ஞானம் எனும் விடயம் ஆலார காலாமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் ஞானம் இருக்கிறது. அப்படியென்றால் ஆலார காலாமர்  தம்முடைய அறிவினால் உறுதி செய்து சொல்லும் இந்த விடயத்தை நானும் உறுதி செய்து கொள்வதற்கு வீரியம் செய்ய வேண்டும்.” என்று. புண்ணியமிகு பிக்குகளே, மிகவும் சொற்ப காலத்திலேயே மிகவும் விரைவாக நானும் அந்த தர்மத்தை உய்த்துணர்ந்து அந்த தர்மத்தை உறுதி செய்து கொண்டேன்.

புண்ணியமிகு பிக்குகளே, அதன் பின்னர் நான் ஆலார காலாமரிடம் சென்றேன். சென்று இப்படிச் சொன்னேன். “அன்பிற்குரிய காலாம ஆவுசோ, நீங்கள், உய்த்துணர்வினால் உறுதிசெய்து கொண்ட இந்த தர்மம் இவ்வளவு தானா?”

“அன்பிற்குரிய ஆவுசோ, நான் உய்த்துணர்வினால் உறுதி செய்துகொண்டு சொல்லும் தர்மம் இவ்வளவுதான்”.

“அன்பிற்குரிய காலாம ஆவுசோ, இப்போது நானும் இந்த தர்மத்தை உய்த்துணர்வினால் உறுதி செய்துகொண்டே வசிக்கிறேன்”

“ஆ..! உண்மையாகவா ஆவுசோ, இது பெரும் இலாபமாகும். ஆவுசோ இது எமக்கு பெரும் இலாபமாகும். தங்களைப் போன்ற சக பிரம்மச்சரியரை எமக்கு காணக் கிடைத்ததல்லவா? ஏதேனும் நான் உய்த்துணர்வுடன் உறுதி செய்து கொண்டிருப்பேனாயின், அதை தாங்களும் உய்த்துணர்வினால் உறுதிசெய்து கொண்டே இருக்கிறீர்கள். ஏதேனும் தர்மத்தை தாங்கள் உய்த்துணர்ந்து கொண்டு உறுதி செய்திருப்பீர்களாயின் அந்த தர்மத்தை நானும் உய்த்துணர்வுடன் உறுதி செய்து கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் நான் ஏதேனும் தர்மத்தை அறிவேனாயின், அந்த தர்மத்தை தாங்களும் அறிவீர்கள். தாங்கள் ஏதேனும் தர்மத்தை அறிவீர்களாயின், அதனை நானும் அறிவேன். நான் எத்தகையவரோ தாங்களும் அத்தகையவரே. தாங்கள் எத்தகையவரோ நானும் அத்தகையவரே. எனவே அன்பிற்குரிய ஆவுசோ, இப்போது வாருங்கள். நாம் இருவரும் சேர்ந்தே இந்த சீடர் குலாமை கவனித்துக் கொள்வோம்.”

புண்ணியமிகு பிக்குகளே, இவ்வாறாக எனக்கு குருவாக விளங்கிய ஆலார காலாமர், அவருக்கு சீடராக விளங்கிய என்னை தனக்கு சமமான நிலையில் கருதினார். பூஜித்தார். ஆனாலும் பிக்குகளே, நான் இப்படி நினைக்க ஆரம்பித்தேன். ‘(ஆலார காலாமர் உபதேசித்த) இந்த தர்மம் என்றால் உய்த்துணர்வுடன் வெறுப்பதற்கு காரணமாக அமையாது. (ஆசையுடன்) ஒட்டிக் கொள்ளாமைக்கு காரணமாக விளங்காது. துக்கங்கள் அழிவதற்கு காரணமாக விளங்காது. கிலேசங்கள் தணிவதற்கு காரணமாக அமையாது. விசேட ஞானத்தை பெறுவதற்கு காரணமாக அமையாது. ஆரிய சத்திய உய்த்துணர்விற்கு காரணமாகாது. மோட்சத்தை உறுதி செய்துகொள்வதற்கு காரணமாக அமையாது. இந்த தர்மம் ஆகிஞ்சஞ்ஞாதன உலகத்தில் பிறப்பதற்கு மாத்திரமே காரணமாக அமையும்’ என்று. புண்ணியமிகு பிக்குகளே, நான் தேடும் விமோட்சனம் அந்த (ஆலார காலாமரின்) தர்மத்தில் கிடைக்காததை அறிந்த நான், அந்த தர்மம் தொடர்பாக விருப்பற்றவரானேன். அவ்விடத்தை விட்டு அகன்று சென்றேன்.

புண்ணியமிகு பிக்குகளே நான் மீண்டும், ‘குசலங்கள் என்றால் என்ன,’ என்று தேடும் ஒருவரானேன். உன்னதமான மோட்சத்தை தேடும் ஒருவரானேன். நான் இராமபுத்திரனாகிய உத்தகனிடம் சென்றேன். சென்று இராமபுத்திரனாகிய உத்தகரிடம்  இவ்வாறு சொன்னேன். “அன்பிற்குரிய ஆவுசோ, இந்த தர்மம் மற்றும் ஒழுக்கத்தில் ஈடுபடுவதற்கு நான் விரும்புகின்றேன்” என்று.

புண்ணியமிகு பிக்குகளே, அச்சமயம் இராமபுத்திரராகிய உத்தகர் என்னிடம் இப்படிச் சொன்னார். “அன்பிற்குரிய ஆவுசோ, அப்படி என்றால் இந்த தர்மத்தில் ஈடுபடுங்கள். பிரம்மச்சரியத்தில் ஈடுபடுங்கள். அறிவுள்ள ஒருவரால் சில காலத்திலேயே இந்த தர்மத்தை தன்னுள்ளே உணர்ந்து கொண்டு உறுதி செய்து கொள்ள முடியும்” என்று. புண்ணியமிகு பிக்குகளே, நான் மிக சொற்ப காலத்திலேயே அந்த தர்மத்தை முழுமையாக கற்றுக் கொண்டேன். புண்ணியமிகு பிக்குகளே, அவர்கள் உதடுகளை அசைத்து ஏதேனும் சொல்லும்போதே நான் அதனை புரிந்துகொண்டேன். அவர்கள் மத்தியில் நான் பெரியவரானேன்.  அந்த தர்மத்தை  அறிந்தவராகவும் கண்டவராகவும் நான் விளங்கினேன். ஏனேயோர்களும் என்னைப் பற்றி அப்படியே சொன்னார்கள்.

புண்ணியமிகு பிக்குகளே, அப்போது நான் இப்படி நினைத்தேன். ‘இந்த இராமபுத்திரராகிய உத்தகர் இந்த தர்மத்தை வெறும் கற்ற அறிவினாலோ அல்லது பக்தியால் மாத்திரமோ கூறுபவர் அல்ல. தாமே உய்த்துணர்ந்து உறுதிசெய்து கொண்டே இவ்வாறு சொல்கின்றார். உண்மையாகவே  இராமபுத்திரராகிய உத்தகர் இந்த தர்மத்தை அறிந்து கண்டுணர்ந்தே இருக்கிறார். என்று. புண்ணியமிகு பிக்குகளே, நான் இராமபுத்திரராகிய உத்தகரிடம் சென்றேன். சென்று இராமபுத்திரராகிய உத்தகரிடம்  இப்படிக் கேட்டேன். “அன்பிற்குரிய ஆவுசோ, உங்கள் உய்த்துணர்வின் மூலமாக உறுதி செய்துகொண்ட இந்த தர்மத்தை எந்தளவிற்குள் சொல்ல முடியும்?” என்று. அதற்கு அவர் என்னிடம் ‘நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன’ எனும் சமாதி நிலையை பற்றி என்னிடம் சொன்னார்.

புண்ணியமிகு பிக்குகளே, அதைப் பற்றி நான் இப்படி நினைத்தேன். ‘சிரத்தை இருந்தது, இராமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் சிரத்தை இருக்கிறது. வீரியம் இருந்தது, இராமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் வீரியம் இருக்கிறது.  விழிப்புணர்வு இருந்தது, இராமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் விழிப்புணர்வு இருக்கிறது. சமாதி (மன ஒருங்கிணைவு) இருந்தது, இராமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் சாமதி இருக்கிறது.  ஞானம் இருந்தது, இராமரிடம் மாத்திரமல்ல. என்னிடமும் ஞானம் இருக்கிறது. அப்படியென்றால் நானும் இந்த புண்ணியமிகு இராமர் தம்முடைய அறிவினால் உறுதி செய்து சொல்லும் இந்த விடயத்தை  உய்த்துணர்ந்து கொள்வதற்காக வீரியம் செய்வேன். அதனை உறுதி செய்துகொள்வதற்காக வீரியம் செய்வேன்’என்று. புண்ணியமிகு பிக்குகளே, மிகவும் சொற்ப காலத்திலேயே மிகவும் விரைவாக நானும் அந்த தர்மத்தை உய்த்துணர்ந்து அந்த தர்மத்தை உறுதி செய்துகொண்டேன்.

