மகா காசியப்ப தேரரின் சீடனின் கதை
அறிவுரை செய்தாலும் அசத்புருஷன் பகைமை கொள்வான்.
புண்ணியமிக்கவர்களே, இந்த வானம், காற்று, ஆறுகள், சமுத்திரம், மலைமேடுகளை பார்த்து நாம் இந்த உலகம் அதிசயமானது என நினைக்கிறோம். ஆனால் இவ் அனைத்திலும் பார்க்க மனிதனே அதிசயமானவன். புதுமையானவன். சிலர் புண்ணியங்கள் செய்துகொள்ள வேண்டும், சீலங்களை அனுசரிக்க வேண்டும் என நினைத்து அத்கைய இடங்களுக்கு செல்வார்கள். ஆனால் அவர்கள் அங்கு சென்று புண்ணியங்களை செய்துகொள்வதற்கு பதிலாக பாவங்களையே செய்துகொள்வார்கள். அவர்கள் அத்தகைய இடங்களுக்கு போகாமல் இருந்தாலே நல்லது, என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் என்ன? புண்ணியங்கள் செய்துகொள்ள வேண்டும் என நினைத்து நீண்ட காலங்கள் துன்பங்கள் அனுபவிக்க நேரிடும் பாவங்களையே அவர்கள் செய்துகொள்வார்கள். அந்த பாவங்களின் காரணமாக பெரும் துக்கங்களையே அனுபவிப்பார்கள். பெரும் பாவியாகும் நிலையே உண்டாகும். அத்தகையதொரு கதையே இங்கு குறிப்பிடப்படுகிறது.
புண்ணியவர்களே, மகா காசியப்ப தேரர்இ இந்த புத்த சாசனத்தின் ஒழுக்கமிகுந்த சீடர்களுள் முதன்மையானவராவார். புத்த பகவானது உத்தம பரிநிர்வாணத்தின் பின்னர் தர்மத்தை ஒன்று திரட்டி முதலாவது தர்ம சங்கீதியத்தை நிகழ்த்தியவர். பொன்னிற மேனி கொண்டவர். தேவர்கள் மிகவும் விரும்பும் ஒரு அரஹத் (கிலேசங்களற்றவர். மேலும் பிறப்புக்கள் அற்றவர்) உத்தம நிலையை அடைந்தவர். நிக்கிலேசமானவர். உயர்ந்த சீலங்கள், குணங்கள் கொண்ட மகா காசியப்ப தேரரை தேவர்களும் மனிதர்களும் சங்கையரும் மிகவும் விரும்பினார்கள். கௌதம புத்த சாசனத்தை ஒளிபெறச் செய்த மகா உத்தம குணங்கள் கொண்டவரே மகா காசியப்ப தேரராவார்.
காசியப்ப தேரரிடம் சில இளைஞர்கள் துறவு பூண்டார்கள். அந்த சாமணேர (புதிதாக துறவு பூண்டவர்கள்) பிக்குகளுள் இருவர் காசியப்ப தேரருக்கு பணிவிடை செய்து வந்தனர். அதில் ஒரு சாமணேரர் மிகவும் பக்தியுடன் மகா காசியப்ப தேரருக்கு பணிவிடை செய்தார். மகா தேரருக்கு அவசியமான நீர்இ பற் தேய்க்கும் குச்சிகள் தயார் செய்தல்இ நீராடுவதற்கான நீரை தயர் செய்தல் போன்ற பணிவிடைகளை மிகவும் சிரத்தையுடன் செய்து வந்தார்.
