சஞ்சலமடையும் மனதை என்ன செய்யலாம்?

புண்ணியமிக்கவர்களே, இந்த மனம் மிகவும் அற்புதமானது. இவ்வுலகில் உள்ள அனைவருமே இந்த மனதிற்குத்தான் வசப்பட்டுள்ளனர். மனம்தான் அனைவரையும் இயங்கச்செய்கிறது. அனைத்தையும் இயங்கச் செய்வதற்கான சக்தி மனதில் இருந்துதான் பிறப்பிக்கப்படுகிறது. புத்த பகவான் இந்த உள்ளம் தொடர்பாக பின்வருமாறு மொழிந்துள்ளார். ‘‘புண்ணியமிகு பிக்குகளே, கட்டுப்படுத்தாவிடில், பாதுகாக்காவிடில், அடக்கிக்கொள்ளாவிடில் மனதை தவிர பெரும் ஆபத்தினை விளைவிக்கும் வேறு எதனையும் நான் காணவில்லை. அப்படியாயின் இந்த மனதை தர்மத்தின் பால் ஈடுபடுத்தாமல் இருப்பது, மிகப்பெரிய ஆபத்து என்பதனை மேலும் விளக்கி கூறத்தேவையில்லை. புத்த பகவான் தன் புத்த போதனையாக சுட்டிக்காட்டும் இந்த தம்மபத செய்யுளை பாருங்கள்.

சப்ப பாபஸ்ஸ அகரணங் – குசலஸ்ஸ உபசம்பதா

சசித்த பரியோதபனங் – ஏதங் புத்தான சாசனங்

‘‘சகல பாவங்களையும் செய்யாதிருத்தல். குசல தர்மங்களைழூ செய்தல் மற்றும்; தம் மனதினை தூய்மைபடுத்தல் எனும் இவையே அனைத்து புத்தர்மார்களதும் போதனையாகும்’

அப்படியாயின் புத்த பகவானது புத்தசாசனத்தில் அநேகமானவர்கள் தமது கட்டுப்படாத மனதை கட்டுப்படுத்துவதற்காகவே துறவு பூண்டனர். பாதுகாக்க முடியாத மனதை பாதுகாத்துக் கொள்வதற்கே துறவு பூண்டனர். பெரும்பாலான தேரர்கள் இந்த கடினமான சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தனர். மனதை வெற்றிக்கொள்வதற்காக தர்ம பாதையில் பயணிக்கும்போது வரும் தடைகளையும் அத்தடைகளை எவ்வாறு வெற்றிகரமாக முகங்கொடுக்க வேண்டும் என்பதனையும் இந்த மேகிய தேரரின் கதை மூலம் நாம் நன்கு உணரலாம்.

புத்த பகவான் ஒரு சமயத்தில் ஷவாலிகா| எனும் நகரருகில் அமைந்திருந்த ‘வாலிகா’ எனும் பெயர்கொண்ட பர்வதத்திலே தரித்திருந்தார். அக்காலத்தில் புத்த பகவானுக்கு ‘மேகிய’ எனும் பெயர்கொண்ட ஒரு தேரரே பணிவிடை செய்து வந்தார். ஒருநாள் காலை மேகிய தேரர் ஜந்து எனும் கிராமத்திற்கு பிண்டபாதம்ழூ சென்றார். அவர் இவ்வாறாக உணவிற்காக செல்லும் போது ஷகிமிகாலா| எனும் பெயர் கொண்ட ஒரு நதியோரமாக செல்ல நேர்ந்தது. அந்த நதிக்கரை மிகவும் அழகானது. அழகிய வெள்ளை நிற மணல் மேடுகளுடன் கூடிய அந்த நதியின் இரு கரை ஓரங்களிலும் மாஞ்சோலைகள் இருந்தன. இந்த நதிக்கரை ஓரத்தில் அவர் சற்று நின்று சுற்றும் முற்றும் பார்த்தார். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மனம் உற்சாகமடைந்தது. ‘ஆஹா… மிகவும் அழகான இடம். இந்த மாஞ்சோலையின் குளிர்ச்சி மிகுந்த நிழலை கொண்ட இந்த இடம் மிகவும் அற்புதமானது. தர்மத்தை பின்பற்றும், தியானங்கள் செய்யும் ஒருவருக்கு  மனதை தூய்மைபடுத்துவதற்காக வீரியம் செய்வதற்கு மிகவும் உகந்ததொரு இடம். பாக்கியமுள்ள புத்த பகவானிடம் அனுமதி பெற்று நான் இங்கு வரவேண்டும். இங்குதான் என் மனதை மேன்மை செய்ய முடியும்.’