புண்ணியமிகு பிக்குகளே, அதன் பின்னர் நான் ஒருநாள் இராமபுத்திரராகிய உத்தகரிடம் சென்றேன். சென்று இப்படிச் சொன்னேன். “அன்பிற்குரிய ஆவுசோ, உங்கள் தந்தையாரான புண்ணியமிகுந்த இராமர் தன்னுடைய ஞானத்தினால் உய்த்துணர்ந்து கொண்ட, உறுதி செய்துகொண்ட இந்த தர்மம் இவ்வளவு தானா?”

“அன்பிற்குரிய ஆவுசோ, ஆம்! எமது தந்தையாரான புண்ணிமிகுந்த இராமர் தன்னுடைய ஞானத்தினால் உய்த்துணர்ந்து கொண்ட, உறுதி செய்துகொண்ட இந்த தர்மம் இவ்வளவுதான்”.

“அன்பிற்குரிய ஆவுசோ, (உங்கள் தந்தையாரான புண்ணியமிகுந்த இராமர் உறுதி செய்துகொண்ட) இந்த தர்மத்தை நானும் அந்தளவில் உய்த்துணர்வினால் உறுதி செய்கொண்டே வசிக்கிறேன்”

“ஆ..! உண்மையாகவா ஆவுசோ, இது பெரும் இலாபமாகும். ஆவுசோ இது எமக்கு பெரும் இலாபமாகும். தங்களைப் போன்ற சக பிரம்மச்சரியரை எமக்கு காணக் கிடைத்ததல்லவா? ஏதேனும் எமது தந்தையாரான இராமர் உய்த்துணர்வுடன் உறுதி செய்து வசித்திருப்பாராயின், அதை தாங்களும் உய்த்துணர்விரல் உறுதி செய்து கொண்டே இருக்கிறீர்கள். ஏதேனும் தர்மத்தை தாங்கள் உய்த்துணர்ந்து கொண்டு உறுதி செய்திருப்பீர்களாயின் அந்த தர்மத்தை எமது தந்தையாரான இராமரும் உய்த்துணர்வுடன் உறுதி செய்து வசித்திருந்தார். புண்ணியமிகு இராமர் ஏதேனும் தர்மத்தை அறிந்திருப்பாராயின் அந்த தர்மத்தை தாங்களும் இப்போது அறிவீர்கள். தாங்கள் ஏதேனும் தர்மத்தை அறிவீர்களாயின் அதனை புண்ணியமிகு இராமரும் அறிந்திருந்தார். எனவே புண்ணியமிகு இராமர் எத்தகையவரோ தாங்களும் அத்தகையவரே. தாங்கள் எத்தகையவரோ இராமரும் அத்தகையவரே. எனவே அன்பிற்குரிய ஆவுசோ, இப்போது வாருங்கள். நீங்கள் இந்த சீடர் குலாமை கவனித்துக் கொள்ளுங்கள்.” என்றார்.

இவ்வாறாக புண்ணியமிகு பிக்குகளே, இராம புத்திரராகிய உத்தகர், எனக்கு நிகரான சக பிரம்மச்சரியராக இருந்தபோதிலே என்னை குரு பதவியில் வைத்தார். எனக்கு உத்தம பூஜைகள் செய்தார். ஆனாலும் பிக்குகளே, நான் சிந்திக்க ஆரம்பித்தேன். ‘இந்த தர்மமென்றால் உய்த்துணர்வுடன் வெறுப்பதற்கு காரணமாக அமையாது. ஒட்டிக்கொள்ளாமைக்கு காரணமாக விளங்காது. துக்கங்கள் அழிவதற்கு காரணமாக விளங்காது. கிலேசங்கள் தணிவதற்கு காரணமாக அமையாது. விசேட ஞானத்தை பெறுவதற்கு காரணமாக விளங்காது. ஆரிய சத்திய உய்த்துணர்விற்கு காரணமாக விளங்காது. மோட்சத்திற்கு காரணமாக விளங்காது. இந்த தர்மம் நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன எனும் உலகத்தில் பிறப்பதற்கு மாத்திரமே காரணமாக விளங்கும்’ என்று. புண்ணியமிகு பிக்குகளே, நான் தேடும் விமோட்சனம் அந்த (இராம புத்திரராகிய உத்தகரின்) தர்மத்தில் கிடைக்காததை அறிந்த நான், அந்த தர்மம் தொடர்பாக விருப்பற்றவரானேன். அவ்விடத்தை விட்டு அகன்று சென்றேன்.

புண்ணியமிகு பிக்குகளே, நான் மீண்டும் ‘குசலங்கள் என்றால் என்ன,’ என்று தேடும் ஒருவரானேன். உன்னதமான மோட்சத்தை தேடும் ஒருவரானேன். நான் மகத இராச்சியத்தினூடாக நடந்து சென்றேன். அப்படிச் செல்லும்போதுதான் உருவேல பிரதேசத்தின் சேனானிகாமம் எனும் கிராமத்தை அடைந்தேன். அங்கேயே தங்கிக் கொண்டேன். அந்த பிரதேசம் நான் கண்ட அழகியதொரு இடமாகும். அந்த வனாந்தரம் மிகவும் அழகியது. வெண்ணிறமான மணற்கரையை கொண்ட நதி அழகாக பாய்ந்தோடியது. ஐயமேற்பதற்கு வசதியாக அந்த வனத்தின் அருகேயே கிராமமும் இருந்தது. புண்ணியமிகு பிக்குகளே, எனக்கு அப்போது இப்படித் தோன்றியது. ‘உண்மையாகவே இந்த பிரதேசம் அழகாக இருக்கிறது. இந்த வனமும் மிக்க அழகாக இருக்கிறது. வெண்ணிற மணற்கரையை கொண்ட நதி அழகாக பாய்ந்தோடுகின்றது. ஐயமேற்பதற்கு வேண்டுமானால் இந்த கிராமம் அருகிலேயே இருக்கிறது. உண்மையாகவே வீரியத்துடன் தியானிக்கும் புண்ணியமிக்க ஒருவருக்கு இது மிகவும் உசிதமான இடமாகும்’. என்று. எனவே புண்ணியமிகு பிக்குகளே, நான் அங்கேயே தங்கினேன். தியானம் செய்வதற்கு இவ்விடமே மிகவும் உசிதமானது என்று நினைத்தேன். அங்கேயே அமர்ந்து கொண்டேன்.

புண்ணியமிகு பிக்குகளே, நானும் பிறக்கும் இயல்புடன் இருந்து கொண்டு, பிறக்கும் இயல்புடன் கூடிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு பிறப்புகளற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை தேடியே சென்றேன். இப்போது நான் பிறப்புகளற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டேன்.

முதுமையடையும் இயல்புடன் இருக்கின்ற நான், முதுமையடையும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு முதுமையற்ற, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் அதி உத்தமமான மோட்சத்தை தேடியே சென்றேன். இப்போது நான் முதுமையற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டேன்.

நோயுறும் இயல்புடன் இருக்கின்ற நான், நோயுறும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு நோய்களற்ற, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் அதி உத்தமமான மோட்சத்தை தேடியே தேடியே சென்றேன். இப்போது நான் நோய்களற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டேன்.

மரணமடையும் இயல்புடன் இருக்கின்ற நான், மரணமடையும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு மரணங்களற்ற, துக்கங்களில்  இருந்து விடுதலையடைதல் எனும் அதி உத்தமமான மோட்சத்தை தேடியே தேடியே சென்றேன். இப்போது நான் மரணங்களற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டேன்.

சோகமடையும் இயல்புடன் இருக்கின்ற நான், சோகமடையும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு சோகங்களற்ற, துக்கங்களில்  இருந்து விடுதலையடைதல் எனும் அதி உத்தமமான மோட்சத்தை தேடியே சென்றேன். இப்போது நான் சோகங்களற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டேன்.

(மனம்) அழுக்கடையும் இயல்புடன் இருக்கின்ற நான், அழுக்கடையும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு அழுக்குகள், மாசுகள் அற்ற, துக்கங்களில்  இருந்து விடுதலையடைதல் எனும் அதி உத்தமமான மோட்சத்தை தேடியே சென்றேன். இப்போது நான் கிலேசங்களற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டேன். புண்ணியமிகு பிக்குகளே, என்னுடைய சித்த விமோட்னசம் ஒருபோதும் மாற்றமடைவதில்லை. இதுவே இறுதி பிறப்பு. மீண்டும் மறுபிறவிகள் இல்லை” எனும் ஞானக்காட்சி என்னுள் தோன்றியது.