மற்றவர் வஞ்சகமானவர். அவர் தர்மத்தை பயிற்சி செய்வதுமில்லை. தர்மத்தை கற்றுக்கொள்ள முயற்சிப்பதுமில்லை. பணிவிடைகள் செய்வதுமில்லை. நல்ல குணம் கொண்ட சாமணேரர் அனைத்தையும் தயார் செய்து வைக்கும்போது இந்த வஞ்சக குணம் கொண்ட சாமணேரர் மகா காசியப்ப தேரரிடம் சென்றுஇ
‘சுவாமி, நான் தங்களுக்கு அவசியமானவற்றை தயார் செய்துவிட்டேன்’ என்று வணங்கிக் கொண்டு சொல்வார். சிலசமயங்களில் அந்த நற்குணம் கொண்ட சாமணேரர் காசியப்ப தேரர் நீராடுவதற்காக சுடுநீர் தயார் செய்து வைப்பார். அவர் அவற்றை தயார் செய்யும் வரை ஒன்றும் அறியாததைப் போன்று இருக்கும் வஞ்சக குணம் கொண்ட சாமணேரர், தயார் செய்தவுடனேயே காசியப்ப தேரரிடம் சென்று தாம் செய்த செய்ததைப் போன்று காட்டிக்கொள்வார்.
ஒருநாள் பக்தியுள்ள சாமணேரர் நல்லதொரு வேலை செய்தார். மகா தேரருக்கு நீராடுவதற்கான நீரை இரகசியமாக சுடவைத்து வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்தார். வழமையாக நீர் வைக்கும் இடத்தில் ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி மூடி வைத்தார். வழமை போல் பானையில் சுடுநீர் நிறைந்திருப்பதாக நினைத்த வஞ்சக குணம் கொண்ட சாமணேரர் மகா தேரரிடம் சென்று வணங்கி ‘சுவாமி.. சுடுநீர் தயார் செய்து வைத்துள்ளேன்.. வாருங்கள்’ என்று சொன்னார். மகா தேரர் நீராடுவதற்காக பானையை திறந்து பார்த்து,
‘சாமணேர.. இங்கு நீரில்லையே’ என்றார். அதனைக் கேட்டதும் அந்த சாமணேரர் பதற்றமடைந்தார். பதற்றத்துடன் பானையை பார்த்தார். சிறிதளவு நீரே இருந்தது. அடுத்த பாத்திரத்தை பார்த்தார். வெறுமையாக இருந்தது. ‘இது அந்த கொடிய சாமணேரது வேலையாகத்தான் இருக்கும். வெறுமையான பாத்திரத்தை அல்லவா மூடி வைத்திருக்கிறார்.. நான் நினைத்தேன்இ தண்ணீர் இருக்குமென்று..!’ என்று நினைத்து கோபத்துடன் அந்த சாமணேரர் பானையை எடுத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆற்றங்கரைக்கு போகும்போது மற்ற சாமணேரர் சீக்கிரமாக தாம் ஏற்கனவே தயார்படுத்தி வைத்திருந்த நீரை மகா தேரருக்கு அளித்தார். அதனை பார்த்த மகா தேரர், ‘சாமணேர..! இதன் அர்த்தம் என்ன? அந்த சாமணேரர் நீரை தயார் செய்யவில்லையா?’
‘இல்லை.. சுவாமி. இதுவரை காலமும் நான்தான் இவையனைத்தையும் செய்தேன். அவர் நான் செய்பவற்றை அவர் செய்துகொண்டதாக காட்டிக்கொள்வதைத்தான் செய்தார்.
காசியப்ப தேரர் அந்த வஞ்சக குணம் கொண்ட சாமணேர தேரருக்கு அறிவுரைகள் செய்தார்.
‘சாமணேரஇ நீ செய்த வேலை சரியில்லை. இனிமேல் நீ செய்ததை மாத்திரம் நீ செய்ததாக காட்டிக்கொண்டால் போதும். ஏனையோர் செய்பவற்றிற்கு உன் பேரை போட்டுக்கொள்ளாதே. அதேபோன்று அந்த சாமணேரர் மீது கோபம் கொள்ளவும் வேண்டாம்’
அந்த சாமணேரர் ஒன்றும் பேசாமல் சிவந்த கண்களுடன் கீழே பார்த்துக் கொண்டிருந்தார். ‘ஹஹ்..! நான் செய்வதெல்லாம் பிழை..! தண்ணீர் கொஞ்சத்திற்காக இவ்வளவு கத்த வேண்டுமா? இப்படி வந்து அறிவுரைகள் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ட ஒரு பக்கத்தை தான் இவங்க தெரிஞ்சி வைச்சிருக்காங்க. நல்ல வேலை செய்கிறேன்..! பாருங்க.’ என்று கோபித்துக்கொண்டார்.