மேகிய தேரர் தனது பிண்டபாதத்தை முடித்து கொண்டு புத்த பகவானை காணவந்தார். புத்த பகவானை அன்புடன் வணங்கி ஒரு புறத்தில் அமர்ந்து, அந்த கிமிகாலா நதியின் அழகையும் மாஞ்சோலையின் அழகையும் வருணித்தார். தியானம் செய்யும் ஒருவருக்கு மிகவும் வீரியம் கொண்டு தியானம் செய்வதற்கு அவ் இடம் மிகவும் பொருத்தமானது என்று கூறினார். அதன்பிறகு அவ்விடத்தில் தியானம் செய்வதற்கு அனுமதி கேட்டார்.

புத்த பகவான் மேகிய தேரருடைய இந்த வேண்டுகோளை கருத்திற்கொள்ளவில்லை. புத்த பகவான் அந்த தேரரிடம் வேறு யாரேனும் ஒரு பிக்கு வரும் வரையில் பொறுத்திருக்குமாறு பணித்தார். ஆனாலும் மேகிய தேரருக்கு மிகவும் அவசரமாகவிருந்தது. மனதில் இருப்பதெல்லாம் அந்த மாஞ்சோலைக்கு சென்று தியானம் செய்யும் எண்ணம் மாத்திரமே. மேகிய தேரர் புத்த பகவானிடம் ‘‘பாக்கியமுள்ள பகவானே, தங்களுக்கு என்றால் தியானம் செய்வதற்கு தேவையில்லை. தாங்கள் வீரியம் செய்யவும் தேவையில்லை. நான் இன்னும் எவ்வளவு பெரிய பயணத்தை இந்த தர்ம மார்க்கத்தில் பயணிக்க வேண்டும். எனவே பாக்கியமுள்ள பகவானே, எனக்கு அந்த கிமிகாலா எனும் நதிக்கரையில் உள்ள மாஞ்சோலைக்கு செல்ல அனுமதி தாருங்கள். நான் அங்கு சென்று தியானம் செய்வதையே விரும்புகிறேன்’ அப்போதும் புத்த பகவான் அதனை அனுமதிக்கவில்லை. மூன்றாவது முறையாகவும் மேகிய தேரர் இவ்;வாறாக கேட்டபோது புத்த பகவான் இவ்வாறு மொழிந்தார். ‘புண்ணியமிகு மேகிய, கிலேசங்களை அழிப்பதற்கு வீரியம் செய்ய வேண்டும், எனும் நோக்கத்துடன்தானே நீங்கள் செல்கிறீர்கள். அதற்கு நான் என்ன செய்வேன்?  உங்களுக்கு வேண்டுமாயின் நீங்கள் போகலாம்’

அப்போது மேகிய தேரர் மிகவும் சந்தோஷமடைந்தார். மகிழ்;ச்சியடைந்தார். உற்சாகமானார். ‘இப்போது நான் அந்த மாஞ்சோலைக்கு போவேன். நன்றாக கால்களை சரிசெய்து உடலை நிமிர்த்தி அமர்ந்து கொண்டு தியானம் செய்வேன். அவ்வாறான ரம்மியமான ஒரு சூழலில் இருந்து தியானம் செய்தால் என் மனம் விரைவில் சமாதியடையும். அந்த சமாதியை என்னால் வெகு நேரம் நிலைக்கச் செய்யலாம்.. தியானம் செய்வதற்கே உருவாகிய இடம் போலும். அம்மாதிரியான ஒரு இடத்தில் தியானம் செய்வதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என நினைத்து கொண்டு அந்த தேரர் அந்த மாஞ்சோலைக்கு சென்றார்.