புண்ணியமிகு பிக்குகளே, அது தொடர்பாக நான் இவ்வாறு நினைத்தேன். ‘நான் உய்த்துணர்ந்து கொண்ட இந்த தர்மம் மிகவும் ஆழமானது. ஒருவர் காண்பது இலகுவான காரியமல்ல. உய்த்துணர்ந்து கொள்வது ஒருபோதும் இலகுவானதல்ல. (இந்த தர்மம்) மிகவும் ஷாந்தமானது. மிகவும் சுவையானது. தர்க்கம் செய்து புரிந்து கொள்வதற்கு கடினமானது. மிகவும் நுண்மையானது. ஞானிகளால் உய்த்துணர்ந்து கொள்ளக்கூடியது. ஆனால் இந்த உலக உயிர்களோ ஆசையினுள்ளே இருக்கின்றனர். ஆசையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆசையினால் சந்தோஷமடைந்து கொண்டிருக்கின்றனர். எனவே இந்த உலக உயிர்களுக்கென்றால் காரண காரிய செயற்பாட்டுடன் கூடிய இந்த படிச்ச சமுப்பாத தர்மத்தை உய்த்துணர்ந்து கொள்வதானது, இலகுவான விடயமல்ல. அதேபோன்று இவ் அனைத்து சங்ஸ்காரங்களையும் தணியச்செய்யும், அனைத்து விதமான கிலேசங்களையும் அழித்துவிடும், வேட்கையை இல்லாதொழிக்கும், வேட்கையில் ஒட்டிக்கொள்ளாத, ஆசையை இல்லாமல் செய்துவிடும் அந்த மோட்சத்தை உய்த்துணர்ந்து கொள்வதானது இலகுவான விடயமல்ல. எனவே நான் இந்த தர்மத்தை போதிக்க ஆரம்பித்து, ஏனையோர் அதனை உய்த்துணர்ந்து கொள்ளாவிட்டால் அது எனக்கு சோர்வையே தரும். அயர்வையே தரும் என்று. அச்சமயத்திலேயே நான் அதுவரை ஒருபோதும் கேட்டிராத இந்த அற்புதமான செய்யுள் மனதில் தோன்றியது.

“அரும் பாடுபட்டே நான் இந்த தர்மத்தை உய்த்துணர்ந்தேன். இந்த கம்பீரமான தர்மத்தை ஏனையோருக்கு சொல்வதில் பயனில்லை. வேட்கை, கோபம், அறியாமை என்பனவற்றினால் மூழ்கியிருக்கும் இந்த உயிர்கள் இத்தகைய தர்மத்தை உய்த்துணர்ந்து கொள்வது இலகுவான விடயமல்ல.

இந்த தர்மம் எதிர்நீச்சல் செய்யவேண்டியதாகும். மிக மிக நுண்ணியமானதாகும். ஆழம் மிகுந்ததாகும். உய்த்துணர்ந்து கொள்வதற்கு மிகவும் கடினமானதாகும். அதி நுண்மையானதாகும். அஞ்ஞான காரிருளினால் மூடப்பட்டிருக்கும், வேட்கையில் ஒட்டியிருக்கும் இந்த உயிர்கள் இத்தகைய தர்மத்தை உய்த்துணர்ந்து கொள்ள மாட்டார்கள்.”

புண்ணியமிகு பிக்குகளே, நான் இவ்வாறாக சிந்திக்கும் போது முயற்சி குறைவான திசைக்கே மனம் திரும்பியது. தர்மத்தை போதிக்க மனம் திரும்பவில்லை. புண்ணியமிகு பிக்குகளே, அச்சமயம் சஹம்பதீ பிரம்மராஜன் தன் மனதினால் என் மனதில் தோன்றிய சிந்தனையை கண்டார். அச்சமயம் அவருக்கு இவ்வாறு தோன்றியது. “ஐயகோ புண்ணியமிக்கவர்களே, இந்த உலக உயிர்கள் அழிந்து போவார்கள்! ஐயகோ புண்ணியமிக்கவர்களே, இந்த உலக உயிர்கள் ஒழிந்து போவார்கள்! இந்த உலகில் தோன்றிய ததாகத அரஹத் சம்மா சம்புத்த ராஜனது மனம் (தர்மத்தை போதிப்பதற்கான) சொற்பமான ஈடுபாட்டிற்கே திரும்பியிருக்கிறது. தர்மத்தை போதிப்பதற்காக அந்த உத்தமரது மனம் ஈடுபடவில்லை” என்று. புண்ணியமிகு பிக்குகளே, அதன் பிறகு அந்த சஹம்பதீ பிரம்மராஜன் வலிமை மிகுந்த ஒரு மனிதன் மடித்த கையை நீட்டுவதைப் போன்று, நீட்டியிருந்த கையை மடிப்பதைப் போன்று (மிக விரைவாக) பிரம்மலோகத்திலிருந்து மறைந்து என் முன் தோன்றினார்.

புண்ணியமிகு பிக்குகளே, அந்த சஹம்பதீ பிரம்மராஜன் தம் சால்வையை ஓரங்கமாக போர்த்திக் கொண்டு வணங்கியபடி என்னிடம் இவ்வாறு சொன்னார். “ பாக்கியமுள்ள பகவானே, தர்மத்தை போதிப்பீர்களாக! சுவாமியே, சுகத உத்தமரே, தர்மத்தை மொழிந்தருளுவீராக! இந்த உலகில் கிலேசங்கள் குறைவான உயிர்களும் இருக்கின்றனர். அவர்களால் இந்த உத்தம தர்மத்தை செவிமடுக்க முடியாமல் போய்விட்டால் அவர்கள் அழிந்துவிடுவார்கள். தர்மத்தை கேட்கக்கிடைத்தால் அவர்கள் தர்மத்தை உய்த்துணர்ந்து கொள்வார்கள்.” என்று.

புண்ணியமிகு பிக்குகளே, சஹம்பதீ பிரம்மராஜன் இவ்வாறாக சொன்ன பிறகு மீண்டும் இந்த செய்யுள்களையும் சொன்னார்.

“முன்னர் மகத தேசத்தில் கிலேசங்கள் நிறைந்த மனிதர்கள் நினைத்த அசுத்தமான அதர்மமே நிலைத்திருந்தது. இப்போது இந்த அமிர்தம் போன்ற மோட்சத்திற்கான பாதையை திறந்து வைப்பீர்களாக! நிர்மலமான ஞானமுடைய புத்த ராஜனது தர்மத்தை ஞானமுள்ளவர்கள் கேட்பதாக!

கற்குன்றின் மீது ஏறிய ஒருவர் சுற்றியுள்ள மக்களை காண்பதைப் போன்று மகா ஞானியான, எல்லா திசைகளையும் காணக்கூடிய ஞானவிழிகளை கொண்டிருக்கும் சம்மா சம்புத்தராஜ உத்தமரே! தர்மத்தால் உருவாக்கப்பட்ட கோபுரத்தின் மீதேறி,

சோகங்களற்ற உத்தம மனதுடன், பிறப்பினாலும் முதுமையாலும் பீடிக்கபட்டு சோகத்தில் மூழ்கியிருக்கும் உயிர்களை காண்பீர்களாக!

மாரனுடன் செய்த போரில் பெரும் வெற்றியீட்டிய மகா வீரரே, எழுந்திருப்பீராக!  மாபெரும் வழிகாட்டியே! கடன்களற்ற புருஷோத்தமரே உலகெங்கும் நடமாடுவீராக! பாக்கியமுள்ள பகவானே, தர்மத்தை மொழிந்தருளுவீராக! உய்த்துணர்ந்து கொள்பவர்கள் (கண்டிப்பாக) தோன்றுவார்கள்.”