அன்றைய நாள் முழுவதும் அந்த சாமணேரர் கோபத்துடனே இருந்தார். மேலும் மேலும் கோபம் வருவதற்கு ஏற்றதைப் போலவே யோசித்துக்கொண்டிருந்தார். மறுநாள் காலை மகா காசியப்ப தேரருடன் ஐயமேற்பதற்காக அந்த சாமணேரர் செல்லவில்லை. மகா தேரர் ஐயமேற்பதற்கு வேறு வீதிக்கு போகும் வரை காத்திருந்து இந்த சாமணேரர் இன்னுமொரு தெருவுக்குச் சென்றார். அந்த தெருவின் உபாசகர்கள் ‘சின்ன சுவாமி.., எங்கே எமது மகா தேரரை காணவில்லையே..!’
‘புண்ணியவர்களேஇ மகா தேரருக்கு சுகமில்லை. அவர் விகாரத்தை விட்டு வெளியே வரவில்லை’
‘அப்படியா? அப்படியென்றால் அவருக்கு உணவில்லாமல் இருக்குமே. என்ன செய்ய வேண்டும்?’
‘புண்ணியவர்களே, இந்த இந்த சாப்பாடுகளை தயாரித்து தாங்க. நான் அந்த தானத்தை மகா தேரருக்கு கொண்டுபோய் கொடுக்கிறேன்’ என்று சொன்ன அந்த சாமணேரர் தான் விரும்பும் சாப்பாடு வகைகளை அந்த உபாசகர்களின் மூலம் பெற்றுக் கொண்டு வழியில் ஓரிடத்தில் இருந்து அவற்றை சாப்பிட்டு ஆராமத்திற்கு போனார்.
மறுநாள் மகா தேரர் அந்த உபாசகர்களின் தெருவில் ஐயமேற்பதற்காக சென்றார். மகா தேரரை கண்ட அந்த உபாசக உபாசகியர் மிகவும் சந்தோஷமடைந்தார்கள். ‘சுவாமி, அந்த சின்ன சுவாமி சொன்னதைக்கேட்டு தாங்கள் மிகவும் சுகயீனத்தோடு இருப்பீர்கள், என நினைத்தோம். நாம் நேற்று தங்களுக்கான தானத்தையும் தயார் செய்து அவரிடம் அனுப்பி வைத்தோம். இவ்வளவு சீக்கிரமாக குணமடைந்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்று மன மகிழ்ச்சியுடன் சொன்னார்கள். இதனைக் கேட்ட மகா தேரர் அமைதியானார். தானத்தை பெற்றுக்கொண்டு ஆராமத்திற்கு திரும்பினார். சாமணேரரிடம்,
‘சாமணேர, நீ நேற்று அந்த உபாசகர்களிடம் ஏன் பொய் சொன்னாய்? அப்படிச் சொல்லி தானத்தை வேறு பெற்றிருக்காய்.. இது துறவிகளுக்கு உகந்த வேலையல்ல. இது பெரிய தவறாகும். இனி ஒருபோதும் இம்மாதிரியான பிழைகளைச் செய்ய வேண்டாம்’
அந்த சாமணேரர் பற்களை நற நற வென கடித்துக் கொண்டு கண்கள் சிவக்க தலையை குனித்துக்கொண்டு பேசாமல் இருந்தார்.
‘முந்தநாள் கொஞ்சம் தண்ணீருக்காக என் மீது எரிந்துவிழுந்தார். இன்று ஒரு சோற்றுப்பிடிக்காக தாயகர்களிடமிருந்து உணவை கேட்டுப்பெற கூடாது என கத்துகிறார்… இந்த மகா தேரருக்கு நான் யார் என்று காட்ட வேண்டும்.. நல்ல பாடம் புகட்ட வேண்டும்’ என மகா தேரர் மீது பகைமை கொண்டார்.
