சத்புருஷர்களுடைய சகவாகம் இல்லையென்றால் அழிவுதான்.

புண்ணியமிக்கவர்களே, புத்த பகவான் வாழ்ந்திருந்த காலத்தில் இந்தியாவில் பெரும் குடியரசுகள் இருந்தன. அந்த குடியரசுகளில் ஒன்றுதான் கோசலை நாடு. இந்த கோசலை நாட்டு மன்னன் பசேநதீ கோசலன் என்பவராவார். இந்த அரசன் ஆரம்பகாலத்தில் புத்த பகவானை பெரிதும் விரும்பவில்லை. ஆனால் பிற்காலத்தில் புத்த பகவான் மீது பெரிதும் அன்பு பாராட்டினார். புத்த பகவானும் அரசன் மீது கருணை கொண்டு பல சந்தர்ப்பங்களில் தர்மத்தை போதித்துள்ளார். ஒருநாள் இந்த கோசலை மன்னர் புத்த பகவானிடம் நல்லதொரு கேள்வியைக் கேட்டார். ‘பகவானே, ஒருவருடைய மனதில் தனக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில், தனக்கு துக்கத்தினை அளிக்கும் வகையில் ஏதேனும் தோன்றுமாயின் அவை என்னவென்று போதீப்பீராக!’

‘புண்ணியமிக்க அரசரே, ஒருவருடைய மனதில் தனக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில், தனக்கு துக்கத்தினை அளிக்கும் வகையில் மூன்று விடயங்கள் மனதில் தோன்றும். அவை ஆசை, கோபம், அறியாமை எனும் இம் மூன்றுமாகும்.’

புண்ணியமிக்கவர்களே, இத்தகைய தர்மங்களை கேட்டாலும் கோசலை மன்னர் ஆசையின் காரணமாக பெரும் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறார். அரசன் செய்தாலும் ஆண்டி செய்தாலும் பாவங்கள் செய்தால் அதன் விளைவு துக்கமே. ஒருநாள் இந்த கோசலை மன்னர் நகர்வலம் சென்றார். அதாவது தன்னுடைய பட்டத்து யானை மீது ஏறி தன் நாட்டின் வீதிகளில் இராஜகம்பீரத்துடன் பயணித்தார். அச்சமயத்தில் வீதிகளின் இரு பக்கங்களிலும் மக்கள் ஒன்றுகூடி பூக்களைத் தூவி அரசனை வாழ்தினார்கள். அரசரும் சந்தோஷமாக சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்தார். இவ்வாறாக மன்னர் நகர்வலம் சென்று கொண்டிருக்கும்போது ஒரு வீட்டில் மொட்டை மாடியிலிருந்து ஒரு பெண் இதனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். எதேட்சையாக அரசரும் இந்த பெண்ணை பார்த்தார். அவள் மிகவும் அழகானவள். பொன்னிறமான உடல், நீலநிறமான கண்கள், கருநாகத்தைப் போன்று நீளமான கூந்தலையுடைய அந்த பெண் அரசரைப் பார்த்து தம் முல்லை மலர்களைப் போன்ற பற்களைக் காட்டி சிரித்தாள். அதனை பார்த்த அரசருக்கு அவள் மீது பெரும் ஆசை பிறந்தது. தலை கால் புரியாமல் தடுமாறினார். அன்று நகர்வலம் முடித்து மாளிகைக்கு திரும்பினார். வந்து தம் நம்பிக்கைக்குரிய அமைச்சரை அழைத்து

‘அமைச்சரே, நான் சொல்வதை யாரிடமும் சொல்லாதே. நாம் நகர்வலம் செல்லும்போது கிழக்கு திசை வீதியிலே ஒரு மொட்டை மாடியிலிருந்த பெண் என்னை பார்த்து சிரித்தாளே, அவளை உனக்கு ஞாபகம் இருக்கிறதா?’
மாமன்னரே.. எவ்வாறு ஞாபகம் இருக்காது..? அந்த பெண்ணை பார்த்த பிறகு தங்கள் உடல் சிலிர்த்து போனதை கண்டேன். அப்போதிருந்தே உங்கள் நடத்தையில் மாற்றங்கள் இருப்பதைக் கண்டேன்’

‘உண்மைதான் நண்பா.. அவளை பாரத்த பின்பு பைத்தியம் பிடித்ததைப் போலிருக்கிறது. உண்மையிலேயே அந்த பேரழகி யார?’