புண்ணியமிகு பிக்குகளே, மகா பிரம்மனது எண்ணத்தை நான் உணர்ந்து கொண்டேன். உயிர்கள் மீது பெருங்கருணையே தோன்றியது. புத்த விழிகளால் உலகை பார்த்தேன். (இந்திரிய பரோபரியத்த ஞானம் மற்றும் ஆசயானுச ஞானம் எனும் இரண்டு வகையான ஞானங்களே புத்த விழிகள் என்று கூறப்படுகின்றது) புண்ணியமிகு பிக்குகளே, புத்த விழிகளால் உலகினை பார்த்த நான் (வெவ்வேறு) உயிர்களை கண்டேன். ஒரு சிலருக்கு கிலேசங்கள் மிகக்குறைவாக இருந்தன. ஒரு சிலருக்கு கிலேசங்கள் அதிகமாக இருந்தன. ஒருசிலரின் சிரத்தை உட்பட்ட இந்திரிய தர்மங்கள் கூர்மையாக இருந்தன. ஆனால் ஒருசிலரின் இந்திரிய தர்மங்கள் சரிவர விருத்தியடையாமல் இருந்தன். வேறு சிலரிடம் நன்மையான இயல்புகள் இருந்தன. ஒருசிலரிடம் தீமையான இயல்புகள் இருந்தன். ஒருசிலரிடம் (இந்த தர்மத்தை) இலகுவாக உய்த்துணர்ந்து கொள்ளக்கூடிய திறன் இருந்தது. ஒருசிலருக்கு இலகுவாக உய்த்துணர்ந்து கொள்ளக்கூடிய நிலை இல்லை. ஒரு சிலரிடம் மறுபிறப்பு தொடர்பாகவும் பாவங்கள் தொடர்பாகவும் பயமிருந்தது. ஆனால் இன்னும் சிலருக்கு மறுபிறப்பு தொடர்பாகவும் பாவங்கள் தொடர்பாகவும் பயங்களில்லை. புண்ணியமிகு பிக்குகளே, இந்த உலக உயிர்களின் நிலையானது கருங்குவளை தடாகத்தை போன்றதாகும். தாமரைத்தடாகத்தை போன்றதாகும். அந்த தடாகங்களில் நீரில் பூக்கும் இயல்புடைய கருங்குவளை, செந்தாமரை, வெண்தாமரை ஆகியன இருக்கின்றன. அவை இன்னும் முற்றிக்கொண்டு இருக்கின்றன. இன்னும் அவை நீரினுள் அமிழ்ந்து வளர்ச்சியடைகின்றன. அதேபோன்று இன்னும் சில கருங்குவளை, செந்தாமரை, வெண்தாமரை ஆகியன நீரினுள் முழு வளர்ச்சியடைந்து நீரினுள்ளேயே நன்கு முற்றி நீரின் மேற்பரப்பிற்கு வந்து நீருடன் பட்டும் படாமலும் இருக்கின்றன. புண்ணியமிகு பிக்குகளே, இவ்வாறாகவே நான் உலக உயிர்களை புத்த விழிகளால் கண்ணுற்றேன். இவ்வாறு பார்க்கும்போது நான் இந்த உலக உயிர்களின் இயல்பை உணர்ந்து கொண்டேன். ஒரு சிலருக்கு கிலேசங்கள் மிகக்குறைவாக இருந்தன. ஒரு சிலருக்கு கிலேசங்கள் அதிகமாக இருந்தன. ஒருசிலரின் சிரத்தை உட்பட்ட இந்திரிய தர்மங்கள் கூர்மையாக இருந்தன. ஆனால் ஒருசிலரின் இந்திரிய தர்மங்கள் சரிவர விருத்தியடையாமல் இருந்தன். வேறு சிலரிடம் நன்மையான இயல்புகள் இருந்தன. ஒருசிலரிடம் தீமையான இயல்புகள் இருந்தன். ஒருசிலரால் (இந்த தர்மத்தை) இலகுவாக உய்த்துணர்ந்து கொள்ளகூடிய திறன் இருந்தது. ஒருசிலருக்கு இலகுவாக உய்த்துணர்ந்து கொள்ளக்கூடிய நிலை இல்லை. ஒரு சிலரிடம் மறுபிறப்பு தொடர்பாகவும் பாவங்கள் தொடர்பாகவும் பயமிருந்தது. ஆனால் இன்னும் சிலருக்கு மறுபிறப்பு தொடர்பாகவும் பாவங்கள் தொடர்பாகவும் பயங்களில்லை. புண்ணியமிகு பிக்குகளே, எனவே நான் சஹம்பதீ எனும் பிரம்மராஜனிடம் ஒரு செய்யுளின் மூலம் இவ்வாறாக கூறினேன்.

“உலகின் அறிவுடைய உயிர்களுக்காக மோட்சத்தின் பாதையை இதோ நான் திறந்துவிட்டேன். தர்மத்தை செவிமடுக்க விரும்புவோர் சிரத்தையை தோற்றுவித்துக் கொள்வதாக! புண்ணியமிகு பிரம்மனே, நான் இந்த சுவை மிகுந்த தர்மத்தை, என்னுள் முறையாகவும் முழுமையாகவும் விருத்தியடைந்த இந்த தர்மத்தை இதுவரை யாருக்கும் தெரிவிக்காததற்கு காரணம் அது வெறும் சோர்வை தரும் (வீணான முயற்சி) எனும் எண்ணத்தினாலாகும்.”

புண்ணியமிகு பிக்குகளே, அச்சமயம் சஹம்பதீ பிரம்மன் “பாக்கியமுள்ள புத்த பகவான் தர்மத்தை போதிப்பதற்கான அவகாசத்தை தோற்றுவித்துக் கொண்டார்” என்று என்னை வணங்கி வலம் வந்து அங்கேயே மறைந்தார்.

புண்ணியமிகு பிக்குகளே, அப்போது நான் இவ்வாறு நினைத்தேன். ‘நான் முதன் முதலில் யாருக்காக தர்மத்தை போதிக்க வேண்டும், யாரால் இந்த தர்மத்தை மிக விரைவாக உய்த்துணர்ந்து கொள்ள முடியும்?’ என்று. புண்ணியமிகு பிக்குகளே, அப்போது எனக்கு இவ்வாறு தோன்றியது. ‘இந்த ஆலார காலாமர் அறிவுடையவர், விவேகமானவர், ஞானமுடையவர். நீண்ட காலங்களாக கிலேசங்கள் குறைவாக வாழ்ந்தவர். நான் அந்த அலார காலாமருக்கே இந்த தர்மத்தை முதன் முதலில் போதிக்க வேண்டும் என்று. அவ்வாறு போதித்தால் அவரால் இந்த தர்மத்தை விரைவாக உய்த்துணர்ந்து கொள்ள முடியும் என்று. புண்ணியமிகு பிக்குகளே, அச்சமயம் தேவர்கள் என் முன் தோன்றி இவ்வாறு கூறினார்கள். “பகவானே, ஏழு நாட்களுக்கு முன்னர் ஆலார காலாமர் இறந்துவிட்டார்” என்று. ஏழு நாட்களுக்கு முன் ஆலார காலாமர் இறந்துவிட்டமையை நானும் உணர்ந்து கொண்டேன். புண்ணியமிகு பிக்குகளே, அப்போது ஆலார காலாமரைப் பற்றி எனக்கு இவ்வாறு தோன்றியது. ‘அந்தோ! ஆலார காலாமர் மிகவும் துரதிஷ்டமானவர். அவர் இந்த தர்மத்தை செவிமடுத்திருந்தால் அவர் இந்த தர்மத்தை விரைவாகவே உய்த்துணர்ந்து கொண்டிருப்பார்.’ என்று.

புண்ணியமிகு பிக்குகளே, அப்போது நான் இவ்வாறு நினைத்தேன். ‘நான் முதன் முதலில் யாருக்காக தர்மத்தை போதிக்க வேண்டும், யாரால் இந்த தர்மத்தை மிக விரைவாக உய்த்துணர்ந்து கொள்ள முடியும்?’ என்று. புண்ணியமிகு பிக்குகளே, அப்போது எனக்கு இவ்வாறு தோன்றியது. ‘இந்த இராமபுத்திரனாகிய உத்தகர் அறிவுடையவர். விவேகமானவர். ஞானமுடையவர். நீண்ட காலங்களாக கிலேசங்கள் குறைவாக வாழ்ந்தவர். நான் அந்த இராமபுத்திரனாகிய உத்தகருக்கே இந்த தர்மத்தை முதன் முதலில் போதிக்க வேண்டும் என்று. அவ்வாறு போதித்தால் அவரால் இந்த தர்மத்தை விரைவாக உய்த்துணர்ந்து கொள்ள முடியும் என்று. புண்ணியமிகு பிக்குகளே, அச்சமயம் தேவர்கள் என் முன தோன்றி இவ்வாறு கூறினார்கள். “பகவானே, நேற்று இரவு இராமபுத்திரனாகிய உத்தகர் இறந்துவிட்டார்” என்று. நேற்று இரவு இராமபுத்திரனாகிய உத்தகர் இறந்துவிட்டமை  தொடர்பாக என்னுள்ளும் உய்த்துணர்வு தோன்றியது. புண்ணியமிகு பிக்குகளே, அப்போது ஆலார காலாமரைப் பற்றி எனக்கு இவ்வாறு தோன்றியது. ‘அந்தோ! இராமபுத்திரனாகிய உத்தகர் மிகவும் துரதிஷ்டமானவர். அவர் இந்த தர்மத்தை செவிமடுத்திருந்தால் அவர் இந்த தர்மத்தை விரைவாகவே உய்த்துணர்ந்து  கொண்டிருப்பார்.’

புண்ணியமிகு பிக்குகளே, அப்போது நான் இவ்வாறு நினைத்தேன். ‘நான் முதன் முதலில் யாருக்காக தர்மத்தை போதிக்க வேண்டும், யாரால் இந்த தர்மத்தை மிக விரைவாக உய்த்துணர்ந்து கொள்ள முடியும்?’ என்று. புண்ணியமிகு பிக்குகளே, அப்போது எனக்கு இவ்வாறு தோன்றியது. ‘இந்த ஐந்து பிக்குமார்கள் எனக்கு நிறைய உபகாரம் செய்திருக்கிறார்கள். நான் பலத்த முயற்சியுடன் தியானம் செய்யும் காலத்தில் எனக்கு பணிவிடைகள் செய்திருக்கிறார்கள். அப்படியாயின் இந்த ஐந்து பிக்குமார்களுக்கே நான் முதன் முதலில் தர்மத்தை போதிக்க வேண்டும்’ என்று. அப்போது நான், ‘இந்த ஐந்து பிக்குமார்களும் இப்போது எங்கிருக்கிறார்கள்?’ என்று நினைத்தேன். புண்ணியமிகு பிக்குகளே, நான் சாதாரண மனிதர்களின் காட்சி எல்லையை மீறிய தூய்மையான தெய்வீக கண்களினால் இந்த ஐந்து பிக்குமார்களும் வாரணாசியின் மிகதாய என்றழைக்கப்படும் இசிபத்தன எனும் இடத்தில் வசித்திருப்பதை கண்டேன்.

