சஞ்சலமடையூம் மனதினை என்ன செய்யலாம்? – 2
புண்ணியமிக்கவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, புத்த பகவானது காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான பிக்குமார்கள் இந்த மனதை வெற்றி கொண்டார்கள். அக்காலத்தில் மனதை வெல்வதற்கு தாமதமின்மை எனும் விடயம் மிகவும் உறுதுணையாக இருந்தது. மனம் காம சிந்தனைகளில் விழும் போது, தான் விரும்பிய விரும்பியவற்றின் பின்னே ஓடும் போது அதிலிருந்து இந்த மனதை மீட்டு நால்வகை சதிபட்டானத்தில் மீண்டும் மீண்டும் மனதை நிலைபெறச் செய்வதற்கு திறமையானவர்தான் இந்த மனதை வெற்றிகொள்வார்.
கோசல நாட்டில் அல்லி கிராமம் எனும் பெயர் கொண்ட ஒரு கிராமம் இருந்தது. மாரி காலத்தில் வசித்திருப்பதற்காக அந்த கிராமத்திற்கு அறுபது தேரர்கள் வருகை தந்தார்கள். அந்த கிராமத்தின் பிரதானி மாதிகமாதா எனும் பெயர் கொண்ட கருணை நிறைந்த ஒரு தாயாவார். அவள் இந்த சுவாமிமார்கள் சீலம், சமாதி, ஞானம் என்பன விருத்தி செய்வதை மிகவும் விரும்பினாள். இந்த சுவாமிகள் தர்மத்தை பின்பற்றி உயர் பெறுபேறுகளை அடைய துணை செய்யும், பணிவிடைகளை செய்வதற்கு அவள் நினைத்தாள்.
இந்த சுவாமிகளும் தனக்கு பணிவிடை செய்யும் மாதிகமாதாவை பார்த்து மென்மேலும் இந்த தர்மத்தை பயிற்சி செய்ய வீரியம் செய்தார்கள். அவர்கள் தமக்குள் பின்வருமாறு பேசிக்கொண்டார்கள். ‘புண்ணியமிக்க சக சுவாமிகளே, பாருங்கள், இந்த மாதிகமாதா தாய் எம் மீது மிகுந்த சத்தா (பக்தி) கொண்டு எமக்கு தானங்களை அளிக்கிறார். எமது தேவைகளை பூர்த்தி செய்கிறார். எமக்கு நல்ல உறையுள்களை அளிக்கிறார். நடை தியானம் செய்வதற்காக தியான மேடைகளை அமைக்கிறார். எமது நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குளங்களை அமைத்து கொடுத்திருக்கிறார். நாம் இந்த தர்மத்தினது உயர் பெறுபேற்றை பெறுவதற்காக இந்த தாய் எவ்வளவு தியாகங்களை செய்கிறார். எனவே நாமும் புற பேச்சுக்களில் ஈடுபடக் கூடாது. தேவையில்லாத விடயங்களில் ஈடுபட்டு பொழுதை கழிக்கக் கூடாது. மோட்சப்பாதைக்கு தடையான விடயங்களை சிந்திக்க கூடாது. எனவே நாம் இயன்றளவு அமைதியாக இருப்போம். மௌனமாக இருப்போம். வாரத்திற்கு ஒருமுறை மாத்திரம் ஒன்று சேர்ந்து தர்ம விடயங்களை கலந்துரையாடுவோம். எமக்கு புத்த பகவானும் இதைத்தானே செய்யுமாறு பணித்திருக்கிறார்.’
சன்னிபதினானங் வோ பிக்கவெ, த்வயங் கரணீயங் வதாமி. தம்மீவா கதா அரியாவோ துண்ஹீபாவோ
‘புண்ணியமிகு பிக்குகளே, நீங்கள் ஒன்று கூடியவுடன் இரு விடயங்களை செய்யுமாறு கூறுகிறேன். தர்மத்தை பேச வேண்டும். இல்லாவிடில் அமைதியாக இருந்து தியானம் செய்ய வேண்டும்.’
எனவே, புண்ணியமிகு ஆவுசோக்களே, நாம் அந்த இரு காரணிகளையும் செய்வதற்கு வீரியம் செய்வோம். என்று அந்த பிக்குமார்கள் மிகவும் ஒற்றுமையாக பேசி முடிவெடுத்தனர். வாத விவாதங்கள் செய்து கொள்ளவில்லை. மிகவும்
சந்தோஷப்பட்டார்கள். பாலும் நீரும் கலந்தது போன்று ஒருவருக்கு ஒருவர் மைத்ரீ எண்ணங்களை முதற்கொண்டு வசித்து வந்தார்கள்.