‘மாமன்னரே, அவள் ஒரு கன்னியல்ல. அவள் திருமணமானவள். ஏழ்மையானவர்களாக இருந்தாலும் யாருக்கும் எவ்வித தொந்தரவுகளுமின்றி அமைதியாக வாழ்பவர்கள்’

சிறிது நேரம் சிந்தித்த மன்னர்,

‘ம்..ம்.. அவள் திருமணமானவளா..? அதற்கென்ன? நான் இந்த நாட்டுக்கு அரசன்.. இந்த நாட்டிலுள்ள அனைத்தும் எனக்கே சொந்தம்.. ஆனால் கணவன் உயிருடன் இருக்கும்போது அவளை என் அந்தபுரத்திற்கு கொண்டு வர முடியாது. கணவனை கொன்று அவளை விதவையாக்க வேண்டும். அதன் பின் அவளை நான் பெறுவதற்கு எவ்வித தடங்களும் இல்லை’ என்று நினைத்தார்.

அரசன் மறுநாள் காலையிலேயே அந்த பெண்ணின் கணவனுக்கு மாளிகைக்கு வருமாறு செய்தி அனுப்பினார். அந்த அப்பாவி மனிதன் பயத்தினால் நடுங்கிக் கொண்டு அரசர் முன்னிலையில் வணங்கிக் கொண்டு நின்றான்.

‘ஏய்.. ஆண்மகனே, உனக்கு சந்தோஷமான விஷயம் ஒன்று சொல்ல இருக்கிறது. இன்றிலிருந்து நீ மாளிகையில் சேவை புரிய வேண்டும்.’

‘அரசரே.. என் மீது கருணைகாட்டுங்கள். நான் கூலிவேலைகளை செய்துகொண்டு யாருக்கும் எவ்வித தீங்குகளையும் செய்யாமல் வாழ்கிறேன். தங்களுக்கு வரிகளை சரிவர கட்டுகிறேன். தங்களின் கருணை கிடைப்பதாக..! நான் எனது பழைய தொழிலையே செய்வதற்கு தாங்கள் அனுமதி தருமாறு வேண்டிக்கொள்கிறேன்’

‘இல்லை.. இல்லை.. உன்னிடமிருந்து எனக்கு வரி அவசியமில்லை. உன்னுடைய நல்ல நடத்தையை கண்ட பிறகுதான் உன்னை அரசசேவைக்கு எடுக்கலாம் என்று நினைத்தேன். எனவே நீ மேலும் கூலி வேலைகளை செய்யத் தேவையில்லை. நாளையிலிருந்து நீ இங்கு வேலைக்கு வா’

மறுநாளிலிருந்து அந்த மனிதன் மிகுந்த பயபக்தியுடன் அரச சேவைக்காக மாளிகைக்கு சென்றான். சில தினங்களின் பின்னர் அரசன் அந்த மனிதனை அழைத்து,

‘ஏய்.. சேவகனே.. எனக்கு உடனே சில பிரம்மக்கமலங்களும் சந்தனம் போன்று மென்மையான வெண்ணிற களிமண்ணும் தேவைப்படுகிறது. அவை இங்கிருந்து ஒரு யோசனை தூரத்தில் தான் இருக்கின்றன. நான் மாலை நீராடும்போது நீ அவற்றை கொண்டுவந்திருக்க வேண்டும். இல்லையென்றால் மரணம்தான்’

அந்த அப்பாவி மனிதன் பயத்தினால் நடுங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்று மனைவியிடம் ‘எனக்கு சீக்கிரமாக பொதிசோறை தயாரித்துத் தா’ எனச் சொன்னான்.

