ஆனந்த சீமானின் கதை

கஞ்சத்தனம் உலோபியை என்ன பாடுபடுத்துகிறது?

புண்ணியமிக்கவர்களே, புத்த பகவான் இல்லற வாழ்வை வாழ்கின்றவர்கள் அதாவது சாதாரணமாக வீடுகளில் வாழ்பவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என அழகாக இப்படிச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.

ஒருவர் இருக்கிறார் அவருக்கு நிறைய பணம் இருக்கிறது. ஆனால் அவர் அந்த பணத்தை தவறான வழிகளில் தான் சம்பாதித்திருக்கிறார். அவரிடம் பணம் இருப்பது நல்ல விஷயமாக இருந்தாலும் அதனை சம்பாதித்த வழி பிழை. அதேமாதிரி அவர் அந்த பணத்தை  வீட்டில் உள்ளவர்களுக்காக செலவழிக்க மாட்டார். பெற்றோர்களுக்காவும் செலவழிக்கமாட்டார். புண்ணியங்களை செய்துகொள்ளவும் அந்த பணத்தை செலவழிக்கமாட்டார். அதேபோன்று தன்னிடமிருக்கும் சொத்துக்கள், செல்வங்கள் மேல அவருக்கு ரொம்பவும் ஆசை இருக்கும். அந்த சொத்துசுகங்கள் எப்போதாவது தன்னிடமிருந்து இல்லாமல்போகும் என்று அவர் நினைக்கமாட்டார். அவை மேல எவ்வளவு விருப்பத்தோடு இருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட்டுத்தான் ஒருநாள் போக வேண்டும் என்பதனை நினைக்கமாட்டார். அவரின் சொத்துக்களை வெறித்தனமாக பாதுகாப்பதிலேயே மும்முரமாக இருப்பார்.  இப்படியாக அவர் சம்பாதிக்கும் விதமும் பிழையாக இருக்கும், செலவழிக்கும் விதமும் பிழையானதாக இருக்கும். அதாவது அவர் அந்த செல்வங்களை உழைத்த விதமும் பிழை. அவற்றை செலவு செய்யும் விதமும் பிழை. அவற்றின் மீது வெறித்தனமாக ஆசை கொண்ட விதமும் பிழை.

இம்மாதிரியாக வாழ்ந்த ஒரு சீமானின் சோகமான ஒரு கதையே இப்போது படிக்கப்போகிறோம். சீமான் என்றால் அரசருக்கு பிறகு அந்நாட்டில் பெரும் செல்வம் இருப்பவர்களாவார்கள். இந்த கதையில் வரும் சீமானின் பெயர் ஆனந்த, அவர் சாவத்தி நகரத்தில் தான் வாழ்ந்துகொண்டிருந்தார். இவரிடம் நாற்பது கோடி பணமிருந்தது. இவருக்கு ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் மூலசிரி. இந்த ஆனந்த சீமான் இரண்டு கிழமைகளுக்கு ஒரு முறை சொந்தக்காரர்கள் மத்தியில் வைத்து தம் மகனுக்கு இப்படிச் சொல்வார்.

‘நீங்கள் யாரும் இந்த நாற்பது கோடி பணத்தை பெரிய தொகை என நினைக்க வேண்டாம். இது மிகவும் கொஞசம்தான். ‘அதனால் யாருக்கும் உதவி செய்கிறேன்’, ‘புண்ணியம் செய்கிறேன்’ என்றெல்லாம் பணத்தை வீணாக்க வேண்டாம். புதிதாக எப்படி சம்பாதிக்க வேண்டும் என்றே யோசிக்க வேண்டும். ஒன்றை நல்லா ஞ்பகம் வைச்சுக்கொள்ளுங்க. ஒரு நாணயத்தை செலவு செய்தாலும் அது செலவுதான் வரவு இல்லை. இன்னும் உங்கள் தலைக்கு இந்த விஷயம் பதிய வேண்டும். அதனால் இத மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

அஞ்ஜானானங் கயங் திஸ்வா – உபசிகானஞ்ச்ச ஆசயங்

மதூனஞ்ச்ச சமாஹரங் – பண்டிதோ கரமாவசே

இல்லற வாழ்வை வாழும் அறிவுள்ளவர்

அழிந்துபோகும் மையை கண்களில் பூசும்போதும்

கறையான்கள் ஒன்றுகூடி புற்றை கட்டுதைப் போன்று

தேனிக்கள் தேனை சேகரிப்பதைப் போன்று

பணத்தை சேகரித்து சேமிப்பார்கள்.

