கரண்டி கறியின் சுவை அறியாததைப் போல் அறிவற்றவன் தர்மத்தை அறியான்.

புண்ணியமிக்கவர்களே, சிலர் தன்னை பெரியவர் என காட்டிக் கொள்வதில் சந்தோஷப்படுகிறார்கள். பதவிகள், மரியாதைகள், கௌரவிப்புகள் கிடைப்பதை மிகவும் விரும்புவார்கள். ஆனால் அவை எதனையும் பெறுவதற்கான தகுதி அவர்களிடமில்லை. புத்த பகவான் வாழ்ந்திருந்த காலத்திலும் அத்தகையவர்கள் இருந்தார்கள். இந்த கதையில் அத்தகையதொரு சம்பவமே குறிப்பிடப்படுகிறது. சாவத்திய நகரின் ஜேதவனராமத்தில் ஒரு பிக்கு இருந்தார். அவரது பெயர் உதாயி. ஓரளவு முதுமையானவர். நல்ல வாட்டசாட்டமானவர். அதாவது நல்ல உயரமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட அந்த பிக்கு கம்பீரமான தோற்றமுடையவர். கம்பீரத்துடன்தான் நடப்பார். அதிகமாக யாருடனும் பேச மாட்டார். அவரை பார்க்கும் ஏனையோர் இப்படித்தான் நினைப்பார்கள்.

”இந்த உத்தமர் மன ஆற்றல்கள் மிகுந்தவராகத்தான் இருக்க வேண்டும். ஆழமான தர்ம விடயங்கள் என்பன தெரிந்த ஒரு உயர்ந்த பிக்குவாகத்தான் இருக்க வேண்டும். ஆ.. மகா தேரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஆசனங்கள் அல்லவா அவர் அமர்கிறார். கண்டிப்பாக இவர் உத்தம குணங்கள் கொண்ட பெரிய தேரராகததான் இருக்க வேண்டும். ஞானப்பேற்று நிலைகளை அடைந்தவராகத்தான் இருக்க வேண்டும்” என்று.

இந்த தேரர் யாரிடமும் பெரிதாக பேசுவதில்லை. மகா தேரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஆசனங்களில் அமர்ந்து கம்பீரமாக சுற்றும் முற்றும் பார்க்கும் இந்த பிக்குவை பார்க்கும் வேறு பிரதேசங்களிலிருந்து வருகை தரும் பிக்குமார்கள் மரியாதை செலுத்துவார்கள். வணங்கி கௌரவிப்பார்கள். காலப்போக்கில் ஒருசில பிக்குமார்களுக்கு, இந்த பிக்கு தம்மை ஒரு பெரும் தேரரைப் போல் காட்டிக்கொள்வதற்கென்ன அத்தகையதொரு ஞானம் அவரிடம் இல்லை என்பதனை உணர்ந்தார்கள். தர்மம் தொடர்பாகவோ ஒழுக்கக்கோட்பாடுகள் தொடர்பாகவோ எவ்வித அறிவும் அவரிடம் இல்லை. தோற்றம் மாத்திரம்தான் கம்பீரமாக இருக்கிறது என்பதனை உணர்ந்தார்கள். இதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஒருநாள் சில பிக்குமார்கள் இந்த உதாயீ தேரரிடம் சென்று தர்மம் தொடர்பாகவும் ஒழுக்கம் தொடர்பாகவும் ஒருசில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள். அப்போது இந்த உதாயீ பிக்கு பதில் அளிக்க தெரியாமல் நிலத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அமைதியாக முகத்தை சுளித்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த பிக்குமார்கள்,
”புத்த பகவான் வாழ்ந்திருக்கின்ற காலத்தில் துறவு பூண்ட இந்த பிக்கு காலையும் மாலையும் புத்த பகவானை தரிசித்து கொண்டு வாழும் இந்த பிக்கு இந்த புத்த சாசனத்தின் சாரமான நாற்பேருண்மைகள் தொடர்பாகக் கூட அறியாமல் இருக்கிறாரே’ என்று தமக்குள் பேசிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு புத்த பகவானிடம் சென்றனர். அன்புடன் பகவானை வணங்கி ஒருபுறத்தில் அமர்ந்து இந்த உதாயீ பிக்குவின் அறியாமையை புத்த பகவானிடத்தில் கூறினார்கள். அச்சமயம் புத்த பகவான் இந்த செய்யுளை அழகாக போதித்தார்.