சுற்றும் முற்றும் பார்த்தார். நதியின் இரு ஓரங்களிலும் வெண்நிற மணல் மேடு நீண்டிருந்தது. அழகிய நீரோடை அமைதியாக சென்றுக்கொண்டிருந்தது. மாமரங்களினால் அங்கு குளிர்ச்சி நிறைந்த நிழல் எங்கும் படர்ந்திருந்தது. நன்றாக கிளைகள் படர்ந்த ஒரு மாமரத்தை கண்ணுற்றார். மரத்தின் கீழே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதற்கு ஆரம்பித்தார். மிகவும் புதினம். இந்த மனம் ஒவ்வொரு எண்ணங்களின் பின்னே ஓடுகிறது. மனம் சிதறியது. அனைத்து இடங்களுக்கும் செல்கிறது. பலத்த காற்றை விடவும் வேகமாக எங்கெங்கோ செல்கிறது. மிக மிக வேகமாக இந்த மனம் ஒவ்வொரு எண்ணங்களுடன் பிணைந்து கொண்டு உழல ஆரம்பித்தது. இறந்தகாலத்தில் நடந்த சம்பவங்கள் நினைவிற்கு வர ஆரம்பித்தன. பல்வேறுபட்ட இழிவான ஆசைகள் மனதில் தோன்ற ஆரம்பித்தன. முரண்பாட்டை தோற்றுவிக்கும், கோபத்தை தோற்றுவிக்கும் விடயங்கள் கூட நினைவிற்கு வந்தன. ஒவ்வொரு விடயங்களோடு மனம் சிக்கிக்கொண்டு இருந்தது.

சித்தானுபஸ்ஸனாவில் இருந்த அந்த தேரரால் இந்த மனதின் இழிவான மாறுதல்களை இனங்காணக்கூடியதாக இருந்தது.

‘‘ம்.. இது என்ன..? மிகவும் விசித்திரமாக அல்லவா இருக்கிறது. இந்த மனதிற்கு என்னவாயிற்று? ஒருபோதும் இந்த மனம் இவ்வாறான மாற்றங்களை கொண்டிருக்கவில்லையே. இந்த ஷாந்தமான இடத்திற்கு நான் எவ்வளவு ஆசையுடன் வந்தேன். நான் எவ்வளவு எதிர்பார்ப்புக்களோடு இந்த தியானத்தை செய்ய ஆரம்பித்தேன்? ஆனால்… ஐயோ…. இந்த மனதிற்கு என்னவாயிற்று..? நான் இழிவான விடயங்களை அல்லவா நினைக்கிறேன்…?’

மேகிய தேரர் இந்த மனதை ஒன்றிணைக்க  பல முறை முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. மனதின் இழிவான இயல்பு அடங்கவில்லை. எண்ணங்களிலிருந்து வேறு எண்ணங்களுக்கு இந்த மனம் குரங்கை போன்று வேகமாக தாவிக்கொண்டிருந்தது. அவரும் தொடர்ந்து முயற்சி செய்தார். ஆனால் அவர் அங்கு வந்த நோக்கத்தை அடையமுடியாமல் போய்விட்டது. இறுதியில் கவலையுடன் புத்த பகவானிடம் சென்றார். அவரை அன்புடன் வணங்கினார். ஒரு புறத்தில் அமர்ந்தார். அவருடைய மனதில் ஏற்பட்ட மாறுதல்களை பற்றி கூறத்தொடங்கினார். ‘‘பாக்கியமுள்ள புத்த பகவானே, இந்த மனதின் இயல்பு விந்தையானது. நான் மும்மணிகளின் மீது கொண்ட அளவற்ற பக்தியினால்தானே துறவு பூண்டேன்;. ஆனால் நான் அந்த மாஞ்சோலையில் அமர்ந்து தியானம் செய்யும் போது எனது மனதின் இயல்பை நன்கு உணர்ந்து கொண்டேன். பகவானே, இந்த மனம் மிகவும் குழம்பி போய்விட்டது. கீழ்தரமான அகுசல தர்மங்கள்ழூ என் மனதில் தோன்றின. ஆசைகள் தோன்றின. கோபமும் தோன்றியது. இந்த மனம் தொடர்பாக எனக்கு மிகவும் வெறுப்பாக இருக்கிறது.

அப்போது புத்த பகவான் பின்வருமாறு மொழிந்தார். ‘‘மோட்சத்தை உறுதி செய்வதற்கு முயற்சிக்கும் போது நற்குணங்கள் நன்கு வளர்ச்சியுற்று இருக்க வேண்டும். அதற்கு ஐந்து காரணிகள் உபகாரமாக அமையும்.

முதலாவது விடயம்தான் சத்புருஷர்களுடனான பழக்கம்.