இந்த ஆனந்த சீமான் தன் செல்வத்தை நினைத்து பெருமையுடனிருந்தார். அதை பற்றியே பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். சிக்கனமாக செலவுகள் செய்து நிறைய சம்பாதிக்கும் திறமையான வியாபாரியாக தன்னைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். சேகரித்துக்கொண்ட செல்வத்தை நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்த இந்த ஆனந்த சீமான் ஐந்து மிகப்பெரும் புதையல்கள் அளவிற்கு செல்வத்தை சேகரித்தார். இப்படி வாழ்ந்த அந்த ஆனந்த சீமான் ஒருநாள் எதிர்பாராத வகையில் திடீரென்று மரணித்துவிட்டார்.

கோசலை நாட்டு அரசர், ஆனந்த சீமானின் மரணத்திற்கு பிறகு மகா சீமான் எனும் பதவியை அவரது மகனான மூலசிரிக்கு அளித்தார்.

இந்த ஆனந்த சீமான் மரணித்து ஒரு வித்தியாசமான இடத்தில் தான் பிறந்தார். அதே சாவத்திய நகரில் ஒரு ஒதுக்குபுறமாக ஒரு சேரி இருந்தது. அங்கு ஓலைகளில் வேயப்பட்ட சிறு குடிசைகள் மட்டுமே இருக்கும். அங்கு சண்டாலர்கள் என அழைக்கப்பட்ட மக்களே வசித்து வந்தனர். அந்த சண்டாள மக்கள் அந்நகர மக்களின் மலசலக்கழிவுகளை அகற்றுவதை தொழிலாக கொண்டவர்கள். அங்கு ஆயிரம் குடிசைகள் இருந்தன. அந்த சண்டாளர்களின் சேரியில் ஒரு சண்டாள பெண்ணுக்கு மகனாக இந்த சீமான் கருக்கொண்டான். அந்த சிறுவன் அங்கு கருக்காண்ட நாளிலிருந்தே அந்த சண்டாள கிராமத்திற்கு சரியாக வேலைவெட்டி கிடைக்காமல் போய்விட்டது. சோற்றுக்கு வழியில்லாமல் போய்விட்டது. வேலை செய்தாலும் சம்பளம் கிடைக்காத காரணத்தினால் பசியினால் அவஸ்தை பட்டார்கள். இவ்வாறாக நாட்கள் நீண்டு கொண்டே போனது. அந்த சண்டாளர்களின் பிரதானிகள் ஒன்று சேர்ந்து பேசினார்கள்.

‘இது நல்ல வேலையாக அல்லவா இருக்கிறது..? முன்பு ஒருநாளைக்கு ஒருவேளை சாப்பாடாவது வயிறாற சாப்பிடுவோம். இப்போ அதுவும் இல்லை. கஷ்டப்பட்டு வேலைகள் செய்தாலும் சம்பளம் கிடைப்பதில்லை. கஞ்சிக்குகூட வழியில்லாமல் போய்விட்டது. எங்களுக்கு என்னதான் நடந்தது..? எவனாவது தரித்திரம் பிடித்தவன் இங்கு பிறந்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த கஷ்டம்’

நாம் இதை கண்டுபிடித்தேயாக வேண்டும். எம் ஆயிரம் குடும்பங்களையும் இரண்டாக பிரிப்போம். பிரித்த பிறகு எந்த பகுதியில் உள்ளவர்களுக்கு சாப்பாடில்லை என்று பார்ப்போம். அதன் பிறகு அந்த ஐந்நூறு குடும்பத்தை நூறு நூறு குடும்பங்களாக பிரிப்போம். இவ்வாறாக செய்யும்போது அந்த தரித்திரம் பிடித்த பிறவியை அடையாளம் காணலாம்’ என பேசிக்கொண்டு அவ்வாறு செய்தனர். இறுதியாக ஆனந்த சீமான் பிறந்த அந்த குடும்பத்தை தரித்திரியம் பிடித்த குடும்பம் என்று அடையாளங்கண்டுகொண்டார்கள். ‘எங்களுக்கு இத்தனை  நாட்களுக்கும் சோறு இல்லாமல் போனதற்கு நீ தான் காரணம். நீ வயிற்றில சுமந்துகொண்டிருக்கிற தரித்திரியம் பிடித்தவன்தான் இதற்கெல்லாம் காரணம் என அந்த பெண்ணை சேரியிலிருந்து துரத்திவிட்டார்கள்.