மறுநாள் இந்த சாமணேரர் ஐயமேற்க செல்லவில்லை. மகா தேரர் ஆராமத்தை விட்டுச் செல்லும்வரை காத்திருந்து நல்லதொரு கட்டையொன்றை எடுத்து ஆராமத்தில் இருந்த அனைத்து மட்பாண்டங்களையும் உடைத்து நொறுக்கினார். அக்காலத்தில் மட்பாண்டங்கள்தானே உபயோகத்தில் இருந்தன. அனைத்தையும் உடைத்து நொறுக்கி இறுதியில் மகா தேரர் வசித்திருந்த குடிலையும் தீ வைத்து தான் தரித்திருந்த சீவரத்தை கழற்றி வீசிவிட்டு ஊரை விட்டே ஓடிவிட்டார்.
அந்த பாவகரமான செயலை செய்த மனிதன் சிறிது காலத்திலேயே நோயுற்று மரணித்து நரகத்தில் சென்று பிறந்தான். ஒரு பிக்கு இந்த சம்பவத்தை புத்த பகவானிடம் சென்று கூறினார். அச்சமயம் எமது புத்த பகவான் எம் அனைவருக்கும் பயன்தரும் இந்த செய்யுளை இனிமையான முறையில் மொழிந்தருளினார்.
சரங் சே நாதிகச்செய்ய – செய்யங் சதிசமத்தனோ
ஏகசரிங் தழ்ஹங் கயிரா – நத்தி பாலே சஹாயதா
தன்னை விட உயர்ந்த குணப்பண்புகளைக் கொண்ட ஒருவருடன் பழக வேண்டும். இல்லையேல் தனக்குச் சமமான குணப்பண்புகளை கொண்ட ஒருவருடன் பழக வேண்டும்.
இவ்வாறானவர்களை தேடிக்கொள்ள முடியாவிடில்இ மிகுந்த வீரியத்துடன் தனிமையில் வாழ வேண்டும். பாவம் மிகுந்த அசத்புருஷர்களுடன் (கீழ்குணம் கொண்டோருடன்) நட்பு
வைத்துக்கொள்ளக் கூடாது.
புண்ணியமிக்கவர்ளே, தன் ஒழுக்கமான வாழ்விற்கு அறிவுரைகளை பெறக்கூடிய தன்னை விட உயர்வான ஒழுக்ககுணம் கொண்ட ஒருவருடன் பழக வேண்டும். இல்லையேல் தன் உள்ளச் சமாதி நிலைக்கு அதாவது தியானங்கள் செய்வதற்கு உபகாரம் செய்யக்கூடிய ஒரு உத்தமருடன் பழக வேண்டும். இல்லை தன்னை விட அறிவினால் ஆராயும் திறனுள்ள ஒருவருடன் பழக வேண்டும். அவ்வாறு பழகுவதன் மூலம்தான் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக சத்புருஷ நிலையை அடையமுடியும். அறிவுள்ளவராக முடியும். நல்ல குணப்பண்புகள் உடையவராக முடியும். மேற்கூறப்பட்டதை போன்ற உத்தம உயர் குணப்பண்புகள் உடையவர் ஒருவரை சந்திக்க முடியாவிட்டால் தனக்கு நிகரான குணப்பண்புகள் கொண்ட ஒருவருடனாவது பழக வேண்டும். தன்னைப்போன்று தர்மத்தில் ஈடுபடும் ஒருவருடனாவது பழக வேண்டும்.