சத்புருஷர்களுடனான பழக்கத்தினால்தான் தன்னிடம் வளர்க்க வேண்டிய நற்குணங்கள், குண தர்மங்கள் என்பன மேம்படுத்த வேண்டும்.

இரண்டாவது விடயம்தான் சீலமிகுந்தவராக (ஒழுக்கமுடையவராக) வேண்டும். உபசம்பதா பிக்கு என்றால் அவர் தனது உபசம்பதா சீலத்தை நன்கு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தூய்மையான சீலத்தை உடையவராக வேண்டும். சிறிய பிழைக்கும் பயம் கொள்ள வேண்டும். அனுஷ்டித்த சீலங்களை நன்கு பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் மோட்சத்தை அடைவதற்கான தகுதியை தம்முள் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

மூன்றாவது விடயம் இதுதான். 32 வகையான அர்த்தமற்ற பேச்சுக்களை தவிர்த்து பத்துவகை பேச்சுக்களை பேச வேண்டும். அந்த பத்து வகை பேச்சுக்கள் உய்த்துணர்வுடன்; உலகை வெறுக்கச்செய்யும். அந்த பத்து வகை பேச்சுகள் என்றால் இவையே,  (அல்பேச்ச பேச்சு), கிடைத்ததை நினைத்து இன்புறும் பேச்சு, தனிமையான ஓய்வு பற்றிய பேச்சு, கூட்டத்துடன் ஒன்றாக பிணைந்து வாழாமை தொடர்பான பேச்சு, கிலேசங்களை அழிப்பதற்கு மிகுந்த வீரியம் எடுப்பது தொடர்பான பேச்சு அதேபோல் சீலம், சமாதி, பிரக்ஞை, விடுதலை, மற்றும் விடுதலை ஞான காட்சி என்பன தொடர்பாக கேட்கவும் பேசவும் வேண்டும். அப்போதுதான் அவர் மோட்சத்தினை அடைய தகுதியுடைய ஒருவராவார்.

நான்காவது விடயம் தான் முயற்சி. எந்நேரமும் துவங்கிய வீரியம் இருக்க வேண்டும். அகுசலங்களைழூ அழிப்பதற்கும், குசல தர்மங்களைழூழூ தோற்றுவித்து கொள்வதற்கும் பலமான வீரியம் இருக்க வேண்டும். கிலேசங்களை அழிக்கும் வகையிலான மிகவும் பலமான வீரியம் இருக்க வேண்டும். இந்த விடயங்கள் மோட்சத்தை அடைய விரும்பும் ஒருவருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவையாகும்.

ஐந்தாவது காரணிதான், பிரக்ஞை எனப்படும் ஞானமாகும். அவர் ஞானமுள்ள ஒருவராகவும் வேண்டும். அந்த ஞானமுள்ளவர் எந்நேரமும் அறிவினால் ஆராய்ந்து கொண்டே இருப்பார். விசேடமாக கூறினால் இவ்வனைத்தினதும் தோற்றம், அழிவு. என்பனவற்றை அவ்வாறே காண முயற்சி செய்வார். துக்கத்திற்குரிய அனைத்தினது மீதும் கொண்ட விருப்பு இல்லாமல் போகும் வண்ணம் அநித்திய உலகை அவ்வாறே காண முயற்சி செய்வார். இதுதான் அவருடைய ஞானம். இவ்வாறானவர்தான் மோட்சத்தினை அடைவதற்கு தகுதியானவர் ஆவார்.

இந்த ஐந்து விடயங்களை தன்னுள் ஏற்படுத்தி கொள்ளும் ஒருவர் இன்னும் நான்கு விடயங்களையும் தன்னுள் தோற்றுவித்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதாவது மனதில் தோன்றும் காமம் தொடர்பான, ஆசை தொடர்பான அகுசலங்களை அழிப்பதற்கு அசுப தியானத்தை செய்ய வேண்டும். அதேபோல் மனதில் தோன்றும் கோபம் போன்ற விடயங்களை அழிப்பதற்கு மைத்ரீ தியானத்தை செய்ய வேண்டும். மனம் சிதறும் போது அந்த விதர்க்கங்களை அழிப்பதற்கு ஆனாபானசதி எனும் தியானம் உபகாரமாகும். அதேபோல் தன்னுள் இருக்கும் மமதை, செருக்கு என்பன அழிவதற்கு அநித்திய தியானம் மிகவும் உபகாரமாக இருக்கும். புண்ணியமிகு மேகிய, அநித்திய தியானத்தை நன்கு பயிற்சி செய்யும் ஒருவரால் அனாத்ம நிலையை நன்கு உணரலாம். அனாத்ம நிலையை நன்கு உய்த்துணரும் போது மமதை முழுமையாக அழிந்துவிடும். இந்த வாழ்விலேயே மோட்சத்தை உறுதி செய்தவராகலாம்.