ஒருநாள் மாதிகமாதா மகா உபாசகி சங்கையருக்கு பணிவிடை செய்வதற்காக ஆச்சிரமத்திற்கு வந்தாள். அவளுக்கு யாரும் தென்படவில்லை. ஆச்சிரமம் பாழடைந்து இருந்தது. அவள் இதனை பற்றி நினைத்து கொண்டிருக்கும் போது தான (உணவு) நேரத்திற்கான அழைப்பு விடும் மரக்குற்றி ஓசை கேட்க ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்து வேறு வேறு பாதைகள் வழியாக கீழ் நோக்கிய பார்வையுடன் கூடிய மிகவும் அமைதியான, மிகவும் ஷாந்தமான தேரர்கள் வருகை தந்தார்கள். வருகை தந்த தேரர்களை வணங்கிய மாதிகமாதா மிகவும் சோகத்துடன் பின்வருமாறு கூறினாள்.
”சுவாமிமார்களே, நீங்கள் முரண்பட்டிருக்கிறீர்கள் போலும். ஐயோ… இவ்வளவு உத்தமமான புத்த சாசனத்தில் துறவு பூண்ட நீங்கள் இந்த மனதை அழுக்கடைய செய்து கொள்ளாதீர்கள். கோபங்கொள்ளாதீர்கள். குரோதம் கொள்ளாதீர்கள். தங்களுடைய மோட்சப்பாதை அத்துடனே மூடப்பட்டுவிடும்.”
‘புண்ணியமிகுந்த உபாசகி தாயே, நாம் எமக்குள் முரண்பட்டுக் கொள்ளவில்லை. நாம் குரோதம் கொள்ளவும் இல்லை. நிந்தனை, பரிகாசங்கள் என்பன செய்துகொள்ளவுமில்லை. நாம் ஒவ்வொருவரையும் பிரியமான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம். முகத்தை சுழித்து கொள்ளவில்லை. உபாசகி தாயே, எமது புத்த பகவான் எம்மை பெரும்பாலும் அமைதியை கடைபிடிக்குமாறே அறிவுரை செய்துள்ளார். ஒன்று கூடியவுடன் தர்மத்தை பேசுங்கள், இல்லையேல் அமைதியாக தியானம் செய்யுங்கள என்றே உபதேசித்துள்ளார். நாமும் அந்த அமைதியைத்தான் பழக்கப்படுத்துகிறோம்.
‘சாது.. சாது.. சுவாமிகளே, ஒற்றுமையான பிக்குமார்கள் ஒற்றுமையாக தர்மத்தை பின்பற்றுவதை காணக்கிடைப்பதுவும் அதிஷ்டமே. சுவாமியே நானும் நால்வகை சதிபட்டான தர்மங்களை பழக்கப்படுத்த மிகவும் விரும்புகிறேன். சதிபட்டானத்தினுள் மனதை நிலைக்கச்செய்வது எவ்வளவு பெரிய அதிஷ்டம்? சுவாமியே, இல்லற வாழ்வில் எவ்வளவு காரியங்கள் இருந்தாலும் மனதை மேன்மை படுத்தும் இந்த தர்மத்தை நாம் கைவிடக்கூடாது.’
புண்ணியமிக்கவர்களே, அந்த தேரர்கள் இந்த மாதாவிற்கு நால்வகை சதிபட்டான தர்மத்தையும் கற்றுக்கொடுத்தார்கள். உய்த்துணர வேண்டிய துக்கம் எனும் ஆரிய சத்தியம், அழிக்க வேண்டிய துக்கத்தின் தோற்றம் எனும் ஆரிய சத்தியம், உறுதி செய்ய வேண்டிய துக்கநிவாரணம் எனும் ஆரிய சத்தியம். துக்க நிவாரண மார்க்கமான எண்சீர்வழி எனும் ஆரிய சத்தியம் எனும் இந்நால்வகை ஆரிய சத்தியங்கள் தொடர்பாகவும் மிகவும் விபரமாக கற்றுக்கொடுத்தார்கள். அதேபோன்று பஞ்ச உபாதானஸ்கந்தங்கள், படிச்ச சமுப்பாதம் என்பனவற்றையும் கற்றுக்கொடுத்தார்கள்.