‘சுவாமி இன்னும் சரியாக சோறு அவியவில்லை. சற்று நேரம் காத்திருங்கள்’

‘எனக்கு நேரமில்லை. அரிசி அவியாவிட்டாலும் பரவாயில்லை. சீக்கிரமாக கட்டித்தா. சூரியன் மறைவதற்கும் இன்னும் சில மணிநேரமே இருக்கிறது. நான் வருவதற்கு தாமதமானால் என்னைப் பற்றி நினைக்காதே’

மனைவி சீக்கிரமாக சோற்றைக் பொதி செய்துகொடுத்தாள். அரை அவியலுடன் இருந்த சோற்றுப் பொதியையும் எடுத்துக் கொண்டு காட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தான். ‘பிரம்மகமலங்களும் சந்தனம் போன்று மென்மையான வெண்ணிற களிமண்ணும் நாகலோகத்தில் அல்லவா இருக்கிறது..? நான் எங்கு சென்று இவற்றை கொண்டு வருவேன்’ என புலம்பிக்கொண்டு போகும் வழியில் ஒரு வழிப்போக்கனை கண்டு அவனுக்கு தன் வசமிருந்த பொதிச்சோற்றின் ஒரு பகுதியை சாப்பிடக் கொடுத்தான். பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த அந்த சேவகனால் சாப்பிட முடியாததால் மீதமிருந்த சோற்றை அருகிலிருந்த ஆற்றின் மீன்களுக்கு உணவாகட்டுமே என்று ஆற்றிற்கு கொட்டினான். அதன் பின்னர் வானத்தை பார்த்து இவ்வாறு கத்தினான்.

‘ஐயகோ..! இந்த கங்கைக்கு அதிபதியான நாகங்கள் யாராவது இருக்கிறீர்களா? தேவர்கள் யாராவது இருக்கிறீர்களா..? இருந்தால் நான் சொல்வதை என் மீது கருணைகொண்டு கேளுங்கள். மாமன்னர் என்னிடம், ‘பிரம்மகமலங்களும் சந்தனம் போன்று மென்மையான வெண்ணிற களிமண்ணும் கொண்ட வருமாறு பணித்திருக்கிறார். தேவர்களே, நான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு ஒரு வழிபோக்கனுக்கு உணவை தானம் செய்தேன். மீன்களுக்கு இரையாகட்டுமே என என் உணவை அளித்தேன். ஒரு மனிதருக்கு உணவளித்தால் ஆயிரம் மடங்கு புண்ணியம் பலனளிக்கும். அதேபோன்று மிருகங்களுக்கு உணவளித்தால் நூறு பிறப்புகளுக்கு அதன் புண்ணியங்கள் பலனளிக்கும். இப்போது நான் செய்த இந்த அனைத்து புண்ணியங்களையும் நான் தங்களுக்கு அளிக்கிறேன். எனக்கு ‘பிரம்மகமலங்களும் சந்தனம் போன்று மென்மையான வெண்ணிற களிமண்ணும் கிடைக்கக்கூடிய வழியை காட்டுங்கள்’ என அழுதுகொண்டு வேண்டினான். கண்ணீருடன் புலம்பும் இந்த மனிதனை அந்த ஆற்றிற்கு அதிபதியாக இருந்த ஒரு நாகராஜன் கண்ணுற்றார். அந்த நாகம் ஒரு முதியவரைப் போன்று வேடம்கொண்டு அந்த மனிதனிடம் வந்து

‘எனக்கு உன் புண்ணியங்களை தா.. நான் உனக்கு இந்த பிரம்ம கமலங்களும் சந்தனம் போன்று மென்மையான வெண்ணிற களிமண்ணும் தருகிறேன்’ என்று சொன்னார்.

‘ஐயோ, தாத்தா எனது அதிஷ்டத்தினாலேயே நான் உங்களை கண்டேன். எல்லா புண்ணியங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கு இவற்றை தாருங்கள்.’ அச்சமயம் முதியவராக வேடம் தரித்திருந்த அந்த நாக அரசன் அந்த மனிதனிடம் சில பிரம்மகமல மலர்களையும் சந்தனம் போன்று மென்மையான வெண்ணிற களிமண்ணும் கொடுத்தார். இச்சமயத்தில் கோசலை மன்னர் இவ்வாறு சிந்திக்கலானார். ‘மனிதர்கள் நினைத்துக்கொள்ள முடியாத நடத்தைகளை உடையவர்கள். அவர்களது வஞ்சகத்தன்மைகளை உணர்ந்துகொள்வது கடினம். அந்த மனிதன் எந்த முறையிலாவது அந்த பிரம்மகமல மலர்களையும் வெண்ணிற களியையும் கொண்டு வந்தாலும் வருவான். அப்படியானால் நான் எடுத்த இந்த முயற்சிகள் வீணானதாகும்’ என்று நினைத்து, அன்று மாளிகையின் கதவுகளை நேர காலத்துடன் மூடுவதற்கு ஆணையிட்டார். அந்த அப்பாவி மனிதன் நாகராஜனிடமிருந்து அந்த மலர்களையும் களிமண்ணையும் எடுத்துக் கொண்டு மன்னர் நீராடும் நேரத்திற்குள் மாளிகை வாயிலறுகே வந்தான். ஆனால் பயனில்லை. கோட்டையின் மதில்கள் மூடப்பட்டிருந்தன. வாயிற்கதவிடமிருந்து