அந்த அபலைப் பெண் மிகவும் அநாதையாக வீதி வீதியாக திரிந்து குப்பையில் கிடக்கும் உணவை சாப்பிட்டு அந்த குழந்தையை ஈன்றாள். அது ஒரு ஆண்குழந்தை. அந்த குழந்தையின் கைகால்கள் கோணலாக இருந்தன். ஒன்றரைக்கண்ணுடனும் வாய் கோணலாகவும் இருந்தது அந்த பிள்ளையின் மூக்கு கோணியும் அவலட்சமாணகவும் இருந்தது. யாரும் பார்த்தவுடனே அது நடந்துசெல்லும் ஒரு குட்டிபிசாசு என்றே சொல்வார்கள்.

தாய்பாசம் என்பது அற்புதமான விடயமாகும். இவ்வளவு அருவறுப்பான தோற்றத்துடன் அந்த குழந்தை இருந்தாலும், தன் உறவினர்களால் துரத்தப்படுவதற்கு காரணமான, தனக்கு இருக்குமிடன்றி வீதி வீதியாக திரிவதற்கு காரணமாக இருந்த அந்த குழந்தை மீது அந்த தாய் மிகவும் பாசம் வைத்திருந்தாள். இப்போது இருவருக்கும் சாப்பாடில்லை. மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் அந்த குழந்தைக்கு பாலூட்டி வீதியோரங்களில் தங்கியிருந்து அந்த பிள்ளையால் தனியாக நடக்ககூடிய வயது வரைக்கும் அந்த பெண் அவனை வளர்த்தாள். இப்போது அந்த பிள்ளையால் தனியாக தம் காரியங்களை செய்துகொள்ள முடியும். ஏதையாவது தேடி சாப்பிட முடியும். என அறிந்துகொண்ட அந்த தாய் அந்த சிறுவனிடம் ஒரு சிரட்டையை கொடுத்து

‘மகனே, நான் உன்னால் நிறைய கஷ்டங்கள் அனுபவித்தேன். என்ட தங்கமே, இனிமேலும் உன்னை என்னால் பார்த்துக் கொள்ள முடியாது. என்னால் முடியுமான வரைக்கும் உன்னை போசித்தேன். இதற்கு மேலும் என்னால் முடியாது. இந்த சிரட்டையை எடுத்துக்கொண்டு பிச்சைகாரர்களுக்கு சாப்பாடு போடும் இடத்திற்கு போய் வாங்கிச் சாப்பிடு. ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது உனக்கு சாப்பாடு கிடைக்கும்’ என்று அந்த தாய் குழந்தையை பிரிந்து சென்றாள்.

அந்த சிறுவன் தனிமையானான். பாதையோரங்களில் தூங்கினான். மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, தனியாக வாழ்ந்த இந்த அவலட்சணமான சிறுவனை யாரும் கண்டுகொள்ளவில்லை.பலநாட்களாக இந்த சிறுவனுக்கு எந்த உணவும் கிடைக்கவில்லை. எனவே இவன் தன் சிரட்டையையும் எடுத்துக்கொண்டு சாப்பாடு தேடிக்கொண்டு கால்போகும் திசையில் போனான். இப்படியாக நடந்துகொண்டுபோகும்போது திடீரென்று இவனுக்கு ஒரு வித்தியசமான உணர்வு வந்தது.

‘ம்.. ம்.. எனக்கு இந்த பாதை நல்ல பழக்கமான பாதை போலிருக்கிறதே.. இதற்கு முன் நான் இங்கே வந்திருக்கிறேன் தானே..! ஆ.. அங்கு இருக்கும் மாளிகை..! ம்.. அந்த மாளிகையின் ஏழாவது மாடியில் இருந்த தங்கக் கட்டிலில் தானே நான் தூங்கினேன்.. இப்போது யார் அங்கிருப்பார்கள்..’ இவ்வாறாக அந்த அவலட்சணமான சிறுவன் அந்த மாளிகையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். தன்னையுமறியாமலே அந்த மாளிகைக்கு நகர்ந்தான். அன்று அந்த மாளிகையில் பெரும் மதில் திறந்திருந்தது. மெதுவாக உள்ளே சென்றான். யாரும் காணவில்லை. இவ்வாறாக வீட்டினுள் வரவேற்பரை வரை சென்றான் யாரும் காணவில்லை. இந்த சிறுவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கண்கொட்டாமல் மாளிகையை பார்த்துக் கொண்டிருந்தான். அச்சமயம் மூலசிரி சீமானின் பிள்ளைகள் மாளிகையினுள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்த சிறுவர்கள் இடுப்பிற்கு மாத்திரம் துணித்துண்டொன்றை கட்டிக்கொண்டு நொண்டிக்கொண்டு வந்த, அவலட்சணமான அறுவறுக்கும் தோற்றத்துடன் கூடிய அந்த பிச்சைக்கார பையனை கண்டு மிகவும் பயந்து, கூச்சலிட்டார்கள்.