அந்த புண்ணியமிக்க உபாசகி மாதாவும் துவாரம் இல்லாத குடத்தில் நீரை நிரப்பிக்கொள்வது போன்று அந்த அனைத்து வார்த்தைகளையும் மனதில் ஏந்திக்கொண்டாள். நன்றாக ஞாபகம் வைத்துக்கொண்டாள். வீட்டிற்கு திரும்ப சென்று அந்த தர்மத்தை பழக்கப்படுத்தினாள். வீண் பேச்சுக்களை பேசிக்கொண்டிருக்கவில்லை. சிறிது காலம்தான் கழிந்தது. அந்த மாதிகமாதா தாயவர்கள் சோதாபண்ண நிலையை அடைந்தார். சகதாகாமீ நிலையை அடைந்தார். இறுதியில் அநாகாமீ நிலையையும் அடைந்தார். அவரின் மேன்மைப்படுத்திய தியான பலத்தினால் ஏனையோரது மனதை அறியக்கூடிய “பரசித்த விஜானன” ஞானத்தையும் பெற்றுக்கொண்டார்.
ஒருநாள் இந்த மாதிகமாதா உபாசகி அவர்கள் இந்த தேரர்களது மனதை ஆராய்ந்து பார்த்தார். “ஆ… யாருமே ஒரு வீடுபேற்று நிலையையும் அடைந்திருக்கவில்லை. மோட்சத்தை உறுதி செய்திருக்கவில்லை. இதற்கு காரணம் என்ன என ஆராய்ந்து பார்த்தார். அந்த சுவாமிகளுக்கு கிடைக்கும் தானத்தில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதை அவதானித்தார். உறையுள்களிலும் ஒழுங்கமைய வேண்டிய விடயங்கள் இருந்தன.
இப்போது மாதிகமாதா அவர்கள் அன்புள்ள ஒரு தாய் தனது குழந்தைகளை பராமரிப்பது போல் இந்த சங்கத்தினருக்கு பணிவிடை செய்தார். உடல், உள ரிதீயாக சுகமளிக்க கூடிய வண்ணம் அன்னம், பானம் என்பனவற்றை அளித்தாள். ஒளடதங்கள், சுடுநீர், குளிர்நீர் என்பன தயார் செய்து கொடுத்தார். மிகவும் சிறந்த பணிவிடைகள் கிடைப்பதால் நோய்கள் இல்லாமல் போனது போன்றே, இந்த தேரர்களது மனமும் தர்மத்தின் பால் குடிகொண்டன. சதிபட்டான தர்மத்தினுள் மனம் நிலைகொண்டது. சீலம், சமாதி, பிரக்ஞை என்பன விருத்தியடைய ஆரம்பித்தது. எண்சீர் மார்க்கத்தினை முழுமையாக்கிக்கொள்ள கூடியதாக இருந்தது. இந்த அறுபது தேரர்களும் புத்த சாசனத்தின் உயரிய நிலையான அரஹத் நிலையை உறுதி செய்தனர்.
மாரி காலம் முடிவடைந்தது. மாதிகமாதா அவர்களுக்கு மிகவும் புண்ணியங்களை அனுமோதித்த இந்த பிக்குமார்கள். புத்த பகவானை காணச்சென்றார்கள். புத்த பகவானை சந்தித்து தமக்கு மோட்சத்தை உறுதி செய்வதற்கு மிகவும் உபகாரம் செய்த மாதிகமாதாவை பற்றி புகழ்ந்து பேசினார்கள். அப்போது அங்கிருந்த வேறு ஒரு தேரர் இதனை கேட்டார். அவருக்கும் அல்லி கிராமத்திற்கு செல்வதற்கு விருப்பம் பிறந்தது. அவரும் அந்த கிராமத்திற்கு வருகை தந்தார்.
புதிதாக வருகை தந்த அந்த தேரருக்கும் மாதிகமாதா அவர்கள் மிகவும் அன்புடனும் கௌரவத்துடனும் பணிவிடை செய்தார்கள். அந்த சுவாமிக்கு தனது மனதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. சாப்பிடக்கிடைக்காத உணவு வகைகளை பற்றி நினைத்து கொண்டிருந்தார். மாதிகமாதா அவர்கள் இதனை அறிந்து மறுநாள் காலையில் அந்த உணவை அவருக்கு அளிப்பார். அவர் நினைக்கும் ஒவ்வொரு உணவு வகைகளையும் தயாரித்து சென்று கொடுப்பார். சிறிது காலம் செல்லும் போது இந்த சுவாமிக்கு மனதினுள் அச்சம் தோன்றியது.