‘வாயிற்காவலனே, நான் ஒரு அரசசேவகன், நான் அரசப்பணி காரணமாக வெளியே சென்றேன். என்னை உள்ளே வர அனுமதிப்பாய்.. இது அரசனின் தேவையாகும்’ என கத்தினான். ஆனால் காவலன் கதவை திறக்கவில்லை. அப்போது அந்த மனிதன் மதிலின் அருகே தாம் கொண்ர்ந்த மலர்களையும் களிமண்ணையும் வைத்து ஊர் மக்களிடம்

‘நகரவாசிகளே, இங்கே பாருங்கள்..! நான் அரசரின் ஆணையை மீறவில்லை. நிறைவேற்றியிருக்கிறேன். அரசர் இதற்காக என்னை தண்டித்தாரென்றால் அது நியாயமானதல்ல. நீங்கள் அனைவரும் இதற்கு சாட்சியாவீர்கள்’ என கத்திச் சொன்னான்.

இவ்வாறு மனங்கலங்கி நின்ற அவன், ‘நான் எங்கு செல்வேன்.. புத்த பகவானது சீடர்கள் கருணை கொண்டவர்கள். நான் அவர்களிடம் செல்ல வேண்டும். அவர்களைத் தவிர எனக்கு இப்போது வேறு புகலிடமில்லை’ என்று நினைத்து சங்கையர் வசித்திருக்கும் ஆராமத்திற்கு சென்றான். அன்றிரவெல்லாம் அரசர் அந்த பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்.

‘ஆம்.. நாளை காலையே அவனது கதையை முடித்துவிட வேண்டியதுதான். அதன் பிறகு அந்த பெண்ணை இங்கே அழைத்து வருவதற்கு யாரும் தடையில்லை. நாளையிலிருந்து அவள் என்னருகே இருப்பாள்’ என்று உறக்கமின்றி கட்டிலில் புரண்டுக்கொண்டிருந்தார். இவ்வாறாக அரசன் உறக்கமின்றி நடுநிசி வரை கட்டிலில் புரண்டு கொண்டிருந்த போது திடீரென்று முழுப்பிரதேசமும் அமைதியானது. அப்போது மிகவும் பயங்கரமான குரலில் யாரோ து… ச… ந… சோ… என்று அலறும் சப்தம் கேட்டது. அந்த சப்தம் கேட்ட அரசர் பயத்தினால் நடுங்கினார். அரசரின் முழு உடம்பும் வியர்த்து கொட்டியது. கட்டிலில் அமர்ந்துகொண்டு,

‘என்னவொரு சப்தம்.. மிகவும் பயங்கரமான சப்தமல்லவா..? மாளிகையே அதிர்ந்துவிட்டதே.. நிலநடுக்கம் வந்ததைப் போல் அல்லவா இருந்தது. இந்த சப்தம் எங்கிருந்து வந்தது? பேய் பிசாசு ஏதேனும் அலறிய சப்தமா?’
அரசனின் காம தாகம் எங்கு போனதோ தெரியவில்லை. விடியும்வரை பயத்தினால் உறங்கவில்லை. அதிகாலையிலேயே மன்னர் புரோகிதர்களை அழைத்து இது தொடர்பாக வினவினார். புரோகிதர்கள் கணக்குபோட்டு பார்த்து