‘ஐயோ.. அம்மா.. அப்பா.. எம்மை காப்பாற்றுங்கள்.. ஒரு பிசாசு வந்திருக்கிறது..’என கூச்சலிட்டார்கள். அந்த சப்தத்தை கேட்ட மாளிகை சேவகர்கள் ஓடோடி வந்து அந்த சிறுவனை காலால் உதைத்தே மாளிகைக்கு வெளியே இருக்கும் பாதையோரத்தின் குப்பையில் கொணர்ந்து போட்டார்கள். குப்பையில் விழுந்த அந்த சிறுவன் காயங்களுடன் அழுதுக் கொண்டிருந்தான். அச்சமயம் புத்த பகவான் அந்த தெருவினிலே ஐயமேற்பதற்காக வந்துகொண்டிருந்தார். அந்த சிறுவனைக் கண்ட பகவான் ஆனந்த தேரரை அழைத்து ‘புண்ணியமிகு ஆனந்த, மூலசிரி சீமானை அழைத்து வாருங்கள். இப்படியிருந்தால் இந்த சிறுவன் மரணித்துவிடுவான்.’

சீமானை வரவழைத்த புத்த பகவான் ‘இது உங்களுடைய தந்தை’ எனக் கூறினார். ஆனால் சீமான் நம்பவில்லை. அப்போது புத்த பகவான் அந்த சிறுவனை அழைத்து ‘சிறுவனே, வாழ்க்கை என்றால் இப்படித்தான்.. சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையே அழிவும் துக்கமும் தான் மீதமாகும். உனக்கு உன் முற்பிறவி ஞாபகம் இருக்கிறதுதானே. நீ முற்பிறவியில் புதைத்த பஞ்சமகா புதையல்கள் இருக்கும் இடத்தை இவர்களுக்கு காட்டு’ என்று கூறினார். அந்த சிறுவன் மயக்கத்துடன் போல் இருந்த இடத்தை விட்டெழுந்து அந்த புதையல்கள் ஐந்தும் இருக்கும் இடங்களை காட்டினான். அனைவரும் ஆச்சரியமடைந்தார்கள். நம்பமுடியவில்லை. ஆனால் அதுவே உண்மை. அச்சமயம் புத்த பகவான் இந்த செய்யுளை இனிமையான குரலில் போதித்தார்.

புத்தா மத்தி தனம்மத்தி – இதி பாலோ விஹஞ்ஞதி

அத்தா ஹி அத்தனோ நத்தி – குதோ புத்தா குதோ தனங்

அழகிய தோற்றமுள்ள பிள்ளைகள் எனக்கு இருக்கின்றனர். கஷ்டப்பட்டு உழைத்த செல்வம் என்னிடமிருக்கிறது. என்று அஞ்ஞான மூடன் அதிலேயே திளைத்து வாழ்வான். தனக்கு தானே இல்லாத போது பிள்ளைகளாலோ அல்லது செல்வத்தினாலோ புகலிடம் எங்கிருந்து கிடைக்கும்?