ஐயோ… இந்த உபாசகி மாதா நான் நினைக்கும் ஒவ்வொரு விடயங்களையும் அறிந்துகொள்கிறார் அல்லவா? நான் இன்னும் இந்த மனதை மேன்மை படுத்தி கொள்ளவில்லையே…! எனது மனம் மிகவும் சபலமானது. விரும்பும் ஒவ்வொரு எண்ணங்களிலும் இந்த மனம் மூழ்கிவிடுகிறது. இவ்வாறான கீழத்தரமான மனதை கொண்டு இவ்வளவு உத்தம குணங்கள் கொண்ட இந்த உபாசகத்தாயிடம் இருந்து பணிவிடைகளை பெறக்கூடாது. என அந்த சுவாமி மிகவும் மனம் நொந்தார். கவலைக்குள்ளானார். இந்த மனதை நினைத்து வெறுப்படைந்தார். புத்த பகவானை காணச்சென்றார். புத்த பகவானிடம் இந்த விடயத்தை கூறினார். அப்போது இந்த செய்யுளை மொழிந்த புத்த பகவான் அந்த தேரரை மீண்டும் அதே கிராமத்திற்கு செல்லுமாறு பணித்தார். புத்த பகவான் மொழிந்த செய்யுளின் மூலம் மனதை திடப்படுத்தி கொண்ட அந்த தேரர் மீண்டும் அந்த கிராமத்திற்கு சென்றார். மாதிகமாதா அவர்களின் பணிவிடைகளை பெற்றுக்கொண்டு மிகுந்த வீரியம் கொண்டு தியானங்கள் செய்தார். சிறிது காலத்திலேயே சகல துக்கங்களையும் துறந்த ஒரு நிக்கிலேசியானார். அரஹத் நிலையை அடைந்தார்.
துன்னிக்கஹஸ்ஸ லஹுனோ – யத்த காமனிபாதினோ
சித்தஸ்ஸ தமதோ சாது – சித்தங் தன்தங் சுகாவஹங்
நிந்தனை செய்து இந்த மனதை அடக்குவது மிக கடினம்
மாறிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு நொடியும் – விரும்புவதன் பின்னே ஓடிச்செல்லும்.
இவ்வாறாக நிலவும் மனதை – அடக்குவதே சாலச்சிறந்தது.
அடக்கிய மனதினால் மகா சுகத்தை பெறலாம்
புண்ணியமிக்கவர்களே, இந்த மனதிற்கு எவ்வளவு அறிவுரை செய்தாலும் அடக்குவது மிக மிக கடினமானதாகும். எவ்வளவு நிந்தித்தாலும் அக்காரணத்தினால் ஒருபோதும் அடக்குவது எளிதல்ல. விரும்பும் விடயங்களிலே மரத்தின் மீது கொடி படர்ந்து கொள்வது போன்று படர்ந்துவிடுகிறது. நீர்சுழியில் அகப்பட்ட துரும்பை போன்று இந்த மனம் தான் விரும்பும் எண்ணங்களில் அமிழ்ந்துவிடுகிறது. புத்த பகவான் மொழிந்த தர்மத்தினால் மாத்திரம்தான் இந்த மனதை பாதுகாத்து கொள்ளலாம். மனதை பாதுகாக்கும் முறை தொடர்பாக புத்த பகவானிலும் பார்க்க வேறு ஒருவரும் கூறியதில்லை. எனவே மனதின் இயல்பை எம்மால் தெளிவாக இந்த தர்மத்தினூடாக மாத்திரமே காணலாம். சித்தானுபஸ்ஸனா செய்யும் ஒருவருக்குத்தான் இந்த மனதின் பயங்கர நிலையை உணர முடியும். சித்தானுபஸ்ஸனா செய்யும் ஒருவர் தனது மனம் தொடர்பாக அவதானமாக இருப்பார். பிழையான வழியில் செல்லும் போது அவர் தனது மனதை அங்கிருந்து மீட்டு நல்ல வழியில் செலுத்துவார். அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் இருந்திராவிட்டால் இந்த மனம் எம்மை நரகம் கொண்டு செல்லும் வரை நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆகையால் இந்த மனதை அடக்குவதே சாலச்சிறந்ததாகும்.
சாது! சாது!! சாது!!!