‘அரசரே.. பயங்கரமான காலம் உதயமாகப்போகிறது. ஒன்பது கிரகங்களும் உக்கிர நிலையில் இருக்கின்றன. அதிலிருந்து மீளுவது மிகவும் கஷ்டம். இது உங்கள் உயிருக்கே ஆபத்தாக அமைவதாக காட்டுகிறது.’ என்று சொன்னார்கள்.
‘ஐயோ.. புரோகிதரே.. வேதத்தின்படி எனக்கு இந்த கஷ்டத்திலிருந்த தப்பும் வழி இல்லையா?’
புரோகிதர் நெற்றியை சுருக்கிக்கொண்டார். தனது தலையை தடவிக்கொண்டு ஆழ்ந்து யோசித்தார். தனியே ஏதோ முணகிக் கொண்டு தீவிரமாக யோசித்தார். திடீரென்று சிறப்பானதொரு தீர்வு கிடைத்ததைப் போன்று கம்பீரத்துடன் இப்படி கூறினார்.
‘மாமன்னரே, எமது வேதத்தில் குறிப்பிடப்படாத தீர்வுகள் உலகில் இல்லை. இந்த நாள் நட்சத்திரங்களை சரியாக அவதானிக்கும்போது ஒருவிடயம் நன்கு புரிகிறது. அரசரே இதற்கு தீர்வு கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் நிறைய செல்வம் அவசியமாகும். பெரும் யாகமொன்றை செய்ய வேண்டும். அது சர்வசத யாகம் என்று சொல்வார்கள். இந்த யாகத்திற்கு நூறு யானைகள், நூறு குதிரைகள், நூறு மாடுகள், நூறு பசுக்கள், நூறு கழுதைகள், நூறு ஆடுகள், நூறு கோழிகள், நூறு பன்றிகள், நூறு ஆண்குழந்தைகள், நூறு பெண்குழந்தைகள் எனும் இவ் அனைத்து உயிர்களையும் ஒரே முகூர்த்தத்தில் பலிகொடுக்க வேண்டும். இதனை உடனே செய்தால் இந்த கிரகத்ததிலிருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.’ என்றார்.
அரசர் உடனே அமைச்சரவை கூட்டினார். ‘இப்போது நீங்கள் அனைவரும் தாமதமின்றி இந்த யாகத்திற்கான அனைத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசனுக்கு  தீங்கில்லையென்றால் முழுநாட்டிற்கும் தீங்குகளில்லை. எனவே அரசனாகிய நான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’

தம் பிள்ளைகளை பலி கொடுப்பதற்காக பெற்றோரிடமிருந்து பலவந்தமாக இழுத்துச் செல்லும்போது பெற்றோர்களும் பிள்ளைகளும் கதற ஆரம்பித்தார்கள். மிருகங்களை இழுத்துச் செல்லும்போது அவை ஏற்படுத்திய அலறல்கள் என்பனவற்றினால் முழுத்தேசமும் சோகமயமாகவிருந்தது. எல்லாம் வெறுத்துவிட்டதைப் போன்று அரசர் முகத்தை தொங்கவைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தார். இதனை அவதானித்த மல்லிகா அரசி அரசரிடம்

‘அரசரே.. தங்களுக்கு என்னவாயிற்று? முகம் வாடி இருக்கிறதே..! உடம்பெல்லாம் வெளிறிப்போயிருக்கிறதே…?’

‘என்னவாயிற்று என்றா கேட்கிறாய்..? மல்லிகா.. உனக்கு ஒன்றும் தெரியாதல்லவா..? எனது உயிரே ஆபத்தில் இருக்கிறது.. உனக்கு எவ்வித கவலையுமில்லை. நேற்று இந்த மாளிகையையே அதிரும்படி சேட்ட அலறல் சப்தம் உனக்கு கேட்கவில்லையா? நீ பெயருக்குத்தான் பட்டமகிஷி.. என்னைப்பற்றி எந்த அக்கறையுமில்லை’

‘அரசரே.. இந்த மிருகங்களை ஏன் மாளிகை வாசலுக்கு இழுத்து வருகிறார்கள்..ஏன இந்த மக்களும் பிள்ளைகளும் கூச்சலிடுகிறார்கள்? என்னதான் நடந்தது?’