புண்ணியமிகு பிக்குகளே, நான் உருவேல தேசத்தில் விரும்பிய காலம் வரை தங்கியிருந்து வாரணாசியை நோக்கி புறப்பட்டேன். புண்ணியமிகு பிக்குகளே, வழியில் உபக எனும் தவசி என்னை கண்டார். நான் அச்சமயம் போதிக்கும் கயாவிற்கும் இடையில் இருந்தேன். என்னைக் கண்ட அந்த தவசி இவ்வாறு கூறினார். “அன்பிற்குரிய உத்தமரே! தங்களது முகம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. தங்களது தோல் தூய்மையான (பொன்) நிறத்தில் பிரகாசிக்கிறது. உண்மையிலேயே தாங்கள் யாருக்காக துறவு பூண்டீர்கள்? தங்களது குரு யார்? தாங்கள் யாருடைய தர்மத்தை விரும்புகிறீர்கள்?” என்று. புண்ணியமிகு பிக்குகளே அச்சமயம் நான் அந்த உபக எனும் தவசிக்கு செய்யுள்களினால் இவ்வாறாக பதிலளித்தேன்.

“நான் அனைத்து விதமான அகுசலங்களையும் அழித்தவர். நான் எல்லாவற்றையும் உய்த்துணர்ந்து கொண்டவர். நான் எதன் மீதும் (ஆசையுடன்) ஒட்டிக்கொள்ளாதவர். எல்லா வகையான கிலேசங்களையும் கைவிட்டவர். வேட்கையை அழித்து விமோட்சனத்தை அடைந்தவர். என்னுள் தோன்றிய உய்த்துணர்வு ஞானத்தினால் இவ் அனைத்தையும் அறிந்து கொண்ட நான் எந்த குருவை தேட வேண்டும்?

எனக்கு குரு இல்லை. எனக்கு நிகரானவர்களுமில்லை. தேவர்களுடன் கூடிய இந்த உலகங்களில் எனக்கு நிகரான ஒருவரை தேட முடியாது.

நான் அரஹத் (கிலேசங்களற்ற) நிலையை அடைந்தவராவேன். நானே இவ்வுலகின் மேன்மையான வழிகாட்டியாவேன். ஒரே சம்மா சம்புத்தரும் யாமாவோம். நான் குளிர்ந்து அணைந்த ஒருவராவேன்.

நான் இந்த காசி நாட்டின் வாரணாசி நகரிற்கு தர்ம சக்கரத்தை சுழற்றுவதற்காக சென்றுக் கொண்டிருக்கிறேன். அஞ்ஞானத்தினால் குருடாகிய உலகினுள் மோட்சம் எனும் மேளத்தை இசைப்பதற்காக போகின்றேன்.

“அன்பிற்குரிய உத்தமரே, அப்படியென்றால் தாங்கள் இப்போது சொல்வது ‘அனத்த ஜின’ ஒருவரைப் பற்றியா?”

“ஆம். ஆஸவங்களை அழித்து மோட்சத்தை அடைந்த என்னைப் போன்றவர்களுக்கே ‘ஜின’ என்று சொல்வார்கள். நான் பாவ விடயங்களை வென்றுவிட்டேன். எனவே புண்ணியமிகு உபக, ஜின என்பவரும் யாமே”

புண்ணியமிகு பிக்குகளே, நான் இவ்வாறு கூறியவுடன் அந்த உபக தவசி “அன்பிற்குரிய உத்தமரே, அப்படியிருக்கவும் முடியும்தான்” என்று தலையை ஆட்டி வேறு வழியாக சென்றார்.

புண்ணியமிகு பிக்குகளே, நான் வாரணாசியின் இசிபத்தன எனும் மான்களின் அபயபூமிக்கு வந்தேன். ஐந்து பிக்குமார்களிடம் நான் சென்றேன். அந்த ஐந்து பிக்குமார்களும் தூரத்தே வரும் என்னை கண்டார்கள். கண்டு தமக்குள் இவ்வாறு பேசிக்கொண்டார்கள். “அன்பிற்குரிய ஆவுசோக்களே, அதோ சிரமண கௌதமர் இங்கு வருகிறார். இப்போது அவர் நால்வகையான பரிஷ்காரங்களை (சீவரம், அன்னம், உறையுள், ஔடதம்) பெருமளவில் ஏற்றுக்கொள்பவர். தியானத்தை தலைகீழாக்கிக் கொண்டவர். நால்வகையான பரிஷ்காரங்களை நிறைய பெறுபவர். நாம் அவரை ஒன்றும் வணங்க தேவையில்லை. அவருக்கு பணிவிடை செய்வதற்கான அவசியமில்லை. அவருடைய பாத்திரத்தையும் சீவரத்தையும் வாங்கிக் கொள்ளத்தேவையில்லை. அவர் அமர்ந்து கொள்வதற்காக ஒரு ஆசனத்தை மாத்திரம் ஏற்பாடு செய்வோம். விருப்பமிருந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும்” என்று. புண்ணியமிகு பிக்குகளே, ஆனால் நான் அவர்களை நெருங்கும் போது அவர்கள் பேசிக்கொண்டபடி அவர்களால் இருக்க முடியவில்லை. ஒருவர் முன்வந்து என் சீவரம் மற்றும் உணவு பாத்திரத்தை எடுத்து கொண்டார். இன்னுமொருவர் அமருவதற்காக சிறந்த ஆசனமொன்றை ஏற்பாடு செய்தார். இன்னுமொருவர் என் பாதங்களை கழுவுவதற்காக நீர்ப்பாத்திரத்தை தயார் செய்தார். ஆனால் அவர்கள் என்னை ‘ஆவுசோ’ (துறவில் தமக்கு நிகரான அல்லது தமக்கு கீழ்நிலையில் உள்ள ஒருவரை விழித்து பேசும் சொல்) என்றே விழித்தார்கள்.

புண்ணியமிகு பிக்குகளே, அச்சமயம் அந்த ஐந்து பிக்குமார்களுக்கு நான் இவ்வாறு கூறினேன். “புண்ணியமிகு பிக்குகளே, ததாகதரை பெயரளவில் கூட ‘ஆவுசோ’ என அழைக்க வேண்டாம். ததாகதர் அரஹத் நிலையடைந்தவர். சம்மா சம்புத்த நிலையை அடைந்தவர். புண்ணியமிகு பிக்குகளே, நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். எனக்கு அமிர்தம் கிடைத்துவிட்டது. நான் உங்களுக்கு அதனை கற்றுத்தருகின்றேன். நான் அந்த தர்மத்தை போதிக்கிறேன். நான் கற்றுக்கொடுக்கும் வகையிலேயே நீங்கள் அதனை பின்பற்றினால், குல புத்திரர்கள் எதனை நோக்கமாகக் கொண்டு துறவறத்தை மேற்கொள்கிறார்களோ, மிகவும் சொற்ப காலத்திலேயே அந்த அதி உத்தமமான பிரம்மச்சரிய வாழ்வை பூரணப்படுத்திக் கொண்டு இந்த வாழ்விலேயே தன்னுடைய ஞானத்தினாலேயே உத்தம அரஹத் (கிலேசங்களற்ற) நிலையை அடைய முடியும்.” என்று.