இவ்வாறாக அறிவுரை செய்த புத்த பகவான் பின்வருமாறு செய்யுள்களை அழகாக மொழிந்தருளினார்.

பன்தனங் சபலங் சித்தங் – துரக்கங் துன்னிவாரயங்ட

கரோதி மேதாவி – உசுகாரோ வ தேஜனங்

இந்த மனம் பதற்றம் நிரம்பியது போன்றே மிகவும் சபலமானதும் கூட. பாதுகாப்பதும் பாவத்திலிருந்து மீட்பதும் மிகவும் கடினமானதே. ஆனாலும் அறிவுள்ளவர், இரும்புகொல்லன் வளைந்த அம்பை நிமிர்த்துவது போல் தர்மத்தினுள் இந்த மனதை நிமிர்த்தி கொள்வார்.

வாரிஜோவ தலே கித்தோ – ஒகமோகத உப்பதோ

பரிபன்ததிதங் சித்தங் – மாரதெய்யங் பஹாதவே

நீரிலிருந்து வெளியே எடுத்து வைத்த மீனை போல் சுக, துக்கம் வரும் போதெல்லாம் இந்த மனம் துடிக்கிறது. எந்நேரமும் சஞ்சலமடையும் இதனை நன்கு அறிந்து அடக்க வேண்டும். மாரனது பிணைப்பிற்கு உட்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

புண்ணியமிக்கவர்களே, புத்த பகவான் இந்த மனம் தொடர்பாக எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறார். புத்த பகவானுக்கு இந்த மனம் தொடர்பாக மிகவும் ஆழமான ஞானம் இருந்தது. எனவேதான் இந்த மனதின் இயல்பு தொடர்பாக புத்த பகவான் இவ்வளவு அழகாக மொழிந்துள்ளார்.

இந்த மனம் ஒவ்வொரு எண்ணங்களினாலும் சஞ்சலமடைகிறது. அதேபோல் ஒருபோதும் இந்த மனதை நம்பவே கூடாது. சிலவேளைகளில் இந்த மனம் மிகவும் ஷாந்தமானதாக இருக்கும். அப்போது நாம் இந்த மனதிற்கு ஏமாறுவோம். இனி ஒருபோதும் குழப்பம் அடையாது என நம்புகிறோம். ஆனால் அடுத்த நொடியே இந்த மனம் சிதறிவிடுகிறது. மனம் தணிந்திருக்கும்போது நாம் இனி ஒருபோதும் இந்த மனம் அழுக்கடையாது என்றே நினைப்போம். ஆனால் எம்மையறியாமலே எம் மனம் மாறிவிடுகிறது. அழுக்கடைந்து போகிறது. இந்த மனதின் சபல நிலையினால்தான் நாம் இதுவரை காலமும் இந்த சன்சார பயணத்தின் போது துன்பம் அனுபவித்து வந்துள்ளோம். மேலும் நாம் சன்சார பயணத்தை பயணிக்க நேரிட்டால் அதற்கு காரணமும் இந்த மனதின் சபல நிலையே.

இந்த மனதை பாதுகாப்பது இலகுவான விடயமல்ல. மிகவும் பலத்த வீரியம் எடுக்க வேண்டும். இந்த மனதை அறிவுள்ள ஒருவரே பாதுகாப்பார். ஞானமுள்ள ஒருவர் அகுசல தர்மங்களை இனங்கண்டு அவற்றை அழித்துவிடுவார். குசல தர்மங்களை மேம்படுத்துவார். குசல தர்மங்களிலேயே தமது மனதை நிலைக்கச்செய்வார். அதன் மூலம்தான் மனதை பாதுகாக்க முடியும். அகுசலங்களிலிருந்து பாதுகாத்து குசல தர்மங்களில் மனதை நிலைபெறச்செய்வது என்பது மிகவும் உயர்ந்த விடயமாகும்.  இவ்வாறான ஒருவர் தம் வாழ்வை வெற்றிகரமானதாக்கி கொள்வார்.