‘மல்லிகா.. எனக்கு கெட்டகாலம் பிறந்திருக்கிறது. நவக்கிரகங்களும் எனக்கு எதிராக சதி செய்கின்றதாம். இந்த யாகத்தினை செய்வதால் மாத்திரமே அந்த ஒன்பது கிரகங்களையும் அமைதிப்படுத்த முடியும். அந்த யாகத்தை செய்வதற்காகவே இந்த ஏற்பாடுகள். என்னுடைய உயிரையும் இந்த உயிர்களையும் சமம்படுத்த முடியுமா என்ன? நான் இந்த நாட்டின் அரசன்’
இதனைக் கேட்ட மல்லிகா அரசியார்க்கு கவலை பிறந்தது. மல்லிகா அரசி புத்த பகவானைக் காணச் சென்று இவ்வாறு கூறினாள், ‘பாக்கியமுள்ள பகவானே, இந்த மூட நம்பிக்கையால் நூற்றுக்கணக்கான உயிர்களின் இரத்தத்தினால் இந்த பிரதேசம் நனையப் போகிறது. இந்த பாவகரமான செயலை தடுப்பதற்கு உதவி செய்ய முடியுமா? ‘ என வேண்டினாள். புத்த பகவான் கோசலை மன்னரை வரச்செய்து பின்வருமாறு போதித்தார்.

‘புண்ணியமிகு அரசரே..! நீங்கள் கேட்ட அந்த சப்தங்கள் பயங்கரமானவைதான். ஆனால் அது உங்களுக்கு அவசியமில்லாதது. அதன் காரணமாக உங்களுக்கோ உங்கள் நாட்டிற்கோ எவ்வித ஆபத்துக்களும் இல்லை. இது வேறு விடயமாகும். இதற்கு முன்னர் தோன்றிய காசியப்ப புத்த பகவானது சாசனத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அக்காலத்தில் வாரணாசி நகரில் நண்பர்களான சில செல்வந்தர்கள் இருந்தார்கள். ஒருநாள் அவர்கள் ஒன்றுகூடி இவ்வாறு பேசிக்கொண்டார்கள்.
‘எமக்கு வேண்டியளவு பணம் இருக்கிறது. புத்த பகவான் ஒருவர் இந்த உலகில் தோன்றியிருக்கிறார். நாம் அந்த பணத்தைக் கொண்டு தானமளிப்போம்.’

அப்போது ஒருவன், ‘ஐயோ.. ஐயோ.. உங்களுக்கு என்ன பைத்தியமா? தானமளிப்பதற்கா பணமிருக்கிறது..? இந்த சாப்பாடுகள், சாராயம் என்பன குப்பையில் போடுவதற்கா இருக்கிறது? நாம் நன்றாக செலவழித்து சாப்பிடுவோம். குடிப்போம். இதனை தவிர வேறு என்ன சந்தோஷம்?’

இன்னுமொருவன் இப்படிச் சொன்னான். ‘காசிருந்தால் என்னதான் இல்லை..? சாப்பாடு, சாராயம் மட்டுமில்லை.. ஏன் பெண்கள்.. பணமிருந்தால் பெண்களுக்கு பஞ்சமில்லை நண்பா.. தானமளித்தல், சீலம் போன்ற பைத்தியக்கார விஷயங்களை பேசிக்கொண்டிருக்காமல் இருக்கும் கொஞ்ச காலத்தில் சந்தோஷமாக இருப்போம்.’ இவ்வாறு பேசிக்கொண்ட அவர்கள் எல்லா பணத்தையும் செலவளித்து சிற்றின்பத்தில் காலம் கழித்தனர். பெண்களை கற்பழித்தனர். குடும்பங்களை நாசப்படுத்தினர். இவ்வாறாக பாவகரமான வாழ்வை வாழ்ந்த அவர்கள் மரணத்தின் பின்னர் லோகும்பகம் எனும் நரகத்தில் பிறந்தார்கள். அவர்கள் அங்கு பிறந்து ஆயிரக்கணக்கான வருடங்களாகிறது. காசியப்ப புத்த சாசனத்தின்போது மனிதர்களின் ஆயுட்காலம் 20,000 வருடங்களாகும். இந்த புத்த சாசனத்தின்போது மனிதர்களின் ஆயுட்காலம் 120 வருடங்களாகும். இவ்வாறாக மனிதர்களின் ஆயுட்காலம் படிப்படியாக குறையும் காலம் வரையிலும் அதாவது பல்லாயிரம் வருடங்களாக இந்த நால்வரும் அந்த நரகத்தில் துன்பமனுபவிக்கிறார்கள். (லோகும்பக நரகம் என்றால் எரிமலை வெடிக்கும்போது வெளியேறும் லாவா எனப்படும் தீப்பிழம்புகளுடைய பெரும் குழிகளாகும். இந்த குழிகளில் விழுந்த உயிர்கள் துன்புறுவார்களே தவிர அந்த கர்மவினை தீரும் வரை அங்கிருந்து நீங்க முடியாது. அதாவது அதுவரை காலத்திற்கு மரணம் வராது. அவர்கள் நால்வரும் அந்த தீப்பிளம்பிலிருந்து வெளியே தலைகாட்டும்போது ஒன்றை சொல்ல விரும்பினார்கள்.