புண்ணியமிகு பிக்குகளே, நான் இவ்வாறு கூறியதற்கு அந்த ஐந்து பிக்குமார்களும் என்னிடம் இவ்வாறு பதில் அளித்தார்கள். “கௌதம ஆவுசோ, நீங்கள் உங்கள் உடலை கடுமையான அளவில் வருத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த போதிலும், பெருமளவிலான ஈடுபாட்டுடன் கடுமையான நிலைகளில் (அத்தகிலமதானுயோகத்தில்) ஈடுபட்டிருந்த போதிலும் மனித தன்மையை மீறிய ஆரிய ஞானகாட்சியை உங்களால் உய்த்துணர்ந்து கொள்ள முடியாமல் போனதல்லவா? அப்படியிருக்கையில் இப்போது நீங்கள் நால்வகையான பரிஷ்காரங்களை பெருமளவில் ஏற்று,  தியானத்தை தலைகீழாக்கிக் கொண்டு, நால்வகையான பரிஷ்காரங்களில் பெற்று தடம் புரண்டு, மனித தன்மையை மீறிய ஆரிய ஞானகாட்சியை எப்படித்தான் உய்த்துணர்ந்து கொள்ள முடியும்?” புண்ணியமிகு பிக்குகளே, அந்த ஐந்து பிக்குமார்களும் அவ்வாறு கூறியதற்கு நான் இவ்வாறாக பதில் அளித்தேன். “புண்ணியமிகு பிக்குகளே, இல்லை. ததாகதர் நால்வகையான பரிஷ்காரங்களை பெருமளவில் ஏற்று கொள்ளவில்லை. தியானத்தை தலைகீழாக்கிக் கொள்ளவில்லை. நால்வகையான பரிஷ்காரங்களில் பெருமளவில் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவற்றில் தடம் மாறவில்லை. ததாகதர் அரஹத் நிலையடைந்தவர். சம்மா சம்புத்த நிலையை அடைந்தவர். புண்ணியமிகு பிக்குகளே, நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். எனக்கு அமிர்தம் கிடைத்துவிட்டது. நான் உங்களுக்கு அதனை கற்றுத்தருகின்றேன். நான் அந்த தர்மத்தை போதிக்கிறேன். நான் கற்றுக்கொடுக்கும் வகையிலேயே நீங்கள் அதனை பின்பற்றினால், குல புத்திரர்கள் எதனை நோக்கமாகக் கொண்டு துறவறத்தை மேற்கொள்கிறார்களோ, மிகவும் சொற்ப காலத்திலேயே அந்த அதி உத்தமமான பிரம்மச்சரிய வாழ்வை பூரணப்படுத்திக் கொண்டு இந்த வாழ்விலேயே தன்னுடைய ஞானத்தினாலேயே உத்தம அரஹத் (கிலேசங்களற்ற) நிலையை அடைய முடியும்.” என்று.

புண்ணியமிகு பிக்குகளே, இரண்டாம் தடவையாகவும் அந்த ஐந்து பிக்குமார்கள் என்னிடம் இவ்வாறு கூறினார்கள். “கௌதம ஆவுசோ, நீங்கள் உங்கள் உடலை கடுமையான அளவில் வருத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த போதிலும், பெருமளவிலான ஈடுபாட்டுடன் கடுமையான நிலைகளில் (அத்தகிலமதானுயோகத்தில்) ஈடுபட்டிருந்த போதிலும் மனித தன்மையை மீறிய ஆரிய ஞானகாட்சியை உங்களால் உய்த்துணர்ந்து கொள்ள முடியாமல் போனதல்லவா? அப்படியிருக்கையில் இப்போது நீங்கள் நால்வகையான பரிஷ்காரங்களை பெருமளவில் ஏற்று,  தியானத்தை தலைகீழாக்கிக் கொண்டு, நால்வகையான பரிஷ்காரங்களில் பெற்று தடம் புரண்டு, மனித தன்மையை மீறிய ஆரிய ஞானகாட்சியை எப்படித்தான் உய்த்துணர்ந்து கொள்ள முடியும்?” புண்ணியமிகு பிக்குகளே, நான் இரண்டாம் முறையாகவும் அந்த ஐந்து பிக்குமார்களுக்கு இவ்வாறு கூறினேன். “புண்ணியமிகு பிக்குகளே, இல்லை. ததாகதர் நால்வகையான பரிஷ்காரங்களை பெருமளவில் ஏற்று கொள்ளவில்லை. தியானத்தை தலைகீழாக்கிக் கொள்ளவில்லை. நால்வகையான பரிஷ்காரங்களில் பெருமளவில் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவற்றில் தடம் மாறவில்லை. ததாகதர் அரஹத் நிலையடைந்தவர். சம்மா சம்புத்த நிலையை அடைந்தவர். புண்ணியமிகு பிக்குகளே, நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். எனக்கு அமிர்தம் கிடைத்துவிட்டது. நான் உங்களுக்கு அதனை கற்றுத்தருகின்றேன். நான் அந்த தர்மத்தை போதிக்கிறேன். நான் கற்றுக்கொடுக்கும் வகையிலேயே நீங்கள் அதனை பின்பற்றினால், குல புத்திரர்கள் எதனை நோக்கமாகக் கொண்டு துறவறத்தை மேற்கொள்கிறார்களோ, மிகவும் சொற்ப காலத்திலேயே அந்த அதி உத்தமமான பிரம்மச்சரிய வாழ்வை பூரணப்படுத்திக் கொண்டு இந்த வாழ்விலேயே தன்னுடைய ஞானத்தினாலேயே உத்தம அரஹத் (கிலேசங்களற்ற) நிலையை அடைய முடியும்.” என்று.

புண்ணியமிகு பிக்குகளே, மூன்றாம் முறையாகவும் அந்த ஐந்து பிக்குமார்கள் என்னிடம் இவ்வாறு கூறினார்கள். “கௌதம ஆவுசோ, நீங்கள் உங்கள் உடலை கடுமையான அளவில் வருத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த போதிலும், பெருமளவிலான ஈடுபாட்டுடன் கடுமையான நிலைகளில் (அத்தகிலமதானுயோகத்தில்) ஈடுபட்டிருந்த போதிலும் மனித தன்மையை மீறிய ஆரிய ஞானகாட்சியை உங்களால் உய்த்துணர்ந்து கொள்ள முடியாமல் போனதல்லவா? அப்படியிருக்கையில் இப்போது நீங்கள் நால்வகையான பரிஷ்காரங்களை பெருமளவில் ஏற்று,  தியானத்தை தலைகீழாக்கிக் கொண்டு, நால்வகையான பரிஷ்காரங்களில் பெற்று தடம் புரண்டு, மனித தன்மையை மீறிய ஆரிய ஞானகாட்சியை எப்படித்தான் உய்த்துணர்ந்து கொள்ள முடியும்?”

புண்ணியமிகு பிக்குகளே, நான் அப்போது அந்த ஐந்து பிக்குமார்களுக்கு இவ்வாறு கூறினேன்.

“புண்ணியமிகு பிக்குகளே, நான் இதற்கு முன்னர் எப்போதாவது உங்களிடம் இத்தகைய விடயத்தை சொல்லியிருக்கிறேனா?”

“சுவாமி, இதற்கு முன் தாங்கள் அவ்வாறு கூறியதில்லை”

“ததாகதர் நால்வகையான பரிஷ்காரங்களை பெருமளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. தியானத்தை தலைகீழாக்கிக் கொள்ளவில்லை. நால்வகையான பரிஷ்காரங்களில் பெருமளவில் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவற்றில் தடம் மாறவில்லை. ததாகதர் அரஹத் நிலையடைந்தவர். சம்மா சம்புத்த நிலையை அடைந்தவர். புண்ணியமிகு பிக்குகளே, நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். எனக்கு அமிர்தம் கிடைத்துவிட்டது. நான் உங்களுக்கு அதனை கற்றுத்தருகின்றேன். நான் அந்த தர்மத்தை போதிக்கிறேன். நான் கற்றுக்கொடுக்கும் வகையிலேயே நீங்கள் அதனை பின்பற்றினால், குல புத்திரர்கள் எதனை நோக்கமாகக் கொண்டு துறவறத்தை மேற்கொள்கிறார்களோ, மிகவும் சொற்ப காலத்திலேயே அந்த அதி உத்தமமான பிரம்மச்சரிய வாழ்வை பூரணப்படுத்திக் கொண்டு இந்த வாழ்விலேயே தன்னுடைய ஞானத்தினாலேயே உத்தம அரஹத் (கிலேசங்களற்ற) நிலையை அடைய முடியும்.

புண்ணியமிகு பிக்குகளே, இறுதியல் அந்த ஐந்து பிக்குமார்களுக்கும் என்னால் இந்த விடயத்தை புரியவைக்க இயலுமானதாக இருந்தது. அதன் பின்னர் நான் இரு பிக்குமார்களுக்கு தர்ம உபதேசம் செய்யும் போது மூன்று பிக்குமார்கள் ஐயமேற்க செல்வார்கள். அந்த மூன்று பேரும் கொணரும் அன்னத்தினால் தான் நாம் அறுவரும் உட்கொண்டோம். அதன் பின்னர் நான் அந்த மூன்று பிக்குமார்களுக்கு தர்ம உபதேசம் செய்யும் போது மீதமான இரு பிக்குமார்களும் ஐயமேற்க  செல்வார்கள். அவர்கள் சென்று ஐயமேற்று வரும் உணவினால் தான் நாம் அறுவரும் உட்கொண்டோம்.

புண்ணியமிகு பிக்குகளே, நான் ஐந்து பிக்குமார்களுக்கு இவ்வாறாக அறிவுரை செய்யும் போது, தானும் பிறக்கும் இயல்புடன் இருந்து கொண்டு, மீண்டும் மீண்டும் பிறப்பதால் அனுபவிக்க நேரிடும் உபாதைகளை உணர்ந்து கொண்டு பிறப்புகளற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை தேட ஆரம்பித்தார்கள். அவர்களும் பிறப்புகளற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டார்கள்.