இங்கு கூறப்படும் இரண்டாவது செய்யுளில் இந்த மனதில் இழிவு நிலையை நன்கு உணரலாம். புண்ணிமிக்கவர்களே, நீரிலிருந்து  வெளியே எடுத்து நிலத்தில் போடப்பட்ட மீன்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த மீன்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அந்த மீன்கள் மேலே துள்ளி கொண்டு தவிக்கும். தண்ணீர் இல்லாத காரணத்தினால்தான் தவிக்கும். இந்த மனமும் சுகம் கிடைக்கும் போது அந்த சுகத்தை தக்க வைத்து கொள்வதற்காக பாடுபடும். துக்கம் ஏற்படும் போது அந்த துக்கத்திலிருந்து மீளுவதற்காக பாடுபடும். மிகவும் சிதறிய நிலையிலே இருக்கும். மிகவும் பட படப்பானது. வேதனையை தருவது. தவிப்பை ஏற்படுத்துவது. இவ்வாறாக துள்ளிக்கொண்டிருக்கும் இந்த மனம் நீரை நோக்கி செல்லும் மீனை போன்று காம எண்ணங்களையே தேடிச்செல்லும். இந்த காம எண்ணங்களில் ஈர்க்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகும். அதனால்தான் புத்த பகவான் காம எண்ணங்களை மாரனின் தூக்குக்கயிறாக உவமித்து கூறினார். அந்த மாரனது பிடியில் சிக்குவது மனதின் உண்மையான நிலையை அறியாத ஒருவரே. மனதின் இந்த உண்மையான நிலையை அறிந்துகொள்பவர் கொஞ்சம் கொஞ்சமாக  மனதை கட்டுப்படுத்துவார்.

மனதை கட்டுப்படுத்துவது எவ்வளவு கஷ்டமான விடயம் என்பதனை மனதின் இயல்பை நன்கு அறிந்த யாரும் ஏற்றுக்கொள்வார்கள். இவ்வாறான மனதிற்கு அடிமையாகாமல் அந்த மனதை வெற்றி கொள்ள வேண்டுமானால் தன்னுள் சிறந்த நற்பண்புகள் இருக்க வேண்டும். வாழ்வை உய்த்துணரக்கூடிய திறமைகைளை கொண்டே பெரும்பாலானோர் பிறக்கிறார்கள். அவர்கள் தம் உள்ளக திறமைகளை மேம்படுத்தாததால் அவை காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன. முதுமையடையும் போது இந்த திறமைகள் முழுமையாக பலவீனமடைந்துவிடுகின்றன. நினைவு இல்லாமல் போகும். ஞாபக மறதி ஏற்படும். அவர் தவறான பாதையில் சென்ற ஒரு மனதுடனே இறந்துவிடுவார்கள். அப்படி இறந்துபோகும் போது அவர் மனதை மேன்மைபடுத்தும் அரிய வாய்ப்பை இழந்த ஒரு துரதிஷ்டசாலியாகவே இறப்பார்.

அதனாலயே இந்த மனதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு புத்த பகவான் ஒரு உவமையை மொழிந்துள்ளார். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் முதலாவது செய்யுளில் அந்த உவமை கூறப்பட்டுள்ளது. அம்பு செய்யும் ஒருவர் இருக்கிறார். அவருக்கும் வளைவான இரும்பு கோல்கள் சில கிடைக்கின்றன. அவர் அவற்றை நன்கு வெப்பமூட்டுவார். இவ்வாறாக நன்கு வெப்பம் அடைந்த அந்த இரும்புக் கோல்களை சுத்தியலால் பலமாக அடிப்பார். சிறிது சிறிதாக நேராக்குவார். இறுதியில் மிகவும் நேரான அம்புகளை அவரால் செய்துவிடக்கூடியதாக இருக்கும். அதேபோன்று அறிவாளி தன் மனதிற்கு ஏமாற மாட்டார். மனதிற்கு அறிவுரை செய்து மனதை அடக்கிக்கொள்வார். இவ்வாறான இழிவான ஒரு மனதை தர்மத்தினுள் கட்டுப்படுத்தி மோட்சப்பாதையில் செலுத்தினால்  எவ்வளவு நன்று…?

சாது! சாது!! சாது!!!