‘அரசரே நீங்கள் கேட்ட முதலாவது சப்தம் எது?’

‘பகவானே ‘து’ என்ற ஒலியாகும்.’

‘அரசரே, அவருக்கு இந்த விடயமே சொல்ல வேண்டியதாக இருந்தது.’

துஜ்ஜீவிதங் அஜிவிம்ஹ – யே சன்தோ ந ததம்ஹசே
விஜ்ஜமானேசு போகேசு – தீபங் நாகம்ம அததனோ

எமக்கு தானமளிப்பதற்கு வேண்டியளவு சொத்திருந்தது. ஆனால் நாம் புண்ணியங்கள் செய்து கொள்ளவில்லை. ஒழுக்கமற்ற இழிவான வாழ்வை வாழ்ந்தோம். அந்த செல்வங்களை பயன்படுத்தி நாம் எமக்கு நன்மையை செய்து கொள்ளவில்லை.

‘அரசரே அடுத்ததாக நீங்கள் கேட்ட சப்தம் எது?’

‘பகவானே ‘ச’ என்ற ஒலியாகும்’

‘அரசரே, அவருக்கு இந்த விடயமே சொல்ல வேண்டியதாக இருந்தது’

சட்டி வஸ்ஸ சஹஸ்ஸானி – பரிபுண்ணானி சப்பசோ
நிரயே பச்சமானானங் – கதா அன்தோ பவிஸ்ஸதி

நரகத்தில் பிறந்து 60,000 வருடங்களாகின்றன. ஐயகோ.. இந்த துக்கம் எப்போது முடியும்?

‘அரசரே அடுத்ததாக நீங்கள் கேட்ட சப்தம் எது?’
‘பகவானே ‘ச’ என்ற ஒலியாகும்’.
‘அரசரே, அவருக்கு இந்த விடயமே சொல்ல வேண்டியதாக இருந்தது.’

நத்தி அன்தோ குதோ அன்தோ – ந அன்தோ படிதிஸ்ஸதி
ததா ஹி பகதங் பாபங் – மம துய்ஹஞ் ச மாரிசா

ஐயோ… நானும் நீங்களும் அந்த காலத்தில் எவ்வளவு பாவங்கள் செய்தோம்..? இந்த வேதனைகளின் முடிவு இல்லையா? ஐயோ இந்த கொடுமைகள் எப்போது முடியும்? இதன் முடிவைக் காண முடியவில்லையே.

‘அரசரே அடுத்ததாக நீங்கள் கேட்ட சப்தம் எது?’

‘பகவானே ‘ச’ என்ற ஒலியாகும்’

‘அரசரே, அவருக்கு இந்த விடயமே சொல்ல வேண்டியதாக இருந்தது’

சோஹங் நூன இதோ கன்த்வா – யோனிங் லத்தான மானுசிங்
வதஞ்ஞ சீலசம்பன்னோ – காஹாமி குசலங் பஹுங்

நான் இதிலிருந்து விடுதலையான பின்னர் எனக்கு மீண்டும் மனிதபிறவி கிடைக்கும் என்றால், நான் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வேன். என்னிடம் யாராவது வந்து ஏதாவது கேட்டால் நான் தானமளிப்பேன். பிறர் என்னிடம் தானங்கள் கேட்பதற்கு தகுதியான ஒருவராவேன். நான் ஒழுக்கமான வாழ்வை வாழ்வேன். நிறைய புண்ணியங்களை செய்துகொள்வேன்.