யாவஜீவம்பி சே பாலோ – பண்டிதங் பயிருபாசதி
ந சோ தம்மங் விஜானதி – தப்பீ சூபரசங் யதா

ஓர் அஞ்ஞான மூடன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு ஞானமுள்ள பண்டிதருடன் பழகினாலும் கறியின் சுவை அறியாத கரண்டியைப் போன்று அவன் தர்மத்தினை
அறிந்துகொள்ளமாட்டான்.

புண்ணியமிக்கவர்களே. அறிவாளிகளாவது இலகுவான விடயமல்ல. புத்த பகவான் அருகிலேயே இருந்தாலும், காலையும் மாலையும் புத்த பகவானை காணக்கிடைத்தாலும், புத்த பகவானின் பின்னாலேயே நடந்து சென்றாலும், புத்த பகவான் தர்மத்தை போதிக்கும்போது அருகிலேயே அமர்ந்திருந்தாலும் அறிவற்ற ஒருவரால் அந்த தர்மத்தினை உணர முடியாது என்பதனை இந்த கதை மூலம் நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

அறிவு என்பது ஒருவருக்கு அதிஷ்டத்தினால் கிடைப்பதாகும். அறிவினால் சிந்திக்கும் திறன் புண்ணியங்களின் விளைவினால் கிடைப்பதாகும். மனிதர்களுள் இருக்கும் மகா மாணிக்கமே அறிவு என்பதாகும். (பஞ்ஞா நரானங் ரதனங்) அதேபோன்று உலகிலுள்ள உன்னதமான பிரகாசம் ஞானம் என்றே புத்த பகவான் போதித்திருக்கிறார். (பஞ்ஞா அனுத்தரா ஆபா) அப்படி சொல்வதற்கு காரணம் வாழ்க்கை தொடர்பான சரியான புரிதலை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒருவருக்கு அவருள் இருக்கும் அறிவே உபகாரமாக அமையும்.

அறிவின்மை என்பது மிகப்பெரும் இழப்பாகும். அத்தகையவர்கள் வெறுமையான வாழ்க்கையை வாழ்ந்து செத்துபோவார்கள். தர்மத்தை சொன்னாலும் தலையை ஆட்டிக்கொண்டு கேட்பார்கள். இது புண்ணியம இதனை செய்யுங்கள் என்றாலும் பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அது பாவம் என்றாலும் கேட்டுக்கொண்டு பேசாமல் இருப்பார்கள். எருமைமாட்டின் மேல் மழை பெய்வதைப் போன்று பேசாமல் இருப்பார்கள். அவை ஒன்றினதும் பொருளோ அர்த்தமோ அவர்களுக்கு தெரியாது. காரணம் என்ன? அவர்கள் கேட்கும் அந்த விடயங்களை அறிவை பயன்படுத்தி சிந்தித்து பார்க்கமாட்டார்கள். ஒன்றும் தெரியாவிட்டாலும் எல்லாம் தெரிந்தவர்கள் போல ம்மை காட்டிக்கொள்வார்கள். ஆனால் அறிவுள்ள, அறிவை பயன்படுத்தும் ஒருவருக்கு தர்மத்தை கேட்கக்கிடைத்தால் அவர் அந்த தர்மத்தை தம் அறிவை பயன்படுத்தி சிந்திக்க ஆரம்பிப்பார். ஏன் இந்த தர்மத்தில் தம் வாழ்க்கை கதையே கூறப்படுகின்றது. தன்னால் ஒருபோதும் உணர முடியாத தம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவை இதிலில்லை. அறிவுள்ள ஒருவருக்கு இந்த தர்மம் கிடைப்பதானது மிகவும் அரிய விடயமாகும்.
ஆனால் அறிவற்றவனது வாழ்க்கை சோககரமானதாகும். பாருங்கள் , இந்த செய்யுளில் புத்த பகவான் தப்பீ அதாவது கரண்டிக்கே அறிவற்றவனை உவமைப்படுத்தியிருக்கிறார். ஒருநாள் முழுவதும் கறிச்சட்டியில் கரண்டியை போட்டு வைத்தாலும், கரண்டியில் அந்த உணவு பூசப்பட்டிருக்குமேயன்றி ஒருபோதும் அந்த கரண்டி ‘இது இனிப்பு சுவை, இது உறைப்புச் சுவை’ என கறியின் சுவையை அறிந்துகொள்ளாது. அறிவின்மைக்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவையா?
அந்த உதாயி பிக்கு மீது புத்த பகவானுள் பெரும் அனுதாபம் தோன்றியிருக்கும். ஆனால் என்ன செய்வது? தனக்கு தன்னை புகலிடமாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு அறிவு மிக மிக முக்கியமாகும்.