தானும் முதுமையடையும் இயல்புடன் இருந்து கொண்டு, மீண்டும் மீண்டும் முதுமையடைய நேரிடுவதால் அனுபவிக்க நேரிடும் உபாதைகளை உணர்ந்து கொண்டு பிறப்புகளற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை தேட ஆரம்பித்தார்கள். அவர்களும் முதுமையற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டார்கள்.

தானும் நோயுறும் இயல்புடன் இருந்து கொண்டு, மீண்டும் மீண்டும் நோயுற நேரிடுவதால் அனுபவிக்க நேரிடும் உபாதைகளை உணர்ந்து கொண்டு நோய்களற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை தேட ஆரம்பித்தார்கள். அவர்களும் நோய்களற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டார்கள்.

தானும் மரணமடையும்; இயல்புடன் இருந்து கொண்டு, மீண்டும் மீண்டும் மரணமடைய நேரிடுவதால் அனுபவிக்க நேரிடும் உபாதைகளை உணர்ந்து கொண்டு மரணங்களற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை தேட ஆரம்பித்தார்கள். அவர்களும் மரணங்களற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டார்கள்.

தானும் சோகமடையும் இயல்புடன் இருந்து கொண்டு, மீண்டும் மீண்டும் சோகமடைய நேரிடுவதால் அனுபவிக்க நேரிடும் உபாதைகளை உணர்ந்து கொண்டு சோகங்களற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை தேட ஆரம்பித்தார்கள். இறுதியில் அவர்களும் சோகங்களற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டார்கள்.

தாம் (தம் மனம்) அழுக்கடையும் இயல்புடன் இருந்து கொண்டு, மேலும் அழுக்கடையும் இயல்பிற்குரிய விடயங்களின் உபாதைகளை உணர்ந்து கொண்டு அழுக்குகள், மாசுகள் அற்ற, துக்கங்களில்  இருந்து விடுதலையடைதல் எனும் அதி உத்தமமான மோட்சத்தை தேட ஆரம்பித்தார்கள். இறுதியில் அவர்களும் கிலேசங்களற்ற, அதி உத்தமமான, துக்கங்களில் இருந்து விடுதலையடைதல் எனும் உன்னத மோட்சத்தை உய்த்துணர்ந்து கொண்டார்கள். அந்த பிக்குமார்களுக்கும் “எம்முடைய சித்த விமோட்னசம் ஒருபோதும் மாற்றமடைவதில்லை. இதுவே இறுதி பிறப்பு. மீண்டும் மறுபிறவிகள் இல்லை” எனும் ஞானக்காட்சி தோன்றின.

புண்ணியமிகு பிக்குகளே, காம குணங்கள் (பண்புகள்) ஐந்து இருக்கின்றன. அந்த ஐவகையானவையும் எவை? கண்ணால் காணுகின்ற மிகவும் நன்மையான, மனமகிழ்வை தரும், பிரியமான, விருப்பினை தோற்றுவிக்கும், கிலேசங்களை தோற்றுவிக்கும் உருவங்கள் இருக்கின்றன. காதினால் கேட்கும் சப்தங்கள் இருக்கின்றன …(விரிவு)…நாசியால் முகரும் மணங்கள் இருக்கின்றன …(விரிவு)… நாவினால் சுவைக்கும் சுவைகள் இருக்கின்றன …(விரிவு)… உடலால் உணரக்கூடிய மிகவும் நன்மையான, மனமகிழ்வை தரும், பிரியமான, விருப்பினை தோற்றுவிக்கும், கிலேசங்களை தோற்றுவிக்கும் ஸ்பரிசங்கள் (உடலுணர்வுகள்) இருக்கின்றன. புண்ணியமிகு பிக்குகளே, இவையே ஐவகையான காம குணங்கள் என்று செல்லப்படுகின்றன.

புண்ணியமிகு பிக்குகளே, எவரேனும் சிரமணரோ, அந்தணரோ இந்த ஐவகையான காமங்களை விரும்பினால், இவை தொடர்பாக மனம் குழம்பிப்போனால் (சுணவுணர்வு அற்றுப்போனால்), இந்த காமங்களிலேயே இறங்கிக் கொண்டால், இவற்றினால் தோன்றும் உபாதைகளை காணாமல், இவற்றிலிருந்து விடுதலையடையும் அறிவும் இல்லாமல், இந்த காமங்களை அனுபவிக்க முற்பட்டால் அவர்களைப் பற்றி இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். ‘அவர்களுக்கு பேரிழப்பே அனுபவிக்க நேர்ந்துள்ளது. விபத்திற்குள்ளாகி விட்டார்கள். அவர்களுக்கு தாம் விரும்புவதை செய்யக்கூடிய அதிகாரம் மாரனுக்கு கிடைத்துவிட்டது’ என்றாகும்.

புண்ணியமிகு பிக்குகளே, அது இத்தகையதாகும். வனத்திலே நடந்து திரியும் ஒரு மான் இருக்கிறது. அது அவ்வாறு நடந்து செல்லும் போது வேடனால் வைக்கப்பட்ட ஒரு பொறியில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து மீளும் வழி தெரியாமல் அங்கேயே படுத்து தூங்கிவிடுகிறது. அந்த மானைப் பற்றி இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். அந்த மானுக்கு பேரிழப்பே சந்திக்க நேர்ந்தது. விபத்திற்குள்ளாகிவிட்டது. அந்த மானுக்கு  வேடன் தாம் விரும்புவதை செய்ய முடியும். வேடன் வரும்போது மான் தாம் விரும்பும் இடத்திற்குதப்பியோட முடியாது. அதேபோன்று தான் புண்ணியமிகு பிக்குகளே,  எவரேனும் சிரமணரோ, அந்தணரோ இந்த ஐவகையான காமங்களை விரும்பினால், இவை தொடர்பாக மனம் குழம்பிப்போனால் (சுணவுணர்வு அற்றுப்போனால்), இந்த காமங்களிலேயே இறங்கிக் கொண்டால், இவற்றினால் தோன்றும் உபாதைகளை காணாமல், இவற்றிலிருந்து விடுதலையடையும் அறிவும் இல்லாமல், இந்த காமங்களை அனுபவிக்க முற்பட்டால் அவர்களைப் பற்றி இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். ‘அவர்களுக்கு பேரிழப்பே அனுபவிக்க நேர்ந்துள்ளது. விபத்திற்குள்ளாகி விட்டார்கள். அவர்களுக்கு தாம் விரும்புவதை செய்யக்கூடிய அதிகாரம் மாரனுக்கு கிடைத்து விட்டது’ என்றாகும்.

அதேபோன்று தான் புண்ணியமிகு பிக்குகளே, எவரேனும் சிரமணரோ அல்லது அந்தணரோ இந்த ஐவகையான காமங்களை விரும்பாவிட்டால், இவை தொடர்பாக மனம் குழம்பாமல் இருந்தால், இந்த காமங்களிலேயே இறங்கிக் கொள்ளாவிட்டால், இவற்றினால் தோன்றும் உபாதைகளை உணர்ந்து, இவற்றிலிருந்து விடுதலையடையும் ஞானத்துடன், இவற்றை அனுபவிப்பார்களாயின், அத்தகையவர்களைப் பற்றி இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். ‘அவர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் விபத்திற்குள்ளாக மாட்டார்கள். அவர்களுக்கு தாம் விரும்புபவற்றை செய்வதற்கான அதிகாரம் மாரனுக்கு கிடையாது’ என்று.

புண்ணியமிகு பிக்குகளே, அது இத்தகையதாகும். வனத்திலே நடந்து திரியும் ஒரு மான் இருக்கிறது. அது பொறியில் சிக்கிக் கொள்ளவில்லை. ஆனால் அங்கேயே படுத்திருக்கிறது. அந்த மானைப் பற்றி இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இழப்புகள் நேராது. அது விபத்திற்குள்ளாகாது. அந்த மானுக்கு தாம் விரும்பும் ஏதேனும் செய்வதற்கு வேடனால் முடியாது. வேடன் வரும்போதே அந்த மான் தாம் விரும்பும் திசைக்கு பாய்ந்தோடிவிடும். புண்ணியமிகு பிக்குகளே, இதேபோன்றுதான் சில சிரமணர்களும் அந்தணர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த ஐவகையான காமங்களை விரும்பாதிருப்பார்கள், இவை தொடர்பாக மனம் குழம்பிப்போகாமல் சுயவுணர்வுடன் இருப்பார்கள், இந்த காமங்களிலேயே இறங்கிக் கொள்ளாதிருப்பார்கள், இவற்றினால் தோன்றும் உபாதைகளை உணர்ந்து, இவற்றிலிருந்து விடுதலையடையும் ஞானத்துடனேயே இவற்றை அனுபவிப்பார்கள். அவர்களைப் பற்றி இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும்.  ‘அவர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் விபத்திற்குள்ளாக மாட்டார்கள். அவர்களுக்கு தாம் விரும்புபவற்றை செய்வதற்கான அதிகாரம் மாரனுக்கு கிடையாது’ என்று.