‘அரசரே இவைதான் அந்த சப்தங்களின் அர்த்தமாகும். இதனை அவர்களால் முழுமையாக சொல்வதற்கு இயலாமல் போய்விட்டது. அரசருக்கு வியர்த்துக் கொட்டியது. ஏனையோரின் பெண்களை தீண்டுவது இத்தகைய பெரும்பாவமா? அந்த பாவத்தினால் ஆயிரக்கணக்கான வருடங்கள் இத்தகைய பயங்கரமான துன்பங்களை அனுபவிக்க நேரிடுமா?’ என நினைத்த கோசலை மன்னன் புத்த பகவானிடம்

‘பகவானே எனக்கு நேற்று இரவு மிகவும் நீண்டதாக இருந்தது’ அச்சமயம் அந்த பிரம்மகமல மலர்களை கொணர்ந்த அப்பாவி மனிதனும் அந்த கூட்டத்தில் இருந்தான். அவன் வணங்கிக் கொண்டு இவ்வாறு கூறினான்.
‘எமது அரசருக்கு இரவு மிகவும் நீண்டதாக இருந்திருக்கிறது. எனக்கோ ஒரு யோசனை தூரம் இவ்வளவு நீளமானது என்று நேற்றுதான் அறிந்துகொண்டேன். அச்சமயம் புத்த பகவான் இந்த செய்யுளை மொழிந்தார்.

தீகா ஜாகரதோ ரத்தி – தீகங் சன்தஸ்ஸ யோஜனங்
தீகோ பாலானங் சங்சாரோ – சத்தம்மங் அவிஜானங்

உறக்கமின்றி விழித்திருப்பவருக்கு இரவு மிகவும் நீளமானது. சோர்வடைந்தவருக்கு ஒரு யோசனை தூரமும் மிகவும் நீளமானது. அதேபோன்றுதான் இந்த தர்மத்தினை உய்த்துணராத கீழ்த்தரமான குணம் கொண்டவனுக்கு இந்த சன்சாரப் பயணம் (பிறவிப்பயணம்) மிகவும் நீளமானது.

புண்ணியமிக்கவர்ளே, இதன் மூலம் இந்த பிறவிப்பயணம் என்பது எவ்வளவு பயங்கரமானது என்பதனை உங்களால் உணர்ந்துக் கொள்ளகூடியதாக இருக்கும். எமக்கு இலகுவாக அசத்புருஷர்களின்(தீயவர்களின்) நட்பு கிடைக்கும். ஆனால் சத்புருஷர்களின்(நல்லவர்களின்) சகவாசம் மிகவும் அரிதாகவே கிடைக்கும். காசியப்ப புத்த பகவானது காலத்தில் அந்த நான்கு நண்பர்களுல் ஒருவருக்கு தானமளிக்க வேண்டும். சீலம் அனுஷ்டிக்க வேண்டும் எனும் தேவை இருந்தாலும் தீய நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டதால் அவரும் இறுதியில் நரகத்திலேயே பிறக்க நேரிட்டது. நரகத்தில் பிறந்த பிறகு அவரால்தான் பாவங்கள் செய்தேன். இவரால்தான் நான் வழிகெட்டு போனேன் என்று சாக்கு போக்கு சொல்ல முடியாது. இந்த உண்மைநிலையை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

புண்ணிமிக்கவர்களே, இந்த செய்யுளை விபரித்து இறுதியல் புத்த பகவான் நாற்பேருண்மைகள் தொடர்பாக தர்மத்தை போதித்தார். பிரம்மகமல மலர்களை கொணர்ந்த அந்த அப்பாவி மனிதன் அந்த போதனையின் இறுதியில் சோதாபண்ண நிலையை அடைந்தார். மன்னர் தர்மத்தின் மீது திடமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டார். அந்த அஞ்ஞான புரோகிதர்கள் தம் நவக்கிரகங்களை நினைத்து நொந்து அந்த யாகத்தை செய்யாமல் நிறுத்தினர். அந்த அனைத்து உயிர்களுக்கும் அபயம் அளிக்கப்பட்டது. இறுதியில் தனக்கு செய்த உபகாரத்திற்காக மல்லிகா அரசியார்க்கு கோசலை மன்னர் நன்றி தெரிவித்தார்.