சிலவேளைகளில் நாம் சில நண்பர்களுடன் பழகுவோம். ஆனால் அந்த நண்பர்களுடன் பழகுவதால் எமது பெற்றோர்இ எமக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள், பெரியோர்கள், உத்தம குணம் படைத்தவர்கள் எம்மை குறைகூறுவார்களாயின், அவர்களுக்கு எம்மீது இருக்கும் விருப்பம் இல்லாமல் போகுமாயின் நாம் நண்பனாக நினைக்கும் அந்த நபர் நாம் எமது பெற்றோர் குரு என்போருக்கு எதிராக செயற்படுமாறு எம்மை தூண்டுவாராயின், எம்மை ஒழுக்கமற்ற கேவலமான வாழ்வை வாழ தூண்டுவார்களாயின், அதனால் எமக்கு ஏற்படும் அழிவை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. இத்தகைய அசத்புருஷர்களின் நட்பின் காரணமாக கோடிக்கணக்கான வருடங்கள் நரகங்களில் துன்பங்கள் அனுபவிக்க நேரிடம். எனவேதான் புத்த பகவான் மீண்டும் மீண்டும் அசத்புருஷர்களுடன் பழக வேண்டாம் என ஆணித்தரமாக போதித்திருக்கிறார். பழகுவதற்கு உத்தம குணங்கள் கொண்ட ஒருவர் இல்லாவிட்டால் தனக்கு நிகரான குணம் கொண்ட ஒருவருடன் பழக வேண்டும். அத்தகைய ஒருவரும் இல்லாவிட்டால் பெரிய வீரியத்துடனும் முயற்சியுடனும் இலட்சியத்துடனும் தனிமையில் வாழ வேண்டும். அசத்புருஷர்களுடனான சகவாசங்கள் தேவையேயில்லை என்றே பகவான் மொழிந்திருக்கிறார்.
பகவானால் போதிக்கபட்ட இந்த செய்யுளைக் கேட்ட பிக்குமார்களுக்கு அசத்புருஷர்களுடனான சகவாசத்தினால் கிடைக்கும் தீமைகளும் சத்புருஷ நண்பர்களின் சகவாசத்தினால் ஏற்படும் நன்மைகளும் நன்கு புலப்பட ஆரம்பித்தது. இந்த உலகிற்கு தோன்றிய உதியுத்தம சத்புருஷர், அனைத்து பாக்கியங்களும் நிறைந்த நிக்கிலேசமான சம்மா சம்புத்த பகவானே என்பதனை நன்கு உணர்ந்துக் கொண்டார்கள். அந்த மகா சத்புருஷர் மூலமாக இந்த பிறவிப்பயணத்திலிருந்து விடுதலையடையும் தர்மத்தினை கேட்ட அந்த பிக்குமார்களுக்கு பிறவிப்பயணத்திலிருந்து விடுதலையடைவதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
எமக்கும் இந்த அறிவுரை மிகவும் முக்கியமானது. பழகுவதற்கு உத்தம குணங்கள் கொண்ட ஒருவர் இல்லாவிட்டால் தனக்கு நிகரான குணம் கொண்ட ஒருவருடன் பழக வேண்டும்.அப்படியில்லாமல் பற்களை இளித்துக் கொண்டு வரும்இ பாசாங்கு பேசும்இ வஞ்சனை குணங்கள் கொண்டவர்களுக்கு நாம் ஏமாறக்கூடாது. பாசமாக கதைக்கிறார்களேஇ தலையை தடவுகிறார்களே என்றெல்லாம் இழிவான குணங்கள் கொண்டவர்களிடம் நாம் ஏமாறக் கூடாது. எம்மை விட உயர்ந்த குணப்பண்புகள் கொண்ட அறிவாளிகள்இ உத்தமர்கள் எமது தவறை ஒருபோதும் ஆதரித்து பேசமாட்டார்கள். அவர்களது பேச்சில் கனிவில்லாமலும் இருக்கலாம். ஆனால் அவர்கள் எமது முன்னேற்றத்தையே எதிர்பார்ப்பார்கள். இந்த வேறுபாடுகளை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். பாவ குணங்கள் கொண்ட அசத்புருஷர்களுடன் ஒருபோதும் பழகக் கூடாது.