புண்ணியமிகு பிக்குகளே, வனத்தில் நடந்து திரிந்து கொண்டிருக்குமு; ஒரு மான் இருக்கிறது. அந்த மான் எவ்விதமான பயமுமின்றி வனத்தில் நடமாடுகிறது. எவ்விதமான பயமுமின்றி வனத்தில் இருக்கிறது. எவ்விதமான பயமுமின்றி வனத்தில் படுத்துறங்குகிறது. அதற்கு காரணம் என்ன? அந்த மான் வேடனிடம் சிக்கிக் கொள்ளாமையே காரணமாகும். புண்ணியமிகு பிக்குகளே, அதே போன்றுதான் பிக்குவும். பிக்கு, காமங்களில் இருந்து விலகிய, அகுசலங்களில் இருந்து விலகிய, எண்ணங்களும் எண்ணத் தொடர்களுடன் கூடிய, மானசீக ஓய்வினால் தோன்றிய பேரின்பத்துடனும் சுகத்துடனும் கூடிய முதலாவது த்யான நிலையை தன்னுள் தோற்றுவித்துக் கொண்டு வசிப்பார். புண்ணியமிகு பிக்குகளே, இத்தகைய பிக்குவே ‘மாரனை குருடனாக்கியவர், மாரனது பார்வை நிலைத்திருக்கும் இடத்தை இல்லாமல் செய்தவர், பாவமிகுந்த மாரனால் காண முடியாத இடத்திற்கு சென்றவர்’ என்றெல்லாம் சொல்லப்படுபவராவார்.

புண்ணியமிகு பிக்குகளே, இது தொடர்பாக மேலும் சொல்வதாயின், பிக்குவானவர், மனதின் எண்ணங்களையும் எண்ணவலைகளையும் தணித்துக் கொண்டு மனதின் மலர்ச்சித் தன்மையுடன், மனதின் ஒருங்கிணைவுடன் கூடிய, விதக்க விசாரங்கள் (எண்ணங்களும் எண்ணத்தொடர்கள்) அற்ற உளச்சமாதியினால் தோன்றிய பேரின்பத்துடனும் சுகத்துடனும் கூடிய இரண்டாம் த்யான நிலையை தோற்றுவித்துக் கொண்டு வசிப்பார். புண்ணியமிகு பிக்குகளே, இத்தகைய பிக்குவே ‘மாரனை குருடனாக்கியவர், மாரனது பார்வை நிலைத்திருக்கும் இடத்தை இல்லாமல் செய்தவர், பாவமிகுந்த மாரனால் காண முடியாத இடத்திற்கு சென்றவர்’ என்றெல்லாம் சொல்லப்படுபவராவார்.

புண்ணியமிகு பிக்குகளே, இது தொடர்பாக மேலும் சொல்வதாயின், பிக்குவானவர், சுகத்தின் மீது ஒட்டிக்கொள்ளாமல் உபேக்கா (நடுநிலையான) மனதுடன், விழிப்புணர்வுடனும் அறிவுடனும் இருப்பார். உடலினால் பேரின்பத்தையும் அனுபவிப்பார்.  ஆரிய உத்தமர்கள் இந்நிலையை, ‘உபேக்காவுடனும் விழிப்புணர்வுடனும் கூடிய சுகத்துடன் வசித்தல்’ என்றே குறிப்பிடுவார்கள். பிக்கு, அந்த மூன்றாவது த்யான நிலையையும் தோற்றுவித்துக் கொண்டு வசிப்பார். புண்ணியமிகு பிக்குகளே, இத்தகைய பிக்குவே ‘மாரனை குருடனாக்கியவர், மாரனது பார்வை நிலைத்திருக்கும் இடத்தை இல்லாமல் செய்தவர், பாவமிகுந்த மாரனால் காண முடியாத இடத்திற்கு சென்றவர்’ என்றெல்லாம் சொல்லப்படுபவராவார்.

புண்ணியமிகு பிக்குகளே, இது தொடர்பாக மேலும் சொல்வதாயின், பிக்குவானவர், சுகத்தையும் துக்கத்தையும் இல்லாமல் செய்து கொண்டு, முதலிலேயே மானசீகமாகத் தோன்றும் சுகத்தினைப் போன்றே துக்கத்தினையும் துறந்து, சுக துக்கங்களற்ற உபெக்காவுடன் (நடுநிலையான மனதுடன்) கூடிய பரிசுத்தமான, திடமான விழிப்புணர்வுடன் கூடிய நான்காம் த்யான நிலையை தோற்றுவித்துக் கொண்டு வசிப்பார். புண்ணியமிகு பிக்குகளே, இத்தகைய பிக்குவே ‘மாரனை குருடனாக்கியவர், மாரனது பார்வை நிலைத்திருக்கும் இடத்தை இல்லாமல் செய்தவர், பாவமிகுந்த மாரனால் காண முடியாத இடத்திற்கு சென்றவர்’ என்றெல்லாம் சொல்லப்படுபவராவார்.

புண்ணியமிகு பிக்குகளே, இது தொடர்பாக மேலும் சொல்வதாயின், பிக்குவானவர், உருவங்கள் தொடர்பாக இருக்கின்ற அனைத்து விதமான சமிக்ஞைகளையும் மீறிச்சென்று மானசீகமாக தோன்றும் அனைத்து விதமான சமிக்ஞைகளையும் மீறிச்சென்று, பல்வேறு வகையான சமிக்ஞைகளை நினைவுகூறாமல், ‘எல்லையற்ற ஆகாசம்’ எனும் ஆகாசானஞ்சாயதன சமாதி நிலையை பெற்றுக்கொண்டு வசிப்பார். புண்ணியமிகு பிக்குகளே, இத்தகைய பிக்குவே ‘மாரனை குருடனாக்கியவர், மாரனது பார்வை நிலைத்திருக்கும் இடத்தை இல்லாமல் செய்தவர், பாவமிகுந்த மாரனால் காண முடியாத இடத்திற்கு சென்றவர்’ என்றெல்லாம் சொல்லப்படுபவராவார்.

புண்ணியமிகு பிக்குகளே, இது தொடர்பாக மேலும் சொல்வதாயின், பிக்குவானவர், ஆகாசானஞ்சாயதன சமாதி நிலையையும் மீறிச்சென்று ‘எல்லையற்ற விஞ்ஞானம் (நுண்ணுணர்வு) எனும் விஞ்ஞானஞ்சாயதன சமாதி நிலையை தோற்றுவித்துக் கொண்டு வசிப்பார் (விரிவு).. எல்லா வகையிலும் விஞ்ஞானஞ்சாயதன சமாதி நிலையையும் மீறிச்சென்று ‘எதுவும் இல்லை’எனும் தியானத்தின் ஆகிஞ்சஞ்ஞாயதன சமாதி நிலையை தோற்றுவித்துக் கொண்டு வசிப்பார் (விரிவு).. எல்லா வகையிலும் ஆகிஞ்சஞ்ஞாயதன சமாதி நிலையையும் மீறிச்சென்று நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன சமாதி நிலையை தோற்றுவித்துக் கொண்டு வசிப்பார் …(விரிவு).. எல்லா வகையிலும் நேவசஞ்ஞாநாசஞ்ஞாயதன சமாதி நிலையையும் மீறிச்சென்று சமிக்ஞைகள், நுகர்ச்சிகள் அற்ற நிரோத சமாதி நிலையை பெற்றுக்கொண்டு வசிப்பார். ஞானத்தினால் உய்த்துணர்ந்து கொண்டு ஆஸவங்களையும் அழித்துவிடுவார். புண்ணியமிகு பிக்குகளே, இத்தகைய பிக்குவே ‘மாரனை குருடனாக்கியவர், மாரனது பார்வை நிலைத்திருக்கும் இடத்தை இல்லாமல் செய்தவர், பாவமிகுந்த மாரனால் காண முடியாத இடத்திற்கு சென்றவர்’ என்றெல்லாம் சொல்லப்படுபவராவார். இவ்வுலகின் ‘விசத்திகா’ எனும் வேட்கையிலிருந்து கரையேறியவர் என்று அந்த பிக்குவே சொல்லப்படுவார். அந்த பிக்கு பயமின்றி நடமாடுவார். பயமின்றி இருப்பார். பயமின்றி உட்காருவார். பயங்கள் ஏதுமின்றி உறங்குவார். அதற்கு காரணம் என்ன? புண்ணியமிகு பிக்குகளே, அந்த பிக்கு மாரனுக்கு அகப்படவில்லை. (மாரனால் காண முடியாத நிலையை அடைந்தமை)”

பாக்கியமுள்ள பகவான் இந்த போதனையை மொழிந்தருளினார். இந்த போதனையை செவிமடுத்த பிக்குமார்கள் மிகவும் சந்தோஷமடைந்தார்கள். பாக்கியம் நிறைந்த பகவானால் போதிக்கப்பட்ட இந்த போதனையை நன்று நன்று என்று மிக்க சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.

சாது! சாது!! சாது!!!

மேன்மைநிலையை தேடிச்சென்ற பயணம் தொடர்பாக மொழிந்த போதனை முற்றும்.