புண்ணியமிக்கவர்களே, சிலர் தம் பிள்ளைகளின் நன்மையை கருதி இரவு பகல் என அயராது உழைக்கின்றனர். கஷ்டப்படுகின்றனர். அந்த பிள்ளைகளுக்காவே வாழ்வார்கள். அப்படியில்லாவிட்டால் தன் வியாபாரங்களையே நினைத்து கொண்டிருப்பார்கள். எவ்வாறெல்லாம் சம்பாதிக்க முடியும் என்பதனையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அதற்காகவே தன் வாழ்நாளை தியாகம் செய்திருப்பார்கள். தம் மனைவி மக்கள், பெற்றோர், நண்பர்கள் ன அனைத்தையும் விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து பிள்ளைகளை வளர்ப்பார்கள். ஆனால் இறுதியில் அந்த பிள்ளைகளே அந்த பெற்றோரை கஷ்டப்படுத்துவார்கள். முதியோர் இல்லங்களுக்கு கொண்டு சென்று தள்ளுவாரக்ள். தாம் வாய், வயிற்றை கட்டி உழைத்த பணம் தம் கண் முன்னே வேறு யாராவது அனுபவிப்பதனை காண நேரிடும். இல்லை, அழிவதை காண நேரிடும். இப்படி நடக்கும்போது தன் கடந்தகாலத்தை நினைத்து அழுது புலம்புவதைத் தவிர ஒரு சாதாரண மனிதனுக்கு வேறு என்ன கிடைக்க போகின்றது.

சிலர் மரணிக்கும் தருவாயில் யாரும் அவர்கள் அருகில் இருக்கமாட்டார்கள். தம் பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இதுவரை சேகரித்து கொண்ட புண்ணியங்களும் இருக்காது. தனக்கு சரணாக இருக்குமே என்று இதுவரை பழக்கப்படுத்திய ஏதேனும் நற்குணங்களும் இருக்காது. பழக்கப்படுத்திய தர்மம் என்று ஒன்றும் இருக்காது. இறுதியில் பயத்தினாலும் பதற்றத்தினாலும் தான் சாக நேரிடும்.

ஆனந்த சீமானுக்கு நடந்த கதியை பார்த்தீர்கள் அல்லவா? தம் பிள்ளைகளுக்கு எவ்வாறு சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். ஏன் ஒரு செய்யுளையும் மனப்பாடம் செய்வித்தார் அல்லவா? அதே வீட்டிற்கு ஒரு அவலட்சணமான பிச்சைகாரனாக திரும்பும் நிலை தனக்கு ஏற்படும் என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். ஆனால் அந்நிலை வரவில்லையா? அப்போது அவருக்கு பிள்ளைகளும் இல்லை. செல்வமும் இல்லை.

இதிலிருந்து நாம் ஒரு விடயத்தை நன்கு புரிந்துணர்ந்துக் கொள்ள வேண்டும். நாம் மனைவி மக்களை போசிப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றே, காசு சம்பாதிக்க முயற்சி செய்வதைப் போன்றே புண்ணியங்கள் செய்வதற்கும் முயற்சி செய்ய வேண்டும். ஏன் என்றால் எமக்கு புகலிடமாக, ஆறுதலாக அமைவது புண்ணியங்களே. புண்ணியங்கள் செய்துகொண்டவரது வாழ்க்கை வெற்றிகரமானதாகும். அவர் தார்மீகமான முறையில் சம்பாதிப்பார். அவர் பணம் ஈட்டும் முறை சரியானது. அதுபோன்று அவர் இப்படி தார்மீகமான முறையில் அதாவது நல்ல முறையில் சம்பாதித்த பணத்தை தம் மனைவி மக்களுக்காக, பெற்றோருக்காக செலவழிப்பார். புண்ணியங்கள், தானங்கள் அளிப்பதற்காகவும் செலவழிப்பார். அப்படியாயின் செலவழித்ததும் நியாயமான முறையிலாகும். அதேபோன்று தன்னுடைய பணம், செல்வம், பெற்றோர், மனைவி மக்கள் எனும் இவ் அனைத்தும் நிலையில்லாத உலகிற்கு உரியவை என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருப்பார். அவை மீது குருட்டுத்தனமாக பிணையக் கூடாது என்பதனையும் அறிந்திருப்பார். எப்போதாவது மரணிக்கும்போது அவ் அனைத்தையும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கைவிட வேண்டும் என்பதனையும் அறிந்தே அவற்றை உபயோகிப்பார். இவ்வாறாக அறிவை பயன்படுத்தி இதன் உண்மை நிலையை அறிந்துகொள்ளும் அவர் அந்த செல்வங்கள் மீது வெறிக்கொள்ளாமல் உண்மை நிலையை உணர்ந்து கொண்டு அவற்றை தார்மீகமான முறையில் சம்பாதித்து, தார்மீகமான முறையில் செலவு செய்து, அதன் உண்மை நிலையுணரந்து சந்தோஷமாக இருப்பார். இதுவே உண்மையான முன்னேற்றமுமாகும்.