சப்த வ்ருதபத சூத்திரம்
(தேவேந்திரனின் உத்தம எழுவகை விரதங்கள் தொடர்பாக மொழிந்த போதனை)
புண்ணியவர்களே,
இவ்வாறுதான் புண்ணியமிக்க தேவேந்திரனுக்கு தேவேந்திர பதவி கிடைத்தது.
புண்ணியமிகு பிக்குகளே, தேவேந்திரன் முன்பு மனித உலகில் வாழும் போது உன்னதமான ஏழு விரதங்களை கடைபிடித்திருந்தார். இந்த எழுவகையாக விரதங்களை கடைபிடித்ததால் தான் அவருக்கு தேவேந்திர பதவியும் கிடைத்தது.
அந்த எழுவகையான விரதங்களும் யாவை?
1. நான் உயிர் வாழும் வரை எனது பெற்றோர்களுக்கு பணிவிடை செய்யும் ஒருவராவேன்.
2. நான் எனது உயிர் இருக்கும் வரை பெரியோர்களுக்கு பணிவிடை செய்யும் ஒருவராவேன்.
3. நான் எனது உயிர் இருக்கும் வரை இனிமையான பேச்சுடையவராவேன்.
4. எனது வாழ்நாள் முழுவதும் புறஞ்சொல் பேசாத ஒருவராவேன்.
5. எனது வாழ்நாள் முழுவதும் நான் உலோபத்தனத்தை விடுத்த ஒருவராவேன். தானமளிப்பதற்காக கைவிடும் ஒருவராவேன். தானமளிப்பதற்காவே கைகளை கழுவியிருப்பேன். (ஆயத்தமாக இருப்பேன்.) தானமளிப்பதற்கு விரும்பும் ஒருவராவேன். ஏனையோர் என்னிடம் தானம் கேட்டு வருவதை விரும்பியவராவேன். தானம் பகிர்ந்தளிக்க விரும்பிய ஒருவராவேன்.
6. என் வாழ்நாள் முழுவதும் வாய்மையை மாத்திரமே பேசும் ஒருவராவேன்.
7. என் வாழ்நாள் முழுவதும் குரோதம் கொள்ளாத ஒருவராக இருப்பேன். ஏதேனும் ஒருவிதத்தில் என்னுள் குரோதம் தோன்றினால் அதனை விரைவாகவே இல்லாமல் செய்து விடுவேன்.
புண்ணியமிகு பிக்குகளே, தேவேந்திரன் முன்பு மனித உலகில் வாழும் போது இந்த ஏழு விரதங்களை தான் கடைபிடித்திருந்தார். இந்த எழுவகையாக விரதங்களை கடைபிடித்ததால் தான் அவருக்கு தேவேந்திர பதவியும் கிடைத்தது.
(தேவேந்திரனின் உத்தம எழுவகை விரதங்கள் தொடர்பாக மொழிந்த போதனை)